அசிட்டிக் காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எத்தனாயிக் காடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அசிட்டிக் காடி
Skeletal structure
Skeletal structure
Flat structure
Flat structure
Ball-and-stick model
Ball-and-stick model
Space-filling model
Space-filling model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
Acetic acid
அசிட்டிக் காடி
முறையான ஐயூபிஏசி பெயர்
Ethanoic acid
எத்தனோயிக் காடி
வேறு பெயர்கள்
அசிட்டைல் ஐதராக்சைடு
Acetyl hydroxide (AcOH), ஐதரசன் அசிட்டேட்
Hydrogen acetate (HAc), எத்தில்லிக் காடி
Ethylic acid, மெத்தேன்கார்பாக்சைலிக் காடி
Methanecarboxylic acid
இனங்காட்டிகள்
64-19-7 N
ChemSpider 171
InChI
  • InChI=1/C2H4O2/c1-2(3)4/h1H3,(H,3,4)/f/h3H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 176
SMILES
  • CC(=O)O
பண்புகள்
C2H4O2
வாய்ப்பாட்டு எடை 60.05 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.049 g/cm3 (l)
1.266 g/cm3 (திண்மங்கள்)
உருகுநிலை 16.5 °C (61.7 °F; 289.6 K)
கொதிநிலை 118.1 °C (244.6 °F; 391.2 K)
முழுக்க கலக்கவல்லது
காடித்தன்மை எண் (pKa) 4.76 at 25 °C
பிசுக்குமை 1.22 mPa·s at 25 °C
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.74 D (வளிமம்)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு அரிக்கும் தன்மை (C)
தீபற்றக்கூடியது (F)
R-சொற்றொடர்கள் R10, R35
S-சொற்றொடர்கள் (S1/2), S23, S26, S45
தீப்பற்றும் வெப்பநிலை 43 °C
Lethal dose or concentration (LD, LC):
3310 மிகி/கிகி (mg/kg), வாய்வழி (எலி)
தொடர்புடைய சேர்மங்கள்
கார்பாக்சைலிக் காடிகள்
தொடர்புடையவை
பார்மிக் காடி
புரோப்பியானிக் காடி
தொடர்புடைய சேர்மங்கள் அசிட்டாமைடு, எத்தில் அசிட்டேட், அசிட்டைல் குளோரைடு, அசிட்டிக் ஆனைதரைடு, அசிட்டோநைட்ரைல், அசெட்டால்டிஃகைடு, எத்தனால், தியோஅசிட்டிக் காடி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அசிட்டிக் காடி (இலங்கை வழக்கு: அசற்றிக்கு அமிலம் - Acetic acid), CH3COOH என்னும் வேதியியல் வாய்பாடு கொண்ட, ஒரு கரிமக் காடி (organic acid). இது எத்தனாயிக் காடி அல்லது அசிட்டிக் அமிலம் என்றும் அழைக்கப்படும். இது கடல் நீரிலும், எண்ணெய்க் கிணறுதோண்டும் இடங்களில் காணப்படும் உவர்நீரிலும் (brine), மிகச்சிறிதளவு மழைநீரிலும், இம்மியப் பொருளாக நிலைத்திணை, உயிரினங்களின் உடலில் காணப்படும் நீர்மப்பொருளிலும் காணப்படுகின்றது. உயிரிகளின் உடலியக்கத்தில், இன்றியமையாத ஆற்றல் கடத்துமுறைகளில்(energy pathways) இது பயன்படுகின்றது [1]. அசிட்டிக் காடி நாவில் எரியும் உணர்வும், சுருக்கென்று மூக்கைத் துளைக்கும் கடுமையான நெடியும் கொண்ட நிறமற்ற ஒரு நீர்மம். மேற்குலக வாழ்க்கையில் பொதுவாக வீடுகளில் பயன்படும் வினிகர்(vinegar) எனப்படும் ஒருவகைப் புளிமத்தன்மை உடைய சாராயம் போன்ற பொருளின் புளிப்புத்தன்மைக்கும், கடுமையான நெடிக்கும், அதில் உள்ள இந்த அசிட்டிக் காடியே காரணம். பழம் அல்லது காய்கறிகளின் சாற்றைஇ நொதிக்க விட்டால் அதிலிருந்து பெறும் 2-10% அசிட்டிக் காடி கொண்ட நீர்மத்தை வினிகர் என்பர். நீரற்ற தூய அசிட்டிக் காடி (இதனை "கிளேசியல் அசிட்டிக் காடி" என்றும் அழைப்பர்) நிறமற்ற நீர்மம்; இது சுற்றுப்புறத்தில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து நீரை உறிஞ்சிக்கொள்ளும். அசிட்டிக் காடி 16.7 °C (62 °F) இல் நிறமற்றப் படிகமாக உறைந்து திண்மமாகும். இது மென்வலுவான காடி, அதாவது நீரில் குறைந்த அளவே பிரிவுற்றுக் கரைந்து காடித்தன்மை தரும் பொருள்.

