உள்ளடக்கத்துக்குச் செல்

எர்மான் எமில் பிசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்மான் எமில் பிசர்
எர்மான் எமில் பிசர்
எர்மான் எமில் பிசர்
பிறப்பு (1852-10-09)9 அக்டோபர் 1852
உசுகிர்சென், ரைன் புரொவின்சு
இறப்பு15 சூலை 1919(1919-07-15) (வயது 66)
பெர்லின், செருமனி
தேசியம்செருமனி
துறைவேதியியல்
நிறுவனம்முனிச் பல்கலைக்கழகம் (1875–81)
எர்லாங்கென் பல்கலைக்கழகம் (1881–88)
உர்சுபர்க் பல்கலைக்கழகம் (1888–92)
பெர்லின் பல்கலைக்கழகம் (1892–1919)
Alma materபான் பல்கலைக்கழகம்
இசுட்ராசுபௌர்க் பல்கலைக்கழகம்
துறை ஆலோசகர்அடால்ப் வான் பேயர்
முக்கிய மாணவர்ஆல்பிரட் இசுடாக்
ஓட்டோ டையல்சு
ஓட்டோ ரப்
வால்டர் ஏ சேகப்சு
லுட்விக் க்னார்
ஓசுகார் பைலடி
சூலியசு டாபெல்
அறியப்பட்டதுசர்க்கரைகள்&பியூரின்கள் தொடர்பான ஆய்வுகள்
பரிசுகள்
 • டேவி பதக்கம் (1890)
 • இராயல் சங்கத்தின் உறுப்பினர் (1899) [1]
 • வேதியியலில் நோபல் பரிசு (1902)
 • எலியட் கிரெசன் பதக்கம் (1913)

எர்மான் எமில் லுாயிசு பிசர் FRS FRSE FCS (Hermann Emil Fischer, 9 அக்டோபர், 1852 – 15 சூலை, 1919) செருமனி நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் ஆவார்.  சர்க்கரை மற்றும் பியூரின் தொகுதிச் சேர்மங்களைச் செயற்கை முறையில் தயாரிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்தமைக்காக இவருக்கு 1902 ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் பிசர் எசுத்தராக்குதல் வினையினைக் கண்டறிந்தார். சீர்மையற்ற கார்பன் அணுக்களை வரைந்து அவற்றின் அமைவைக் குறிப்பிடப் பயன்படும் ஒரு  முன் வீச்சு மாதிரியை உருவாக்கினார். இது அவரின் பெயராலேயே பிசர் முன் நீட்சி மாதிரி (Fischer projection) என அழைக்கப்படுகிறது. ஒரு போதும் தனது முதல் பெயரைப் பயன்படுத்தியதில்லை. அவர் வாழ்நாள் முழுவதும் எமில் பிசர் எனவே அழைக்கப்பட்டார்.[2][3][4][5]

வாழ்க்கை வரலாறு[தொகு]

தொடக்க ஆண்டுகள்[தொகு]

கோலோன் என்ற இடத்திற்கு அருகில் உள்ள உசுகிர்சென் எனுமிடத்தில் லாரன்சு பிசர் என்ற வணிகருக்கும், அவரது மனைவி சூலி போயென்சுகென் என்போருக்கும் பிசர் பிறந்தார். தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு அவர் இயலறிவியலைப் படிக்க ஆசைப்பட்டார். ஆனால், அவரது தந்தை அவரை குடும்பத் தொழிலான வணிகத்தில் ஈடுபட  வலியுறுத்தினார். பிசர் இத்துறைக்கு பொருத்தமானவர் இல்லை என்பதை கண்டறியும் வரை இது தொடர்ந்தது. பிறகு, பிசர் பான் பல்கலைக்கழகத்தில் 1871 ஆம் ஆண்டில் சேர்ந்தார். 1872 ஆம் ஆண்டில் அவர் இசுட்ராசுபௌர்க் பல்கலைக்கழத்திற்கு இடம் பெயர்ந்தார்.[6] 1874 ஆம் ஆண்டில் அடால்ப் வான் பேயர் என்பவரின் வழிகாட்டுதலில் தனது ப்தாலீன் குறித்த ஆய்வினை முடித்து ஆய்வியல் நிறைஞர் பட்டத்தைப் பெற்றார். அவர் அதே பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்டார்.

