சண்டி தேவி கோயில், அரித்துவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சண்டி தேவி கோயில், அரித்துவார்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Uttarakhand" does not exist.
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தராகண்டம்
மாவட்டம்:அரித்துவார்
அமைவு:அரித்துவார்
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:ஆதி சங்கரர்

சண்டி தேவி கோயில் (Chandi Devi Temple) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள புனித நகரமான அரித்துவாரில் சண்டி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்து ஆலயமாகும். இமயமலையின் தென்கோடி மலைத் தொடரான சிவாலிக் மலைகளின் கிழக்கு உச்சியில் நீல பர்வத்தின் மேல் இக்கோயில் அமைந்துள்ளது. சண்டி தேவி கோயில் 1929 இல் காஷ்மீர் மன்னராக இருந்த சுசத் சிங் என்பவரால் கட்டப்பட்டது. இருப்பினும், கோவிலில் உள்ள சண்டி தேவியின் முக்கிய மூர்த்தி 8 ஆம் நூற்றாண்டில் இந்து மதத்தின் மிகப் பெரிய துறவிகளில் ஒருவரான ஆதி சங்கரரால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.[1] நீல பர்வத தீர்த்தம் என்றும் அழைக்கப்படும் இந்த கோயில் அரித்துவாரில் அமைந்துள்ள பஞ்ச தீர்த்தங்களில் ஒன்றாகும்.

சண்டி தேவி கோயில் சித்தர் பீடமாக பக்தர்களால் மிகவும் போற்றப்படுகிறது. இது விருப்பங்கள் நிறைவேறும் வழிபாட்டு தலமாகும். அரித்துவாரில் அமைந்துள்ள மூன்று பீடங்களில் இதுவும் ஒன்று. மானசா தேவி கோயிலும், மாயா தேவி கோயிலும் மற்ற இரண்டு இடங்களாகும் .

சண்டி தேவி[தொகு]

திரிசூலம் சண்டி பகார், அரித்துவார். ஏப்ரல் 1814.

சாமுண்டி என்றும் அழைக்கப்படும் சண்டி தேவி கோயிலின் முதன்மை தெய்வம். சாமுண்டியின் தோற்றம் பற்றிய கதை பின்வருமாறு: நீண்ட காலத்திற்கு முன்பு, அசுரர்களான சும்பன் - நிசும்பன் ஆகிய் ஐருவரும் தேவலோகத்தின் தலைவனான இந்திரனின் இராச்சியத்தைக் கைப்பற்றி, சொர்க்கத்திலிருந்து தேவர்களைத் துரத்தி அடித்தனர். தேவர்களின் தீவிர பிரார்த்தனைக்குப் பிறகு, தீமைகளை அழிக்க வெளிப்பட்ட பார்வதியின் சக்திவாய்ந்த, திகிலூட்டும் வடிவப் பெண்ணான அவளது அழகைக் கண்டு வியந்த சும்பன் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அந்தப் பெண் அரக்கனை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், சும்பன் அவளைக் கொல்ல சந்தன்-முண்டன் என்ற ஒரு அரக்கர்களை அனுப்பினான். பார்வதியின் கோபத்தால் உருவான சாமுண்டி தேவியால் அவர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் சும்பனும் நிசும்பனும் கூட்டாக சாமுண்டியைக் கொல்ல முயன்றனர். ஆனால் அதற்குப் பதிலாக தேவியால் கொல்லப்பட்டனர். அதன்பிறகு, சாமுண்டி நீல பர்வதத்தின் உச்சியில் சிறிது நேரம் ஓய்வெடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் புராணத்திற்கு சாட்சியாக ஒரு கோயில் கட்டப்பட்டது. மேலும், மலைத்தொடரில் அமைந்துள்ள இரண்டு சிகரங்கள் சும்பன்- நிசும்பன் என்றும் அழைக்கப்படுகின்றன. [2]

கோவில்[தொகு]

இடது: கயிறு வழி சேவை நிலையத்தின் நுழைவு வாயில். வலது: கயிறு வழி சேவையில் பயணம் செய்யும் பக்தர்கள்

ஹரனின் படித்துறையிலிருந்து 4 கிலோமீட்டர் (2.5 மைல்) தொலைவில் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை அடைய ஒருவர் மலையேற்றப் பாதையில் செல்ல வேண்டும் அல்லது கயிறு வழி சேவையில் சவாரி செய்ய வேண்டும். "சண்டிதேவி தேவி உடன்கடோலா" என்று அழைக்கப்படும் கயிறு வழி சேவை யாத்ரீகர்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது அருகில் உள்ள மான்சா தேவி ஆலயத்திற்கும் யாத்ரீகர்களுக்கு உதவுகிறது. இது யாத்ரீகர்களை நசிபாபாத் சாலையில் கௌரி சங்கர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள நிலையத்திலிருந்து நேரடியாக 2,900 மீட்டர் (9,500 அடி) உயரத்தில் அமைந்துள்ள சண்டி தேவி கோயிலுக்கு அழைத்துச் செல்கிறது. இந்தப் பாதையின் மொத்த நீளம் சுமார் 740 மீட்டரும் (2,430 அடி), 208 மீட்டர் (682 அடி) உயரமுமாகும். இது கங்கை ஆறு, அரித்துவாரின் சமவெளிகளின் காட்சிகளை வழங்குகிறது.

கோவிலின் தலைமை பூசாரியாக இருக்கும் மகந்த் என்பவரால் இந்த கோவில் நடத்தப்படுகிறது. சாதாரண நாட்களில் காலை 6.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். மேலும் கோயிலில் காலை 5.30 மணிக்கு ஆரத்தி தொடங்குகிறது. கோவில் வளாகத்தில் தோல் அணிகலன்களும், அசைவ உணவுகளும், மதுபானங்களும் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

முக்கியத்துவம்[தொகு]

இக்கோயில் இந்தியாவின் மிகப் பழமையான கோவில்களில் ஒன்றாகும். குறிப்பாக சண்டி சௌதாஸ், நவராத்திரி திருவிழாக்கள், அரித்துவாரில் நடக்கும் கும்பமேளா ஆகியவற்றின் போது, தெய்வங்களின் ஆசீர்வாதத்த்தால் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதாக நம்பி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். அரித்துவார் செல்லும் யாத்ரீகர்கள் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஆலயம் இது. [3]

பிற சண்டி தேவி கோவில்கள்[தொகு]

புகைப்படத் தொகுப்பு[தொகு]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Chandi Devi Temple". Mapsofindia.com.
  2. "Chandi Devi Temple". Blessingsonthenet.com. 11 February 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  3. "Places to visit in and around Haridwar". Zeenews.com. 29 January 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 February 2010 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

https://www.techereview.in/chandidevi/ பரணிடப்பட்டது 2021-05-08 at the வந்தவழி இயந்திரம்