நாப்பட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூற்று: 18°32′N 31°50′E / 18.53°N 31.84°E / 18.53; 31.84

நாப்பட்டா படவெழுத்துக்களில்
n
p t
N25

npt
பொன்னால் ஆன நாப்பட்டா கழுத்தணி (கிமு 6வது நூற்றாண்டு). இது எகிப்தியப் படவெழுத்து முறையைப் பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது.
செபல் பர்க்காலின் அடிவாரத்தில் இருந்த அமுன் கோயிலின் எஞ்சியுள்ள கடைசித் தூண்கள்

நாப்பட்டா பண்டைக்கால நூபியாவில் நைல் ஆற்றின் மேற்குக் கரையில் இருந்த ஒரு நகர-நாடு ஆகும். இது வடக்கு சூடான் நாட்டில் தற்காலத்து கரிமா நகர் இருக்கும் இடத்தில் இருந்தது. கிமு 8 தொடக்கம் 7 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் நூபிய இராச்சியமான குஷ் இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது. அக்காலத்தில் இந்த இராச்சியத்தை ஆண்ட வம்சத்தினர் எகிப்தைக் கைப்பற்றினர். இவர்கள் எகிப்தின் 25வது வம்சம் அல்லது நூபிய வம்சம் என அழைக்கப்படுகின்றனர். 25வது வம்சத்தினரின் ஆட்சிக் காலத்தை எகிப்தின் "நாப்பட்டாக் காலம்" எனவும் அழைப்பது உண்டு.

தோற்ற வரலாறு[தொகு]

கிமு 15 ஆம் நூற்றாண்டில் நூபியாவைக் கைப்பற்றிய மூன்றாம் துத்மோசு நாப்பட்டா நகரை உருவாக்கினார். அருகில் இருந்த செபெல் பர்க்காலையும் கைப்பற்றி அதைப் புதிய இராச்சியத்தின் தென் எல்லை ஆக்கினார். கிமு 1075ல் எகிப்தின் தலைநகராக இருந்த தேபிசின் அமுன் கோவில் தலைமைக் குரு சக்தி வாய்ந்தவராகி மேல் எகிப்தில் பாரோவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தினார். இது மூன்றாம் இடைக் காலத்தின் (கிமு 1075-கிமு 664) தொடக்கம் ஆகும். அதிகாரம் பிளவுபட்டதன் காரணமாக நூபியர் தமது தன்னாட்சியை மீட்டுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. இவர்கள் நாப்பட்டாவைத் தலைமை இடமாகக் கொண்டு குஷ் இராச்சியத்தை நிறுவினர்.

நாப்பட்டாக் காலம்[தொகு]

கிமு 750ல், நாப்பட்டா ஒரு வளர்ச்சியடைந்த நகரம். ஆனால், எகிப்து இன்னமும் அரசியல் உறுதிப்பாடின்மையால் தத்தளித்துக்கொண்டு இருந்தது. அரசர் கசுட்டா, இந்த நிலைமையைப் பயன்படுத்தி மேல் எகிப்தைத் தாக்கினார். இவருக்குப் பின்வந்த பியேயும், சபாக்காவும் (கிமு 721-707) இதே கொள்கையையே பின்பற்றினர். இறுதியாக சபாக்கா தனது இரண்டாவது ஆட்சியாண்டில் முழு நைல் பள்ளத்தாக்கையுமே குசிட்டியக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். சபாக்கா, எகிப்திலும், நூபியாவிலும் நினைவுச் சின்னங்களைக் கட்டும் கொள்கையையும் கடைப்பிடித்து வந்தார். குசிட்டிய அரசர்கள் மேல் எகிப்தை ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலமும், முழு எகிப்தையும் கிமு 721 முதல் கிமு 664 வரையான 57 ஆண்டுகளும் ஆண்டனர். 25வது வம்சத்தினரின் ஒற்றுமைப்பட்ட எகிப்து, புதிய இராச்சியக் காலத்து எகிப்தைப் போன்ற அளவினதாக இருந்தது. 25வது வம்ச ஆட்சி பண்டை எகிப்தில் மறுமலர்ச்சிக் காலம் ஒன்றுக்குக் கட்டியம் கூறியது.[1] சமயம், கலைகள், கட்டிடக்கலை என்பன புகழ் பெற்ற பழைய, இடைக்கால, புதிய இராச்சியக் காலத்து வடிவங்களுக்கு மீள்விக்கப்பட்டன. தகர்க்கா போன்ற பாரோக்கள் மெம்பிசு, கர்னாக், காவா, செபெல் பர்க்கால் என்பன உட்பட நைல் பள்ளத்தாக்குப் பகுதி முழுவதும், புதிய கோயில்களையும் நினைவுச் சின்னங்களையும் அமைத்தனர் அல்லது பழையவற்றைப் புதுப்பித்தனர்.[2] இடை இராச்சியக் காலத்துக்குப் பின்னர் 25வது வம்ச ஆட்சிக் காலத்திலேயே தற்காலச் சூடானின் பகுதிகள் உட்பட நைல் ஆற்றுப் பகுதி முழுவதும் பரவலாகப் பிரமிடுகள் கட்டப்பட்டன.[3][4][5] எனினும், தகர்க்காவின் காலத்திலும், தொடர்ந்த அவரது ஒன்றுவிட்ட சகோதரனான தனுட்டாமுன் ஆட்சிக் காலத்திலும் அசிரியர்களுடன் அடிக்கடி பிணக்குகள் ஏற்பட்டவண்ணம் இருந்தன. கிமு 664ல் இறுதி அடியாக தேபிசு, மெம்பிசு ஆகிய நகரங்களை அசிரியர்கள் பிடித்துக்கொண்டனர். 25வது வம்ச ஆட்சி முடிவுற்றதுடன், அவர்கள் தமது தாய் நிலமான நாப்பட்டாவுக்குப் பின்வாங்கினர். இங்கேயே 25வது வம்ச அரசர்கள் எல்லோரும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நைல் பள்ளத்தாக்குக் கண்ட முதல் பிரமிடுகளுக்குக் கீழ் அடக்கம் செய்யப்பட்டனர். நாப்பட்டாவையும், மெரோவையும் மையமாகக் கொண்டு விளங்கிய குஷ் இராச்சியம் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையாவது புகழுடன் விளங்கியது.

குறிப்புகள்[தொகு]

  1. Diop, Cheikh Anta (1974). The African Origin of Civilization. Chicago, Illinois: Lawrence Hill Books. பக். 219–221. ISBN 1-55652-072-7. 
  2. Bonnet, Charles (2006). The Nubian Pharaohs. New York: The American University in Cairo Press. பக். 142–154. ISBN 978-977-416-010-3. 
  3. Mokhtar, G. (1990). General History of Africa. California, USA: University of California Press. பக். 161–163. ISBN 0-520-06697-9. 
  4. Emberling, Geoff (2011). Nubia: Ancient Kingdoms of Africa. New York: Institute for the Study of the Ancient World. பக். 9–11. ISBN 978-0-613-48102-9. 
  5. Silverman, David (1997). Ancient Egypt. New York: Oxford University Press. பக். 36–37. ISBN 0-19-521270-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாப்பட்டா&oldid=1371173" இருந்து மீள்விக்கப்பட்டது