சத்திய சோதனை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்திய சோதனை - காந்தியின் சுய சரிதை
நவசீவன் பிரசுராலயத்தின் 44 ஆவது மறுபதிப்பின் அட்டைப்படம்
நூலாசிரியர்மோகன்தாசு கரம்சந்த் காந்தி
உண்மையான தலைப்புસત્યના પ્રયોગો અથવા આત્મકથા
மொழிபெயர்ப்பாளர்மகாதேவ் தேசாய், ரா வேங்கடராசுலு
நாடுஇந்தியா
மொழிகுஜராத்தி
ISBN978-81-7229-080-1
மூல உரை
સત્યના પ્રયોગો અથવા આત્મકથા குசராத்தி மொழி விக்கிமூலத்தில்
மொழிபெயர்ப்புசத்திய சோதனை - காந்தியின் சுய சரிதை விக்கிமூலத்தில்

சத்திய சோதனை (The Story of my Experiments with Truth) என்பது மோகன்தாசு கரம்சந்த் காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூ‌ல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தம் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம். அதனால் இந்நூ‌லுக்கு சத்தியசோதனை என்று அவர் பெயர் வழங்கியுள்ளார்.

நான் செய்த சத்திய சோதனையின் கதை என்று திரு மோகன்தாசு கரம்சந்த் காந்தி தம் இளம் வயது முதல் 1921 ஆம் ஆண்டு வரையிலான தம் சரிதையை எழுதியுள்ளார். இந்நூல் நவஜீவன் வாரப் பத்திரிக்கையில் 1925 முதல் 1929 வரை அவர் குஜராத்தி மொழியில் எழுதிய கட்டுரையின் தொகுப்பு. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் "யங் இந்தியா"[1] என்னும் ஆங்கில இதழில் பிரசுரமானது.சுவாமி ஆனந்த் மற்றும் அவருடன் பணியாற்றியவர்களின் தூண்டுதல் இதற்கு முக்கிய காரணம். இவர்கள் காந்தியடிகளின் பொது வாழ்க்கை பரப்புரைகளின் பின்புலங்களை பகிர்ந்து கொள்ளும்படி ஊக்கப் படுத்தினர். இந்நூல் 20ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களுள் ஒன்றாக உலக ஆன்மீக மற்றும் மத ஆணையத்தால் தெரிவு செய்யப்பட்டது [2]

ஆங்கில மொழிபெயர்ப்பாளர் முன்னுரை[தொகு]

குஜராத்தி மொழியில் காந்தியடிகள் எழுதிய இந்நூலை 1940 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திரு மகாதேவ் தேசாய் தமது முன்னுரையில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டதாகவும், முதல் தொகுதி 1927 ஆம் ஆண்டும், இரண்டாவது தொகுதி 1929 ஆம் ஆண்டு வெளியிட்டதாகவும் குறிப்பிடுகிறார், இந்நூலின் விலை ஒரு ரூபாய் என நிர்ணயம் செய்ததாகவும், முன்னுரை எழுதுவதற்குள் குஜராத்தி மொழியில் 50,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்ததாகவும், ஆங்கில நூல் விலை அதிகமானதால் இந்தியர்கள் வாங்க இயலவில்லை எனவும் குறிப்பிடுகிறார். ஆங்கில நூலை மலிவு விலையில் கொண்டு வர வேண்டிய அவசியத்தையும் குறிப்பிடுகிறார். பகுதி 5ல் 29 ஆம் அத்தியாயம் முதல் 43 ஆம் அத்தியாயம் வரை திரு தேசாயின் நண்பர் பியாரிலால் மொழி பெயர்த்ததாகவும் குறிப்பிடுகிறார்.[3]

முன்னுரை[தொகு]

காந்தியடிகளே இந்நூலிற்கு முன்னுரை எழுதியுள்ளார். தன்னுடன் எரவாட சிறையில் இருந்த சேத் ஜெர்மதாஷ் அவர்களின் வற்புறுத்தலின் பேரிலேயே இச்சுயசரிதையை எழுத முனைந்ததாகக் குறிப்பிடுகிறார். இது போன்ற சுயசரிதைகளை எழுதுவது மேலை நாடுகளில் இருந்துவந்த பழக்கமாகும், கீழைநாடுகளில் முற்றிலுமாக இப்பழக்கம் இல்லை [4] என்றும் நண்பரின் யோசனையை எண்ணிப்பார்த்தது குறித்தும் குறிப்பிடுகிறார். தமது எண்ணங்கள் பிற்காலத்தில் மாற நேரலாம் என்ற போதிலும் சத்தியத்துடன் தம் வாழ்வில் செய்த சோதனைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்னும் எண்ணத்திலேயே இன்னூலை[5] எழுத முனைந்ததாகக்குறிப்பிடுகிறார். இந்நூலில் தாம் செய்த ஆன்மீக மற்றும் நன்னெறி குறித்த சோதனைகளைப் பற்றியே குறிப்பிட விரும்புவதாகவும் அரசியல் குறித்து குறிப்பிட விரும்பவில்லை எனவும் தெளிவாக விளக்கியுள்ளார்

பகுதி ஒன்று[தொகு]

முதல் பகுதி புலால் உண்பது, புகை பிடிப்பது, மது அருந்துவது, கையாடல் செய்வது, பின்பு இவைகளுக்காக பிராயசித்தம் செய்வது குறித்து எழுதுகிறார்.[6] இரண்டு புத்தகங்கள் தம் குழந்தைப் பருவத்தில் தம்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இவைகளில் அரிச்சந்திரன் நாடகத்தை தாம் மிகுந்த ஆர்வத்துடன் படித்ததாகவும்.அந்நாடகம் மனதைவிட்டு அகலாமல் இருந்ததாகவும் எண்ணிலடங்கா முறை தாமே அரிச்சந்திரனாக நடந்ததாக உணர்ந்ததாகவும் குறிப்பிடுகிறார் "[7]. இசிரவணனின் பெற்றோர் பாச நாடகமும் இதில் இசிரவணன் தம் பெற்றோரிடம் காட்டிய அர்ப்பணிப்பு தம்மை மிகவும் பாதித்ததாகவும் குறிப்பிடுகிறார் [8] காந்தியடிகள் தமது 13வது வயதில் மணமுடித்தார்.இது குறித்து அவர் “ எனக்கு 13 வது வயதில் திருமணம் ஆகிவிட்டது என்னும் செய்தியை மிக்க வேதனையுடன் இங்கு பதிவு செய்ய வேண்டியதுள்ளது. இது போன்ற நம்ப முடியாத சிறிய வயதில் திருமணத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது”. தமது தந்தையார் திரு.கரம்சந்த் காந்தி இயற்கை எய்ததை மற்றொரு முக்கியமான நிகழ்வாக இப்பகுதியில் பதிவு செய்கிறார்.பள்ளியில் தாம் பெற வேண்டிய உடற்பயிற்சியின் மீது தாம் எவ்வாறு வெறுப்பு கொண்டிருந்தார் என்பதையும் இப்பகுதியில் பதிவு செய்கிறார்.[9]

பகுதி இரண்டு[தொகு]

காந்தியடிகள் தம் குடும்பத்தினருடன், உறவினர், நண்பர்கள், தம் மனைவியுடனும் தங்கி உறவுகளை மேம்படுத்த விரும்பியிருந்தாலும் தமது பணி ஆர்வமூட்டுவதாக அமையவில்லை என்பதால் ஒரு இந்திய முகமதிய நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை கூறும் பணியை ஏற்றுக் கொண்டார். தமது தென்னாப்பிரிக்கா பயணம் ஒரு தற்காலிக ஏற்பாடு, மேலும் அது தமது தொழிலில் இருந்து வந்த மந்த நிலைக்கு ஒரு மாற்று என்று கருதினார்.

