உள்ளடக்கத்துக்குச் செல்

பைரவகோனா குடைவரைக் கோவில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிபி 7-8 நூற்றாண்டு காலத்திய பைவரகோனா குடைவரைச் கோவில்கள்

பைரவக்கோனா குடைவரைக் கோவில்கள் என்பன ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டம், சந்திர சேகரபுரம் மண்டலத்தில் உள்ள அம்பாவரம் நல்லமலையில் உள்ள ஒரே பாறையில் செதுக்கப்பட்ட எட்டு குடைவரைக் கோவில்களின் தொகுப்பாகும். ஸ்ரீ திரிமுகத் துர்காம்பா மகாதேவி ஸ்ரீ பர்குலேஸ்வரி ஸ்வாமி கோவில் என்று அழைக்கப்படும் இக்கோவிலில் சிவபெருமானின் 64 திருமேனிகளில் ஒருவரான பைரவர் சேத்திர பாலகராக அருள்பலிக்கிறார்.

இத்தலத்தில் சிவபெருமான் சசிநாகம், ருத்ரா, விஸ்வேசுவரர், நகரிகேசுவரா, பார்கேசுவரா, இராமேசுவரா, மல்லிகார்ஜுனா, பட்சமாலிகா லிங்கம் ஆகிய எட்டு இலிங்க வடிவங்களில் காட்சி தருகிறார். இக்குடைவரைக் கோவில்கள் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் பாதுகாப்பில் உள்ளன. 200 மீட்டர் உயரம் கொண்ட நீர்வீழ்ச்சியில் நீராடவும், கோவிலில் வழிபடவும் பௌர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.[1] கார்த்திகைப் பௌர்ணமி நாளில், கோவிலில் உள்ள பார்வதி தேவியின் சிலை மீது நிலவொளி விழுகிறது.[2]

பைரவகோனா

அமைவிடம்

[தொகு]

அம்பாவரம் நல்லமலை ஆந்திரப் பிரதேசத்தின் உதயகிரிக்கு அருகில் வடக்கு-தெற்காக ஓடும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். குடைவரைக் கோவிலுக்கு வெகு அருகிலேயே அழகிய சூழலுடன் கூடிய ஓர் இயற்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பைரவகோனா குடைவரைக் கோவில் அம்பாவரம் கொத்தப்பள்ளியிலிருந்து 2.3 கி.மீ. தொலைவிலும், சந்திரசேகரபுரத்திலிருந்து 23.5 கி.மீ. தொலைவிலும், உதயகிரியிலிருந்து 43.3 கி.மீ. தொலைவிலும், மைடுகூரிலிருந்து 88 கி.மீ. தொலைவிலும், நெல்லூரிலிருந்து 141 கி.மீ. தொலைவிலும், காலியிலிருந்து 119.9 கி.மீ. தொலைவிலும், எர்ரலகுண்ட்லாவிலிருந்து 120.7 கி.மீ. தொலைவிலும், கடப்பாவிலிருந்து 122.2 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து 314.9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு அருகிலுள்ள பெரிய இரயில் நிலையம் ஓங்கோல் 57.67 கி.மீ. தொலைவிலும், சிறிய இரயில் நிலையம் வினுகொண்டா 15.71 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தலத்தின் புவியமைவிடம் 15.° 5'15" அட்சரேகை 79°12' 14" தீர்க்க ரேகை ஆகும். கடல்மட்டத்திலிருந்து இத்தலம் 230 மீ (757 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

முற்காலப் பல்லவர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதி

[தொகு]