கார்பாக்சைலிக் காடி (carboxylic acid) என்னும் வகையான காடிகளைச் சேர்ந்த இது அவற்றில் மிகவும் எளிய ஒரு காடி. இது தொழிலகங்களில் பயன்படும் ஒரு முக்கியமான வேதிப்பொருள். பலவகையான சாராயமல்லா நீர்ம குடியுணவுகள் விற்கப்படும் கொள்கலன்கள் (புட்டிகள், பாட்டில்கள்) செய்வதில் பயன்படும் பாலியெத்திலீன் டெரெப்தாலேட் (polyethylene terephthalate) என்னும் பொருளைச் செய்ய இது பயன்படுகின்றது. வீடுகளில் படிவுகள், கறைகளை நீக்கப் பயன்படுகின்றது. விற்கப்படும் உணவுப்பொருள்களில் இது காடித்தன்மையைக் கட்டுப்படுத்தும் E260 என்னும் எண் கொண்ட ஓர் உணவு சேர்ப்பியாகப் பயன் படுகின்றது

உலகளவில் ஆண்டுதோறும் அசிட்டிக் காடி 6.5 மில்லியன் டன் படைக்கப்படுகின்றது. இதில் 1.5 மில்லியன் டன் மீள்பயன்பாட்டின் வழி உருவாக்கப் பெறுகின்றது. மீதமுள்ளது எரியெண்ணெய் வேதிப்பொருள் (பெட்ரோகெமிக்கல்) தொழில்வழியாகவும் பிற உயிர்வேதியியல் முறைகளின் வழியாகவும் படைக்கப்படுகின்றது. வினிகர் எனப்படும் நீர்த்த அசிட்டிக் காடியை இயற்கையான நொதிப்பின் வழி படைக்கப்படுகின்றது

கலைச்சொல்லாட்சி[தொகு]

பொதுப் பெயராகிய அசிட்டிக் காடி எனபதே தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியத்தின் (ஐயுபிஏசி, IUPAC)யின் ஏற்புபெற்ற சொல்லாகப் பயன்படுகின்றது. அசிட்டிக் காடி என்பதில் உள்ள அசிட்டிக் என்னும் சொற்பகுதி புளிக்கும் பொருளாகிய வினிகர் (vinegar) என்பதற்கான இலத்தீன் மொழிச்சொல் அசிட்டம் (acetum) என்பதில் இருந்து வருவது. காடி என்பதன் மறு பெயரான புளிமம் என்னும் சொல்லுக்கு ஈடான ஆசிட் (acid) என்னும் ஆங்கிலச் சொல்லும் இதே அசிட்டம் என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து வருவதே. தமிழில் காடி என்றாலும் புளிக்கும் பொருளே.

அசிட்டிக் காடிக்கு ஈடாகப் பயன்படும் மாற்றுச் சொல்லாகிய எத்தனாயிக் காடி என்பது கரிம வேதியியலில் வழங்கும் முறையான பெயர்.