கல்வி வாழ்க்கை[தொகு]

1875 ஆம் ஆண்டில் பேயர் முனிச் பல்கலைக்கழகத்தில் வேதியலாளர் லீபிக்கின் பணியைத் தொடரக் கேட்டுக்கொள்ளப்பட்டார். பிசர் பேயருடன் அவரது கரிம வேதியியல் தொடர்பான பணிகளில் உதவுவதற்காக சென்றார்.

1878 ஆம் ஆண்டில் [[மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்|மியூனிக் பல்கலைக்கழகத்தில் “பிரைவேட்டோசென்ட்“ (PD-Privatdozent - செருமானிய பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக அளவில் உள்ள ஒரு பாடத்தை கற்றுக்கொடுப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட கல்வித்தகுதி) ஆகத் தகுதி பெற்றார். 1879 ஆம் ஆண்டில் பகுப்பாய்வு வேதியியல் துறையின் இணைப் பேராசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். அதே ஆண்டில் ஆஃகன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை தலைவராகப் பணியேற்க அழைக்கப்பட்டார். ஆனால் பிசர் அதை மறுத்து விட்டார்.

1881 ல் அவர் எர்லாங்கன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1883 ஆம் ஆண்டில் பேடிசே அனிலின்-உன்ட் சோடா பேப்ரிக் என்பவரால் தனது அறிவியல் ஆய்வகத்தை வழிநடத்த கேட்டுக் கொள்ளப்பட்டார். எனினும், பிசருடைய தந்தை அவரைத் தனது பொருளாதாரத்தில் சுதந்திரமாகவும் தனியாகவும் நிர்வகிக்கும் அளவுக்கு செய்திருந்ததால் கல்வி சார்ந்த பணிக்கே முன்னுரிமை அளித்தார்.

1885 ஆம் ஆண்டில் உர்சுபர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராகப் பணியேற்க அழைக்கப்பட்டார். இங்கு அவர் 1892 ஆம் ஆண்டு வரை இருந்தார். பிறகு பெர்லின் பல்கலைக்கழகத்தில் ஏ. டபிள்யூ. ஆப்மேன் என்பவரைத் தொடர்ந்து வேதியியல் துறைத் தலைவராக இருக்க பிசர் கேட்டுக்கொள்ளப்பட்டார். இங்கு அவர் பினைல் ஐட்ரசீனின் தாக்கத்தால் உருவாகியிருக்கக்கூடிய[7][8] புற்றுநோயின் வேதனையின் காரணமாக 1919 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொள்ளும் வரையிலும் தனது பணியினைத் தொடர்ந்தார்.[9]

ஆய்வுப்பணி[தொகு]

1875 ஆம் ஆண்டில் இசுடாசுபர்க் பல்கலைக் கழகத்தில் வான் பேயருடன் பணிபுரிந்த பொழுது, பிசர் பினைல்ஐட்ரசீனைக் கண்டுபிடித்தார்.[10] (இந்த சேர்மமானது பின்னாளில் பிசர் சர்க்கரைகள் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளில் ஒரு முக்கியப் பங்கினை ஆற்றியுள்ளது) மியூனிக் பல்கலைக்கழகத்தில் இருந்த பொழுது, பிசர் ஐதரசீன்கள் தொடர்பான தனது ஆய்வை தனது மைத்துனர் ஓட்டோ பிசருடன் இணைந்து தொடர்ந்தார். பிசரும் ஓட்டோவும் இணைந்து ட்ரைபினைல்மீத்தேன் சாயங்களின் அமைப்பு தொடர்பான ஒரு புதிய கருத்தியலை வெளியிட்டு அதனைச் சோதனை மூலமும் நிரூபித்தனர்.

