உள்ளடக்கத்துக்குச் செல்

வைக்கம் போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைக்கம் சத்தியாக்கிரகம்
வைக்கம் சத்தியாக்கிரகத்தின் தலைவர்களான டி. கே. மாதவன் (அமர்ந்திருப்பவர்களில்: நடு வரிசையில், ஒளிப்படத்தைப் பார்க்கும் கோணத்தில் கடைசியாக உள்ளவர்), கே. குமார் (டி. கே. மாதவனுக்குப் பின்னால் உள்ள வரிசையில் கடைசியாக நின்றிருப்பவர்: தாடியுடன் இருப்பவர்), கே. பி. கேசவ மேனன் (அமர்ந்திருப்பவர்களில், மூன்றாவதாக உள்ளவர்), அமச்சாடி தேவன் ஆகியோர்.
காலம்மார்ச் 1924 முதல் நவம்பர் 1925
அமைவிடம்வைக்கம் கோயில், திருவிதாங்கூர்
வகைசத்தியாகிரகம்
உள்நோக்கம்பொது அணுகல்
ஏற்பாடு செய்தோர்
விளைவுவைக்கம் மகாதேவர் கோயிலுக்குச் செல்லும் வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பொதுச் சாலைகளில் அனைவருக்கும் செல்ல அனுமதிக்கபட்டனர். போராட்டக்காரர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

வைக்கம் போராட்டம் அல்லது வைக்கம் சத்தியாக்கிரகம் (Vaikom Satyagraha) என்பது பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் ஊரில் இருந்த மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை அவர்ண சாதியினர் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை நீக்க 1924 மார்ச் 30 முதல் 1932 நவம்பர் 23 வரை நடைபெற்ற ஒரு அகிம்சைப் போராட்டமாகும். திருவிதாங்கூர் சமஸ்தானம் அதன் கடுமையான மற்றும் ஒடுக்குமுறை, தீண்டாமை சாதி அமைப்புக்காக அறியப்பட்டது.[1][2][3][4][5][6] இந்த இயக்கம் காங்கிரஸ் தலைவர்களான டி. கே. மாதவன், கே. கேளப்பன், கே. பி. கேசவ மேனன் ஆகியோரால் வழிநடத்தப்பட்டது. இந்த இயக்கத்தில் பங்கேற்ற மற்ற குறிப்பிடத்தக்க தலைவர்களில் மன்னத்து பத்மநாபன் பிள்ளை,[7] ஜார்ஜ் ஜோசப்,[8][9], "பெரியார்" ஈ. வெ. இராமசாமி,[10][11] ஆகியோரும் அடங்குவர். மேலும், சமூகத்தின் பலதரப்பட்ட செயற்பாட்டாளர்களும் தீவிர ஆதரவும், பங்கேற்பும் அளித்ததற்காக இந்த இயக்கம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.[4]

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள பெரும்பாலான பெரிய கோயில்களில் நுழையவும், அதைச்சுற்றியுள்ள தெருக்களில் நடக்கவும் தாழ்த்தப்பட்ட சாதியினர் (தீண்டத்தகாதவர்களை) பல ஆண்டுகளாக தடுக்கப்பட்டிருந்தனர்.[12][13] இந்த இயக்கம், ஈழவ காங்கிரஸ் தலைவரும், நாராயண குருவின் சீடரான டி. கே. மாதவனால் தொடங்கப்பட்டது. இது வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஈழவர்கள் மற்றும் 'தீண்டத்தகாதவர்கள்' பயன்படுத்துவதற்கான உரிமைக்காக நடத்தபட்டது.[5]

