ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புவியின் மேற்பரப்பில் அதிகமாகக் காணப்படும் ஒக்சைட்டாக சிலிக்கனீரொக்சைட்டு (SiO2) திகழ்கின்றது.

ஆக்சைடு (oxide, ஒக்சைடு, அல்லது ஒக்சைட்டு) எனப்படுவது குறைந்தது ஒரு ஆக்சிசனும் வேறு ஏதாவதொரு தனிமமும் இணைந்து உருவாக்கும் சேர்மம் ஆகும்.[1] பொதுவாக உலோக ஒக்சைட்டுகள் -2 ஆக்சிசனேற்ற எண் உள்ள ஒக்சைட்டு ஆக்சிசனின் அனயனையும் உலோக கற்றயனையும் கொண்டிருக்கும். அனேகமான அல்லுலோக ஒக்சைட்டுகள் அயன் பிணைப்புக்கப் பதிலாக பங்கீட்டு வலுப் பிணைப்பையே கொண்டிருக்கின்றன. புவியோட்டிலும் வளிமண்டலத்தில் பல ஒக்சைட்டுகளை அவதானிக்க இயலும். மண்ணில் சிலிக்கனீரொக்சைட்டும் வானில் காபனீரொக்சைட்டும் உள்ளன. அலுமினியம் பாத்திரங்கள் சிதைவடையாமல் அலுமினியம் ஒக்சைட்டுப் படை பாதுகாக்கின்றது. நீரேற்றப்பட்ட இரும்பு ஒக்சைட்டு (துரு) இரும்பு உபகரணங்கள் அழிவடையக் காரணமாகின்றது. எனவே உலகின் அமைப்பிலும் அன்றாட வாழ்விலும் ஒக்சைட்டு சேர்மங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஒக்சைட்டு உருவாக்கம்[தொகு]

ஒக்சிசனின் இலத்திரனை ஏற்றுக் கொள்ளும் இயல்பு காரணமாக பல தனிமங்களுடன் நிலைக்குமியல்புள்ள ஒக்சைட்டுகளை ஒக்சிசன் உருவாக்கும். நேரடியாக ஒக்சிசனுடன் தாக்கமடையாமல் இருப்பதாலேயே பொன் மற்றும் பிளாடினம் ஆகிய உலோகங்கள் பெறுமதி வாய்ந்தன என மதிக்கப்படுகின்றன. தங்க(III)ஒக்சைட்டு போன்ற சேர்மங்களை மறைமுக வழிகளாலேயே உற்பத்தி செய்ய முடியும். சோடியம், பொட்டாசியம், சீசியம் போன்ற மூலகங்களுடன் ஒக்சிசன் பயங்கரத் தாக்கம் புரிந்து ஒக்சைட்டுகளைத் தோற்றுவிக்கும். இதனாலேயே இவ்வுலோகங்களை தனிம வடிவில் பெறுவதும் இலகுவாக வளியில் பாதுகாத்தலும் இயலாத காரியமாக உள்ளது.

ஒக்சைட்டுகளின் தாக்கமியல்பு[தொகு]

ஒக்சைட்டுகளை அமிலம் அல்லது காரம் அல்லது இரண்டாலும் தாக்கமடையும் இயல்புக்கேற்றபடு பிரிக்கலாம். அமிலத்துடன் மட்டும் தாக்கம் புரியும் ஒக்சைட்டுகள் கார ஒக்சைட்டு (இவை அனேகமாக உலோக ஒக்சைட்டுகளாகும்) ஆகும். காரத்துடன் மட்டும் தாக்கம் புரியும் ஒக்சைட்டுகள் அமில ஒக்சைட்டுகளாகும் (இவை அனேகமாக அல்லுலோக ஒக்சைட்டுகளாகும்). அமிலம், காரம் ஆகிய இரண்டுடனும் தாக்கமடைவன ஈரியல்பைக் காட்டும் ஒக்சைட்டுகளாகும் (இவை அனேகமாக குறைகடத்தி உலோகங்களின் ஒக்சைட்டுகளாகும்).