எர்லாங்கன் பல்கலைக்கழகத்தில், பிசர் தேயிலை, காபி, சாக்கலேட்டின் கோகோ போன்றவற்றில் செயல்படும் கொள்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவற்றில் காணப்படும் பைன் மற்றும் தியோபுரோமின் ஆகியவற்றைக் குறித்து ஆய்வு மேற்கொண்டு இத்தகைய சேர்மங்களின் தொடர் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதையும் அவற்றின் தொகுப்பு முறைகளையும் நிறுவினார்.

இருப்பினும், பியூரின்கள் மற்றும் சர்க்கரைகள் குறித்த ஆய்வுகளே பெருமளவு பிசரின் புகழுக்குக் காரணமாக அமைந்துள்ளன. 1882 மற்றும் 1906 ஆகிய ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தாவரப் பொருட்களிலிருந்து பெறப்படும் அடினைன், சாந்தைன், கபைன் மற்றும் விலங்கினக் கழிவுகளில் இருந்து பெறப்படும் யூரிக் அமிலம், குவானைன் போன்ற அக்கால கட்டத்தில் சிறிதாகவே அறியப்பட்ட சேர்மங்கள் அனைத்தும் ஓரின வரிசைச் சேர்மங்கள் என்றும், ஒன்றிலிருந்து மற்றொரு சேர்மம் பெறப்படலாம் என்றும் தெரியவந்தன. மேலும், இவை அடிப்படை அமைப்பான இருவளைய நைட்ரசனைக் கொண்ட, குறிப்பிடத்தக்க பண்பு கொண்ட யூரியா தொகுதியை உள்ளடக்கிய வெவ்வேறு ஐதராக்சில் மற்றும் அமினோ வழிப்பொருட்களோடு தொடர்புடையவையாகவும் இருந்தன. 1884 ஆம் ஆண்டில் இதுவரை பிரித்தறியப்படாத, கருத்தியலான, மேற்காணும் பண்புகளை உடைய தாய்ப்பொருளை அவர் முதன்முதலில் பியூரின் என அழைத்தார். இந்தப் பியூரினை 1898 ஆம் ஆண்டில் அவர் தொகுப்பு முறையில் தயாரித்தும் காட்டினார். எண்ணற்ற, இயற்கையில் கிடைக்கும் பொருட்களுக்குக் கிட்டத்தட்ட ஒத்துப்போகும் தன்மையுடைய செயற்கை வழிப்பொருட்கள் அவரது ஆய்வகத்திலிருந்து 1882 முதல் 1896 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளிவரத் தொடங்கின.

1884 ஆம் ஆண்டில் பிசர் சர்க்கரைகள் தொடர்பான தனது சிறப்பு வாய்ந்த ஆய்வினைத் தொடங்கினார். இந்த ஆய்வானது இந்தச் சேர்மங்கள் பற்றிய அறிவினை மாற்றியமைத்ததுடன், தொடர்புடைய புதிய அறிவினை இத்துடன் முழுமையாக இணைத்தது எனலாம். 1880களுக்கு முன்னதாகவே, குளுக்கோசின் ஆல்டிகைடு வாய்ப்பாடு சுட்டிக்காட்டப்பட்டுள்து. ஆனால், பிசர் சர்க்கரைகளின் ஆக்சிசனேற்றத்தால் கிடைக்கும் ஆல்டோனிக் அமிலம், தனது கண்டுபிடிப்பான பினைல் ஐட்ரசீசன் உடனான வினையின் விளைவாக பினைல் ஐட்ரசோன்கள் மற்றும் ஓசசோன்கள் உருவாக்கம் சாத்தியமானது என்பது உள்ளிட்ட தொடர் மாற்றங்களை நிறுவினார். ஒரு பொதுவான ஓசசோனை உருவாக்கும் வினையினை வைத்துக்கொண்டு, குளுக்கோசு, பிரக்டோசு மற்றும் மேனோசு ஆகியவைகளுக்கிடையேயான தொடர்பினை 1888 ஆம் ஆண்டில் நிறுவினார்.

