பரோடா அருங்காட்சியகம் மற்றும் பட தொகுப்புக்கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரோடா அருங்காட்சியகம் மற்றும் படத்தொகுப்புக்கூடம்

பரோடா அருங்காட்சியகம் மற்றும் படத் தொகுப்புக்கூடம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் வதோதராவில் உள்ள அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம், லண்டனில் உள்ள விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் மற்றும் லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகம் ஆகியவற்றின் அடிப்படையில் 1894 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மேஜர் மாண்ட், ஆர்.எப்.சிஸ்லோம் உடன் இணைந்து மேற்கொண்ட மாண்ட் அவர்களின் மிகச்சிறந்த வேலைகளின் அடிப்படையில் [1] இந்தோ-சரசெனிக் கட்டிடக்கலை அமைப்பினை அடிப்படையாகக் கொண்டு இந்த அருங்காட்சியகத்தின் கட்டிடம் வடிவமைக்கப்பட்டது.

மராட்டியர்களின் கெய்க்வாட் வம்சத்தைச் சேர்ந்த மூன்றாம் மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் 1887 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகத்தை நிறுவினார். அருங்காட்சியக கட்டிடப்பணி 1894 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது. அப்போது அது பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானப்பணிகள் 1908ஆம் ஆண்டில் தொடங்கி, 1914 இல் நிறைவடைந்தன. ஆனால் முதல் உலகப் போர் காரணமாக, ஐரோப்பாவிலிருந்து அருங்காட்சியகத்திற்குக் கொண்டுவருவதாகத் திட்டமிடப்பட்டிருந்த கலைப்பொருள்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் 1921 வரை அருங்காட்சியகம் திறக்க இயலா நிலை ஏற்பட்டது.

சேகரிப்பு[தொகு]

இந்த அருங்காட்சியகத்தில் கலை, சிற்பம், இனவியல் மற்றும் இனவியல் உள்ளிட்ட பல பொருண்மைகளில் பலவகையான சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல ஓவியங்கள் அசல் மட்டுமன்றி, தலைசிறந்தனவாகவும் கருதப்படுகின்றன. அவற்றுள் பிரபல பிரிட்டிஷ் ஓவியர்களான டர்னர் மற்றும் கான்ஸ்டபிள் மற்றும் பலர் வரைந்த அசல் ஓவியங்கள் அடங்கும். ,இவற்றைக் காண்பதற்காக நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். அவை அவர்களால் ஈர்க்கப்பட்டுள்ளன. எகிப்திய மம்மி மற்றும் ஒரு சிறிய நீல திமிங்கலத்தின் எலும்புக்கூடு ஆகியவை அருங்காட்சியகத்திற்கு வருபவர்களை மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளன. இந்த அருங்காட்சியகத்தின் பிற முக்கிய சேகரிப்பு என்ற நிலையில் கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற அகோட்டா வெண்கலங்கச் சிற்பங்கள், முகலாய சிறிய சிற்பத் தொகுப்புகள், திபெத்திய கலை வடிவங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

சாயாஜி பாக் என்னுமிடத்தில் உள்ள இரு அருங்காட்சியகங்களில் இந்த அருங்காட்சியகம் ஒன்றாகும். சாயாஜிராவ் என்பவர் பல இடங்களில் பயணித்து, பல வினிநோயகஸ்தர்கள் மற்றும் ஆய்வாளர்களையும் அணுகி முகலாய சிறிய அளவிலான கலைப்பொருள்கள், சிற்பங்கள், துணிவகைகள் இங்கு அமைவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். இவற்றை அவர், ஜப்பான், திபெத், நேபாளம், எகிப்து போன்ற நாடுகளிலிருந்து கொணர முயற்சி செய்தார். இவற்றைத் தவிர காசுகளும், இந்திய நாட்டில் பயன்படுத்தப்படுகின்ற பலவகையான இசைக்கருவிகளும் உள்ளன. இங்குள்ள பிற காட்சிப்பொருள்களாக நில அறிவியல், இயற்கை வரலாறு, விலங்கியல் போன்ற பொருண்மையான பொருள்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தின் முக்கியமான சிறப்பாக 22 மீ. நீளமுள்ள சிறிய திமிங்கிலத்தின் எலும்புக்கூட்டினைக் கூறலாம். இந்த திமிங்கிலம் 1972இல் மாஹி ஆற்றில், புயலின்போது கரை ஒதுங்கியதாகக் கருதப்படுகிறது. இன வரைவியல் பிரிவில் குஜராத்தைச் சேர்ந்த ராபாரிகள், காமிட்டுகள், பில்கள், சௌதிரிகள் மற்றும் வாகரிகள் ஆகிய இனத்தவரைப் பற்றிய காட்சிப்பொருள்கள் காணப்படுகின்றன.[2]

பார்வை நேரம்[தொகு]

அரசு விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து நாட்களிலும் காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Baroda Museum, NE view British Library.
  2. "The Official Website of Gujarat Tourism, Vadodara Museum". 2019-10-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-10-27 அன்று பார்க்கப்பட்டது.