கி.பி. 300 ஆம் ஆண்டில் பல்லவ மன்னன் சிம்மவர்மன், இச்வாகு மன்னன் ருத்திரபுருசதத்தனை போரில் வென்று கடலோர ஆந்திராவின் பகுதிகளைக் கைப்பற்றி பல்லவ அரசை நிறுவினான். இவர்கள் நெல்லூர் மற்றும் குண்டூர் மாவட்டங்களை தங்கள் ஆளுகைக்கு உட்படுத்தினர்.. கி.பி.550 முதல் - சிம்ம விஷ்ணு ஆட்சிக்காலம் தொடங்கி - பல்லவர்கள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு இப்பகுதியை ஆளத் தொடங்கினர். பாதாமியில் உள்ள கல்வெட்டுகள் பல்லவர்கள் சாளுக்கிய நாட்டின் பகுதிகளை முழுமையாக கைப்பற்றியதை குறிப்பிடுகின்றன.[3]

முதலாம் மகேந்திரவர்மன்

[தொகு]

முதலாம் மகேந்திரவர்மன் சிம்மவிஷ்ணுவின் மகனாவான். இளம் வயதில் இளவரசனாக இருந்த காலத்தில் தெற்கு ஆந்திர பிரதேசத்தில் வளர்ந்து வந்துள்ளான். ஆந்திரப் பிரதேசத்தின் எஸ்பிஎஸ்ஆர் நெல்லூர் மாவட்டம், செஜெர்லா மண்டலம், செஜர்லாவில் உள்ள கபோதேஸ்வரா கோவிலில் பொறிக்கப்பட்ட முதலாம் மகேந்திரவர்மனின் கல்வெட்டு (S.I.I. Vol. VI No. 595) ஒன்று பல்லவ இளவரசன் மகேந்திரவர்மன் மேற்கொண்ட திருப்பணிகள் குறித்து பதிவு செய்துள்ளது. கபோதேசுவரர் கோவிலைக் கட்டுவதற்கு மகேந்திரவர்மன் 12 தேவகன்மிகளை நியமித்த செய்தியினை இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது. [4] ஜி.ழோவ் டூப்ரெய்ல் (G Jouveau-Dubreuil) என்ற பிரெஞ்சு வரலாற்றாய்வாளர் முன்மொழிந்த கோட்பாட்டின்படி, தனது குழந்தைப் பருவத்தை மகேந்திரவர்மன் கிருஷ்ணா நதிப் படுகையில் கழித்த போது, உண்டவல்லி மற்றும் பைரவகொண்டா குகைகளைக் காணநேர்ந்தது. இதன் மூலம் குடைவரைக் கட்டடக்கலைக்கான உத்வேகத்தை பெற்றதாக ழோவ் டூப்ரெய்ல் குறிப்பிட்டுள்ளார்.[5] தமிழ்நாட்டில் குடைவரைக் கோவில் கட்டடக்களையைத் தொடங்கியன் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரன் ஆவான். மண்டகப்பட்டு என்னுமிடத்தில் லட்சிஷிதாயன திரிதேவமூர்த்தி என்னும் குடைவரைக் கோவிலை உருவாக்கியவன் இம்மன்னனே ஆவான்.

பாசுபத சைவபிரிவின் செல்வாக்கு

[தொகு]

கி.பி 7 ஆம் நூற்றாண்டில் நெல்லூர் பகுதியில் சைவசமயம் செல்வாக்குப் பெற்றிருந்த செய்தி பாதாமி சாளுக்கிய மன்னன் முதலாம் விக்ரமாதித்யனின் தலமஞ்சி செப்பேடுகளின் வாயிலாக அறிய முடிகிறது. கி.பி 7 ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி 8 ஆம் நூற்றாண்டுகளில் பாசுபத சமயப் பள்ளிகள் வலுவடைந்து வந்தன. சித்தேஸ்வரம் மற்றும் ஜோதி ஆகிய பாசுபத மையங்கள் குறித்து கி.பி. 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரேணாட்டி சோழர்களின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாசுபத பிரிவினரின் பரவலான செல்வாக்கு மற்றும் அரச ஆதரவின் காரணமாக, கி.பி. 7 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளில் ஆலம்பூர், சித்தாவடம், அமராவதி, தர்மாவரம், உள்ளிட்ட பல பாசுபத சமய மையங்கள் தோன்றின. பாசுபத பிரிவினரின் பரவலான செல்வாக்கும், தலமஞ்சி செப்பேடுகள் குறிப்பிடும் சிவாச்சாரியர்களின் செல்வாக்கும் பைரவகோனாவில் குடைவரைக் கோவில்கள் உருவாவதற்குக் காரணமாக அமைந்தன.[3]

