திதிஹாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திதிஹாத் (Didihat) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் பிதௌரகட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[1]  இது பிதௌரகட் மாவட்டத்தின் பதினொரு நிர்வாக துணைப்பிரிவுகளில் ஒன்றாகும். மேலும் அதன் நிர்வாக தலைமையகமாகவும் செயற்படுகின்றது.[2] இந்த நகரம் 6522 மக்கட் தொகையை கொண்டுள்ளது. திதிஹாத் மாநில தலைநகர் தெஹ்ராதுனில் இருந்து 520 கிமீ (320 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[3]

வரலாறு[தொகு]

இன்றைய திதிஹாத் பகுதி வரலாற்று ரீதியாக சிராகோட்டின் நிலப்பிரபுத்துவ ராய்கா மல்லா மன்னர்களால் ஆளப்பட்டது. மலாய் நாத்தின் பண்டைய ஷிரகோட் கோயில் ராய்கா மன்னர்களால் கட்டப்பட்டது. ஹரி மல்லா மன்னரின் காலம் வரை இந்த பகுதி நேபாளத்தின் டோட்டி இராச்சியத்தின் கீழ் இருந்தது. பின்னர் கி.பி 1581 இல் சந்த் வம்ச ஆட்சியாளர் ருத்ரா சந்தின் காலத்தில் இப்பகுதி சந்த் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.[4] இன்றும் திதிஹாட்டில் பண்டைய கோட்டை மற்றும் கோயில்களின் எச்சங்கள் சில உள்ளன.

1947 ஆம் ஆண்டில் ஐக்கிய மாகாணங்களின் அல்மோரா மாவட்டத்தில் திதிஹாத் தெஹ்ஸிலாக இருந்தது. இந்தியா பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின் திதிஹாத் தெஹ்ஸிலும், அல்மோரா மாவட்டத்தின் பிற வடகிழக்கு பகுதிகளும் 1960 இல் புதிதாக உருவாக்கப்பட்ட பிதௌகரட் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டன.[5] 2001-2011 ஆம் ஆண்டுகளில் 298 கிராமங்களை திதிஹாட் தெஹ்ஸிலிலிருந்து மாற்றுவதன் மூலம் புதிய தெஹ்ஸிலான பெரினாக் உருவாக்கப்பட்டது.

புவியியல்[தொகு]

திதிஹாட் 29.97 ° வடக்கு 80.15 ° கிழக்கு இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் பிதௌகரட் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1,725 ​​மீ (5,659 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இது மாவட்ட தலைமையக பிதௌகரடிலிருந்து 54 கி.மீ (34 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.  இந்நகர் 4 கிமீ 2 (1.5 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கட்தொகை கொண்ட அருகிலுள்ள நகரமான ஹால்ட்வானி (252 கிமீ (157 மைல்) தூரத்திலும், ஐந்து லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கட்தொகை கொண்ட அருகிலுள்ள நகரமான பரேலி 285 கிமீ (177 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய சனத் தொகை கணக்கெடுப்பின்படி திதிஹாத் நகர் பஞ்சாயத்தின் சனத் தொகை 6,522 ஆகும். திதிஹாத் மக்களின் கல்வியறிவு விகிதம் 91.03% ஆகும். ஆண்களின் கல்வியறிவு 95.20% வீதமாகவும், பெண்களின் கல்வியிறிவு 86.44% வீதமாகவும் காணப்படுகின்றது. 2011 ஆம் ஆண்டில் திதிஹாத்தில் 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது. திதிஹாத்தின் பூர்வீக குடியினர் குமாவோனிஸ் மக்கள் ஆவார்கள். மக்கட்தொகையில் சுமார் 20.55% வீதமானோர் பட்டியல் சாதியினரைச் சேர்ந்தவர்கள்.[6]

பொருளாதாரம்[தொகு]

திதிஹாத் பாரம்பரியமாக அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள் வாரத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்கள் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வரும் இடமாக இருந்தது.[7] திபெத்தில் இருந்து எடுத்து வரப்படும் கம்பளி மற்றும் உப்பு என்பன தானியங்களுக்காக பண்டமாற்று செய்யப்பட்டன.[7] "குமாவோன் பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகம்" இங்கு வாழும் பட்டியல் பழங்குடியினரின் பொருளாதார வளர்ச்சிக்காக திதிஹாத்தில் ஒரு "நிலவிரிப்பு மையம்", "போர்வை உற்பத்தி மையம்" மற்றும் "கம்பளி உற்பத்தி மற்றும் விற்பனை மையம்" ஆகியவற்றை நிறுவியது.[8]

சான்றுகள்[தொகு]

  1. "District Nagar Panchayat, Nagar Panchayats in Uttarakhand" (PDF).
  2. "District Profile: District of Pithoragarh, Uttarakhand, India".
  3. "District Census Handbook Pithoragarh Part-A" (PDF).
  4. Rawat, Ajay Singh. Forest Management in Kumaon Himalaya: Struggle of the Marginalised People. Indus Publishing. p. 30. ISBN 9788173871016.
  5. Aggarwal, J. C.; Agrawal, S. P. Uttarakhand: Past, Present, and Future. Concept Publishing Company. p. 331. ISBN 9788170225720.
  6. "District Census Handbook: Series 21, Uttar Pradesh".
  7. 7.0 7.1 "Kailash Manasarovar: A Sacred Journey".
  8. "Tribal Development in India: Programmes and Perspectives".
"https://ta.wikipedia.org/w/index.php?title=திதிஹாத்&oldid=3603932" இருந்து மீள்விக்கப்பட்டது