பிரித்தானியர்களும்,டச்சுக்காரர்களும் நீண்ட கால போராட்டத்திற்குப்பின் நேட்டால் மற்றும் கேப் காலனி பகுதியை ஆங்கிலேயர்களும் பூவர்கள் என்று கூறப்பட்டு வந்த ஏற்கன்வே தென் ஆப்பிரிக்காவில் தங்கியிரிந்த டச்சுக்காரர்கள் ஆரஞ்சு குடியரசு மற்றும் டிரான்ச் வால் என்னும் இரண்டு குடியிருப்புகளை முறையே ஆண்டு வந்தனர் என்கிறார். சுதந்திர பூவர் நாடுகளுக்கும் அங்கு வாழ்ந்து வந்த வெள்ளைக்கார குடிமக்களுக்கும் பிரித்தானியர்களுடன் போராட்டம் தொடர்ச்சியாக இருந்து வந்தது. இவர்களை அடக்குவதற்காக ஆங்கில அரசு கடுமையான நிறவெறிக்கொள்கையை அங்கு கடைப்பிடித்து வந்தது. இதன்காரணமாக பெரும்பாலும் கருப்பினத்தவர் மிகுந்த சிரமங்களுக்கு உட்படுத்தப்பட்டனர். கரும்பு மற்றும் காபித் தோட்டங்களில் வசித்து வந்த இந்தியர்களுக்கு பாதிப்பு கருப்பினத்தவர்களை போல் இல்லை சற்று குறைவாக இருந்தது. இருந்தாலும் இவர்கள் இரண்டாம் தரக் குடிகளாகவே நடத்தப்பட்டனர். தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் அடைந்த உளைச்சல், அடக்கு முறையை எதிர்த்து அவர் நடத்திய போராட்டம் அனைவரும் அறிந்த ஒன்று. இங்கு இவர் தங்கியிருந்த நீண்ட காலத்தில் இவர் அனுபவித்த இழிவுகள் ஏராளாம். மேரிட்சுபாசு நகரில் புகைவண்டியிலிருந்து இவர் தூக்கி வீசப்பட்ட செய்தி[10] மிகவும் பிரபலமடைதிருந்தது. தாம் கொண்ட கொள்கையின் அடிப்படையில் முதல் வகுப்பிலிருந்து இறங்க மறுத்த காந்தியடிகள் புகைவண்டியிலிருந்து தூக்கிவீசப்பட்டார். இதன் பின்னர் உணவு விடுதியில் தங்குவதற்கு இடம் கிடைப்பதிலும் நிறவெறிக்கொள்கையால் பல இடர்பாடுகளை அனுபவித்தார். தமது சக இந்தியர்கள், பெரும்பாலும் தொழிலாளிகளான படியாலும் மேலும் பல அநியாயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்ததையும் காணமுடிந்தது. ஆரம்பத்தில் குழப்பமடைந்தாலும், தாம் அடைந்த இழிவுகளும் அவமானங்களும் இவரை நிறவெறிக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்னும் நிலைப்பாட்டை எடுக்க வைத்தது. டிரான்ஸ்வல் இந்தியர்கள் மத்தியில் ஒரு பொது மனிதராகவும் குறிப்பிடும் நபராகவும் உயர்ந்தார். அவர் அங்கு ஆற்றிய முதல் உரையில் இது போன்று ஒப்பின்மையை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் கடுமையாக உழைக்க வேண்டும், ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மேலும் சுகாதாரமான பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். காந்தியடிகள் ஏற்றுக் கொண்ட வழக்கறிஞர் பணி அவருக்கு பளுவாக இருந்தாலும் ஓய்வு வேளையில் டால்ஸ்டாயின் நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய அமைதி மற்றும் நீதி முதலிய கருத்துக்களால் மிகவும் கவரப்பட்ட காந்தியடிகள் டால்ஸ்டாய் அவர்களுடன் நெருங்கிய கடிதப்போக்குவரத்து வைத்துக்கொண்டார். இருவரும் அஹிம்சையின் தத்துவத்தில் ஒத்த கருத்துடையவர்களாக விளங்கினர். தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கொள்கைக்கு எதிரான காந்தியடிகளின் தீவிரமான எதிர்ப்பும் கோபமும், டால்ஸ்டாயின் சமுதாயத் திறனாய்வில் தீவிரமாக எதிரொலித்தது.

கிருத்துவர்களின் விவிலியம் புதிய ஏற்பாட்டில் மலைவழிபாட்டில் ஏசுகிருத்து கூறிய நாட்டு மக்களுக்காக சுயமறுப்பு என்னும் தத்துவத்தை இருவரும் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டனர். காந்தியடிகள் தொடர்ந்து தமது ஆன்மிகத் தேடலுக்கு பகவத்கீதையையே சார்ந்திருந்தார். அதன் பலனாக தமது பணியின் அடிப்படை தன்னிறைவே என்றும் சுயமறுப்பு அல்ல என்பதையும் அறிந்தார்.பொது வாழ்வு என்பது, தான் என்ற உணர்வில்லாத நிலை என்பதைக் கடைப்பிடித்த காந்தியடிகள் தமது சேவைக்கு எவ்விதக் கட்டணமும் வாங்கிக்கொள்ள மறுத்ததுடன், தன்வாழ்க்கைக்கு தமது வழக்கறிஞர் தொழிலின் மூலம் ஈட்டிய வருமானத்தையே நம்பியிருந்தார்.

மதங்களைப்பற்றிய புரிதலுக்கும் கோட்பாடுகளை வகுத்துக் கொள்வதற்கும் அவர் மதம் தொடர்பான நூல்களை மட்டும் நம்பியிருக்கவில்லை. காந்தியடிகளின் நண்பர் பம்பாயைச் சேர்ந்த ராய்சந்திரா என்பவர் தீவிரமத நம்பிக்கை கொண்டவர். இந்து சமயம் கிறித்தவம் இவைகளில் பல தலைப்புக்களை நன்கு அறிந்தவர், மெத்தப்படித்த ஆன்மிகவாதி. இவருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்வார். இதன் காரணமாக அவர் அகத்தில் நேர்மையும் தெளிவுமே முக்கியம் என்று உணர்ந்து கொண்டார். மதங்களின் அடிபடையில்லாத கோட்பாடுகளின் மீதும், புறத்தில் அனுசரிக்கப்பட வேண்டிய ஒழுங்கைவிட அகசுத்தி மேன்மையானது முக்கியமானது என்று நம்பினார். ஆதலால் தமது மதத்தின் கடவுளை தான் நம்பினாலும், எல்லா மதங்களும் அவரவர் பாணியில் உண்மைகளை எடுத்துரைக்கின்றன எனவும், ஆதலால் அவைகளை மதிப்பதும் பொருத்தமானது எனவும் நம்பினார்.

தென்னாப்பிரிக்காவில் தமது அலுவல் முடிந்த பின்னர், எதிர்பார்த்தது போல் காந்தியடிகள் தொடர்ந்து தங்கியிருக்க காரணம் இருந்ததைக் கண்டார். அப்பொழுது நேட்டால் சட்டமன்றம் இந்தியர்களுக்கு வாக்குரிமை மறுக்கும் “ இந்திய வாக்குரிமைச் சட்டத்தை” இயற்ற முனைந்தது .காந்தியடிகளின் ஒரு சில நண்பர்களைத் தவிர இந்த சட்டமன்ற வழக்கை குறித்து பரவலான விழிப்புணர்வும் கருத்தும் ஏதும் இருக்கவில்லை. நண்பர்கள் காந்தியடிகளை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் இருக்கும் படியும் அவர்களுடன் சேர்ந்து இந்தியர்களுக்கு நேரும் அநீதியை எதிர்த்து நிற்கும்படியும் கேட்டுக்கொண்டன்ர். இந்தியர்கள் அங்கு மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்பட்டு ‘கூலிகள்’ என்றே அழைக்கப்பட்டு வந்தனர். நிறவெறிக்கொள்கை வெள்ளையர்களின் இரத்தத்தில் ஊறியிருப்பதையும் குறிப்பாக டச்சுக்காரர்கள் ஆளும் பகுதியில் இந்தியர்கள் மிகவும் மோசமான நகர்ப்புற சேரிகளில் வசிப்பதையும் வேளாண் நிலங்களை சொந்தமாக வைத்துக்கொள்ளவோ அல்லது நிர்வாகம் செய்யவோ கூடாது என்பதையும் கண்டார். இந்தியர்கள் சிறிது அதிகம் செல்வாக்கு உள்ள நேட்டால் பகுதியில் கூட இரவு 9 மணிக்கு மேல் அனுமதி அட்டை இல்லாமல் வெளியே வரக்கூடாது. ஆங்கிலேயர் ஆளுகைக்குட்பட்ட மற்றொரு இடமான ‘கேப் காலனி’ யில் சாலைகளின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் இந்தியர்கள் நடப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இது போன்ற பல அநியாயங்களுக்கு சட்டவடிவம் கொடுப்பதே கொண்டு வர இருந்த ‘சட்டமுன்வடிவின்’ நோக்கமாக இருந்தது.