பைரவகோனா குடைவரைக் கோவில்கள்: கட்டடக்கலை

[தொகு]
  • மாமல்லபுரம் குடைவரைக் கோவில்களை ஒத்து அகழப்பட்டுள்ள பைரவகோனாவின் எட்டு குடைவரைக் கோவில்கள் இங்கு தென்-வடலாக அமைந்துள்ள கருங்கற் குன்றின் சரிவில், அலங்கரத்தூண்கள் மற்றும் நேர்த்தியாக செதுக்கப்பட்ட சிற்பத் தொகுப்புகளுடன் (Sculptural Panels) அகழப்பட்டுளளன.
  • பைரவகோனா குகைக் கோவிலில் 7 குகைகள் கிழக்கு நோக்கியும், ஒரு குகை வடக்கு நோக்கியும் உள்ளன.
  • பைரவகோனா குடைவரைக் கோவில்களின் தொகுப்பில் வடதிசையில் குடையப்பட்ட சில குடைவரைகளில் ஒற்றைக் கருவறை மட்டுமே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முதலாம் மகேந்திரவர்மன் குடைவரைகளில் காணப்படுவது போல தூண்களுடன் கூடிய முன் மண்டபம் எதுவுமில்லை. இவை எளிமையாகக் குடையப்பட்ட குடைவரைகள் ஆகும்.
  • இக்குடைவரைக் கோவிலில் சிவனின் எட்டு வெவ்வேறு இலிங்கங்களான சசிநாகர், உருத்திரர், விசுவேசுவரர், நாகரிகேசுவரர், பார்கேசுவரர், இராமேசுவரர், மல்லிகார்ச்சுனர் மற்றும் பட்சமாலிகா ஆகியன நிறுவப்பட்டுள்ளன.
  • சாளுக்கியர் குடைவரைக் கலையால் ஈர்க்கப்பட்ட பாண்டியர்கள், தாய்ப்பாறையிலேயே சிவலிங்கத்தின் பீடத்தையும் நந்தியையும் செதுக்கினர் அது போலவே பைரவகோனாவிலும் தாய்ப்பாறையிலேயே சிவலிங்கத்தின் பீடமும், இலிங்கத்திற்கு நேர் எதிரே நந்தியின் சிற்பமும் தாய்ப்பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளன.
தாய்ப்பாறையில் செதுக்கப்பட்டுள்ள சிவலிங்க பீடம் மற்றும் நந்தி
  • மாமல்லபுரத்தில் வராக மண்டபம், மகிசாசுரமர்த்தினி மண்டபம், பஞ்சபாண்டவ மண்டபம், ஆதிவராக மண்டபம், இராமானுச மண்டபம் ஆகிய குடைவரைகளில் குத்தவைத்து அமர்ந்திருக்கும் சிங்கத்தின் உருவம் பெரும் அளவிலான தூண்களின் அடிப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளது. இது பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம வர்மனின் கலைப்பாணியாகும். பல்லவரின் சின்னம் சிங்கம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.[6] மாமல்லபுரத்தில் காணப்படுவது போல குத்தவைத்து அமர்ந்திருக்கும் திறந்த வாயுடன் கூடிய சிங்கத்தின் உருவத்தை இங்குள்ள குடைவரைக் கோவிலின் மண்டபத்தில் உள்ள பெரும் தூணின் அடிப்பகுதியாக அமைத்துள்ளனர்.
பல்லவர்களின் சிங்கத்தூண்
பல்லவர்களின் சிங்கத்தூண்
  • இந்த சிங்கத்தூண்களின் தலைப்பினை குமிழ் வடிவத்தில் (Bulbous Capital) அமைத்துள்ளனர். அபாக்கசு (Abacus) சற்று பெரிதாகக் காணப்படுகிறது.
  • சிங்கத்தூண்களின் மீது அமைக்கப்பட்டுள்ள கனத்த விரிகோணப் போதிகைகளுக்கு (corbel) தரங்கப் போதிகைகள் என்று பெயர். வளைவுகளுடன் காடிகள் வெட்டப்பட்ட தரங்கப் போதிகைகள் பைரவகோனா குடைவரையின் தூண்களில் அமைக்கப்பட்டுள்ளது. தரங்கங்களுக்கு நடுவில் மேலிருந்து கீழாக வெட்டப்படும் நடுப்பட்டை எதுவும் பைரவகோனா குடைவரையில் காணப்படவில்லை.[7]
  • கபோதம் (Cornice) பிரஸ்தாரத்திற்கு மேலே அலங்காரக் குடுக்களுடன் (Kudus) கரடுமுரடாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழே பூதவரி வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