தாழ்த்தல் தாக்கம்[தொகு]

உலோக ஒக்சைட்டுகள் தாழ்த்தும் பொருட்களால் தாழ்த்தப்பட்டு உலோகம் பிரித்தெடுக்கப்படுகின்றது. உதாரணமாக இரும்பு உலையில் இரும்பு ஒக்சைட்டு கார்பன் மூலம் தாழ்த்தப்பட்டு இரும்பும் காபனீரொக்சைட்டும் பெறப்படுகின்றது.

2 Fe2O3 + 3 C → 4 Fe + 3 CO2

நீரேற்றல் தாக்கம்[தொகு]

இலத்திரன் நாட்டம் குறைவான தனிமங்களின் ஒக்சைட்டுகளை நீரில் கரைக்கும் போது நீரேற்றல் தாக்கம் நடைபெறும். உதாரணமாக சோடியம் ஒக்சைட்டு (கார இயல்புள்ளது) நீரில் கரைக்கப்படும் போது சோடியம் ஐதரொக்சைட்டு உருவாகும்.

O2− + H2O → 2 OH

ஒக்சைட்டுகளுக்கு சில உதாரணங்கள்[தொகு]

பெயர் மூலக்கூற்று வாய்ப்பாடு விபரம்
நீர் (ஐதரசன் ஒக்சைட்டு) H
2
O
மிக முக்கிய கரைப்பான், உயிரினங்களின் அவசியத் தேவை
நைட்ரஸ் ஒக்சைட் N
2
O
சிரிப்பூட்டும் வளிமம், உணர்வகற்றி, நைதரசன் நிலைப்படுத்தலால் பெறப்படும் உணர்வகற்றிகள், ஏவூர்திகளில், பைங்குடில் வளிமம் போன்றவற்றில் ஆக்சிசனேற்றியாக. NO
2
, (NO), N
2
O
3
, N
2
O
4
போன்ற நைதரசன் ஆக்சைடுகளும் (உள்ளன. (குறிப்பாக வளி மாசடையும் இடங்களில்). அமில மழையில் நைட்ரிக் காடியைத் தோற்றுவித்து உடலுக்குக் கேடு விளைவிக்கும்.
சிலிக்கனீரொக்சைட்டு SiO
2
மணல், குவார்ட்சு ஆகியவற்றில் உள்ளது
இரும்பு(II,III)ஒக்சைட்டு Fe
3
O
4
இரும்பு(III)ஒக்சைட் (Fe
2
O
3
) உடன் இரும்புத் தாது, துரு போன்ற பொருட்களிலுள்ளது.
அலுமினியம் ஒக்சைட்டு Al
2
O
3
அலுமினியத் தாதான அலுமினா மற்றும் குருந்தம், மாணிக்கம் ஆகியவற்றில் உள்ளது
நாக ஒக்சைட்டு ZnO இறப்பரை வல்கனைசுப்படுத்தப் பயன்படுகின்றது, கொங்கிறீட்டு, ஒப்பனைப் பொருட்கள் ஆகியவற்றில் சேர்க்கப்படுகின்றது, தோல் பாதுகாப்புப் பொருட்களில் பயன்படுகின்றது. வெள்ளை நிறத் தூள்
காபனீரொக்சைட்டு CO
2
புவியின் வளிமண்டலத்தை ஆக்கும் வாயுக்களில் ஒன்று, மிகவும் முக்கியமான பச்சை வீட்டு வாயு, ஒளித்தொகுப்பில் எளிய சீனிகளை உருவாக்கப் பயன்படும், சுவாசித்தல் மற்றும் நொதித்தலின் போது பிரதான விளைவாகப் பெறப்படும், சேதனப் பொருட்கள் எரியும் போது விளைவாகக் கிடைக்கும். CO அல்லது காபனோரொக்சைட்டு மற்றைய காபன் ஒக்சைட்டாகும்.
கல்சியம் ஒக்சைட்டு CaO நீறாத சுண்ணாம்பு என அழைக்கப்படும்

மேற்கோள்கள்[தொகு]

  1. Foundations of College Chemistry, 12th Edition
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சைடு&oldid=2220619" இருந்து மீள்விக்கப்பட்டது