கடைசி நேரத்தில் செய்த மனுக்கள் இந்தியக் குடியுரிமை சட்ட முன்வடிவைத்தடுக்க முடியவில்லை என்றாலும், காந்தியடிகள் ஆங்கிலேய அரசின் குடியேற்றங்களுக்கான செயலாளருக்கு இதை வலியுறுத்தி, மனுவை அனுப்பிவைத்ததுடன், அதனை தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் இந்திய பத்திரிக்கைகளிலும் வெளியிட்டார். பத்திரிக்கை செய்திகள், இந்த மூன்று நாடுகளிலும் தென் ஆப்பிரிக்கா இந்தியரின் பரிதாப நிலையைக் குறித்து நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், இந்திய டைம்ஸ் பத்திரிக்கையும், லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையும் இந்தியர்களின் வாக்குரிமைக்கான நியாயத்தை தலையங்கம் வாயிலாக வலியுறுத்தின. காந்தியடிகள் நேத்தால் இந்தியக் காங்கிரசு என்னும் அரசியல் அமைப்பையும் நிறுவினார்.இந்த நிறுவனம் வாலாயமாக கூட்டங்கள் நடத்தி வந்தது.சிறிது பண முடைக்குப்பின், ஒரு நூலகமும் வழக்கமான கலந்துரையாடல்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒவ்வொரு ஆங்கிலேயருக்கும் ஒரு வேண்டுகோள் எனவும், இந்திய மக்களுக்கு வாக்குரிமை ஒரு வேண்டுகோள் எனவும் இரண்டு துண்டு பிரசுரங்களை நிறவெறிக் கொள்கைகளின் அநீதிகளை விளக்கி வெளியிட்டார்.

முதலில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில், ஒரு மாதம் அல்லது அதிகபட்சமாக ஒரு வருடம் இருக்க வேண்டியிருக்கும் என்று கருதியிருந்தாலும்,அவர் சுமார் 20 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் இருந்தார். அவர் முதலில் ஏற்றுக் கொண்ட பணி முடிந்திருந்தாலும் 20 புதிய நிறுவனங்களுக்கு அவர் பணியை மேற்கொண்டிருந்தார். முதலில் ஏற்றுக்கொண்ட பணி முடிவடைந்திருந்தாலும் புதிதாக ஏற்றுக்கொண்ட 20 நிறுவனங்களுக்கான பணி நிமித்தம் வருவாயும் கிடைத்தது, இது வாழ்க்கை நடத்துவதற்கும் ஏதுவாக இருந்தது.இதனால் பொது வாழ்வில் ஈடுபடுவதற்கான நேரமும் அவருக்குக் கிடைத்தது, தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கைக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிராக அவர் நடத்திய போராட்டம் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் மத்தியில் இவர் ’உத்தமர்’-’மகாத்மா’ என அறியப்பட்டார்.

பகுதி மூன்று[தொகு]