மகாத்மா காந்தியே 1925 மார்ச் மாதம் வைக்கம் பகுதிக்கு வருகை புரிந்தார்.[4] திருவிதாங்கூர் அரசாங்கம் இறுதியில் தாழ்த்தப்பட்ட சாதியினர் பயன்படுத்துவதற்காகக் கோயிலுக்கு அருகில் புதிய சாலைகளை அமைத்தது. இருப்பினும், அந்தச் சாலைகள் தாழ்த்தப்பட்ட சாதியினரை வைக்கம் கோயிலின் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து நன்கு விலக்கி வைப்பதாக இருந்தன. மேலும் கோயில் தாழ்த்தப்பட்ட சாதியினர் நுழைய அனுமதி மறுக்கபட்டே இருந்தது.[4][5][14][15] மகாத்மா காந்தியின் தலையீட்டிற்குப் பிறகு, அரசப் பிரதிநிதி சேது லட்சுமி பாயுடன் ஒரு சமரசம் ஏற்பட்டது. அதன்படி கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவித்ததுடன், வைக்கம் மகாதேவர் கோயிலுக்குச் செல்லும் வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பொதுச் சாலைகளை அனைத்து சாதியினருக்கும் திறந்துவிட்டார். கிழக்குச் சாலையைத் திறக்க சேது லட்சுமி மறுத்துவிட்டார். இந்த சமரசத்தை "பெரியார்" ஈ. வெ. ராமசாமி மற்றும் சிலர் விமர்சித்தனர். 1936-இல் கோயில் நுழைவுப் பிரகடனத்திற்குப் பின்னரே, கிழக்குச் சாலைக்குச் செல்வதற்கும் கோயிலுக்குள் நுழைவதற்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அனுமதி வழங்கப்பட்டது.[16][4][5] வைக்கம் சத்தியாகிரகம் வன்முறையற்ற பொதுப் போராட்ட முறையை கேரளத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் கொண்டு வந்தது.[5]

பின்னணி

[தொகு]
கேரளத்தின் கோட்டயத்தில் வைக்கம் நகரில் தந்தை பெரியார் சிலை

ஈழவத் தலைவரான டி. கே. மாதவன், 1917 திசம்பரில் தேசாபிமானி நாளிதழில் எழுதிய தலையங்கத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் கோயில் நுழைவு குறித்த கேள்வியை முதன்முதலில் எழுப்பினார்.[6] 1917 மற்றும் 1920-க்கு இடையில் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பு மற்றும் திருவிதாங்கூர் சட்டமன்றக் கூட்டங்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆலயப் பிரவேசம் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.[6] 1919-இல், சுமார் 5,000 ஈழவர்கள் அடங்கிய ஒரு பேரவை, திருவிதாங்கூர் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் அனைத்து இந்து கோவில்களிலும் நுழைவதற்கான உரிமையைக் கோரியது.[14]

1920 நவம்பர் , டி. கே. மாதவன் வைக்கம் கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு சாலையில் தாழ்த்தபட்டவர்கள் நுழைய கட்டுப்பாட்டு விதிக்கும் அறிவிப்புப் பலகைகளைத் தாண்டிச் சென்றார். பின்னர், அவர் தனது இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மாவட்ட நீதிபதிக்கு பகிரங்கமாக அறிவித்தார்.[6] திருவிதாங்கூரில் மாதவன் நடத்திய கோயில் நுழைவு தொடர்பான கூட்டங்கள், உயர் சாதி இந்துக்களிடமிருந்து எதிர் போராட்டங்களைத் தூண்டிவிட்டன.[14] டி. கே. மாதவன், கேரளத்தில் வாழும் ஈழவர் மக்களின் அவல நிலையை மகாத்மா காந்திக்குத் தெரிவிப்பதற்காக, 1921 செப்டம்பரில் திருநெல்வேலியில் அவரைச் சந்தித்தார்.[17] துவக்கத்தில் கேரளத்தில் அந்தச் சமூகத்தினரின் நிலை குறித்து அறியாதவராக இருந்தபோதிலும், காந்தி அந்த இயக்கத்திற்குத் தனது ஆதரவை வழங்கினார் ("நீங்கள் கோயில்களுக்குள் நுழைய வேண்டும், சட்டம் குறுக்கிட்டால் சிறை செல்லவும் தயாராக இருக்க வேண்டும்").[6]

1923-ஆம் ஆண்டு காக்கிநாடாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில், 'தீண்டாமையை ஒழிப்பதற்காக' கட்சி செயல்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[17] இந்தத் தீர்மானத்தை டி. கே. மாதவன் முன்மொழிந்தார்.[17][14] 'கோயில் நுழைவு என்பது அனைத்து இந்துக்களின் பிறப்புரிமை' என்றும் அந்தத் தீர்மானம் குறிப்பிட்டது.[14]