1890 ஆம் ஆண்டில், குளுக்கோனிக் அமிலம் மற்றும் மேனோனிக் அமிலம் ஆகியவற்றுக்கிடையேயான எபிமெராக்கத்தால் அவர் சர்க்கரைகளின் முப்பரிமாண வேதியியல் மற்றும் மாற்றியத்தன்மையையும் நிறுவினார். 1891 ஆம் ஆண்டிற்கும் 1894 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் அன்றைய நிலையில் அறியப்பட்டிருந்த அனைத்து சர்க்கரைகளுக்குமான முப்பரிமாண அமைப்பினை நிறுவினார். மேலும், 1874 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வாண்ட்காப் மற்றும் லே பெல் ஆகியோரின் சீர்மையற்ற கார்பன் அணு தொடர்பான கருத்தியல் கொள்கையினை கூர்மையான பயன்பாடு சார் அறிவைப் பயன்படுத்தி, சர்க்கரையொன்றிற்கான வாய்ப்புள்ள மாற்றிய அமைப்புகளையும் மிகத் துல்லியமாகக் கணித்துக் கூறினார்.

படிநிலை இறக்கம், தொகுப்பு முறைகள் மற்றும் மாற்றியமாக்குதல் போன்ற செயல்முறைகளைப் பயன்படுத்தி வெவ்வேறு எக்சோசுகள், பென்டோசுகள், எப்டோசுகள் இவற்றுக்கிடையே ஒன்றை மற்றொன்றாக மாற்தும் தலைகீழ் தொகுப்பு முறைகள் அவரின் தொகுப்பு முறைகளின் வழிமுறையின் மதிப்பை உணர வைத்தது எனலாம். 1890 ஆம் ஆண்டில் அவர் குளுக்கோசு, புரக்டோசு மற்றும் மேனோசு ஆகியவற்றை கிளிசெராலிலிருந்து தொகுப்பு முறையில் தயாரித்தமை அவரின் பணிகளில் மிகப்பெரிய வெற்றியாக விளங்குகிறது. சர்க்கரைகள் தொடர்பான இந்த சிறப்புமிக்க பணிகளெல்லாம் 1884 ஆம் ஆண்டிற்கும் 1894 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்டவை ஆகும். இதன் பின் இந்தப் பணிகளின் தொடர்ச்சியாக பிசரின் மிக முக்கியப் பணியாகக் கருதப்படுகிற குளுக்கோசைடுகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1899 மற்றும் 1908 ஆகிய ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில், பிசர், புரதங்கள் தொடர்பான அறிவிற்கு தனது சிறந்த பங்களிப்புகளைச் செய்துள்ளார். தனித்த அமினோ அமிலங்களை அடையாளம் காண்பதற்கும், பிரித்தெடுப்பதற்கும் திறன்மிக்க பகுப்பாய்வு முறைகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டபோது, புரோலின் மற்றும் ஐதராக்சிபுரோலின் போன்ற புதிய வகை வளைய அமினோ அமிலங்களைக் கண்டுபிடித்தார். அவர் ஒளியியற் பண்புகளை வெளிப்படுத்தும் அமினோ அமிலங்களைப் பெற்று அவற்றிலிருந்து புரதங்களைத் தொகுப்பது தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொண்டார். புரதங்களில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றோடு ஒன்று சங்கிலித் தொடர் போல இணைக்கப்பட்டிருப்பதற்குக் காரணமான பிணைப்பின் வகையைக் கண்டறிந்தார். இதுவே, பெப்டைடு பிணைப்பு என அழைக்கப்பட்டது.

இந்த தொடக்கத்தைக் கொண்டு அவர் டைபெப்டைடுகள், டிரை பெப்டைடுகள், பிறகு பாலிபெப்டைடுகள் ஆகியவற்றை உருவாக்கினார். 1901 ஆம் ஆண்டில் எர்னெசுட்டு போர்னியு உடன் இணைந்து கூட்டாக கிளைசைல்கிளைசின் என்ற டைபெப்டைடைக் கண்டுபிடித்தார். அதே ஆண்டில் அவர் கேசினை நீராற்பகுப்பு செய்வது தொடர்பான தனது ஆய்வு முடிவையும் வெளியிட்டார். இயற்கையில் கிடைக்கும் அமினோ அமிலங்கள் ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்டன மற்றும் புதியவைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இவருடைய ஓலிகோபெப்டைடுகள் தொகுப்பு முறை ஆக்டோடெகாபெப்டைடு உருவாக்கப்பட்ட போது உச்சத்தைத் தொட்டது எனலாம். இந்த ஆக்டோடெகாபெப்டைடு இயற்கை புரதங்களின் பல பண்பியல்புகளைக் கொண்டிருந்தது. இந்த ஆய்வு மற்றும் அவரின் தொடர்ச்சியான ஆய்வுகள் புரதங்களைப் பற்றிய சிறப்பான புரிதலுக்கும், புரதங்கள் தொடர்பான கூடுதல் ஆய்வுகளுக்கும் வித்திட்டன எனலாம்.

ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட பணிகளை விடக் கூடுதலாக, பிசர், இலைக்கன் எனும் வகைத் தாவரத்தில் காணப்டும் நொதியங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் குறித்தும், தோல் பதனிடுதலில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். தனது வாழ்வின் இறுதி நாட்களில் கொழுப்புகள் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டார். 1890 ஆம் ஆண்டில், வினைவேதிமம் (substrate) மற்றும் நொதியம் (enzyme) இவற்றுக்கிடையேயான இடைவினையைக் கண்ணுறுவதற்கான ”பூட்டு-சாவி மாதிரி” என்ற கருத்தியலை முன்மொழிந்தார். இருப்பினும், நொதியங்களின் வினைகளில் இந்தக் கொள்கையை இதற்குப் பின் வந்த ஆய்வுகள் ஆதரிக்கவில்லை.

பிசர் (+) குளுகோசு மற்றும் பியூரின் ஆகியவற்றின் கரிமத் தொகுப்பு முறைகளைக் கண்டறிந்தது, கேபைனைத் தயாரிப்பதற்கான முதல் தொகுப்பு முறையைக் கண்டறிந்தது என்று பல பணிகளைக் கண்டறிந்தாலும் சர்க்கரைகள் குறித்த இவரது ஆய்வுப்பணிக்காக மிகவும் குறிப்பிடப்படுபராக உள்ளார்.[11]

உறக்கமின்மை நோய்க்குறி (insomnia), வலிப்பு நோய் (epilepsy), பதற்றமான மனநிலை (anxiety), உணர்வற்ற நிலை (anesthesia ) ஆகியவற்றுக்கான அமைதிப்படுத்தும் மருந்தான பார்பிட்யூரேட்டுகள் மருந்துப்பொருளின் கண்டுபிடிப்பில் சோசப் வான் மெரிங் என்ற மருத்துவருடன் பிசர் இணைந்து பணிபுரிந்து முக்கியப்பணியாற்றியுள்ளார். 1904 ஆம் ஆண்டில் இவர் பார்பிட்டால் என்றழைக்கப்படக்கூடிய முதல் பார்பிட்யூரேட் அமைதிப்படுத்தும் மருந்தை அறிமுகப்படுத்துவதில் உதவியுள்ளார்.[12]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

தனது 18 ஆவது வயதில், பான் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன், அவர் இரைப்பை அழற்சி நோயால் அவதிப்பட்டார். இந்த இரைப்பை அழற்சி நோய் எர்லாங்கன் பல்கலைக் கழகத்தில் பதவிக்காலம் முடியும் தருணத்தில் அவரை மீண்டும் தாக்கியது. சுரிச்சில் உள்ள பெடரல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விக்டர் மேயரைப் பின்பற்றி செல்வதற்கான கிடைத்தற்கரிய வாய்ப்பினை மறுப்பதற்கு இந்த இரைப்பை அழற்சி நோய் காரணமாக அமைந்தது. மேலும், இதன் காரணமாக 1888 ஆம் ஆண்டு உர்சுபெர்க் பல்கலைக் கழகத்திற்கு செல்வதற்கு முன் ஓர் ஆண்டு விடுப்பெடுப்பதற்கும் இது காரணமாக அமைந்தது. அவருடைய வாழ்க்கை முழுவதும் மிக அற்புதமான நினைவாற்றலைக் கொண்டிருந்தார். இதன் காரணமாக, அவர் ஒரு நல்ல பேச்சாளராக இல்லாதிருந்த போதும் கூட தானாகவே எழுதிவைத்த பேச்சினை மனனம் செய்து பேசுவதற்கு வாய்ப்பளித்தது. அவர் உர்சுபர்க் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். இங்கு பணிபுரிந்த காலத்தில் தெற்கு செருமனியில் பேடன் உர்ட்டெம்பெர்க் என்ற மாநிலத்தில் அமைந்திருந்த பிளாக் பாரெசுட் என்ற வனப்பகுதிக்கு அடிக்கடி சென்று வந்தார். அங்குள்ள மலைப்பகுதிகளில் உலாவச் செல்வதை மகிழ்ந்து அனுபவித்தார்.