1896 ஆண்டு காந்தியடிகள் ஒரு சிறிது காலம் இந்தியா வந்து விட்டு குடும்பத்துடன் தென்னாப்பிரிக்கா திரும்பினார்.இந்தியாவில் “தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் பரிதாபநிலையை” விளக்கி ‘பச்சைப்பிரசுரம்’ என்று ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டார். இந்தியர்கள் மத்தியில் தாம் எவ்வளவு புகழ்பெற்றவராக இருந்தார் என்பதையும்,தமது சேவையை அவர்கள் எவ்வளவு போற்றி மதிக்கிறார்கள் என்பதையும் உணர்ந்தார். தென்னாப்பிரிக்காவில் உள்ள பல தொழிலாளர்கள் சென்னை மாகாணத்திலிருந்து வந்நவர்களாதலால் காந்தியடிகள் சென்னை வந்திருந்த பொழுது திரளாக வந்திருந்து பலத்த கரவொலி எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர்.காந்தியடிகள் தமது குடும்பத்துடன் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் தென் ஆப்பிரிக்காவிற்குத் திரும்பினார். தென்னாப்பிரிக்காவில் முழுவதும் காந்தியடிகள் மிகவும் பிரபலம் அடைந்திருந்தார். அவர் தென் ஆப்பிரிக்காவிற்கு திரும்பி வரும் பொழுது நேட்டால் துறைமுகத்துக் வந்தடைந்தார். அவரை நேட்டால் நகருக்குள் அனுமதிக்கக் கூடாது என்று ஒரு வன்முறைக் கும்பல் போராட்டத்தில் ஈடுபட்டது. அந்தக் கூட்டம் காந்தியடிகள் சென்ற கப்பலிலிருந்து வெள்ளையரல்லாத அனைவரும், தென்னாப்பிரிக்காவில் தங்க வைப்பதற்காககாந்தியடிகளால் அழைத்து வரப்பட்டவர்கள் என்று தவறாக எண்ணிக் கொண்டனர். ஆனால் காந்தியடிகளுடன் வந்தவர்கள் நேட்டால் நகரில் ஏற்கனவே வாழ்ந்து வந்தவர்கள். அதிர்ஸ்டவசமாக காந்தியடிகள் தென்ஆப்பிரிக்க ஆங்கிலேயர்களுடன் நல்லுறவு வைத்திருந்ததால், நேட்டால் துறைமுகத்தின் காவல்துறை கண்பாணிப்பாளரும் அவர் துணைவியாரும் பத்திரமாக காந்தியடிகளை அழைத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சிக்குப்பின் அங்கிருந்த வெள்ளையர்கள் அவரை உயர்வாக நினைத்து மதிக்கத் துவங்கினர். நேட்டால் இந்திய காங்கிரசில் தமது பணியை மீண்டும் துவங்கினார். ஆங்கிலேயர்கள் மீது அவர் கொண்டிருந்த நல்லெண்ணம்,பின்னர் துவங்கிய பூவர் போரை எவ்வாறு கையாள்வது என்பதை முடிவு செய்ய உதவியாக இருந்தது. நல்லெண்ணம் வளர வேண்டும் என்று விரும்பியதால்,பூவர் யுத்தத்தில் போர்ககளத்தில் பங்கேற்று சண்டையிடாவிட்டாலூம் இந்திய மருத்துவ சேவகர்கள் என்று தொண்டர் படையுடன் சேவை செய்தனர்.1900 ஜனவரியில் நடந்த ‘சுப்பயன்காப்’ என்னும் யுத்தம் குறிப்பிடத்தகுந்தாகும். காந்தியடிகள் சமத்துவம், சகாதரத்துவம் போன்ற கொள்கைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆங்கிலேய அரசும் இக்கொள்கைகளைக் கொண்டிருப்பதால், ஆங்கில அரசின் அரசியலமைப்புச்சட்டமும்,அரசும், இந்தியர்களுப்பட்ட அனைத்து குடிமக்களுடைய விசுவாசத்தைப் பெற தகுதி வாய்ந்தது என்று நம்பினார்.தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிக்கொள்கை ஒரு நிரந்திர அணுகுமுறை அல்ல என்றும் ஒரு தற்காலிக ஏற்பாடு என்றும் கருதினார். இந்தியாவிலும் ஆங்கில அரசு தேவை என்றும் அது பொதுமக்களுக்கு நல்லது செய்வதாகவே எண்ணினார். ஆங்கிலேயர்களுக்கும், டச்சுக்ககாரர்களுக்கும் நடந்த யுத்தம் மூன்றாண்டு காலம் தொடர்ந்தது. தீவிரமாக நடந்த யுத்தத்தில் ஆங்கிலேயர் வெற்றி பெற்று டிரான்ஸ்வால் மற்றும் ஆர்ஞ்சு பிரீ பகுதிகளை கைவசப் படுத்தினர். ஆங்கிலேயர் வெற்றி தென்னாப்பிரிக்காவில் நீதியை நிலை நாட்டச் செய்யும் எனவும், தாம் தாயகம் திரும்பிவிடலாம் என்று நம்பினார். 1901-இல் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பினார். இந்திய தேசிய காங்கிரஸ், நடுத்தர மக்களுக்கு அரசியல் மற்றும் சமூக அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் என்று நம்பினார்.1885-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒருவரால் நிறுவப்பட்ட காங்கிரசிற்கு அரசியல் அதிகாரம் எதுவும் இருக்கவில்லை.அரசுக்கு’ஆதரவு நிலைப்பாட்டையே’ அது எடுத்து வந்தது. காந்தியடிகள் கூட்டத்தில் பங்கேற்று தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு ஆதரவான தீர்மானம் இயற்ற வேண்டும் மென்று விரும்பினார். நேட்டாலை விட்டுக்கிளம்புமுன், தேவைப்பட்டால் மீளவும்தென்னாப்பிரிக்கா வருவதாகக் கூறிவிட்டு தாயகம் திரும்பினார். 1901 ஆம் ஆண்டு நடந்த காங்கிரசு மாநாட்டில் பங்கேற்ற காந்தியடிகளின் நம்பிக்கை வீண்போகவில்லை.முக்கியமான தலைவர்களுள் ஒருவரான கோபால கிருஷ்ண கோகலே அவர்கள் உதவியுடன் தென் ஆப்பிரிக்க இந்தியர்களுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.காந்தியடிகள், திரு. கோகலே அவர்களின் இல்லத்தில் ஒரு மாத காலம் தங்கியிருந்து பல தலைவர்களைச் சந்தித்தார். இது பிற்காலத்தில் காந்தியடிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. காந்தியடிகள் ஏற்கனவே உறுதியுளித்தபடி நேட்டாலுக்குத் திரும்ப வேண்டி வந்தது. ஆங்கிலேயர்களும்,பூவர்களும் நட்பு பாராட்டி ,ஒருங்கிணைந்து இந்தியர்களின் நலனுக்கு முரணாகச் செயல்படுவதாகவும், ஆங்கிலேயர்கள், கனாடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ளது போன்று,அதிகாரத்தை அங்கு வாழும் வெள்ளையர் கைவசம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது. காந்தியடிகள் உடனடியாகத் தென்னாப்பிரிக்காதிரும்பி ஆங்கிலேய அரசின் குடியேற்றங்களுக்கான செயலாளர் திரு.சாம்பர்லின் அவர்களைச் சந்தித்து, இந்தியர்களுக்கு அநீதி இழைப்பதை மனு மூலம் எடுத்துரைத்தார்.ஆனால் இந்தியர்கள், தென் ஆப்பிரிக்காவை ஆள்பவர்களுக்கு அடங்கிப் போக வேண்டுமென்று செயலாளர் தெளிவாக்கினார். தென் ஆப்பிரிக்காவை ஆளத் தகுதியானவர்கள் டச்சுக்காரார்களும் அங்கு வாழும் ஆங்கிலேயர்களாகும் என்று தெரிவிக்கப்பட்டது.அவர்கள் ”ஆபகாளார்ஸ்” என்றும் அழைக்கப்பட்டனர். காந்தியடிகள் இந்தப் புதிய அரசியல் ஏற்பாட்டிற்கு எதிராக அணி திரட்டினார்.நேட்டாலில் தங்கியிருப்பதற்குப் பதிலாக டிரான்ஸ்வால் நகரில் தங்கி போரிலிருந்து திரும்பியவர்களுக்கும், அதிக விலை கொடுத்து அனுமதி அட்டையை வாங்க வேண்டியவர்களுக்கும் உதவிப்புரிந்தார். தாம் குடியிருந்த வீடுகளை ஆங்கிலேயரின் வற்புறுத்தலின் பேரில் காலி செய்ய வேண்டி இடர்பாடுகளை அடைந்தவர்களுக்கும் உதவி புரிந்தார்.தென் ஆப்பிரிக்காவில் அரசியல் சுதந்திரம் மற்றும் இந்தியர்களுக்கு சமவாய்ப்பு என்னும் கொள்கைகளைப் பரப்புவதற்காக ”இந்தியன் ஒபினியன்” என்னும் பத்திரிக்கையைத் துவங்கினார்.பத்திரிக்கையின் அலுவலகத்தில் பல ஐரோப்பிய பெண்கள் பணி புரிந்தனர். பின்னர் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பலர் இப்பணியில் ஈடுப்பட்டனர். இது காந்தியடிகளின் புகழை உயர்த்தவும்,அவர் கொள்கைகளுக்கு விளம்பரத்தையும் தேடித்தந்தது. அதே நேரத்தில் சான் ரச்கின் எழுதிய ’கடையேனுக்கும் கடைத் தேற்றம்’ என்னும் நூலைக் கற்றார். எல்லா விதமான பணியையும் விட உடலுழைப்பால் செய்யும் பணியே மேலானது என்னும் கொள்கையை இந்த நூல் வலியுறுத்தியது. இக்கருத்து காந்தியடிகள் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. காந்தியடிகள் மேலை நாட்டு பழக்கவழக்கங்கள், நடை, உடை, பாவனை அனைத்தையும் அறவே துறந்தார். தமது குடும்பத்துடன் டிரான்ஸ்வால் நகரில் ஒரு பண்ணை வீட்டில் அமைந்த ’போனிகஸ்’ என்னும் குடிலில் குடியேறினார்.இயந்திரங்களின் பயன்பாட்டினைத் தவிர்த்து ’இந்தியன் ஒப்பினியன்’ பத்திரிக்கையைக் கைகளால் அச்சிட்டு வெளியிட்டார். எந்திரங்களின் உதவி இன்றி கைகளால் வேளாண்மை செய்தார்.மேலை நாடுகளின் தாக்கம் இல்லாமல் இந்தியாவின் பாரம்பரியமிக்க விழுமியங்களை மீட்டெடுத்து வள்ர்ப்பது தான் தமது கொள்கையாகக் கருதி நடைமுறைப்படுத்த முயன்றார்.அவர் மின்சாரம், தொழில் நுட்பம் போன்ற மேலை நாடுகளின் தாக்கத்திற்கு உட்பட விரும்பவில்லை. 1906 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி இக்கொள்கையை செயல்படுத்தத் துவங்கினார். டிரான்ஸ்வால் நகரில் கூடியிருந்த திரளான இந்தியர்களை ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது என்று உறுதியெடுத்துக் கொள்ளும்படி கூறினார்.அப்பொழுது தென் ஆப்பிரிக்கா அரசு 8 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் அனைவரும் தமது பெயரைப் பதிந்து கொள்ள வேண்டுமென்ரு ஒரு புது விதியைக் கொண்டு வந்தது. அனைவருக்கும் முன்னோடியாக காந்தியடிகள் தமது பெயரைப் பதிவு செய்ய மறுத்தார். அதன் காரணமாக நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார் ஒத்துழையாமை இயக்கத்தை தாம் கடைப்பிடிப்பதாகவும் தமக்கு இன்னும் அதிகமான தண்டனை வழங்கும் படி கேட்டுக்கொண்டார். காந்தியடிகள் தமது பரப்புரையத் தொடர்ந்து செய்து வந்தார். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தமது அனுமதி அட்டையை எதிர்த்தும் அனுமதி அட்டை இல்லாமலேயே டிரான்ஸ்வால் நகருக்குள் நுழைந்தும் தங்களது எதிர்ப்பையும் ஒத்துழையாமையயும் தெரிவித்தார். 1908 ஆம் ஆண்டு மறுபடியும் காந்தியடிகளுடன் பலர் சிறை சென்றனர். ஜான்கிறிஸ்டியன் சுமட்சு என்னும் தென் ஆப்பிரிக்கத் தளபதி அனுமதி அட்டை விதியை தளர்த்துவதாகக் கூறி பின் மறுத்துவிட்டார். காந்தியடிகள் மனம் தளரவில்லை. 1909 ஆம் ஆண்டு லண்டன் சென்று அங்கு ஆதரவு திரட்டினார்.அதன் பலனாக 1913 ஆம் ஆண்டு தளபதி சுமட்சு இவ்விதியை ரத்து செய்து விட்டார். இருந்தாலும் டிரான்ஸ்வால் பிரதம அமைச்சர் இந்தியர்களை இரண்டாம் தர குடிளாகவே நடத்தினார். அதே சமயம் கேப் காலனி அரசு கிருத்து அல்லாத மற்ற திருமணங்கள் செல்லாது எனச் சட்டம் இயற்றியது. இதன் பயனாக அனைத்து இந்தியக் குழந்தைகளும் திருமணத்திற்கு அப்பால் பிறந்தவர்களாகவே கருதப்பட்டனர். நேட்டால் அரசு இந்தியர்கள் மீது கடுமையான வாக்குவரியை விதித்து கொடுமைப்படுத்தியது. இது போன்று இந்திய கொள்கைகு எதிராக பெரிய அளவில் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினார். இவ்வியக்கத்தில் பெருவாரியாகப் பெண்கள் பங்கேற்று நேட்டால் நகர எல்லையை அனுமதியில்லாமல் கடந்து வந்தனர்.5000 நிலக்கரிச் சுரங்க ஊழியர்களும் வேலை நிறுத்தத்திலும் ஈடுப்ப்ட்டனர். இவர்கள் காந்தியடிகளின்தலைமையில் கைது செய்வதை எதிர் நோக்கி நேட்டால் எல்லையைக் கடந்தனர். தளபதி சுமட்சும் பல நேரங்களில் கருத்து மாறுபாடு கொண்டிருந்தாலும், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மரியாதை கொண்டிருந்தனர். திராளன இந்தியர்கள் எதிர்பைக் காட்டியதால் சுமிட்சும் பணிந்து இந்தியத் திருமணங்களை ஏற்றுக்கொண்டதுடன் வாக்கு வரியையும் ரத்து செய்தார். வேலைக்கு இந்தியவிலிருந்து ஆட்களைக் கொண்டு வருவதும் படிப்படியாகக் குறைக்கப்படும் எனவும் 1920 ஆம் ஆண்டு முழுவதுமாக நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.1914 ஆம் ஆண்டு ஜூலை மாதம் காந்தியடிகள் ’மகாத்மா’ என அழைக்கப்பட்டு தமது ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால் உலகப் புகழ் பெற்றார்.

