உள்ளடக்கத்துக்குச் செல்

மிருணாளினி சாராபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிருணாளினி சாராபாய்
மிருணாளினி சாராபாய்
பிறப்பு(1918-05-11)11 மே 1918
கேரளம், இந்தியா
இறப்புசனவரி 21, 2016(2016-01-21) (அகவை 97)
அகமதாபாத்
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுநடனக் கலைஞர்
வாழ்க்கைத்
துணை
விக்கிரம் சாராபாய்
உறவினர்கள்இலட்சுமி சாகல் (உடன்பிறந்தவர்)

மிருணாளினி சாராபாய் (Mrinalini Sarabhai, 11 மே 1918 - 21 சனவரி 2016 )[1] இந்தியாவின் பிரபலமான ஒரு நடனக் கலைஞர், பயிற்றுனர் மற்றும் நடன இயக்குநர் என்ற பன்முகங்கள் கொண்டவர் ஆவார். அகமதாபாத் நகரில் இவர் நடனம், நாடகம், இசை மற்றும் பொம்மலாட்டம் ஆகியவற்றுக்கான "தர்பனா நிகழ்த்துக் கலைக் கழகம்" என்ற இசைக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார்.[2]. பரத நாட்டியம், கதகளி ஆகிய நாட்டியக் கலைகளில் மிருணாளினி 18,000 நபர்களுக்கும் அதிகமானோரைப் பயிற்றுவித்தார்.[3]. கலைக்கு இவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக பத்மசிறீ, பத்மபூசண் உட்படப் பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன [4].

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

இளமையும் கல்வியும்

[தொகு]

மிருணாளினி 1918 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் கேரளத்தில்,[1] முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான சுப்பராம சுவாமிநாதன் மற்றும் அம்மு சுவாமிநாதன் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினர். தாய் ஒரு சமூகநலத் தொண்டர் மற்றும் சுதந்திரத் செயற்பாட்டாளர் ஆவார். இளம் வயதில் மிருணாளின் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தார். அங்குள்ள டால்குரோசு நடனப் பள்ளியில் மேற்கத்திய நடனம் பயின்றார்.[5]. இந்தியாவில் இரவீந்திரநாத் தாகூரின் வழிகாட்டலில் சாந்திநிகேதனில் மிருணாளினி கல்வி பயின்றார். பின்னர் மிருணாளினி சிறிது காலம் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள அமெரிக்கன் நாடகக் கல்விக் கழகத்தில் இணைந்து பயிற்சி பெற்று இந்தியா திரும்பினார். இங்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பரதநாட்டியமும் தகழி குஞ்சு குருப்பு என்பவரிடம் கதகளி நடனமும் பயின்றார்.

திருமணம் மற்றும் அடுத்த ஆண்டுகள்

[தொகு]
கணவர் விக்கிரம் சாராபாயுடன் மிருணாளினி, 1948

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையாகக் கருதப்படும் இந்திய இயற்பியலாளர் விக்கிரம் சாராபாயை 1942 ஆம் ஆண்டு மிருணாளினி மணந்தார். இவருக்கு கார்த்திகேயன் என்ற ஒரு மகனும் மல்லிகா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களும் பிற்காலத்தில் நடனம் மற்றும் நாடகங்களில் புகழ் பெற்றனர். 1948 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் மிருணாளினி 'தர்பானா' என்ற நடன நிறுவனத்தை நிறுவினார். நிறுவனம் தொடங்கிய பின்னர் ஒரு வருடம் கழித்து, இவர் பாரிசு நகரிலுள்ள தெட்ரே நேசனல் டி சாய்லோட்டு அரங்கத்தில் தனது நடன நிகழ்ச்சியை நிகழ்த்தினார். அதற்காக இவர் பல விமர்சனங்களைப் பெற்றார். மிருணாளினியும் விக்ரமும் தங்களது திருமண வாழ்வில் சில பிரச்சனைகளை எதிர் கொண்டனர். வாழ்க்கை வரலாற்றாசிரியர் அமிர்தா சாவின் கூற்றுப்படி, விக்ரம் சாரபாய் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை கொண்டிருந்தார். சமூக நலனுக்காக அறிவியலைப் பயன்படுத்துவதில் தன்னை அர்ப்பணிப்பதன் மூலம் அவ்வெற்றிடத்தை நிரப்ப அவர் முயன்றார்.[6].

பிற பங்களிப்புகள்

[தொகு]

முந்நூறுக்கும் மேற்பட்ட நடன நாடகங்களை நடனம் அமைத்து இயக்கியதை தவிர, மிருணாளினி குழந்தைகளுக்கான பல புதினங்கள், கவிதை, நாடகங்கள் மற்றும் கதைகளை எழுதியுள்ளார். குசராத்து மாநில கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். காந்திய கொள்கைகளை மேம்படுத்துவதற்காக செயல்படும் ஒரு அமைப்பான சர்வோதயா சர்வதேச அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவராகவும் மிருணாளினி செயல்பட்டார். மேம்பாட்டுக்கான நேரு அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்தார் [7]. மிருணாளினியின் சுயசரிதையானது மிருணாளினி சாரபாய்: இதயத்தின் குரல் என்ற பொருள் கொண்ட "மிருணாளினி சாரபாய்: தி வாய்சு ஆஃப் தி ஆர்ட்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.[8].