பெர்லின் பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது அவர் அறிவியல் அறக்கட்டளை நிறுவனங்கள் மற்றும் வேதியியல் மட்டுமல்லாமல் அனைத்துத் துறை ஆய்வுகள் தொடர்பான நிர்வாகப் பணிகள் அவருக்கு தான் ஒரு விடாப்பிடியான போராளி என்பதை உணர்த்தின. அறிவியல் சார்ந்த பிரச்சனைகள் குறித்து அவரது ஆழமான புரிதல், உள்ளுணர்வு, உண்மையைக் கண்டறிவதில் உள்ள ஆர்வம், கருதுகோள்களுக்கு சோதனையின் மூலமான நிரூபணத்தைத் தேடுவதில் உள்ள ஈர்ப்பு ஆகியவை அவரை அனைத்துக் காலத்திற்குமான பெரிய அறிவியல் விஞ்ஞானியாக முன்நிறுத்துகின்றன. 1888 ஆம் ஆண்டு பிசர், எர்லாங்கு பல்கலைக் கழகத்தின் உடற்கூறியல் துறை பேராசிரியர் சோசப் வான் கெர்லாச் என்பவரின் மகள் ஆக்னெசு கெர்லாச் என்பாரை மணந்தார். திருமணம் முடிந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மனைவி இறந்தார்.[6] இத்தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் முதல் உலகப் போரில் கொல்லப்பட்டார். மற்றுமொருவர் கட்டாய இராணுவப் பயிற்சியின் விளைவாக தனது 25 ஆவது வயதில் தற்கொலை செய்து கொண்டார். 1919 ஆம் ஆண்டில் பிசர் தனது மகனைப் போலவே தற்கொலை செய்து கொண்டார்.[7][8] இவருடைய மூத்த மகன்[13] எர்மான் ஓட்டோ லாரென்சு பிசர் பெர்கலேயில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், உயிர்வேதியியல் துறை பேராசிரியராக 1948 ஆம் ஆண்டிலிருந்து 1960 ஆம் ஆண்டில் அவரது இறப்பு வரை பணிபுரிந்தார்.[14]

பாராட்டுகளும் விருதுகளும்[தொகு]

பெர்லினில் எழுப்பப்பட்டுள்ள எர்மான் எமில் பிசருக்கான நினைவுச்சின்னம்

பிசர், ப்ருசியன் கெகிம்ராட் (செம்மையாளர்) ஆகவும், இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்சு பல்கலைக்கழகம், கிறிசுடியானா பல்கலைக்கழகம், மான்செசுடர் பல்கலைக்கழகம் மற்றும் பிரசல்சு பல்கலைக்கழகம் ஆகியவற்றால் கௌரவ முனைவர் பட்டத்தைப் பெற்றவராக விளங்கினார். 1897 ஆம் ஆண்டில் ஓரிடத்தனிமங்களுக்கான மிகுதி மற்றும் அணு நிறைகள் தொடர்பான சர்வதேச அணு நிறை ஆணையம் தொடங்கும் ஆலோசனையை முன் வைத்தார். 1899 ஆம் ஆண்டில் இராயல் சங்கத்தின் அயல் நாட்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் புருசியன் தகுதிச் சான்று மற்றும் மேக்சுமில்லன் கலை மற்றும் அறிவியல் தகுதிச்சான்று ஆகியவற்றால் கௌரவிக்கப்பட்டார். 1902 ஆம் ஆண்டில், சர்க்கரை மற்றும் பியூரின் தொகுப்பு முறையினைக் கண்டுபிடித்த பணிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவருடைய பெயரால் பல வேதியியல் வினைகள் மற்றும் கருத்துருக்கள் அடைக்கப்பட்டன:

