ஜமுய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜமுய் என்பது இந்திய மாநிலமான பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது ஜமுய் மாவட்டத்தின் மாவட்ட தலைமையகம் ஆகும். 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று முங்கேர் மாவட்டத்தில் இருந்து பிரிந்ததன் பின்னர் ஜமுய் ஒரு மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

மகாபாரத போரின் காலத்திலிருந்து ஜமுயின் வரலாற்று இருப்பு அறியப்படுகின்றது. தொல்பொருள் மற்றும் வரலாற்று சான்றுகள் சமண பாரம்பரியத்துடன் அதன் நெருங்கிய நீண்ட காலமாக தொடர்பைக் காட்டுகின்றன. இந்த பகுதியின் பெரும்பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது.

சொற்பிறப்பியல்[தொகு]

ஜமுய் மாவட்டத்தின் பெயரின் தோற்றம் குறித்து வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்பட்ட இரண்டு முக்கிய கருதுகோள்கள் காணப்படுகின்றன. முதல் கருதுகோளின்படி வர்தமான் மகாவீராவின் 'சர்வ விஞ்ஞானம்' (கெவாலா ஞானத்தை) அடைவதற்கான இடமான "ஜம்பியா கிராம்" அல்லது "ஜ்ரிபிகிராம்" கிராமத்திலிருந்து ஜமுயின் பெயர் உருவானது என்று கருதப்படுகின்றது. மற்றொரு கருதுகோளின்படி ஜமுய் என்ற பெயர் ஜம்புவானியில் இருந்து உருவானது என்று நம்பப்படுகின்றது.

புவியியல்[தொகு]

ஜமுய் நகரம் 24.92 ° வடக்கு 86.22 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] இது சராசரியாக 78 மீட்டர் (255 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது.

டெல்லி-ஹவுரா இரயில் பாதை மலாய்பூரில் இருந்து 3 கிலோமீற்றர் (1.9 மைல்) தொலைவில் உள்ளது. (மலாய்பூர் ரயில் நிலையம் ஜமுய் ரயில் நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது) ஜமுய் நாட்டின் பிற பகுதிகளுடன் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் விமான நிலையம் சுமார் 161 கிலோமீற்றர் (100 மைல்) தொலைவிலும், கயா விமான நிலையம் 136 கிலோமீற்றர் (85 மைல்) தொலைவில் உள்ளது.

பீகார்-ஜார்கண்ட் எல்லையில் அமைந்துள்ள ஜமுய் மலைகளால் சூழப்பட்டுள்ளது. 17 கிலோமீட்டர் (11 மைல்) தொலைவில் அமைந்துள்ள கிதவ்ர் நகரம் பிரித்தானிய ஆட்சியின் போது மன்னர்களின் இடமாக இருந்தது. அக் காலத்தில் இருந்த பல கட்டிடங்கள் இன்றும் உள்ளன. கிடாரில் உள்ள மிண்டோ டவர் அந்தக் காலத்திலிருந்து கட்டிடக்கலைக்கு ஒரு பிரதான எடுத்துக்காட்டு ஆகும். சமண மதத்தின் தோற்றம் தொடர்பான பல இடங்களைக் கொண்டிருப்பதற்காக ஜமுய் மாவட்டம் அறியப்படுகிறது.

மைக்கா, நிலக்கரி, தங்கம் மற்றும் இரும்புத் தாது உள்ளிட்ட வளங்களை இந்த மாவட்டம் பயன்படுத்தவில்லை.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி ஜமுய் நகரத்தின் மக்கட் தொகை 87,357 ஆகும். மொத்த மக்கட் தொகையில் ஆண்கள் 52.6% வீதமும், பெண்கள் 47.26% வீதமும் உள்ளனர். 1000 ஆண்களுக்கு 912 பெண்கள் என்ற பாலின விகிதத்தைக் கொண்டுள்ளது. ஜமுய் நகர சராசரி கல்வியறிவு விகிதம் 64.33% ஆகும். தேசிய சராசரியான 74.04% ஐ விடக் குறைவாகும். ஆண்களின் கல்வியறிவு 57.39% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 42.6% வீதமாகவும் காணப்படுகின்றது. ஜமுயின் மொத்த மக்கட் தொகையில் 16.22% வீதமானோர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.[2]

பொருளாதாரம்[தொகு]

2006 ஆம் ஆண்டில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் இந்திய நாட்டின் 640 மாவட்டங்களில் 250 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக ஜமுய் மாவட்டத்தை அறிவித்தது. தற்போது பின்தங்கிய பிராந்திய மானிய நிதி திட்டத்திலிருந்து (பி.ஆர்.ஜி.எஃப்) நிதிபெறும் பீகாரில் உள்ள 36 மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maps, Weather, and Airports for Jamui, India". www.fallingrain.com. 2019-12-02 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Census of India".
  3. "Wayback Machine" (PDF). web.archive.org. 2012-04-05. Archived from the original on 2012-04-05. 2019-12-02 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமுய்&oldid=3529947" இருந்து மீள்விக்கப்பட்டது