பகுதி நான்கு[தொகு]

முதல் உலகப் போர் துவங்கும் போது காந்தியடிகள் இங்கிலாந்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் பூவர் போரில் சேவை செய்தது போன்று முதலுதவித் தொண்டர் படையை ஏற்படுத்தி சேவை செய்தார். உடல் நலச் சீர் கேடு அடைந்து பின் நாடு திரும்பினார்.அவருக்கு மீண்டும் எழுச்சியான உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்தியடிகள் அன்பாக ‘மகாத்மா’ எனவே எல்லோராலும் அழைக்கப்பட்டார். பொதுமக்களின் அன்பையும் பாசத்தையும் பணிவுடன் ஏற்றுக் கொண்டாலும் ,எல்லோரும் சமம் என்றும் தமக்குப் பட்டம் கொடுத்து புனிதம் அளிப்பதை ஏற்றுக் கொள்ள மனம் விரும்பவில்லை என்றும் கூறி வந்தார். புலடைக்கம், பணிவு வேண்டி, ஒரு வருடம் பொது வாழ்க்கையிலிருந்து விலகி புனிதம்-ஆற்றுமை(healing) ஆகியவைகளை சோதிக்க சுயபரிசோதனையில் ஈடுப்பட்டார். அதுமட்டுமில்லாமல் தீண்டத்தாதவர்களுடன் இணைந்து ஆசிரமம் அமைத்து அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். நிதியுதவி செய்த தனவந்தர்களும், உயர் ஜாதிக்காரர்களும் உடன்படாவிட்டாலும் தொடர்ந்து ஆசீரம வாழ்க்கையைக் கடைப்பிடித்தார். அகமதாபாத் மாவட்டத்தில் தீண்டத்தாதவர்கள் வசிக்கும் பகுதில் ஒரு முகமதிய கனவான் செய்த நிதி உதவியுடன் தமது ஆசிரம வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்தி வந்தார். நாளடைவில் ஆசீரம வாழ்க்கை மற்றவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பொது வாழ்க்கையிலிருந்து விலகி இருந்தாலும் காந்தியடிகள் பம்பாய் மாகாணத்தின் ஆளுநரைச் சந்தித்து அரசியல் நடவடிக்கை எதுவும் எடுக்கும் முன்பு அவரைக் கலந்து ஆலோசிப்பதாக ஒப்புக் கொண்டார். அப்பொழுது பம்பாய் ஆளுநராக இருந்த திரு.வெல்லிங்டன் அவர்கள் பிற்காலத்தில் இந்தியாவின் வைஸ்ராய் பதிவும் வகித்தார்.

கோபால கிருஷ்ண கோகலே மறைவிற்காக மிகவும் மனம் வருந்தனார். கோகலே அவர்கள் காந்தியடிகளின்வழிகாட்டியாகவும் ஆதரவாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்திய தேசிய காங்கிரசில் பலர் இந்திய தேசிய வாதத்தை ஏற்றுக் கொண்ட போதும்,காந்தியடிகள் சற்று விலகியே இருந்தார்.1915 ஆம் ஆண்டு சத்தியாகிரக ஆசிரமம் என்னும் புதிய குடியிருப்பை அகமதாபாத் நகருக்கு அருகில் நிறுவி தமது சகாக்களுடனும் ஒரு தீண்டத் தகாத குடும்பத்துடனும் குடியேறினார்.ஆசிரம வாசிகள் அனைவரும் புனிதமான எளிமையான வாழ்க்கை வாழ்வதாக உறுதி எடுத்துக் கொண்டனர்.

