கீர்த்தி மந்திர், போர்பந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாத்மா காந்தியின் பிறந்த இடம், போர்பந்தர் .

கீர்த்தி மந்திர், போர்பந்தர் இந்தியாவின் குஜராத்தின் போர்பந்தர் நகரில் அமைந்துள்ள மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மற்றும் கஸ்தூர்பா காந்தி ஆகியோரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு இல்லமாகும்.[1][2][3][4]

பின்னணி[தொகு]

அக்டோபர் 2, 1869 இல் மகாத்மா காந்தி பிறந்த, காந்தி குடும்பத்தின் மூதாதையர் வீடானது கீர்த்தி மந்திரை ஒட்டி அமைந்துள்ளது.[1][3] 1944ஆம் ஆண்டில் காந்தி கடைசியாக அகா கான் அரண்மனையில் இருந்து பிரிட்டிஷ் அரசால் வெளியே வந்தபோது, போர்பந்தரில் பிறந்த இடத்தில் ஒரு சிறந்த நினைவுச் சின்னத்தை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அந்த நேரத்தில், போர்பந்தரின் மகாராஜாவாக இருந்த எச்.எச். மகாராண ஸ்ரீ நடவர்சிஞ்சி மற்றும் ராஜ் ரத்னா ஸ்ரீ நஞ்சிபாய் காளிதாஸ் மேத்தா மற்றும் அவரது மனைவி திருமதி. சாந்தோக்பென் மேத்தா மேற்கொண்ட முயற்சியின் காரணமாக இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. கீர்த்தி மந்திருக்கு அடித்தளம் கட்டுமானப் பணித் தொடங்குவதற்கு முன்பாக அருகிலிருந்த காந்தியின் மூதாதையர் வீடு அதில் வாழ்ந்த காந்திய குடும்ப உறுப்பினர்களிடமிருந்து வாங்கப்பட்டது. மகாத்மாஜி, தனது சொந்தப் பொறுப்பாக, நஞ்சிபாய்க்கு எழுத்துப்பூர்வமாக இதற்கு ஒப்புதல் தந்துள்ளார். முழு கட்டிடத்தையும் விற்பனை செய்வதற்கான சட்ட ஆவணங்களுடன் அந்த ஒப்புதலை அளித்திருந்தார். தொடர்பான பதிவு ஆவணங்களை அவர் தனது கையால் கையெழுத்திட்டார். அது தற்போது கீர்த்தி மந்திர் வளாகத்தில் உள்ள ஒரு அருங்காட்சியக அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மூதாதையர் வீடு, தற்போது கீர்த்தி மந்திர் வளாகத்தின் ஒரு பகுதியாக அமைகிறது.

வரலாறு[தொகு]

ஹவேலி அமைப்பில் மூன்று மாடியைக் கொண்டு அது கட்டப்பட்டது காந்தியின் கொள்ளுத் தாத்தாவான, ஸ்ரீ ஹர்ஜீவன் ராய்தாஸ் காந்தியால் ஏறத்தாழ இருநூறு வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது. ஒரு உள்ளூர் பெண்மணியிடமிருந்து பதினேழாம் நூற்றாண்டில் இது வாங்கப்பட்டிருந்தது, பின்னர் மேல் மாடிகள் அடுத்தடுத்து கட்டப்பட்டன.[1] காந்தியின் தந்தை கரம்சந்த், மாமா, துளசிதாஸ் மற்றும் தாத்தா உத்தமசந்த் ஆகியோர் இந்த வீட்டில்தான் வாழ்ந்தனர். இவர்கள் , போர்பந்தர் சமஸ்தானத்தின் ஜெத்வா ராஜ்புத் ஆட்சியாளர்களுக்கு பிரதமர்களாக ( திவான் ) இருந்தவர்கள் ஆவர்.[5]

