மல்லிகா சாராபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லிகா சாராபாய்
பிறப்புமே 9, 1954 (1954-05-09) (அகவை 69)
அகமதாபாத், குஜராத்
பணிகுச்சிப்புடி மற்றும் பரதநாட்டியக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1969 - நடப்பு
உயரம்5' 6"
பிள்ளைகள்ரெவாண்ட்டா மற்றும் அனாஹித்தா
வலைத்தளம்
அதிகாரப்பூர்வ இணையதளம்

மல்லிகா சாராபாய் (Mallika Sarabhai) (பிறப்பு:மே 9, 1954) ஒரு இந்திய சமூக ஆர்வலரும் மற்றும் பிரபல நடனக் கலைஞருமாவர். இவர் மறைந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிபுணர் விக்ரம் சாராபாய் - பிரபல நடனக் கலைஞர் மிருணாளினி சாராபாய் தம்பதியினரின் மகளான இவர் ஒரு திறமையான குச்சிபுடி மற்றும் பரதநாட்டிய நடனக் கலைஞராவார். [1] மேலும்,சமூக மாற்றம் மற்றும் மாற்றத்திற்காக கலைகளைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவராவார். 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் லால் கிருட்டிண அத்வானியை எதிர்த்துப் போட்டியிட்டார். இதனால் நாடு முழுவதும் பிரபலம் அடைந்த மல்லிகா சாராபாய் அந்தத் தேர்தலில் வெற்றி பெறவில்லை. [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மல்லிகா சாரபாய் இந்தியாவின் குசராத்தின் அகமதாபாத்தில் விக்ரம் சாராபாய் மற்றும் மிருணாளினி சாராபாய் ஆகியோருக்குப் பிறந்தார். 1974 ஆம் ஆண்டில் அகமதாபாத், இந்திய மேலாண்மைக் கழகத்திலிருந்து முதுகலை வணிக மேலாண்மை மற்றும் குசராத்து பல்கலைக்கழகத்தில் நிறுவன நடத்தையில் முனைவர் பட்டம் பெற்றார். [3] இவர் ஒரு பிரபல நடன இயக்குனரும் மற்றும் நடனக் கலைஞருமாவார். மேலும் சில இந்தி, மலையாளம், குஜராத்தி மற்றும் சர்வதேச படங்களிலும் நடித்துள்ளார்.

தொழில்[தொகு]

இவர் இளம் வயதிலேயே நடனம் கற்கத் தொடங்கினார். மேலும் 15ஆவது வயதில் சினிமாவில் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பீட்டர் ப்ரூக் என்பவரின் மகாபாரத நாடகத்தில் திரௌபதி பாத்திரத்தில் மல்லிகா நடித்தார். மல்லிகா தனது நீண்ட வாழ்க்கையில் பல பாராட்டுகளை வென்றுள்ளார். 1977இல் பாரிசில் தியேட்டர் டி சாம்ப்ஸ் எலிசீஸ் என்ற அரங்கில் நடந்த நடன நிகழ்ச்சியில் பெற்ற கோல்டன் ஸ்டார் விருது அவற்றில் ஒன்றாகும். சாராபாய் ஒரு நடனக் கலைஞராகவும், ஒரு சமூக ஆர்வலராகவும் இருக்கிறார். [4] கலைகளுக்கான மையமான அகமதாபாத்தில் அமைந்துள்ள தர்ப்பனா அகாடமி ஆஃப் பெர்ஃபோர்மிங் ஆர்ட் என்ற நிறுவனத்தை இவர் நிர்வகிக்கிறார். மேலும் நடத்தை மாற்றத்திற்கான ஒரு மொழியாக கலைகளைப் பயன்படுத்துகிறார். [5]

நிகழ்ச்சி[தொகு]

1975 ஆம் ஆண்டில் வெளியான ஹிமாலே சே ஓன்ச்சா என்ற இந்தித் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். சுனில் தத்தை கதாநாயகனாகக் கொண்டிருந்த படம் வியாபார ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை. 1986 ஆம் ஆண்டில் பாசு சாட்டர்ஜி இயக்கிய ஷீஷா என்றத் திரைப்படத்தில் மிதுன் சக்கரவர்த்திக்கு இணையாக நடித்தார். 1989 ஆம் ஆண்டில் அவர் சக்தி: தி பவர் ஆஃப் வுமன் என்ற கடினமான நாடக படைப்புகளை நிகழ்த்தினார். [6]

இந்தியாவின் ஓரங்கட்டப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் குறித்து உயரடுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஹர்ஷ் மந்தரின் 'கேட்கப்படாத குரல்கள்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட 'அன்சுனி' என்ற நாடகத்திற்கான திரைக்கதையையும் மல்லிகா சாராபாய் எழுதியுள்ளார். இந்த நாடகம் 120 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் நடத்தப்பட்டது. அரவிந்த் கவுர் பின்னர் இதே பெயரில் இதை ஒரு நாடகமாக இயக்கியுள்ளார். தர்ப்பனா அகாதமி இந்தியா முழுவதும் பயணம் செய்யும் அன்சுனி என்ற தயாரிப்பு மூலம் மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

எழுத்துப் பணி[தொகு]

மல்லிகா முதலில் சக்தி: தி பவர் ஆஃப் வுமன் என்பதை எழுதத் தொடங்கினார். அதன் பின்னர் இவர் தனது நிகழ்ச்சிகள், மத்திய பிரதேசத்தில் உள்ள இஸ்ரோவின் கல்வி தொலைக்காட்சிக்கான தொலைக்காட்சித் தொடர்கள், திரைக்கதைகள் மற்றும் பரதநாட்டியத்திற்கான புதிய சமகால பாடல் வரிகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா, வனிதா, தி வீக், திவ்யா பாஸ்கர், ஹான்ஸ் மற்றும் டி.என்.ஏ போன்ற பத்திரிக்கைகளிலும் கட்டுரையாளராக இருந்துள்ளார்.

அரசியல்[தொகு]

|2009 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக காந்திநகர் மக்களவைத் தொகுதிக்கு பாரதீய ஜனதாகட்சியின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானிக்கு எதிராக தனது வேட்புமனுவை 2009 மார்ச் 9 அன்று மல்லிகா சாராபாய் அறிவித்தார். [7][8] இறுதியில், இவர் எல். கே. அத்வானியிடம் ஒரு பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். மேலும், இவரது தேர்தல் வைப்புத்தொகையை இழந்தார்.[9]

குறிப்புகள்[தொகு]

  1. International encyclopedia of dance: a project of Dance Perspectives Foundation, Inc
  2. "The Hindu : National : Mallika Sarabhai to contest against Advani". Archived from the original on 2009-03-23. பார்க்கப்பட்ட நாள் 2020-03-09.
  3. indobase Dances of India
  4. Inspiring woman
  5. Welcome to the world of Darpana பரணிடப்பட்டது 19 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
  6. "Inspiring woman - Mallika Sarabhai".
  7. Express India – Danseuse Mallika Sarabhai troops into Advani bastion in Gandhinagar பரணிடப்பட்டது 23 செப்டெம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம்
  8. "Poll dance: Mallika to contest against LK from Gandhinagar – Times of India". Archived from the original on 2012-05-09. பார்க்கப்பட்ட நாள் 2020-03-09.
  9. "The Hindu – National – Modi magic fails to work". Archived from the original on 2009-05-19. பார்க்கப்பட்ட நாள் 2020-03-09.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிகா_சாராபாய்&oldid=3566722" இலிருந்து மீள்விக்கப்பட்டது