சிறிது காலத்திற்குப் பின் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெறுவது அவசியம் என்று கருதினாலும் அவர்களுக்கு பதிலாக மேலை நாகரிகத்தில் வளர்ந்த வசதி படைத்த இந்தியர்கள் தான் நாட்டை ஆள வருவார்கள் என்று பயம் கொண்டிருந்தார். சமூக பொருளாதார மறுமலர்ச்சியுடன் வறுமை, சாதி சமயப்பிரிவு இல்லாத, ஏற்றத் தாழ்வற்ற சமூகத்துடன் விடுதலை பெறுவது என்று தீர்மானமான கொள்கையைக் கொண்டிருந்தார்.அனைவருக்கும் ஏழைகள் பால் கருணையும் அனுசரணையும் இல்லாதவரை இந்தியா விடுதலைக்குத் தகுதிபெற்று விட்டதாக காந்தியடிகள் கருதவில்லை. தமது பொது வாழ்க்கையை 1916 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கிய காந்தியடிகள் காசி இந்துப் பல்கழைக் கழகத்தில் உரையாற்றிய போது விடுதலை குறித்தும் சமூக பொருளாதார மறுமலர்ச்சி குறித்த தமது புரிதலையும் விளக்கிக் கூறினார். மக்களின் வாழ்க்கைத்தரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்றும் தமது பயணத்தின் போது கண்டவைகளையும் குறிப்பாக சுகாதாரச் சீர்கேடு எவ்வாறு பரவிக் கிடக்கிறது என்றும் விளக்கினார். உயர் சாதியினர் இந்தக்க் கருத்துக்கு உடன்படவில்லை என்றாலும் தமது கருத்துக்குளுக்குச் செயல் வடிவம் கொடுக்க காந்தியடிகள் முடிவு செய்தார்.தென் ஆப்பிரிக்காவைப் போல இங்கு கைது செய்வதை எதிர் நோக்கி சம்பாரன் மாவட்டத்தில் உள்ள ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்தார்.இவர் எடுத்த முயற்சியின் காரணமாக தோட்ட முதலாளிகளின் சுரண்டலுக்கு எதிராக, அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. காந்தியடிகள் வன்முறைக்கு எதிராக எப்பொழுதும் குரல் கொடுத்து வந்தார். அகமதாபாத் ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து, வன்முறையில் இறங்கிய போது உண்ணா நோன்பிருந்து அமைதியை நிலை நாட்டினார். சில அரசியல் நோக்கர்கள் உண்ணா நோன்பிருந்து பிறருக்கு அழுத்தம் கொடுப்பது தவறான அணுகுமுறை என்று விமர்சித்தாலும், மூன்று நாட்களுக்குள் ஆலை முதலாளிகளும், தொழிலாளர்களும் பேசி உடன்பாடு செய்து கொண்டனர். இந்தச் சோதனை மூலம் காந்தியடிகள் உண்ணா நோன்பு ஒரு பலமான ஆயுதம் என்று உணர்ந்து கொண்டார். இது பிற்காலத்தில் இவருக்கு மிகுந்த பலனை கொடுத்தது.

முதலாம் உலகப்போர் தொடங்கியதும், காந்தியடிகள் ஆங்கிலேயப் படைக்கு ஆள் சேர்ப்பதற்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு முயன்று வந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் குறித்த உணர்ச்சி பூர்வமான உரைகளைக் கேட்டிருந்த அவர் சகாசகள்,அவருடைய இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டினர். ஆங்கில அரசிற்கு காந்தியடிகள் விசுவாசமாக இருந்தாலும்,பிரித்தானிய அரசின் கொள்கையின் மீதும் கோட்பாடுகள் மீதும் ஈடுபாடு கொண்டிருந்தாலும்,சுயாட்சிக் கொள்கை மீது அதிகமான பிடிப்பு கொள்ளத் துவங்கினார். இதன் தொடர்ச்சியாக காந்தியடிகள் நாடு முழுவதும் பயணம் செய்தார்கள். பின்னர் அவர் உடல் நிலை மிகவும் மோசமடைந்த பொழுது எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் தமது மண் சிகிச்சை முறையையும் ,உணவுப் பக்குவத்தையுமே அனுசரித்தார். தமது ஆசிரமத்தில் படுத்த படுக்கையாகச் சில காலம் இருக்க வேண்டியிருந்தது. உலகின் முக்கியாமன முகமதிய அரசான ‘ஒட்டாமா’ பேரரசை ஆங்கிலேயர்கள் வென்றதையடுத்து, இந்தியாவிலும் பரவலாக அமைதியின்மை காணப்பட்டது. ஆங்கிலேயர்கள், சிறிய அரசுகளையும், மக்களையும், ஒட்டாமா அரசின் கொடுங்கோன்மையிலிருந்து பாதுகாத்ததாகக் காரணம் கூறினாலும், இந்திய மக்கள் இதனை நம்ப மறுத்தனர்.

முதல் உலகப் போர் முடிவுக்குப் பின்பும்,ஆங்கிலேய அரசு,போர்க்காலத்திற்காக ஏற்படுத்திய சிறப்பு சட்டங்களையும், விதிகளையும் நீக்காமல் தொடர்ந்து அமல் படுத்தவும் முடிவு செய்தது. இதன் பயனாக ஊரடங்கு உத்தரவு பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் பல அதிகாரங்கள் அரசின் வசம் தொடர்ந்து இருந்துவந்தது.இந்த ஏற்பாட்டிர்கு அடிப்படை ரெளலத் குழுவின் பரிந்துரையாகும். காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் நாடு தழுவிய அளவில் நடைபெற்றது. இதற்காக காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். பல இடங்களில் போராட்டத்தில் பொது மக்கள் ஈடுப்பட்டனர். காந்தியடிகளின் விருப்பத்திற்கு மாறாக வன்முறையும் வெடித்தது. வன்முறையை ஏற்றுக்கொள்ளாத காந்தியடிகள் போராட்டத்தை விடுத்து அனைவரையும் தம் வேலைக்குத் திரும்பும்படி வேண்டுகோள் விடுத்தார். சத்தியகிரகத்தை வன்முறையையில்லாமல் நடத்த இயலாதென்றால் அதை தொடர்வதில் பயனில்லை என்று வலியுருத்தினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காந்தியடிகளின் கருத்துக்கு உடன்படவில்லை.பஞ்சாப் மாகாணத்தின் தலை நகரமான அமிர்தசரஸ் நகரில், ஆங்கிலேய அரசு, காங்கிரசு அமைப்பின் இந்து மற்றும் முகமதிய உறுப்பினர்களை மாகாணத்தை விட்டு வெளியேற்றியது. நகரின் தெருவெங்கும் மக்கள் கூட்டமாகச் சேர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர்.ஆங்கில அரசு, பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு.இ.டயர் என்னும் அதிகாரியை சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த அனுப்பியது. டயர் அனைத்துப் பொது கூட்டங்களையும் தடை செய்ததுடன் காவல் துறையினர் அருகில் வரும் பொழுது மக்களைக் கசையடி கொடுத்துக் தாக்கினார். இதனைப் பொருட்படுத்தாத சுமார் 1000 பொதுமக்கள் அமிர்தசரச் நகரின் மையப்பகுதியில் குவிந்தனர். இவர்கள் மீது எந்த விதமான முன்னறிவுப்புமின்றி டயர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஒடுக்கமான இடத்தில் மாட்டிக் கொண்ட பொதுமக்கள் வெளியேற வழியில்லாமல் தரையில் படுத்துக்கொண்டனர்.ஆனால் டயர் ஆனணையினை ஏற்று காவல் துறையினர் தரையில் படுத்துக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது, தமது கைவசமிருந்த துப்பாக்கி குண்டுகள் தீரும்வரை சுட்டுத் தள்ளினர். நூற்றுக்கணக்கானவர்கள் மாண்டனர்.பலர் காயமுற்றனர். இந்தத் துப்பாக்கிச்சூடு நிகழ்ச்சி அமிரதசரச் படுகொலை என்று அழைக்கப்பட்டது. இந்திய மக்களைப் போலவே இங்கிலாந்து மக்களையும் இது கோபப்பட வைத்தது.லண்டனில் உள்ள ஆங்கிலேய அதிகாரிகள் இந்நிகழ்ச்சியை கண்டித்ததுடன் டயரையும் பணி நீக்கம் செய்ய வைத்தனர். இப்படுகொலை இந்திய மக்களிடையே மிகப் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது. மிதவாதிகளும் இந்திய விடுதலைதான் தீர்வு என்று வாதத்தைக் கையிலெடுத்தனர். இப்படுகொலைக்குப் பின் காந்தியடிகள் அமிர்தசரச் சென்று விசாரணை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.தம் விசாரணை அறிக்கையை காந்தியடிகள் வழங்கிய போது மேலும் பல அரசியல் வாதிகளின் தொடர்பும் கிடைத்தது. அவர்களும் அங்கிலேய அரசிடமிருந்து விடுதலை ஒன்றுதான் தீர்வு என்று தீர்மாணித்தனர். அமிர்தசரஸ் நிகழ்விற்குப்பின் காந்தியடிகள் டில்லியில் நடைபெற்ற முகமதியர் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் முகமதியர்கள் துருக்கியின் காலிபை ஆங்கிலேயர்கள் அடக்கியாள்வது குறித்து கவலையைத் தெரிவித்தனர். முகமதியர் காலிபுகளை முகமதுவின் வாரிசாகக் கருதினர். ஆங்கிலேயர்கள் முதலாம் உலகப் போரின் பின்பு அமைதியை நிலை நாட்ட இதுபோன்ற நடவடிக்கை தேவைப்பட்டது என்று விளக்கினர்.ஆனால் முகமதியர்கள் இவ்வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. காந்தியடிகளும் ஆங்கிலேயர்களின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார். காந்தியடிகள் ஆங்கிலேயர்கள் தொடர்ந்து காலிபுகளை அடக்கி ஆள முயன்றால் இந்திய முஸ்லிம்கள் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு அரசுப்பணிகளையும் வரிசெலுத்துவதையும் மறுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இங்கிலாந்தும்,துருக்கியும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டாலும் காந்தியடிகள் அமைதியாக இருக்கும்படியும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தினார். மற்ற தேசியவாத அரசியல் வாதிகளைப் போலல்லாமல், காந்தியடிகள் மாண்டேகு செமஸ் போர்டு பரிந்துரைகளுக்கு ஆதரவு தந்தார். இப்பரிந்துரைகள் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்துவதற்கு வழிகோலின. இறுதியில் காந்தியடிகளின் பெருமையினாலும், அவரைத் தவிர்த்து காங்கிரசால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்ற எண்ணத்தினாலும்,மாற்றுக் கருத்து கொண்ட அரசியல்வாதிகளும் இவருடன் ஒத்துப் போயினர். ஆங்கிலேயர்கள் முஸ்லிம் காலிப் பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதில் தீவிரமாக இருந்தனர்.அது போலவே அடக்குமுறைச் சட்டத்திற்கு அடிப்படையான ரெளலத் சட்டத்தை அமல்படுத்துவதிலும் தீவிரம் காட்டினர். இதனால் பொருமையிழந்த காந்தியடிகள்,1920 ஆம் வருடம் மேலை நாட்டுத் துணிகளையும்.அரசுப் பணிகளையும் துறந்து ஒத்துழையாமை இயக்கத்தை தீவிரப்படுத்தும் படி நாட்டு மக்களை வேண்டிக்கொண்டார். முன்னோடியாக, தாம் தென் ஆப்பிரிக்காவில் பூவர் போரில் புரிந்த சேவைக்காக பெற்ற பரிசுகளையும் பதக்கங்களையும்’ திருப்பிக் கொடித்தார். சுயாட்சி இயக்கத்தின் முதல் தலைவராகப் பொறுப் பேற்றுக் கொண்டதன் மூலம் இந்தியாவிற்கு விடுதலை தான் தீர்வு என்பதை அனைவரும் அறியும் வண்ணம் உணர்த்தினார்.

