பகுப்பாய்வு வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பகுப்பாய்வு வேதியியல் (Analytical chemistry) என்பது இயற்கைப் பொருட்களினதும் செயற்கைப் பொருட்களினதும் வேதியியல் கூறுகளைப் வேறாக்கல், இனங்காணல், அளவிடுதல் ஆகியவை தொடர்பான கல்வித்துறை. பண்பறி பகுப்பாய்வு வேதியியல் பொருள் மாதிரியில் உள்ள வேதியியல் பொருட்களை இனங்காண உதவுகிறது. அதே வேளை, அளவறி பகுப்பாய்வு அதில் உள்ள ஒன்று அல்லது பல கூறுகளின் அளவை அறிய உதவுகிறது. கூறுகளை வேறாக்கல் பகுப்பாய்வுக்கு முன்னரே இடம்பெறுகிறது.

பகுப்பாய்வு முறைகளை மரபுவழி முறை, கருவி முறை எனப் பிரிக்கலாம். ஈர வேதியியல் முறை எனவும் அழைக்கப்படும் மரபுவழி முறை, வேறாக்கலுக்கு வீழ்படிதல், பிரித்தெடுத்தல், வடித்தல் போன்றவற்றைப் பயன்படுத்துவதுடன் பண்பறி பகுப்பாய்வுக்கு நிறம், மணம், கொதிநிலை போன்ற இயல்புகளைப் பயன்படுத்துகிறது. நிறை, கனவளவு போன்றவற்றை அளப்பதன் மூலம் அளவறி பகுப்பாய்வு செய்யப்படுகிறது. கருவி முறையில், ஒளியுறிஞ்சல், உடனொளிர்வு, கடத்துதிறன் போன்ற இயற்பியக் கணியங்களை அளப்பதற்குக் கருவிகள் பயன்படுகின்றன. பொருட்களை வேறுபடுத்துவதற்கு, வண்ணப்படிவுப் பிரிகை, மின் முனைக் கவர்ச்சி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.