  • கருவறையின் நுழைவாயிலில் இரண்டு வாயிற்காவலர்களின் புடைப்புச் சிற்பங்கள் பக்கத்திற்கொன்றாக கருவறையைப் பார்த்தவாறு செதுக்கப்பட்டுள்ளன இச்சிற்பங்கள் இரு கைகளுடன் திரிபங்க நிலையில் தடியின் மீது சாய்ந்தபடி ஒய்யாரமாக நிற்பது சிறப்பு. நேர்த்தியான ஆடை அணிகலன்களுடன் தோன்றும் வாயிற்காவலர் சிற்பங்களின் முகங்கள் கோரைப்பற்கள் மற்றும் கொம்புகளின்றிக் காணப்படுகின்றன.[8]
  • படிமவியல் அடிப்படையில் இந்தக் குடைவரைக் கோவில்கள் கி.பி. 7 அல்லது கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் [9]
  • மாமல்லபுரம் குடைவரைகளின் பக்கச் சுவர்களிலிலும், பிற்சுவர்களிலும் செதுக்கப்பட்டுள்ள சிறப்பத் தொகுதிகளில் மகிசாசுரமர்த்தினி, அனந்தசாயனம், பூவராகர், திரிவிக்கிரமர் குறித்த புராணக் கதைகளும் கஜலட்சுமி, துர்க்கை, பிரம்மன், அரிகரன் ஆகிய உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதுவும் முதலாம் நரசிம்மவர்மனின் கலைப்பணியாகும். [8]விஷ்ணு, பிரம்மன், கணேசன், சண்டிகேசுவரர், மகேசன், அரிகரன், நடராசர், வாயிற்காவலர் ஆகிய தெய்வங்களின் புடைப்புச் சிற்பங்கள் பைரவகோனா குடைவரைகளின் சுவர்களின் கோட்டங்களில் சிற்பத்தொகுதியாகச் செதுக்கப்பட்டுள்ளன. [3]
நடராசா மற்றும் அரிகரன் புடைப்புச் சிற்பங்கள்
  • வடக்கு நோக்கியிருக்கும் குடைவரைக் கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. விஷ்ணு நான்கு கைகளுடன் நின்ற நிலையில் சங்கு, சக்கரம், கதை, ஏந்தியுள்ளார். பிரம்மன் நான்கு கைகளுடன் அக்சமாலை, கமண்டலம், ஏந்தி அபய முத்திரை காட்டுகிறார்.[3]
பிரம்மன்
  • மகேசன் மூன்று தலைகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார். சிற்பத்தின் கீழ்ப்பகுதி சிதைந்துள்ளது. எல்லோரா குடைவரைக் கோவிலில் இதுபோன்ற சிற்பம் கருவறையில் செதுக்கப்பட்டுள்ளது.
  • ஒரு குடைவரையில் நான்கு கைகளுடன் கணேசன் சிற்பம் அர்த்தபரியங்காசன நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. சுண்டெலி காட்டப்படவில்லை.[3]
  • மைய குடைவரை ஒன்றில் திரிமுக துர்கா தேவியின் சிலையும் செதுக்கப்பட்டுள்ளது.
  • அன்னபூர்ணா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு குடைவரைக் கோவிலை ஏணி வழியாக மேடைமீது ஏறிச்சென்று காணலாம்.
  • பாறையின் வடக்கு முனையில் இரண்டு அற்புதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒன்று எட்டுக் கைகளுடன் சமபங்க நிலையில் நிற்கும் நிலையில் செதுக்கப்பட்டுள்ள அரிகரனின் சிற்பம் ஆகும். வலப்புறம் நான்கு கைகளில் திரிசூலம், பரசு, அக்சமாலையுடன் அபய முத்திரை காட்டும் சிவனும், இடப்புறம் சங்கு, சக்கரம், கட்கத்துடன் கட்யவலம்பித முத்திரை காட்டும் விஷ்ணுவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு சிற்பம் எட்டுக் கைகளுடன் ஆனந்ததாண்டவமாடும் சிவன் அருவியியைப் பார்த்தாவாறு செதுக்கப்பட்டுள்ளது. வலது கரங்கள் திரிசூலம், பரசு, தமரு, ஏந்தி அபய முத்திரை காட்டுகின்றன. இடது கரங்கள் நாகம், கட்வங்கம், கஜஹஸ்தம், ஏந்தியுள்ளன.[3]