1920ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தியடிகள் சட்டங்களையும் அமைப்பு விதிகளையும் காங்கிரசுக்கு வகுத்துக் கொடுத்தார். இதன்படி தேசிய அளவில் இரண்டு குழுக்களும் அடிப்படையில் பல குழுக்களை அமைத்தும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவு திரட்டுவதற்கு ஏதுவாக வழியினை ஏற்படுத்திக் கொடுத்தார். காந்தியடிகளும் மற்ற தலைவர்களும் நாடு முழுவதும் பயணம் செய்து இந்த அடிப்படை அமைப்புகளுக்கு வலு சேர்த்தனர். இது மகத்தான வெற்றியை அளித்தது. காந்தியடிகளின் பெரும் புகழுக்கு பின்பு ஆங்கிலேய அரசின் வைஸ்ராய் ரீடிங் பிரபுவால் எந்த நடவடிக்கையையும் எதிராக எடுக்க முனையவில்லை.

1922 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கமாக உருப்பெற வேண்டுமென்று காந்தியடிகள் விரும்பினார். ஆங்கிலேய அதிகாரிகளை சாரிசாரி என்னும் நகரில் ஒரு வன்முறைக் கூட்டம் கொலை செய்ததைத் தொடர்ந்து ரிடிங் பிரபு காந்தியடிகளைக் கைது செய்யும் படி ஆணை பிறப்பித்தார். எப்பொழுதும் வன்முறையை ஏற்றுக்கொள்ளாத காந்தியடிகள் சாரிசாரி நிகழ்ச்சியைக் கண்டித்ததுடன் உண்ணா நோன்பையும், தொழுகையையும் மேற்கொண்டார். ஆனாலும் ஆங்கிலேயர்கள் இது வன்முறையை தூண்டும் என்று கருதி கைது செய்வதைத் தொடர்ந்தனர்.

பகுதி ஐந்து[தொகு]

ஆங்கிலேயர்கள் காந்தியடிகள் மீது தேசத் துரோகம் குற்றம் சாட்டி ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுத் தந்தனர். இந்தியாவில் குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல் முறையாகும். காந்தியடிகள் புகழினை நன்கு அறிந்திருந்த நீதிபதி புரூம்பீலடு கடுமையான தண்டனை வழங்குவதற்குத் தயங்கினார். காந்தியடிகள் குற்றம் புரிந்தார் என முடிவுக்கு வந்தார்.குற்றத்தை ஒப்புக்கொண்ட காந்தியடிகள் தமக்கு கடுமையான தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.குற்றத்தை ஒப்புக் கொள்வதும் தண்டனை அனுபவிப்பதும் தமது சத்தியாகிரகக் கொள்கையின் பாற்பட்டது.மேலும் தண்டனை அனுபவிப்பதும் தமது கொள்கையின் மீது கொண்ட ஈடுபாட்டை வலுப்படுத்தும் என்று நம்பினார்.சிறையில் அவருக்கு அதிகாரிகள் இராட்டை வைத்து நூல் நூற்கவும் படிப்பதற்குப் புத்தகங்களும் வைத்திருக்க அனுமதித்தனர். இச்சிறையில் இருக்கும் பொழுதுதான் தமது சுய வரலாறை எழுதினார். காந்தியடிகள் சிறையிலிருக்கும் பொழுது இந்தியர்கள் தம் அரசுப் பணிக்கு வழக்கம் போல் திரும்பினர்.மேலும் காந்தியடிகளின் விருப்பத்திற்கு மாறாக இந்துக்களுக்கும்,முகமதியர்களுக்கும் பகைமை தீவிரமடைந்தது. பல இடங்களில் வன்முறையும் நடந்தது. தமக்குள் ஒற்றுமையின்மையினால் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்தொய்வு ஏற்பட்டது.சாதியினாலும், மதத்தினாலும் ஒற்றுமையின்மை பரவலாக இருந்தது. ஆங்கிலேயர்கள் தொடர்ந்து அரசாட்சி செய்வதற்கான தார்மிகத்தை இழந்து விட்டதாகக் காந்தியடிகள் நம்பினார்.ஆனால் இங்கிலாந்து அரசைப் பலவீனப்படுத்தி இந்தியா விடுதலை பெறுவதை அவர் விரும்பவில்லை. இந்தியர்கள் விடுதலை பெறுவதற்கான தார்மிக அதிகாரம் பெற வேண்டும் என்று கருதினார்.பணிவு.அடக்கம், நன்னடத்தை, குழந்தைத் திருமண மறுப்பு போன்றவை குறித்து காந்தியடிகள் அறிவுறுத்தி நாட்டுமக்களிடம் விடுதலைக்கான தார்மிக அதிகாரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்.

குழந்தைத் திருமணம் போன்ற பல நிகழ்ச்சிகளில் தம் நிலையை பலமுறை மாற்றிக் கொண்டதை காந்தியடிகள் ஒப்புக் கொண்டுள்ளார். எல்லா வேளைகளிலும் சரியான தார்மிக வழியை தம்மால் கடைப்பிடிக்க முடியவில்லை என்றும் கூறுகிறார்.சிறைவாசம் முடிந்த பின் தமது சத்திய சோதனையத் தொடர்ந்தார். தம் ஆன்மாவில் அடங்கியிருக்கும் தீராத ஆவலின் அடிப்படையில் தொடர்ந்து பல சோதனைகள் செய்வதாகக் கூறி தமது சுயவரலாறை முடிக்கின்றார். தமது விருப்பங்களையும் புலன்களையும் கட்டுப்படுத்தி இக்கடுமையான பாதையைத் தொடர்ந்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து, வீடு போற்றை அடைவது தமது நோக்கம் என்று கூறி முடிக்கின்றார். தமது வாழ்வு ஒரு சுயசரிதை அல்ல,அது தம் வாழ்வில் நடத்திய சோதனைகளின் தொகுப்பே என்றும் கூறி முடிக்கின்றார்.