அசிட்டிக் காடியின் ஏற்புபெற்ற சுருக்கெழுத்துகள் AcOH அல்லது 'HOAc என்பனவாகும். இவற்றில் Ac என்பது அசிட்டைல் (acetyl) எனப்படும் வேதியியல் தொழிற்படும் CH3−C(=O)− என்னும் குழுவின் பெயர். காடி-கார வினைகளில் HAc என்னும் சுருக்கெழுத்து பயன்படும், இதில் Ac என்னும் எழுத்துகள் அசிட்டேட் எதிர்ம மின்மி (anion) (CH3COO)ஐச் சுட்டும். இது குழப்பம் தர வாய்ப்புள்ளதால், எதிர்ப்பு உள்ளது. மேலும் Ac என்பது ஆக்டினியம் (actinium) என்னும் தனிமத்துடனும் குழப்பம் தர வாய்ப்புள்ளது.

அசிட்டிக் காடியின் வேதியியல் விகித வாய்பாடு CH2O என்பதாகும் (அதாவது ஒரு கரிம அணுவுக்கு ஒரு ஆக்சிசன் அணுவும், இரண்டு ஐதரசன் அணுகளும் உள்ளன). இதில் சோடியம் அசிட்டேட் போன்ற உப்புகளை உருவாக வினையுறும் ஐதரசன் இயக்கத்தை வலியுறுத்த இந்த வேதியியல் வாய்பாட்டை C2H4O2 என்றோ HC2H3O2. எழுதுவர் [2] அசிட்டிக் காடியின் கட்டமைப்பை விளக்கிக் காட்ட இது CH3-CO2-H என்றோ, CH3COOH என்றோ, CH3CO2H என்றோ எழுதிக்காட்டுவர். அசிட்டிக் காடியில் இருந்து H+ ("நேர்மின்னி" அல்லது "புரோட்டான்") இழந்து உருவாகுவது எதிர்ம மின்மி அசிட்டேட். அசிட்டேட் ஏன்னும் பெயர் இந்த எதிர்ம மின்மி உள்ள உப்பைக் குறிக்கும் அல்லது அசிட்டிக் காடியின் எசுத்தர் (ester) ஐக் குறிக்கும்.

வரலாறு[தொகு]

படிகமான அசிட்டிக் காடி

வினீகர் என்பது திராட்சைக் கள் சாராயம், "பீர்" போன்றவை திறந்து இருந்தால் (காற்று பட்டு) இயற்கையில் வினிகர் என்னும் பொருள் உருவாவதை பழங்காலம் இருந்தே அறிந்து வந்துள்ளனர். இது இயற்கையில் உள்ள அசிட்டிக் காடி உருவாக்கும் பாக்டீரியாவின் தொழிற்பாட்டால் என்றும் இன்று அறிகிறோம்

பயன்பாடுகள்[தொகு]

செய்முறை ஆய்வகங்களில் காணப்படும் 2.5-லிட்டர் அசிட்டிக் காடி புட்டி (பாட்டில்)

அசிட்டிக் காடி பலவகையான வேதிப்பொருள்கள் செய்யப் பயன்படும் வேதியியல் வினையுறும் பொருள். அசிட்டிக் காடியின் மிகப்பெரிய பயன்பாடு வைனைல் அசிட்டேட் ஒற்றையுரு (மோனொமர், monomer) செய்வது, அதற்கு அடுத்தாற்போல அசிட்டிக் அன்ஐதரைடு (acetic anhydride) செய்யவும், எசுட்டர்(அல்லது எசுத்தர்) (ester) செய்யவும் பயன்படுகின்றது. வினிகர் செய்யப்பயன்படும் அசிட்டிக் காடியின் கன அளவு மிகச்சிறிதளவே[3]

வைனைல் அசிட்டேட் ஒற்றையுரு[தொகு]

அசிட்டிக் காடியின் மிகப்பெரும் பயன்பாட்டு வைனைல் அசிட்டேட் ஒற்ரையுருக்களைச் (VAM) செய்வதாகும். இப்பயன்பாட்டுக்கு உலகில் படைக்கப்படும் அசிட்டிக் காடியில் ஏறத்தாழ 40% to 45% செலவிடப்படுகின்றது. இதற்கான வேதியியல் வினை பல்லேடியம் வினையூக்கியின் உதவியால் எத்திலீனும் அசிட்டிக் காடியும் ஆக்சிசனும் இயைந்து நிகழ்கின்றது.

