டி. கே. மாதவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

டி. கே. மாதவன் (1885 - 1930) ஒரு கேரள சமூக சீர்திருத்தவாதி. வைக்கம் கோயில் நுழைவு போராட்டத்தை தொடங்கி முன்னின்று நடத்தியவர். நாராயணகுருவின் மாணவரான இவர் காங்கிரசில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். இந்தியாவின் ஆலய நுழைவுப் போராட்ட இயக்கத்தின் தொடக்கப்புள்ளியும் இவர்தான்.

வாழ்க்கை வரலாறு வரலாறு[தொகு]

1885 ல் நடுத்தர ஈழவக் குடும்பத்தில் பிறந்த டி. கே. மாதவன் இளவயதில் குலவழக்கப்படி சமஸ்கிருதமும், மருத்துவமும் கற்றார். பின்னர் ஆங்கிலக் கல்வி கற்றார். 1914 ல் ஸ்ரீ நாராயணகுருவை மாதவன் சந்தித்தார். இந்தச் சந்திப்பிற்குப் பின்பு அவரிடையே ஆளுமை உருவானது. சமூக சீர்திருத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான ஆணையை அவருக்கு நாராயணகுரு அளித்தார். 1914 ல் மாதவன் தேசாபிமானி என்ற செய்தி இதழைச் சொந்த செலவில் ஆரம்பித்தார். 1917 முதல் அதை நாளிதழாக நடத்த ஆரம்பித்தார். நாராயணகுருவின் இயக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டு இன்றும் நடந்து வரும் மூன்று நாளிதழ்களில் முதலாம் நாளிதழ் தேசாபிமானியே. இன்று தேசாபிமானி மார்க்சிய பொதுவுடமைக் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தேசாபிமானியில் ஆலய நுழைவு குறித்து பல கட்டுரைகள் எழுதிய மாதவன் 1916 ல் ‘ஷேத்ரபிரவேசம்’ என்று ஆலயப்பிரவேசத்தைப் பற்றி ஒரு நூலும் வெளியிட்டார்.

1916ல் கல்கத்தாவில் அன்னி பெசண்ட் தலைமையில் நடந்த பாரத மகாசபா மாநாட்டில் பங்கெடுத்த மாதவன் ஆலய நுழைவு பற்றி ஒரு தீர்மானம் கொண்டுவரும்படி அன்னி பெசண்டிடம் கோரினார். அன்னி பெசண்ட் அதற்கு ஒத்துக்கொள்ளவே தீர்மானம் அன்னி பெசண்டால் கொண்டுவரபப்ட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் பிரதி திருவிதாங்கூர் மன்னருக்கு அனுப்பப்பட்டது.

1918 ல் மாதவன் திருவிதாங்கூரின் சட்டசபையான ஸ்ரீமூலம் சபைக்கு ஈழவர் பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டார். 1918 ல் ஸ்ரீமூலம் சபையில் அவர் நிகழ்த்திய முதல் உரையே ஆலய நுழைவுரிமை சார்ந்ததுதான். அதன் பின்னர் தான் மாதவன் காங்கிரஸ் உறுப்பினரும் தலைவரும் ஆகிக் காந்தியைச் சந்தித்து அவரது வழிகாட்டுதலுடன் வைக்கம் போராட்டத்தை ஆரம்பித்தார். 1927 ல் ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன சபை எனப்படும் எஸ்.என்.டி.பி அமைப்பின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

வைக்கம் போராட்டம்[தொகு]

1921ல் செப்டெம்பரில் திருநெல்வேலி காங்கிரசு மாநாட்டுக்கு கேரள காங்கிரசின் பிரதிநிதியாக வந்த மாதவன் காந்தியைச் சந்தித்து திருவிதாங்கூரில் உள்ள ஈழவர்களின் போராட்டத்தைப் பற்றி காந்தியிடம் விவாதித்தார், அதனால் அவரை இப்போராட்டத்துக்கு ஆதரவளிக்க செய்ய முடிந்தது. விளைவாக என்ன செய்யலாமென்று ஆலோசனை சொல்லும்படி காந்தி கேரள காங்கிரசு பிரிவுக்கு எழுதிக்கேட்டார்.

1923ல் காக்கிநாடா காங்கிரசு மாநாட்டில் மாதவன் அன்றைய கேரள காங்கிரசு தலைவர்களான கே. பி. கேசவ மேனன், சர்தார் கே. எம். பணிக்கர், கேளப்பன் ஆகியோருடன் இணைந்து இப்பிரச்சினையை எழுப்பினார். சாதி ஒழிப்புக்காக போராடுவதை தேசிய விடுதலைப் போராட்டத்தின் பகுதியாக காக்கிநாடா காங்கிரசு ஏற்றுக்கொண்டது. திருவிதாங்கூர் காங்கிரசு நேரடியாக இதில் ஈடுபட்டு போராட்டத்தை முன்னெடுக்க காந்தி கேட்டுக்கொண்டார்

1924 ஜனவரி 24 அன்று எர்ணாகுளத்தில் கே. வேலப்பன் தலைமையில் கூடிய காங்கிரசு கமிட்டி தீண்டாமை ஒழிப்பு போராட்ட அமைப்பு ஒன்றை உருவாக்கியது. அதில் மாதவன் செயலர். குரூர் நீலகண்டன் நம்பூதிரி, டி. ஆர். கிருஷ்ணசாமி அய்யர், கே. வேலாயுத மேனன் ஆகியோர் பிற உறுப்பினர்கள். மாதவன் தலைமையில் ஒரு பிரச்சாரக்குழு அமைக்கப்பட்டது. 1924 பிப்ரவர் 28 ஆம் தேதி வைக்கத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. பொதுநடைபாதைகளிலும் கோயில்களிலும் நுழைய தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்து சாதிகளுக்கும் உரிமை உண்டு என்றும் அதற்கு எதிரான எந்த தடையும் மீறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதுதான் வைக்கம் போராட்டத்தின் தொடக்கமாகும்.

வைக்கம் போராட்டத்தை மாதவன் தன் பொறுப்பில் நடத்தினார். ஈழவ அமைப்புகளுக்கும் காங்கிரச்சுக்கும் நடுவே அவர் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டார். நாராயணகுருவின் அமைப்புக்கும் காங்கிரசுக்கும் இடையே இருந்த வேறுபாடுகளை களைந்தார். ஓயாமல் வைக்கம் போராட்டத்துக்காக களத்தில் இருந்தார். இதற்காக அவர் இரு நாளிதழ்களையும் ஆரம்பித்தார். தேசாபிமானி, கேரளகௌமுதி ஆகிய இதழ்கள் அவரது பொறுப்பில் வெளிவந்தன.

மாதவன் வைக்கம் போராட்டத்திற்கு பின்னர் சக காங்கிரசு தலைவர்களுடன் இணைந்து திருவார்ப்பு, கண்ணன்குளங்கரை ஆகிய ஊர்களில் ஆலயநுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியை ஈட்டினார். மாதவன் 1930ல் தன் நாற்பத்தி ஐந்தாம் வயதிலேயே மரணமடைந்தார். காசநோய் அவரது மரணத்துக்குக் காரணமாக அமைந்தது. அவருக்கு வைக்கத்தில் சிலையும் நினைவுச்சின்னமும் வைக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._மாதவன்&oldid=1358609" இருந்து மீள்விக்கப்பட்டது