காந்தியடிகளின் மீது தாக்கம் ஏற்படுத்தியவை[தொகு]

தமது நூலில் காந்தியடிகள், லியோ டால்ச்டாய் எழுதிய ‘கடவுளின் அரசாங்கம் உன்னிடமே உள்ளது’ (The Kingdom of God is with in you) என்னும் நூலும், சான் இரச்க்கின் எழுதிய ‘கடையேனுக்கும் கடைத்தேற்றம்’ (Unto this Last) என்னும் நூலும், கவிஞர் ராய்சந்திராவின் ( Shrimad Rajchandra )தொடர்பும் தமது வாழ்வில் மிகப் பெறிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பதிவு செய்கிறார்.

பாகங்களும் பொருளடக்கமும்[தொகு]

மகாத்மா காந்தியடிகளின் சுயசரிதை ஆன சத்திய சோதனை நூலில் ஐந்து பாகங்கள் உள்ளன.

முதல் பாகத்தின் பொருளடக்கம்[தொகு]

  • 1. பிறப்பும் தாய்தந்தையரும்
  • 2. குழந்தைப் பருவம்
  • 3. குழந்தை மணம்
  • 4. கணவன் அதிகாரம்
  • 5. உயர்நிலைப் பள்ளியில்
  • 6. ஒரு துக்கமான சம்பவம்
  • 7. ஒரு துக்கமான சம்பவம் (தொடர்ச்சி)
  • 8. திருட்டும் பரிகாரமும்
  • 9. தந்தையின் மரணமும் என் இரு அவமானங்களும்
  • 10. சமய அறிவின் உதயம்
  • 11. இங்கிலாந்து போக ஆயத்தம்
  • 12. சாதிக் கட்டுப்பாடு
  • 13. முடிவாக லண்டனில்
  • 14. விரும்பி மேற்கொண்ட விரதம்
  • 15. ஆங்கில கணவனாக நடிப்பு
  • 16. மாறுதல்கள்
  • 17. உணவில் பரிசோதனைகள்
  • 18. கூச்சமே எனது பாதுகாப்பு
  • 19. பொய்ம்மை ரணம்
  • 20. சமயங்களுடன் தொடர்பு
  • 21. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை
  • 22. நாராயண ஹேமசந்திரர்
  • 23. மகத்தான கண்காட்சி
  • 24. பாரிஸ்டர் ஆனேன்;ஆனால் பிறகு?
  • 25. எனது சக்தியின்மை [11]

இரண்டாம் பாகத்தின் பொருளடக்கம்[தொகு]

1. ராய்ச்சந்திர பாய் 2. வாழ்க்கையைத் தொடங்கிய விதம் 3. முதல் வழக்கு 4. முதல் அதிர்ச்சி 5. ஆப்பிரிக்கா செல்ல ஏற்பாடு 6. நேட்டால் சேர்ந்தேன் 7. சில அனுபவங்கள் 8. பிரிட்டோரியாவுக்கு போகும் வழியில் 9. மேலும் துன்பங்கள் 10. பிரிட்டோரியாவில் முதல் நாள் 11. கிறிஸ்தவர்களுடன் தொடர்பு 12. இந்தியருடன் தொடர்பை நாடினேன் 13. கூலியாக இருப்பதன் துன்பம் 14. வழக்குக்கான தயாரிப்பு 15. சமய எண்ணத்தின் எழுச்சி 16. நான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தது 17. நேட்டாவில் குடியேறினேன் 18. நிறத் தடை 19 நேட்டால் இந்தியர் காங்கிரஸ் 20 பாலசுந்தரம் 21 மூன்று பவுன் வரி 22 பல மதங்களைக் குறித்து ஆராய்ச்சி 23 குடித்தனக்காரனாக 24 தாய்நாடு நோக்கி 25 இந்தியாவில் 26 இரு ஆர்வங்கள் 27 பம்பாய்க் கூட்டம் 28 புனாவும் சென்னையும் 29 விரைவில் திரும்புங்கள் [12]

மேற்கோள்கள்[தொகு]

  1. Johnson, edited by Richard L. (2006). Gandhi's experiments with truth : essential writings by and about Mahatma Gandhi. Lanham, MD: Lexington Books. p. 388. ISBN 978-0-7391-1143-7.
  2. "Spiritual books of the century". USA Today. 2 December 1999. http://www.usatoday.com/life/enter/books/book372.htm. 
  3. Desai, M. K. Gandhi. Transl. from the original Gujarati by Mahadev (1987). An autobiography : or the story of my experiments with truth (reprint. ). London [u.a.]: Penguin Books. பக். 454. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-006626-5 இம் மூலத்தில் இருந்து 2017-02-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170215121033/http://wikilivres.ca/wiki/An_Autobiography_or_The_Story_of_my_Experiments_with_Truth#Translator.27s_Preface. பார்த்த நாள்: 2016-06-24. 
  4. Johnson, edited by Richard L. (2006). Gandhi's experiments with truth : essential writings by and about Mahatma Gandhi. Lanham, MD: Lexington Books. பக். 388. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7391-1143-7. https://books.google.com/books?id=dRQcKsx-YgQC&pg=PA55&dq. 
  5. Desai, M. K. Gandhi. Transl. from the original Gujarati by Mahadev (1987). An autobiography : or the story of my experiments with truth (reprint. ed.). London [u.a.]: Penguin Books. p. 454. ISBN 978-0-14-006626-5.
  6. Men of Turmoil – Biographies by Leading Authorities of the Dominating Personalities of Our Day. Hesperides Press. 2007. பக். 384. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4067-3625-2. https://books.google.com/books?id=MT8pbR2r4rAC&pg=PA62&dq. 
  7. Post, Pitirim A. Sorokin ; introduction by Stephen G. (2002). The ways and power of love : types, factors, and techniques of moral transformation (Timeless classic pbk. ). Philadelphia: Templeton Foundation Press. பக். 552. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-890151-86-7. https://books.google.com/books?id=DGCleCxTkbIC&dq. 
  8. .Desai, M. K. Gandhi. Transl. from the original Gujarati by Mahadev (1987). An autobiography : or the story of my experiments with truth (reprint. ed.). London [u.a.]: Penguin Books. p. 454. ISBN 978-0-14-006626-5.
  9. Rudolph, Susanne Hoeber; R, Lloyd I. (1983). Gandhi : the traditional roots of charisma ([Pbk. ed.]. ). Chicago: University of Chicago Press. பக். 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-226-73136-0. https://books.google.com/books?id=g3Ac_HEZkcMC&dq=. 
  10. Narrain, Arvind (April 1, 2013). " """MY EXPERIMENTS WITH LAW": GANDHI’S EXPLORATION OF LAW’S POTENTIAL". NUJS Law Review. http://www.nujslawreview.org/pdf/articles/2013_2/04_arvind_narrain.pdf". பார்த்த நாள்: January 3, 2015. [தொடர்பிழந்த இணைப்பு]
  11. மகாத்மா காந்தியின் சுய சரிதை -நவஜீவன் பிரசுராலயம் - 44-வது மறுபதிப்பு - அக்டோபர் 2010
  12. மகாத்மா காந்தியின் சுயசரிதை சத்திய சோதனை- தமிழாக்கம் ரா.வேங்கடராஜீலு- நவஜீவன் பிரசுராலயம்- 44 மறுபதிப்பு - அக்டோபர் 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்திய_சோதனை_(நூல்)&oldid=3640956" இலிருந்து மீள்விக்கப்பட்டது