திருவிழாக்கள்

[தொகு]

சிவபெருமானுக்கும், விஷ்ணுவுக்கும் உகந்ததாகக் கருதப்படும் கார்த்திகை பௌர்ணமி நாள் , பைரவகோனாவில் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி இத்தலத்தில் கொண்டாடப்படும் மற்றொரு முக்கியமான திருவிழாவாகும்.

தங்குவதற்கு சிறிய விருந்தினர் மாளிகை உள்ளது.

முகவரி

[தொகு]

பைரவகோனா கோவில், அம்பாவரம் கொத்தப்பள்ளி, பிரகாசம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் 523112

எப்படிச் செல்வது?

[தொகு]

நெல்லூர் மாவட்டத்தில் உள்ள உதயகிரி என்ற ஊரிலிருந்து பைரவகோனா 43 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உதயகிரி APSRTC பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் பைரவகோனாவிலிருந்து 15 தொலைவில் உள்ள சீதாராமபுரத்திற்கு செல்கின்றன. .சீதாராமபுரத்திலிருந்து பைரவகோனாவிற்கு ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bhairavakona beckons pilgrims The Hindu March 07, 2016
  2. Top 8 Places To Visit In Ongole Trans India Travels. June 20, 2014
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Bhairavakonda – Rock Cut Cave Temples EV Padmaja International Journal of History 2020; 2(1): 16-18
  4. மகேந்திரவர்மன் மயிலை சீனி. வேங்கடசாமி. 1955 பக். 210
  5. The_Pallavas. G Jouveau-Dubreuil Tr. by V.S.Swaminadha Dikshitar. Pondichery. 1917. pp 27 - 35
  6. Pallava Architecture of South India K.R.Srinivasan pp. 125 - 127
  7. கட்டடக்கலைத்தொடர் - 8 ச. கமலக்கண்ணன். வரலாறு.காம் இதழ் 10. ஏப்ரல் 15 - மே 14, 2005
  8. 8.0 8.1 A rock shrine dedicated to Lord's Varaha avatar Chithra Madhavan. The New Indian Express July06, 2016
  9. File:7th to 8th century Bhairavakona rock cut cave temples, Ambavaram Nallamala Hills, Andhra Pradesh - 17.jpg Description Ms Sarah Welch
  10. Bhairavakona Prakasam District