அடா யோனத்
| அடா ஈ. யோனத் | |
|---|---|
| பிறப்பு | 22 சூன் 1939 ஜெரூசலெம் |
| இறப்பு | 31 ஆகத்து 2026 (அகவை 87) |
| வாழிடம் | இசுரேல் |
| தேசியம் | இசுரேலியர் |
| துறை | படிகவுருவியல் |
| பணியிடங்கள் | வீஸ்மேன் அறிவியல் கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | எபிரேய பல்கலைக்கழகம், ஜெரூசலெம், வீஸ்மேன் அறிவியல் கழகம் |
| அறியப்படுவது | குளிர்நிலை உயிரிபடிகவியல் |
| விருதுகள் | வேதியியல் உல்ஃப் பரிசு (2006) பெண் அறிவியலாளர்களுக்கான லோரியல் - யுனெஸ்கோ பரிசு (2008) வேதியியலுக்கான நோபல் பரிசு (2009). |
அடா யோனத் (Ada Yonath, 22 சூன் 1939 – 31 ஆகத்து 2026)[1] இசுரேலியப் படிகவியலாளர். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம், புரதங்களின் சிக்கலான அமைப்பான "ரைபோசோம்" (ribosome) எனப்படும் செல்களின் கட்டமைப்பை ஆய்வு செய்ய குளிர்நிலை உயிரிபடிகவியல் முறைகளைக் குறித்த முன்னோடியான தமது ஆய்வுப்பணிக்காக அறியப்பட்டவர். வீஸ்மேன் அறிவியல் கழகத்தின் ஹெலன், மில்டன் ஏ.கிம்மேல்மேன் உயிரியல் மூலக்கூற்று கட்டமைப்பு, உருவாக்கல் மையத்தின் நடப்பு இயக்குநராக இருந்தார். "ரைபோசோம் எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்விற்காக" இவருக்கும் தாமஸ் ஸ்டைட்ஸ், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும் 2009-ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதுவரை நோபல் பரிசு பெற்றிருக்கும் ஒன்பது இசுரேலியர்களில் இவரே முதற் பெண்மணி என்பதும் [2] இதற்கு முந்தைய 45 ஆண்டுகளில் வேதியியலில் நோபல்பரிசு பெற்ற முதற் பெண்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடக்க வாழ்க்கை
[தொகு]அடா எசுதர் லிப்சிட்சு 1939 சூன் 22 அன்று எருசலேமின் கெவுலாப் பகுதியில் பிறந்தார்.[3][4][5][1] இவரின் பெற்றோர் கில்லெல், எசுதர் லிப்சிட்சு ஆவர்.[4] இவர்கள் போலாந்தின் சுதுன்சுகா வோலாவிலிருந்து 1933-இல், இசுரேல் நாடு உருவாக்கப்படுவதற்கு முன்பே, பிரித்தானியப் பாலசுதீன ஆட்சிப் பகுதிக்குக் (இன்றைய இசுரேல்) குடிபெயர்ந்த சீயோனிய யூதர்கள் ஆவர். இவரின் தந்தை ஒரு இரபி (யூதச் சமய போதகர்) ஆவார்; அவர் ஒரு இரபியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[4] இவர்கள் எருசலேமில் குடியேறி ஒரு மளிகைக் கடையை நடத்தி வந்தனர், ஆனால் வாழ்வதற்கு ஒரு சிறிய வீட்டைப் பகிர்ந்து கொண்டபடியே குடும்பச் செலவுகளைச் சமாளிப்பது அவர்களுக்குக் கடினமாக இருந்தது.[4][6]
குடும்பத்தின் வறுமையிலும், இவருக்கு நல்ல கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு, இவரின் பெற்றோர் இவரைத் தரம் உயர்ந்த பெயிட் காகெரெம் பகுதியில் உள்ள பள்ளிக்கு அனுப்பினர். இவரின் தந்தை தனது 42-ஆவது அகவையில் காலமான போது, இக்குடும்பம் டெல் அவீவ் நகருக்கு இடம் பெயர்ந்தது.[7] தந்தை மறைந்த பிறகு, குழந்தைகளுக்குப் பராமரிப்பாளராக இருந்தும், பாடம் கற்பித்தும் அடா தன் தாயாரின் வருமானத்திற்கு உதவினார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Israel Prize Official Site (in Hebrew) – Recipient's C.V."
- ↑ Nobel Prize Winner 'Happy, Shocked', யெருசலேம் போஸ்ட்]
- ↑ "מנכ"ל המדינה (p. 4; 18.11.09 "ידיעות אחרונות") PDF" (PDF). syaga.co.il. Archived from the original (PDF) on 2012-04-25. Retrieved 2011-10-05.
- 1 2 3 4 "Ada Yonath, Chemist and First Israeli Woman to Receive a Nobel, Dies at 87". The New York Times. 1 September 2026. Retrieved 1 September 2026.
- ↑ "Ada Yonath— L'Oréal-UNESCO Award". Jerusalem Post. 8 March 2008 இம் மூலத்தில் இருந்து 17 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120117223623/http://fr.jpost.com/servlet/Satellite?cid=1204546432149&pagename=JPost%2FJPArticle%2FShowFull.
- 1 2 "Ada Yonath". Energy.gov. Retrieved 1 September 2026.
- ↑ "Israeli professor receives Life's Work Prize for women in science". Ministry of Foreign Affairs. 28 July 2008 இம் மூலத்தில் இருந்து 29 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190329195114/http://www.mfa.gov.il/MFA/Israel+beyond+politics/Israeli+professor+receives+Life+Work+Prize+for+women+in+science+28-Jul-2008.htm.