கொண்டபள்ளி பொம்மைகள்
கொண்டபள்ளி பொம்மைகள் | |
---|---|
விசயவாடாவில் ஒரு வீட்டில் உள்ள கொண்டபள்ளி பொம்மைகள் | |
வேறு பெயர்கள் | கொண்டபள்ளி பொம்மலு |
குறிப்பு | தெல்ல பொனிக்கி எனப்படும் மென் மரத்தால் செய்யப்படும் பொம்மைகள் |
வகை | கைப்பணி |
இடம் | கொண்டபள்ளி, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் |
நாடு | இந்தியா |
பொருள் | மரம் |
கொண்டபள்ளி பொம்மைகள் என்பது, இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் விசயவாடாவுக்கு அருகில் அமைந்துள்ள கொண்டபள்ளி என்னும் ஊரில் மரத்தினால் செய்யப்படும் விளையாட்டுப் பொம்மைகளைக் குறிக்கும்.[1] பொம்மைக் குடியிருப்பு எனப் பொருள்படும் பொம்மலா காலனியிலேயே இக்கலைப்பணிக் கலை பயின்று வருகின்றது.[2] பொருட்களுக்கான புவியியல் குறியீடுகள் (பதிவும் பாதுகாப்பும்) சட்டம், 1999 என்னும் சட்டத்தின் கீழ் இது ஆந்திரப் பிரதேசத்தின் புவியியல் குறியீட்டுக் கைப்பணியாகப் பதியப்பட்டுள்ளது.[3][4] சங்கிராந்தி, நவராத்திரி ஆகிய விழாக் காலங்களில் வீடுகளில் பலவகைப் பொம்மைகளை அடுக்கி உருவாக்கப்படும் பொம்மைக் கொலுவின் ஒரு பகுதியாக கொண்டபள்ளி பொம்மைகளும் இடம்பெறுகின்றன.[5] சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்களாகவும் இவை பயன்படுகின்றன.
வரலாறு
[தொகு]இக்கைப்பணி 400 ஆண்டுகள் பழமையான ஒரு மரபு. இக்கைப்பணியில் ஈடுபடும் கலைஞர்கள் தம்மைப் பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆரியசத்திரியர்கள் (நாகார்சாலு எனவும் அழைக்கப்படுகின்றனர்) என அடையாளம் காண்கின்றனர்.[2] இவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் இராசத்தானில் இருந்து கொண்டபள்ளிக்குப் புலம் பெயர்ந்ததாகச் சொல்கின்றனர். இவர்கள் தாம், இந்துக் கடவுளான சிவபெருமானின் அருளால் கலையிலும் கைப்பணியிலும் திறமை பெற்றதாக நம்பப்படும் முக்தரிஷியின் வழி வந்தவர்கள் என்கின்றனர்.[1] எனினும் தற்காலத்தில் ஆரியசத்திரிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, மரபுகள், மதங்கள் போன்றவற்றையும் தாண்டிப் பல்வேறு சமூகத்தினரும் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர்.
பொம்மைக் கைப்பணி
[தொகு]கொண்டபள்ளி பொம்மைகளைக் கொண்டபள்ளிக் குன்றுகளின் அயற் பகுதிகளில் இருக்கும் தெல்லா போனிக்கி என்னும் மென் மரத்தால் செய்கின்றனர். மரத்தை முதலில் செதுக்கிய பின்னர் அதன் விளிம்புகளை செம்மைப்படுத்துவர். இறுதியாகச் சொல்லப்பட்ட படிமுறையில் எண்ணெய் வண்ணம், நீர் வண்ணம் அல்லது தாவரச் சாயங்களைப் பயன்படுத்தி நிறம் பூசுவதும் அடங்கும். பொம்மை வகைகளைப் பொறுத்து எனாமல் நிறப் பூச்சுக்களைப் பூசுவதும் உண்டு.[1][6] இவர்கள் தொன்மங்களோடு தொடர்புடைய உருவங்களையும்; விலங்குகள், பறவைகள், மாட்டு வண்டிகள், நாட்டுப்புற வாழ்க்கை போன்றவை சார்ந்த உருவங்களையும் உற்பத்தி செய்கின்றனர். இவற்றுள் திருமாலின் பத்து அவதாரங்கள், நடனப் பெண்கள் என்பன சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை.[7]
பெரும்பாலும் வீட்டில் செய்யப்படும் கைத்தொழிலான இதில் குடும்பத்திலுள்ள பலரும் ஈடுபடுகின்றனர். ஆனாலும், எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்வதில்லை. ஆண்கள் மரத்தைச் செதுக்கும் வேலைகளில் ஈடுபடப் பெண்கள் நிறம் பூசும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். பொதுவாகக் குடும்பங்கள் தனித்தனியாக இத்தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், பெரும் எண்ணிக்கையில் பொம்மைகள் தேவைப்படும்போது பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து பணிபுரிவதும் உண்டு.