1924 சனவரியில், காங்கிரஸ் தலைவர் கே. கேளப்பன், கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டிக்குள் ஒரு 'தீண்டாமை ஒழிப்பு குழுவை' கூட்டினார்.[14][6] பின்னர், கேளப்பன் மலபார் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் குழுவினருடன் தெற்கு கேரளம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.[14] மாதவனும் இந்த சத்தியாக்கிரகத்திற்குத் தேவையான நிதியுதவி, காங்கிரசின் ஆதரவு மற்றும் அகில இந்திய அளவிலான கவனத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றார்.[17][18] ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகமும் இந்த போராட்டத்திற்குத் தனது ஒப்புதலைத் தெரிவித்தது.[18]

போராட்டம்

[தொகு]
வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது கண்டன ஊர்வலம்

கேரளத்தில் மற்ற பெரிய கோவில்களைப் போலவே, வைக்கம் சிவன் கோவிலும் பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சாதியினரையும் 'தீண்டத்தகாதவர்களையும்' கோவிலுக்குள் நுழைவதிலிருந்து மட்டுமல்லாமல், அதைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கக் கூடாது என்கிற நடைமுறை பல ஆண்டு காலங்களாக இருந்து வந்தது.[6]

இந்நிலையை எதிர்த்துக் குரல் கொடுக்க எவரும் இல்லை. இந்நிலையில் ஸ்ரீ நாராயணகுருவின் சீடரும், காங்கிரசு பேரியக்கத்தைச் சார்ந்தவருமான டி. கே. மாதவன் என்பவர் இப்பிரச்சனைக்காகப் போராட முன் வந்தார். 1924 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் நாள் காலை 6 மணிக்குப் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இவர்களது திட்டம் அரசுக்குத் தெரிந்தபோது காவல்துறையின் மூலம் தடை விதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தை நடத்த தாழ்த்தப்பட்ட மக்கள் விரும்பவில்லை. அவர்கள், இப்போராட்டத்தினால் தங்களுக்குக் கிடைத்து வரும் சில சலுகைகள் கிடைக்காமல் போய்விடும் என்று அச்சம் கொண்டனர். இதனால் இப்போராட்டத்தில் நம்பிக்கையின்றியும் இருந்தார்கள். டி. கே. மாதவன் காவல்துறையின் தடையை மீறி ஊர்வலமாகச் சென்று இப்போராட்டத்தை நடத்துவதென முடிவு செய்தார். தடையை மீறி நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தில் சென்றவர்களில் குஞ்ஞப்பி என்கிற புலையர் சாதியைச் சேர்ந்தவர், பாகுலேயன் என்கிற ஈழவர் சாதியைச் சேர்ந்தவர், கோவிந்தப் பணிக்கர் என்கிற நாயர் சாதியைச் சேர்ந்தவர் என மூவர் காவல்துறையினர் நின்று கொண்டிருந்த இடம் வரை சென்றனர். அவர்களுடன் கதர் ஆடை அணிந்த ஆயிரக்கணக்கானவர்களும் சேர்ந்து, வைக்கம் கோயில் தெருவில் நடக்க முயன்றனர். அந்த மூவரும் திருவிதாங்கூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.[14][6] 6 மாத காலம் சாதாரணத் தண்டனைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். கைதானவர்களுக்கு ஆதரவினைத் திரட்டி மேலும் பல போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டத்திற்கு டி. கே. மாதவன், மகாத்மா காந்தியை நேரில் சந்தித்து வைக்கம் ஊரின் நிலையை எடுத்துக் கூறி ஒப்புதல் கடிதம் பெற்று ஆதரவு திரட்டினார். அதன் பிறகு பல தொண்டர்கள் இந்தப் போராட்டத்தில் முன் வந்து காவல்துறையினரின் தடுப்புச் சுவரை மீறிச் சென்றனர். அதற்காக பல காங்கிரஸ் தொண்டர்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.[14] கைது செய்யப்பட்டவர்களில் கே. பி. கேசவ மேனன், டி. கே. மாதவன், கே. கேளப்பன் ஆகியோரும் அடங்குவர்.[14][5][6] கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்ட மற்ற தலைவர்களில் டி. ஆர். கிருஷ்ணசாமி ஐயர்,[19] கே. குமார்,[20][21][22] ஏ. கே. பிள்ளை,[23]சிட்டேழத்து சங்கு பிள்ளை, வழக்கறிஞர் டி. ஆர். கிருஷ்ணசாமி, பெரியார் ஈ. வெ. ராமசாமி நாயக்கர், அய்யாமுத்து கவுடர், கே. வேலாயுத மேனன் ஆகியோரும் அடங்குவர்.[22]

