சுற்றுச்சூழல் வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுற்றுச்சூழல் வேதியியல் (Environmental chemistry) என்பது இயற்கையான இடங்களில் வேதியியல் மற்றும் உயிர் வேதியியல் நிகழ்வுகளால் ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றிய அறிவியல் அணுகுமுறையின்படியான ஓர் ஆய்வு அல்லது கல்வியாகும்.

பின்லாந்தின் ராஹேயில் எண்ணெய்க்கசிவால் மாசுபட்ட கற்கள் அடங்கிய பைகள் கடற்கரையோரம் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன (FI-Raahe-20140609 183727)

இந்தச் சொல்லை, மாசுபாட்டினை அதன் மூலத்திலேயே குறைப்பதற்கான முயற்சியான ”பசுமை வேதியியல்” என்ற சொல்லுடன் இணைத்துக் குழப்பமடையக்கூடாது. மூலங்கள், இதனை வேதி வினைகள், போக்குவரத்து, வேதிப்பொருள்களால் மண், நீர், காற்று இவற்றின் சூழலில் மனிதச் செயல்பாடுகளாலும், உயிாியச் செயல்பாடுகளாலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்த வேதியியலின் பிரிவு எனலாம்.

சுற்றுச்சூழல் வேதியியல் என்பது வளிமண்டல, நீா், மண் சாா்ந்த வேதியியல்களோடு ஒன்றோடொன்று தொடா்புடைய பிாிவாகவும், பகுப்பாய்வு வேதியியலை மிகவும் சாா்ந்ததாகவும், அறிவியலின் பிற பிரிவுகள் மற்றும் சுற்றுச்சூழலியல் இவற்றோடெல்லாம் தொடா்பு கொண்டதாகவும் இருக்கிறது. இதனை மனித நடவடிக்கைகளால் சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய வேதிச்செயல்முறைகள் குறித்த அறிவியலின் பிாிவு எனலாம். இத்தகைய பாதிப்புகள் நகா்ப்புறத்தில் ஏற்படக்கூடிய காற்று மாசுபடுத்திகள், வேதிக்கழிவுகளால் உருவான நச்சுத்தன்மையுடைய பொருள்கள் ஆகியவற்றின் காரணமாக, அந்தந்தப் பகுதியளவிலோ, உலகளாவிய அளவிலோ உணரப்படலாம். உதாரணமாக, ஓசோன் படலம் பலவீனமடைதல், புவி வெப்ப உயா்வு போன்றவை உலகம் முழுவதும் உள்ள மனிதச் செயல்பாடுகள் மற்றும் உயிா் வேதியச் செயல்பாடுகளின் தாக்கத்தால் உருவானவையே.

சுற்றுச்சூழல் வேதியியலானது இயற்கையில் எந்தெந்த வேதிப்பொருள்கள் என்னென்ன இயல்பில் இருக்கின்றன என்பதையும், அவற்றின் விளைவுகள் என்ன என்பதையும், மாசுபடுத்தப்படாத சுற்றுச்சூழல் எவ்வாறானது என்ற புாிதலையும் உள்ளடக்கியதாகும். இந்தப் புாிதல் இல்லாமல் மனிதச்செயல்களால் வெளிப்படும் வேதிப்பொருள்களால் இயல்பான, மாசுபடாத சுற்றுச்சூழலில் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி அறிவதென்பது இயலாது.

சுற்றுச்சசூழல் வேதியியலாளா்கள், வேதியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலிலிருந்து பல்வேறு கருத்துருக்களை எடுத்துக்கொண்டு வேதிப்பொருள்கள் தற்போதைய உயிா்ச்சூழலில் எவ்வாறெல்லாம் மாற்றமடைகின்றன என்பதையெல்லாம் ஆராய்ந்து வருகிறாா்கள். வேதிவினைகள், வேதிச்சமன்பாடுகள், கரைசல்கள், அளவீடுகள் மற்றும் அலகுகள், மாதிாிகள் தோ்வு மற்றும் புள்ளியியல் உத்திகள், பகுப்பாய்வு உத்திகள் சாா்ந்த பகுப்பாய்வு வேதியியல் போன்றவை சுற்றுச்சூழல் வேதியியலில் கையாளப்படும் வேதியியலின் முக்கிய பொதுப்பிாிவுகளாகும்..[1]

மாசுபடுத்துதல்[தொகு]

ஒரு வேதிப்பொருள் இயற்கைச் சூழலில் இருக்க வேண்டிய இயல்பான அளவைவிட அதிக அளவில் இருந்தால் அது ”மாசுபடுத்தி” எனப்படுகிறது. [2][3] இவ்வாறு அதிகமான அளவில் அந்தப்பொருள் இருப்பதற்கான காரணம் மனிதச்செயல்பாடாகவோ, உயிாியச் செயல்முறைகளாகவோ இருக்கலாம். ”மாசு” (contaminant) மற்றும் ”மாசுபடுத்தி” (pollutant) ஆகிய சொற்கள் அடிக்கடி ஒன்றுக்கு மாற்றான மற்றொரு சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாசுபடுத்தி எனப்படுவது தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பாதிப்பைத் தருகின்ற ஒரு பொருள் என வரையறுக்கப்படுகிறது.[4][5] ஆனால் மாசு எனப்படுவது மனிதச்செயல்பாடுகளால் சுற்றுச்சூழலில் எந்தத்தீய விளைவுகளும் இல்லாமல் இருந்து, காலப்போக்கில் அதன் இருப்பு அதிகமாகும் போது சில தீய விளைவுகளை வெளிப்படையாக அல்லது உணரத்தக்க அளவில் உண்டாக்குகின்ற பொருளாகும்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Williams, Ian. Environmental Chemistry, A Modular Approach. Wiley. 2001. ISBN 0-471-48942-5
  2. "Glossary to the Buzzards Bay Watershed Management Plan". Archived from the original on 2016-10-09. பார்க்கப்பட்ட நாள் 2017-05-08.
  3. American Meteorological Society. Glossary of Meteorology பரணிடப்பட்டது 2011-09-20 at the வந்தவழி இயந்திரம்
  4. North Carolina State University. Department of Soil Science. "Glossary." பரணிடப்பட்டது 2014-09-18 at the வந்தவழி இயந்திரம்
  5. Global Resource Action Center for the Environment (GRACE). New York, NY. Sustainable Table: Dictionary பரணிடப்பட்டது 2012-08-24 at the வந்தவழி இயந்திரம்
  6. Harrison, R.M (edited by). Understanding Our Environment, An Introduction to Environmental Chemistry and Pollution, Third Edition. Royal Society of Chemistry. 1999. ISBN 0-85404-584-8

புற இணைப்புகள்[தொகு]