ஆதரவு
[தொகு]முற்காலத்தில் அரசர்களின் ஆதரவைப் பெற்றிருந்த இக்கலை வடிவம், போதிய வருமானம் இல்லாததால் வீழ்ச்சியடைந்து வருகின்றது. பொம்மைகளை உருவாக்குவதற்கு எடுக்கும் நேரம், மேற்கத்தியக் கலைகளின் செல்வாக்கு, இளம் வயதினர் இக்கலையில் ஈடுபட ஊக்குவிக்கப்படாமை என்பன இக்கலை வீழ்ச்சியடைவதற்கான பிற காரணங்கள்.[8][9] லெப்பாக்சி, பொது மனிதாபிமான நம்பிக்கை நிதிய லான்கோ நிறுவனம் என்பன பொம்மை செய்யும் கலையை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான முன்னெடுப்புக்களைச் செய்து வருகின்றன.[6] அரச நிறுவனங்களும் கூடிய அளவு மக்களை இதில் ஈடுபடுத்தி இக்கலையை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்கும், கைப்பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Guhan, V (21 June 2003). "Creative Kondapally". The Hindu இம் மூலத்தில் இருந்து 27 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160127053030/http://www.thehindu.com/thehindu/yw/2003/06/21/stories/2003062100470300.htm. பார்த்த நாள்: 27 January 2016.
- ↑ 2.0 2.1 "Toying with heritage: No heir to Kondapalli's amazing art – Times of India". The Times of India (Kondapalli (Krishna)). 19 May 2015. http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Toying-with-heritage-No-heir-to-Kondapallis-amazing-art/articleshow/47336094.cms. பார்த்த நாள்: 27 January 2016.
- ↑ "Registration Details of Geographical Indications" (PDF). Intellectual Property India, Government of India. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
- ↑ "Geographical Indication". The Hans India. 23 January 2016. http://www.thehansindia.com/posts/index/Hans/2016-01-23/Geographical-Indication/201919. பார்த்த நாள்: 27 January 2016.
- ↑ "News Archives: The Hindu". www.hindu.com. 12 January 2011 இம் மூலத்தில் இருந்து 26 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140626104254/http://www.hindu.com/2011/01/12/stories/2011011261670200.htm. பார்த்த நாள்: 27 January 2016.
- ↑ 6.0 6.1 Chandaraju, Aruna (27 January 2016). "Playing safe with local craft". Deccan Herald. http://www.deccanherald.com/content/64394/playing-safe-local-craft.html. பார்த்த நாள்: 27 January 2016.
- ↑ Banu, Saira (6 September 2009). "Treasure in traditional toys" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/features/kids/treasure-in-traditional-toys/article15906.ece. பார்த்த நாள்: 27 January 2016.
- ↑ Devalla, Rani (23 January 2016). "Kalamkari saris in a new combination" (in en-IN). The Hindu (Visakhapatnam). http://www.thehindu.com/news/cities/Visakhapatnam/kalamkari-saris-in-a-new-combination/article8143354.ece. பார்த்த நாள்: 27 January 2016.
- ↑ Chaudhury, Swaati (11 January 2014). "Tales that Kondapalli toys narrate". Deccan Herald. https://www.deccanherald.com/content/379894/tales-kondapalli-toys-narrate.html. பார்த்த நாள்: 2 August 2018.