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் திருவிதாங்கூர் காவல்துறையினரின் ("சமூகங்களுக்கு இடையே மோதல்களைத் தடுப்பதற்காக" அமைக்கப்பட்ட பிரிவு) தடுப்புகளை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் சாலையை மறித்து, கோயிலின் நான்கு நுழைவாயில்களிலும் உள்ள காவல்துறையினரின் தடுப்புகளுக்கு முன்னால் அமர்ந்து தேசபக்திப் பாடல்களைப் பாடினர். பிரச்சாரத்தின் பிற்பகுதியில், தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டனர்.[5][6] இந்தக் காலகட்டத்தில், சில உயர் சாதி இந்துக்கள் குண்டர்களைத் தூண்டிவிட்டு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை நடத்தச் செய்தனர்.[6]

கைது செய்யப்பட்ட டி. கே. மாதவன் ஈழவர் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் கேரள மாநிலத்திலிருந்த ஈழவர் சாதியைச் சேர்ந்த பலரும் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டத்தில் இறங்கியவர்களுள் முக்கியமானவர் சகோதரர் அய்யப்பன். நியாயமான இப்போராட்டத்திற்கு ஸ்ரீ நாராயண குரு ஆதரவளித்தார். ஸ்ரீ நாராயண குரு தனக்குச் சொந்தமான பேளூர் மடத்தைப் போராட்டக்காரர்கள் தங்குவதற்காக அளித்தார். இந்தப் போராட்டத்திற்கு நன்கொடையாக ஆயிரம் ரூபாயும் அளித்தார். இந்த மடத்தில்தான் மக்கள் ஒன்று கூடி போராட்டத்திற்குச் சென்றனர். டி. கே. மாதவன் கைது செய்யப்பட்டதும், நியாயமான இப்போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஆதரவளிக்க வேண்டும் என ஸ்ரீ நாராயண குரு தன் கைப்பட ஒரு கடிதமெழுதி அதை மக்களிடையே பரப்பிடச் செய்தார். ஸ்ரீ நாராயண குரு செய்தி கேரளா முழுவதும் சென்றது. கேரளா முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்காக, ஸ்ரீ நாராயண குருவின் சன்னியாசி சீடர்கள் அனைவரும் வீடுவீடாகச் சென்று உண்டியல் ஏந்திப் பணம் சேகரித்துப் போராட்டக்காரர்களுக்கு அனுப்பினர். அத்துடன் ஒவ்வொரு வீட்டினரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் சமைக்கும் முன்பு பெண்கள் ஒரு கைப்பிடி அளவு அரிசியைத் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். இப்படி சேகரிக்கப்படும் அரிசி போராட்டக்காரர்களின் உணவுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த அறவழிப் போராட்டம் தொடர்ந்து நடந்தது. முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் சமாதானம் ஏற்பட வாய்ப்பு கிட்டுமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணம் படைத்தவர்கள் காவல்துறையினர் உதவியுடன் சில வன்முறையாளர்களைக் கொண்டு போராட்டக்காரர்களை அடித்துத் துன்புறுத்தினர். இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அறவழியிலேயே போராடிக் கொண்டிருந்தனர்.

வைக்கம் நிகழ்வுகள் அகில இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தன. காங்கிரஸ் தலைவர் சி. ராஜகோபாலாச்சாரி மற்றும் அப்போது காங்கிரசில் இருந்த "பெரியார்" ஈ. வெ. இராமசாமி ஆகியோர் வைக்கம் வந்து போராட்டக்காரர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.[6] முக்கிய நாயர் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பின்னர் கைது செய்யப்பட்டனர், மேலும் கிறிஸ்தவரான (காங்கிரஸ் தலைவர்) ஜார்ஜ் ஜோசப் போராட்டத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.[14]

வைக்கம் சத்தியாகிரகத்தில் சீக்கிய அகாலிகளின் ஒளிப்படம், ca.1924. மாத்ருபூமி நாளிதழில் மறுபதிப்பு.

