பூனா ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூனா ஒப்பந்தம் என்பது 1932ஆம் ஆண்டு செப்டம்பர் , 24அன்று பூனாவில் உள்ள எரவாடா சிறையில் அம்பேத்கருக்கும் காந்தி இடையே ஏற்பட்ட ஓர் உடன்படிக்கை ஆகும்.

வரலாறு[தொகு]

இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்திய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பை முடிவு செய்ய முற்பட்டபொழுது மக்கள் பிரதிநிதிகளுக்காக நடத்தப்படும் தேர்தலில் வகுப்புவாத பிரதிநிதித்துவம் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது இதில் ஆதிக்க சாதிப்பிரிவினர் ஐரோப்பியர் அஙிலோ இந்தியர்கள் என அனைத்து வகை மக்களுக்கும் தனி தொகுதிகள் வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது அதில் பட்டியலின மக்களுக்காகத் தனித் தொகுதிகளை அளிக்க பிரிட்டிசு அரசு முன் வந்தபோது இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட அம்பேத்கர் அந்தத் திட்டத்தை ஆதரித்தார். ஆனால் காந்தி அதைக் கடுமையாக எதிர்த்தார். இந்துக்கள் தீண்டத் தகாதவர்கள் என்றும் சாதி இந்துக்கள் என்றும் பிளவு படுவதைத் தாம் விரும்பவில்லை என்று கூறினார். எரவாடா சிறையில் இருந்த காந்தி அடிகள் 18-9-1932 இல் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார். காந்தி உடல் நிலை மோசமானதால் அந்த உண்ணாவிரதத்தை நிறுத்திக் காந்தியின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் அம்பேத்கரும் பிற இந்து தலைவர்களும் பூனாவில் கூடிப் பேசினர். இந்தியாவின் மிகச் சிறந்த தலைவராக விளங்கிய காந்தி அடிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஒரு புறம்; பட்டியலின சமூகத்தின் நலனைக் காக்க வேண்டிய பொறுப்பு மறுபுறம். எனவே இருதலைக் கொள்ளி நிலைமைக்கு அம்பேத்கர் ஆளானார்.

பூனா ஒப்பந்தத்தின் படி மாகாணச் சட்ட அவைகளில் 148 இடங்களைத் பட்டியலின தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிப்பது என்று முடிவு ஆனது. பிரிட்டிசு இந்தியாவில் மத்தியச் சட்ட அவையில் இந்துக்களுக்காக உள்ள மொத்த இடங்களில் பத்து விழுக்காட்டைத் பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது என்றும் தீர்மானித்தார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக அம்பேத்கரும், சாதி இந்துக்களின் சார்பாகப் பண்டித மதன் மோகன் மாளவியாவும் கையெழுத்து இட்டார்கள். இராசகோபாலாச்சாரி, இரட்டைமலை சீனிவாசன், இராசேந்திரப் பிரசாது, எம்.சி.இராஜா போன்ற தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர். இதனைத் தொடர்ந்து காந்தி உண்ணா நோன்பு போராட்டத்தைக் கைவிட்டார்.

ஒப்பந்த விளைவுகள்[தொகு]

பூனா ஒப்பந்தம் இந்தியா முழுவதும் உணர்ச்சி அலைகளை உண்டாக்கியது. அதன் விளைவு உலகெங்கும் எதிரொலித்தது. பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் அம்பேத்கரைத் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் என்று எல்லாரும் ஏற்றுக் கொண்டனர். இந்தப் புதிய ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் சில கோரிக்கைகளை விட்டுக் கொடுக்க நேரிட்டது.

அவ்வமயம் சோவியத்து ரசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பெரியார் ஈ வே ரா 'ஒப்பந்தத்தில் கையொப்பமிடுதல் தற்கொலைக்கு ஒப்பானது.கையொப்பம் இடாதீர்கள்' எனத் தந்தி மூலம் அம்பேத்கருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனா_ஒப்பந்தம்&oldid=3678065" இலிருந்து மீள்விக்கப்பட்டது