2 H3C-COOH + 2 C2H4 + O2 → 2 H3C-CO-O-CH=CH2 + 2 H2O

வைனைல் அசிட்டேட், பாலீவைனைல் அசிட்டேட்டாக பல்லுருவாகின்றது (polymers); இது நிறச்சாயங்களிலும் (பெயின்ட்), ஒட்டுப்பசைகளிலும் பிற ஒட்டிகளிலும் (adhesive) பயன்படுகின்றது.

எசுத்தர் உற்பத்தி[தொகு]

அசிட்டிக் காடியின் பெருமுதலான எசுத்தர்கள் பரவலாக மை, நிறச்சாயம், பல்வேறு பூச்சுகள் ஆகியவற்றுக்கான கரைபான்களில் பயன்படுகின்றன.எத்தைல் அசிட்டேட், என்-பியூட்டைல் அசிட்டேட், ஐசோபியூட்டைல் அசிட்டேட், புரோப்பைல் அசிட்டேட் ஆகியவை முக்கியமான எசித்தர்கள். இவை பொதுவாக ஒரு வினையூக்கியின் துணையுடன் அசிட்டிக் காடியும் எசுத்தருக்கான ஆல்க்ககாலும் (சாராயமும்) வேதியியல் வினைப்படும் பொழுது விளைபொருளாகக் கிடைக்கின்றன:

H3C-COOH + HO-R → H3C-CO-O-R + H2O
இதில் R = ஒரு பொது ஆல்க்கைல் குழு(alkyl group)

ஆனால் பெரும்பாலான எசுத்தர்கள் அசிட்டால்டிஃகைடில் (acetaldehyde) இருந்து டிசென்க்கோ வினை (Tishchenko reaction) எனப்படும் வேதியியல் வினையால் கிடைக்கின்றன. மேலும் ஈத்தர் அசிட்டேட்டுகள் நைட்ரோசெல்லுலோசு ஆக்ரலிக் நிறச்சாயம், வார்னிசு நீக்கி, மரச்சாயம் முதலியவற்றின் கரைப்பான்களகாகப் பயன்படுகின்றன. முதலில் எத்திலீன் ஆக்சைடு அல்லது புரோப்பிலீன் ஆக்சைடில் இருந்து கிளைக்கால் ஒற்றையீத்தர்கள் விளைவிக்கப்படுகின்றன, பின்னர் அவைஆசிட்டிக் காடியுடன் சேர்ந்து எசுத்தராக்கம் செய்யப்படுகின்றன. மூன்று முக்கிய விளைபொருள்களாவன: எத்திலீன் கிளைகால் மோனோயெத்தில் ஈத்தர் அசிட்டேட் (EEA), எத்திலீன் கிளைக்கால் மோனோபியூட்டைல் ஈத்தர் அசிட்டேட் (EBA), புரோப்பிலீன் கிளைக்கால் மோன்னோயெத்தில் ஈத்தர் அசிட்டேட் (PMA). இப்பயன்பாடுகளுக்காக உலகளவில் 15% முதல் 20% அசிட்டிக் காடி செலவாகின்றது. ஈத்தர் அசிட்டேட்டுகள், எடுத்துக்காட்டாக EEA, மாந்தர் இனப்பெருக்கத்துக்குக் கேடுவிளைவிக்கக் கூடியது[3].