'இது ஒரு இந்து விவகாரம்' என்பதால் அதிலிருந்து விலகி இருக்குமாறு உள்ளூர் கிறிஸ்தவத் தலைவர்களை காந்தி கேட்டுக்கொண்டதால், அவர்கள் அந்நியப்பட்டனர் (ஏப்ரல் 1924).[4][14] அமிர்தசரசைச் சேர்ந்த சீக்கிய அகாலி செயற்பாட்டாளர்களும் சத்தியாக்கிரகிகளுக்கு இலவச உணவுக்கூடங்களை அமைக்க வைக்கம் வந்திருந்தனர் (ஏப்ரல் 1924).[14] சீக்கியர்களின் உணவுக்கூடங்களை மூடுமாறு காந்தி அறிவுறுத்தினார்.[14] அப்போது காங்கிரசில் இருந்த ஈ. வெ. ராமசாமி "பெரியார்", இந்த சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டு இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார்.[24][25] இது பெரியாருக்கு "வைக்கம் வீரர்" என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.[26] கே. அய்யப்பன் போன்ற சில தீவிரப் போராட்டக்காரர்கள் கம்யூனிசத்தின் வடிவங்களுடன் தங்களை இணைத்துக்கொண்டனர்.[27]

திருவிதாங்கூரின் மன்னரான மூலம் திருநாள் 1924 ஆகத்தில் காலமானார்.[17] காந்தியின் ஆலோசனையின் பேரில், உயர் சாதி இந்துக்கள் வைக்கம் முதல் திருவனந்தபுரம் வரை பேரணியாகச் சென்று, திருவிதாங்கூர் ஆட்சியாளரிடம் ஒரு மனுவை அளித்தனர் (தாழ்த்தப்பட்ட சாதியினர் தொருக்களைப் பயன்படுத்துவதற்கு உயர் சாதி இந்துக்கள் ஆட்சேபிக்கவில்லை என்று அதில் கூறப்பட்டிருந்தது) (நவம்பர் 1924 முதல்).[6][5] நாயர் சமூகத்தின் தலைவரான மன்னத்து பத்மநாப பிள்ளை, 1925-ல் திருவனந்தபுரத்திற்கு இரண்டாவது பேரணியை வழிநடத்தினார்.[28] கோயிலுக்கு அருகிலுள்ள தெருக்களை ஈழவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானம், திருவிதாங்கூர் சட்டமன்றத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது (அனைத்து அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாலும் எதிர்க்கப்பட்டது, அக்டோபர் 1924-ல் அறிமுகப்படுத்தப்பட்டு, பிப்ரவரி 1925-ல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது).[14][6]

முடிவு

[தொகு]
கொச்சியில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி (வைக்கம் சத்தியாகிரகத்தின் போது)

போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கு தந்திச் செய்திகளை அனுப்பிய மகாத்மா காந்தி, 2025 மார்ச்சில் தானே வைக்கம் சென்றார்.[4][14] காந்தி போராட்டக்காரர்கள், நம்பூதிரி பிராமணர்கள், நாராயண குரு, திருவிதாங்கூர் அரசி ஆகிய அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.[6][29] போராட்டக்காரர்கள் தடை செய்யப்பட்ட தெருகளில் நுழைய மாட்டார்கள் என்ற புரிதலின் பேரில், பின்னர் காவல்துறை பாதுகாப்பு திரும்பப பெறப்பட்டது.[6]

வைக்கம் சத்தியாகிரகம் சமரசத்துடன் முடிவடைந்தது. அதன்படி வைக்கம் கோயிலைச் சுற்றி மூன்று பக்கங்களில் புதிதாக அமைக்கப்பட்ட தெருக்களில் தாழ்த்தப்பட்ட சாதி இந்துக்கள் நுழைவதற்கு அனுமதி அளிக்கபட்டது. ஆனால் கோயிலில் நுழைய தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அனுமதி கொடுக்கபடவில்லை (நவம்பர் 1925).[17][30] இந்த புதிய தெருக்கள் தாழ்த்தப்பட்ட சாதியினரை வைக்கம் கோயிலிலிருந்து வேண்டிய அளவு தள்ளி வைத்தன.[4][5]