குடும்பம்

[தொகு]

இவரது தந்தை சுப்புராம சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணி மற்றும் சென்னை சட்டக் கல்லூரியின் முதல்வராக இருந்தார். சமூக நலத் தொண்டர் அம்மு சுவாமிநாதன் இவரது தாயாராவார். மூத்த சகோதரி இலட்சுமி சாகல் இந்திய தேசிய இராணுவத்தின் சுபாசு சந்திரபோசின் 'ஜான்சி படைப் பிரிவின் ராணியாகவும்' தளபதியாகவும் இருந்தார். மூத்த சகோதரர் கோவிந்த் சுவாமிநாதன் ஒரு சட்டத்தரணி ஆவார். இவர் உரிமையியல் சட்டம் மற்றும் நிறுவனச் சட்டத்தைத் தவிர அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் சட்டத்தில் நிபுணராக சென்னையில் பயிற்சி பெற்றார். இவர் சென்னை மாநிலத்தின் (இப்போது தமிழ்நாடு) அரசாங்கத் தலைமை சட்ட அதிகாரியாக இருந்தார்.

விருதுகள்

[தொகு]

1992 ல் இந்திய குடிமக்களின் உயரிய விருதுகளான பத்மபூசண் மற்றும் 1965 இல் பத்மசிறீ ஆகிய விருதுகளை மிருணாளினி சாராபாய் இந்திய அரசிடமிருந்து பெற்றுள்ளார்.[9] 1997 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் நார்விச், கிழக்கு ஆங்லியா ஆகிய பல்கலைக்கழகத்த்தின் மூலம் "கடிதங்களின் முனைவர்" என்ற பட்டம் பெற்றார். பிரெஞ்சு சர்வதேச காப்பங்களின் சங்கத்தின் "டி லா டான்ஸ்" என்ற பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் ஆவார். 1990 ஆம் ஆண்டில் பாரிசின் சர்வதேச நடனக் குழுவின் நிர்வாகக் குழுவிற்கு இவர் பரிந்துரைக்கப்பட்டார்.[10] 1994 இல் புதுதில்லியில் உள்ள சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் கௌரவம் வழங்கப்பட்டது. மெக்சிகோவின் பாலே நாட்டுப்புற நடனத்திற்காக மெக்ஸிகன் அரசாங்கத்தால் இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. தர்பானா நிகழ்த்துக் கலைக் கழகம் அதன் தங்க விழாவை 1998 திசம்பர் 28 அன்று கொண்டாடியது. அதில் பாரம்பரிய நடன்த் துறையில் ஆண்டுதோறும் "பாரம்பைய சிறப்பிற்கான மிருணாளினி சாரபாய் விருது" அறிவிக்கப்பட்டது. கேரள அரசின் வருடாந்திர விருதான "நிசாகந்தி புரஸ்காரம்" என்ற விருதைப் பெற்ற முதல் கலைஞர் ஆவார். இந்த விருது 2013 இல் இவருக்கு வழங்கப்பட்டது.[11] 11 மே 2018 அன்று கூகிள் டூடுல் இவரது 100 வது பிறந்த நாளை நினைவுகூர்ந்தது.[12]

மறைவு

[தொகு]

உடல்நலக் குறைவின் காரணமாக 21 சனவரி 2016 அன்று அகமதாபாத்தில் காலமானார்.[13].

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Debra Craine and Judith Mackrell (2010). The Oxford Dictionary of Dance. Oxford: University Press. p. 396. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0199563446.
  2. Indira Gandhi Memorial Trust (1993). Challenges of the twenty-first century: Conference 1991. Taylor & Francis. p. 375. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-224-0488-X.
  3. "Tradition takes over". Indian Express. 26 December 1998. http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19981226/36051964.html. பார்த்த நாள்: 20 October 2010. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
  5. "First step, first love". Indian Express. 9 December 2002 இம் மூலத்தில் இருந்து 22 ஏப்ரல் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040422214450/http://www.hinduonnet.com/thehindu/mp/2002/12/09/stories/2002120900850300.htm. 
  6. Amrita Shah (2007) Vikram Sarabhai: A Life. Penguin Viking. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-99951-2
  7. Nehru Foundation for Development பரணிடப்பட்டது 2012-02-23 at the வந்தவழி இயந்திரம். Rizvi shabib .org
  8. Mrinalini Sarabhai (2004). The Voice of the Heart: An Autobiography. HarperCollins Publishers India, a joint venture with India Today Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7223-475-1.
  9. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  10. Indira Gandhi Memorial Trust (1993). Challenges of the twenty-first century: Conference 1991. Taylor & Francis. p. 375. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-224-0488-X.
  11. "Nishagandhi Puraskaram for Mrinalini Sarabhai". தி இந்து. 26 January 2013. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
  12. "Mrinalini Sarabhai's 100th Birthday". Google.com. 11 May 2018.
  13. "Mrinalini Sarabhai passes away at 97". The Hindu. சனவரி 22, 2016. பார்க்கப்பட்ட நாள் சனவரி 22, 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிருணாளினி_சாராபாய்&oldid=4160727" இலிருந்து மீள்விக்கப்பட்டது