 • பிசர் இண்டோல் தொகுப்பு முறை
 • பிசர் முன்நீட்டி மாதிரி
 • பிசர் ஆக்சசோல் தொகுப்பு
 • பிசர் பெப்டைடு தொகுப்பு முறை
 • பிசர் பினைல்ஐட்ரசீன் மற்றும் ஆக்சசோன் வினை
 • பிசர் ஒடுக்க வினை
 • பிசர்–இசுபெயர் எஸ்தராக்குதல் வினை
 • பிசர் கிளைகோசைடேற்றம்

1919 ஆம் ஆண்டில் பிசர் இறந்த பிறகு, செருமானிய வேதியியல் சங்கத்தால் எமில் பிசர் நினைவு பதக்கம் நிறுவப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Fellows of the Royal Society". London: Royal Society. Archived from the original on 2015-03-16.
 2. Horst Kunz (2002). "Emil Fischer – Unequalled Classicist, Master of Organic Chemistry Research, and Inspired Trailblazer of Biological Chemistry". Angewandte Chemie International Edition 41 (23): 4439–4451. doi:10.1002/1521-3773(20021202)41:23<4439::AID-ANIE4439>3.0.CO;2-6. பப்மெட்:12458504. 
 3. Lichtenthaler, F. W. (1992). "Emil Fischers Beweis der Konfiguration von Zuckern: eine Würdigung nach hundert Jahren". Angewandte Chemie 104 (12): 1577–1593. doi:10.1002/ange.19921041204. 
 4. Forster, Martin Onslow (1 January 1920). "Emil Fischer memorial lecture". Journal of the Chemical Society, Transactions 117: 1157–1201. doi:10.1039/CT9201701157. 
 5. Biography Biography of Fischer from Nobelprize.org website
 6. 6.0 6.1 Eduard, Farber (1970–80). "Fischer, Emil Hermann". Dictionary of Scientific Biography 5. நியூயார்க்: Charles Scribner's Sons. 1-5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-684-10114-9. 
 7. 7.0 7.1 Sachi, Sri Kantha (2000). "Suicide: a Socratic revenge". Ceylon Medical Journal (45): 25–28 இம் மூலத்தில் இருந்து 2012-03-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120301155900/http://www.cmj.slma.lk/cmj4501/25.htm. 
 8. 8.0 8.1 "Emil Fischer". The Notable Names Database. 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-09-18.
 9. Toth, B.; Shimizu, H. (1976). "Tumorigenic effects of chronic administration of benzylhydrazine dihydrochloride and phenylhydrazine hydrochloride in Swiss mice". Zeitschrift für Krebsforschung und Klinische Onkologie 87 (3): 267–273. doi:10.1007/BF00506499. http://link.springer.com/article/10.1007%2FBF00506499. 
 10. Fischer, E (1875). "Ueber aromatische Hydrazinverbindungen [On aromatic hydrazine compounds]". Berichte der deutschen chemischen Gesellschaft 8: 589–594. doi:10.1002/cber.187500801178. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k90680z/f589.zoom.langEN. 
 11. Fischer, Emil (1890). "Synthese des Traubenzuckers". Berichte der deutschen chemischen Gesellschaft 23: 799–805. doi:10.1002/cber.189002301126. 
 12. Francsco Lopez-Mnoz, Ronaldo Ucha-Udabe and Cecilio Alamo (December 2005). "The history of barbiturates a century after their clinical introduction". Neuropsychiatric Disease and Treatement. பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2017.
 13. Poster next to bust of Fischer, Biosciences Library, UC Berkeley
 14. Baker, A. Albert (1970–80). "Fischer, Hermann Otto Laurenz". Dictionary of Scientific Biography 5. நியூயார்க்: Charles Scribner's Sons. 5-7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-684-10114-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்மான்_எமில்_பிசர்&oldid=3295414" இலிருந்து மீள்விக்கப்பட்டது