வைக்கம் சத்தியாகிரகம் ஈழவத் தலைவர் நாராயணகுருவுக்கு திருப்தி அளிக்காமல் ஏமாற்றத்தை அளித்தது.[31][14] சத்தியாகிரகப் போராட்டக்காரர்கள் 'தடை செய்யப்பட்ட தெருக்களில் நடப்பது மட்டுமல்லாமல், கோவிலுக்குள்ளும் நுழைய வேண்டும்' என்று குரு விரும்பினார்.[31][14] நாராயண குரு ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பின் நடவடிக்கைகளிலிருந்து தன்னைத் விலக்கிக் கொண்டார்' என்று பரவலாகப் பேசப்பட்டது.[14] அவர் ஒரு ஈழவப் பத்திரிக்கையாளரிடம் குரு கூறினார்:[27]

வைக்கம் போராட்டத்தில் பங்கு பெற்ற தலைவர்கள்

[தொகு]

ஸ்ரீ நாராயணகுருவின் ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன சபையின் அமைப்புச் செயலாளரும், காங்கிரசு பேரியக்கத்தின் கேரள மாநிலத் தலைவர்களில் ஒருவருமான டி. கே. மாதவன் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் பெருந்தலைவர்கள் பலர் பங்கு பெற்றுள்ளனர். அவர்களில் கீழ்காணும் சிலர் முக்கியமானவர்கள்.