அசிட்டிக் அன்ஐதரைடு (நீரற்ற அசிட்டிக்கு)[தொகு]

இரண்டு அசிட்டிக் காடி சேர்மங்கள் பிணைந்து நிகழும் பிணைவு வடிகை(condensation reaction) என்னும் வேதி வினையின்படி அசிட்டிக் நீரிலிஅல்லது நீரற்ற அசிட்டிக்கு உருவாகின்றது. இந்த பிணைவு வடிகை வேதி வினையின் வழி நீர் மூலக்கூறு விலகி வெளிப்படுவதால் இதனை "வடிகை" (இரண்டு அசிட்டிக் காடி சேர்மங்கள் பிணைவுறும் பொழுது ஏற்படும் நீர்வடிகை) என்கிறோம். நீரற்ற அசிட்டிக்கு (அசிட்டிக் அன்ஐதரைடு) படைப்பதற்காகப் பயன்படும் அசிட்டிக் காடி உலகளாவிய அளவில் அசிட்டிக் காடி உற்பத்தியில் ஏறத்தாழ 25% முதல் 30% ஆகும். அசிட்டிக் அன்ஐதரைடை அசிட்டிக் காடி இல்லாமலே மெத்தனால் கார்போனைல் ஆக்கம் என்னும் முறைப்படியும், காட்டிவா (Cativa) செய்முறைப்படியும் படைக்கமுடியும்.

இரண்டு அசிட்டிக் காடி சேர்மங்கள் பிணைந்து நிகழும் பிணைவு வடிகை முறைப்படி நீரற்ற அசிட்டிக்கு எனப்படும் அசிட்டிக் அன்ஐதரைடு உருவாகுதல். நீர் (H2O) தனியாகப் பிரிவதைப் படத்தில் காணலாம்.

அசிட்டிக் அன்ஐதரைடு வலுவான ஒரு அசிட்டைலாக்கும் கருவிப் பொருள். இதன் முதன்மையான பயன்பாடு செயற்கை நெசவாலைகளில் பயன்படும் செல்லுலோசு அசிட்டேட் என்னும் பொருளைச் செய்வதாகும். ஒளிப்படக்கலைத் துறையிலும் ஒளிப்படப் படலத்தில் (photographic film) இது பயன்படுத்தப்படுகின்றது. ஆசுப்பிரின் (aspirin), எரோயின் (heroin) முதலான மருந்துகள் செய்யவும் பிற சேர்மங்கள் உருவாக்கவும் அசிட்டிக் அன்ஐதரைடு பயன்படுகின்றது.

வினிகர்[தொகு]

அசிட்டிக் காடிக் கரைசல்கள் வினிகர் போன்ற பொருள்களில் 5% முதல் 18% வரை அதன் எடையில் இருக்கும். ஊறுகாய் செய்வதில் கெடாமல் இருக்க அசிட்டிக் காடி இருக்கும் வினிகர் பயன்படுத்தப் படுகின்றது. இது தவிர உணவில் காடித்தன்மை கூட்டவும் இது பயன்படுகின்றது. உலகளவில் வினிகரில் பயனாகும் அசிட்டிக் காடி அளவில் மிகச்சிறியது என்றாலும், பரவலாக அறிந்த பயன்பாடும், பழங்காலத்தில் இருந்தே அறிந்த பயன்பாடும் ஆகும்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Wagner Jr., Frank S, Acetic Acid, Kirk‑Othmer Encyclopedia of Chemical Technology, pp-115-136
  2. Akeroyd, F. Michael (1993). "Laudan's Problem Solving Model". The British Journal for the Philosophy of Science 44 (4): 785. doi:10.1093/bjps/44.4.785. https://archive.org/details/sim_british-journal-for-the-philosophy-of-science_1993-12_44_4/page/785. 
  3. 3.0 3.1 Suresh, Bala (2003), "Acetic Acid", Chemicals Economic Handbook, SRI International, p. 602.5000
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டிக்_காடி&oldid=3520996" இலிருந்து மீள்விக்கப்பட்டது