புதிய கட்டடம் மற்றும் கவர்ச்சிகரமான கீர்த்தி மந்திர் ஆகியவற்றிற்கான 1947 ஆம் ஆண்டில் காந்தியின் வாழ்ந்த காலத்தில் ஸ்ரீ தர்பார் கோபால்தாஸ் தேசாய் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. மகாத்மா காந்தியின் இந்த தேசிய நினைவுச்சின்னத்தை நிர்மாணித்த முழு பெருமையும் பிரபல தொழிலதிபர் நஞ்சிபாஹி காளிதாஸ் மேத்தாவைச் சேரும். அவர் ஒரு நினைவுச்சின்னத்தை கட்டும் யோசனையை ஆரம்பித்தது மட்டுமன்றி, முழு பணத்தையும் மூதாதையர் வீட்டை வாங்குவதற்கும், கீர்த்தி மந்திர் என்ற புதிய வளாகத்தை உருவாக்குவதற்கும் நன்கொடை அளித்தார். .[1][2]

இந்த நினைவுச்சின்னத்தின் நிறைவுப்பணி 1950 இல் நிறைவடைந்தபோது காந்தி உயிருடன் இல்லை, இந்த நினைவுச்சின்னத்திற்கு கீர்த்தி மந்திர் என்று பெயரிடப்பட்டது, அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் இதனை பொதுமக்களுக்காக 1950 மே 27 அன்று திறந்து வைத்தார். பின்னர் இந்த அழகான நினைவுச்சின்னம் இந்திய மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.[1][3]

காந்தியின் 79 ஆண்டு ஆயுட்காலத்தைக் குறிக்கும் வகையில் இதன் உயரம் 79 அடிக்கு அமைக்கப்பட்டது. கீர்த்தி மந்திர் நினைவுச்சின்னம் இந்து, பௌத்தம், சமணம், பார்சி கோயில், சர்ச் மற்றும் மசூதி ஆகிய ஆறு மதங்களின் மத ஒருங்கிணைப்பின் அடையாளமாகும். இது அனைத்து மதங்களின்மீது காந்தி கொண்டிருந்த மரியாதையைக் குறிக்கிறது.[1]

கீர்த்தி மந்திரின் கட்டிடக்கலை முழுவதையும் போர்பந்தரில் வசிக்கும் ஸ்ரீ ப்ருஷோத்தம்பாய் மிஸ்திரி மேற்கொண்டார்.[1][2] அவர் பகல் மற்றும் இரவு பாராது பணியாற்றி இரண்டு வருட கால எல்லைக்குள் இதன் கட்டுமானத்தை நிறைவு செய்தார்.

நினைவகம்[தொகு]

கீர்த்தி மந்திரின் மையத்தில் மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூர்பாவின் வாழ்க்கை அளவிலான ஓவியங்கள் அருகருகே வைக்கப்பட்டுள்ளன. காந்தி தன்னைகடவுளாக மாற்றக்கூடாது என்று விரும்பியதால் அவரது விருப்பங்களைக் காப்பாற்றும் விதமாக அங்கு மலர் மாலைகள் அணிவிக்கப்படுவதில்லை. அவரது வாழ்க்கையையும் பிரசங்கங்களையும் குறிக்கும் 'உண்மை' மற்றும் 'அகிம்சை' என்ற நல்ல சொற்கள் அவர்களின் கால்களுக்கு அருகில் பொறித்து வைக்கப்பட்டுள்ளன.[1]

வலதுபுறத்தில் மகன்லால் காந்தி மற்றும் மகாதேவ் தேசாய் ஆகியோரின் நினைவுச் சின்னங்களாக இரண்டு அறைகள் உள்ளன, இடது புறத்தில் உள்ள அறை அருங்காட்சியகத்தின் காட்சியமாக செயல்படுகிறது. இந்த மூன்று அறைகளில் காதிபந்தரின் கலைப்பொருள்கள் உள்ளன. நூல் விற்பனை மையம், அலுவலக அறை மற்றும் வரவேற்பு மண்டபம் ஆகியவை இங்கு உள்ளன. கஸ்தூர்பா-மஹிலா நூலகம் கீர்த்தி மந்தீரில் அமைந்துள்ளது .[1]

ஊரின் முக்கிய சுற்றுலா தலமாக கீர்த்தி மந்திர் உள்ளது. பல வெளிநாட்டு பிரமுகர்களும் இந்திய அரசியல்வாதிகளும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மூதாதையர் வீடு மற்றும் பிறப்பிடத்தைக் கொண்ட கீர்த்தி மந்திருக்கு பார்வையிட வருகை தருகின்றனர். காந்தி பிறந்த இடம் ஸ்வஸ்திகாவால் குறிக்கப்பட்டுள்ளது.[1][3]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

படக்காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]