உசாத்துணை

[தொகு]
  • பேராசிரியர் டாக்டர். அம்பேத்கார் பிரியன் எழுதிய “ஸ்ரீ நாராயணகுரு வாழ்க்கை வரலாறு” நூலின் பக்கங்கள் 101 - 110.
  • பழ. அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம்
  1. ↑ "God's own challenge". The Indian Express. 24 December 2018. Retrieved 27 July 2021.
  2. ↑ N. Vanamamalai; Nā Vān̲amāmalai (1981). Interpretation of Tamil Folk Creations. Dravidian Linguistics Association.
  3. ↑ P. Radhakrishnan (2002). India, the Perfidies of Power: A Social Critique. Vedam ebooks. p. 245. ISBN 978-81-7936-003-3. Retrieved 27 July 2021.
  4. 1 2 3 4 5 6 7 8 Sarkar, Sumit (1989). Modern India: 1885–1947. Palgrave Macmillan. pp. 229 and 244. ISBN 9781349197125.
  5. 1 2 3 4 5 6 7 8 9 Jeffrey, Robin (1992). Politics, Women and Well-Being: How Kerala became 'a Model'. Palgrave Macmillan. pp. 108 and 118–19. ISBN 978-1-349-12252-3.
  6. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 Jeffrey, Robin (1976). "Temple-Entry Movement in Travancore, 1860-1940". Social Scientist 4 (8): 13–16. doi:10.2307/3516377. https://www.jstor.org/stable/3516377.
  7. ↑ "Mannathu Padmanabhan". Drishti IAS (in ஆங்கிலம்). Retrieved 2025-01-03.
  8. ↑ George, Alphons (2014). "The Role of George Joseph in the Vaikom Satyagraha". Proceedings of the Indian History Congress (Indian History Congress) 75: 569–574. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. http://www.jstor.org/stable/44158431. பார்த்த நாள்: 25 May 2023.
  9. ↑ B.A, Pon Vasanth (30 Mar 2023). "The contribution of an unsung leader, George Joseph, to the Vaikom Satyagraha". The Hindu. Retrieved 25 May 2023.
  10. ↑ Chandran, Abhilash (14 Mar 2023). "Periyar, the unsung hero who breathed life back into Vaikom Satyagraha". The New Indian Express. Retrieved 25 May 2023.
  11. ↑ Athiyaman, Pazha. (23 Dec 2019). "Periyar, the hero of Vaikom". The Hindu. Retrieved 25 May 2023.
  12. ↑ Jeffrey, Robin (1976). "Temple-Entry Movement in Travancore, 1860-1940". Social Scientist 4 (8): 14. doi:10.2307/3516377. https://www.jstor.org/stable/3516377.
  13. ↑ Mathew, George (2018). "God's Own Challenge". The Indian Express. https://indianexpress.com/article/opinion/columns/kerala-secularism-hindus-christians-5506515/.
  14. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 Menon, Dilip M. (1994). Caste, Nationalism and Communism in South India: Malabar, 1900 - 1948. Cambridge University Press. pp. 81–82.
  15. ↑ Sarkar, Sumit (1989). Modern India: 1885–1947. Palgrave Macmillan. pp. 229 and 244. ISBN 9781349197125.
  16. ↑ Anita Diehl (1977). E. V. Ramaswami Naicker-Periyar: A Study of the Influence of a Personality in Contemporary South India. Esselte studium. p. 24. ISBN 978-91-24-27645-4. Retrieved 27 July 2021.
  17. 1 2 3 4 5 6 Jeffrey, Robin (1976). The Decline of Nayar Dominance: Society and Politics in Travancore, 1847 - 1908. Holmes & Meier Publishers. pp. 328, 258–59.
  18. 1 2 Jeffrey, Robin (1976). "Temple-Entry Movement in Travancore, 1860-1940". Social Scientist 4 (8): 17. doi:10.2307/3516377. https://www.jstor.org/stable/3516377.
  19. ↑ T. R. Krishnaswamy Iyer, http://www.keralaculture.org/historic-heritage-gallery/tr-krishnaswamy-iyer/1085 , Department of Cultural Affairs, Govt of Kerala retrieved on 02 February 2023
  20. ↑ Vaikom Sathyagraha Rekhakal: Adv. P. Harikumar -Sahithya Pravarthaka Co-Operative Society Ltd: 2019 : pages 160, 217, 298, 299, 353
  21. ↑ Who is Who of Freedom Fighters in Kerala, Regional Records Committee 1975, Government of Kerala : Page/ Entry No 272
  22. 1 2 The History of Trade Union Movement in Kerala : K. Ramachandran Nair : Kerala Institute of Labour and Employment - 2006: (also available is the e-book version at : https://indianlabourarchives.org retrieved on 30 Jan 2023: page no: 436)
  23. ↑ https://ml.m.wikipedia.org/wiki/%E0%B4%8E.%E0%B4%95%E0%B5%86._%E0%B4%AA%E0%B4%BF%E0%B4%B3%E0%B5%8D%E0%B4%B3 , Malayalam : Retrieved 2 February 2023
  24. ↑ Kent, David. "Periyar". Atheist Community of Austin. Archived from the original on 15 June 2010.
  25. ↑ Deihl, Anita (1977). E.V. Ramasamy Naicker-Periyar: A Study of the Influence of a Personality in Contemporary South India. Esselte Studium. pp. 22–24.
  26. ↑ Eugene F. Irschick, Politics and Social Conflict in South India: The Non-Brahmin Movement and Tamil Separatism, 1916–1929 (Berkeley:University of California Press, 1969), pp. 268–69.
  27. 1 2 Jeffrey, Robin (1976). "Temple-Entry Movement in Travancore, 1860-1940". Social Scientist 4 (8): 17–18. doi:10.2307/3516377. https://www.jstor.org/stable/3516377.
  28. ↑ Jeffrey, Robin (1992). Politics, Women and Well-Being: How Kerala became 'a Model'. Palgrave Macmillan. pp. 104 and 108. ISBN 978-1-349-12252-3.
  29. ↑ Mahadev Desai, The Epic of Travancore (Ahmedabad: Navajivan Karyalaya, 1937), pp. 17–21.
  30. ↑ M.S.A. Rao, Social Movements and Social Transformation: A Study of Two Backward Classes Movements in India (first published in 1979: reprint New Delhi: Manohar, 1987), p. 66.
  31. 1 2 Sarkar, Sumit (1989). Modern India: 1885–1947. Palgrave Macmillan. p. 244. ISBN 9781349197125.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைக்கம்_போராட்டம்&oldid=4465511" இலிருந்து மீள்விக்கப்பட்டது