நந்தாதேவி உயிர்க்கோளக் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நந்தாதேவி உயிர்க்கோளக் காப்பகம் (Nandadevi Biosphere Reserve) இந்தியாவின் வடக்கு எல்லையான இமயமலையின் உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் பகுதியில் அமைந்துள்ளது. 1988ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. நந்தா தேவி தேசியப் பூங்கா மற்றும் உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றான மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா ஆகியவற்றை மையமண்டலங்களாக உள்ளடக்கி 5860 ச.கி.மீட்டரில் பரவியுள்ளது. இந்தியாவில் உயிர்ப்புவியியல் மண்டலங்களில் இமயமலை மண்டலத்தில் இக்காப்பகம் காணப்படுகிறது. உலகப் பாரம்பரியப் பகுதியாக 1992ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

நந்தாதேவி சிகரம் உட்பட தானகிரி, சங்பேங், திரிசூல் போன்ற பலசிகரங்கள் இங்கே காணப்படுகின்றன. உத்ராஞ்சல் மாநிலத்தின் சமோலி, பித்தரோகார் மற்றும் பாகேஸ்வர் போன்ற மாவட்டங்களில் இக்காப்பகம் பரவியுள்ளது. கார்வால் இமயமலைப் பகுதியில் உள்ள சமோலி மாவட்டத்தில் காப்பகத்தின் முக்கியப் பகுதிகள் பரவியுள்ளன. மக்கள் பொதுவாக விறகு, தீவனம், மரதடி மற்றும் இலைகளுக்காக இக்காப்பகத்தைச் சார்ந்துளளனர். பாரம்பரிய மருத்துவ முறைகளில் பல மூலிகை தாவரங்கள் பயன்படுகின்றன.நந்தா தேவி தேசியப் பூங்கா அதன் எளிதில் அடையமுடியாத தன்மை காரணமாக அப்படியே பாதுகாக்கப்படுகிறது.பூப்பள்ளத்தாக்கு தேசியப்பூங்கா அதன் தனித்தன்மையுடைய ஆல்பைன் மலர்கள் நிறைந்த மலர்ப்படுகை காரணமாக மிகச்சிறப்பான இயற்கை அழகுடன் விளங்குகிறது. [1]

தாவரங்கள்[தொகு]

வெப்பமண்டலக்காடு, பகுதி உயர்மலைக்காடு, உயர்மலைக்காடு மற்றும் பனிபடர்ந்த பல காடுவகைகளை உள்ளடக்கிய இக்காப்பகத்தில் இந்திய தாவரவியல் ஆய்வுத்துறையால் 800 தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

விலங்குகள்[தொகு]

இந்திய விலங்கியல் ஆய்வுத்துறை மற்றும் பிற ஆராய்ச்சியாளர்களால் 18 வகையான பாலூட்டிகளில் 7 இனங்களும், 200 வகை பறவைகளில் 8 இனங்களும் அழியும் தருவாயில் உள்ள விலங்கினங்கள் இங்கு உள்ளன. பனிச்சிறுத்தை, கருங்கரடி, கஸ்தூரிமான் மற்றும் இமாலய வரையாடு போன்ற பாலூட்டிகள் காணப்படுகின்றன.[2]

மக்கள்[தொகு]

இக்காப்பகத்தில் ஏழ்மையான மக்களே வாழ்ந்து வருகின்றனர். நகரங்களிலிருந்து வெகுதொலைவில் வாழ்வதால் கல்வியறிவு விகிதம் மிகக் குறைவாகவும் சொந்தமாக நிலம் வைத்திருப்போர்கள் குறைவாகவும் உள்ளனர். அவர்களுக்கென்று தனித்த கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மத நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். வேளாண்மையும் ஆடுவளர்ப்பும் முக்கிய தொழில்களாகும். புதியா பழங்குடியினர் 1962ஆம் ஆண்டுக்கு முன்னர் திபெத்தியர்களுடன் பண்டமாற்று வியாபார முறையில் சிறந்து விளங்கினர்.[3]

அச்சுறுத்தல்[தொகு]

மருத்துவத்திற்காக அழிந்து வரும் தாவர இனங்களை மிகுதியாக பயன்படுத்துதல், காட்டுத்தீ, வேட்டையாடுதல் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வருகை போன்றவை இச்சூழலமைப்பிற்கு அச்சுறுத்தல்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.unesco.org/mabdb/br/brdir/directory/biores.asp?mode=all&code=IND+04
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-08-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-04-09 அன்று பார்க்கப்பட்டது.
  3. "BIOSPHERE RESERVES OF INDIA". 2011-08-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 10, 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]