கரிம உலோக வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இது n- பியூட்டைல் இலித்தியம், ஒரு கரிம உலோகச் சேர்மமாகும். நான்கு இலித்தியம் அணுக்கள் ( கருஞ்சிவப்பில்) நான்கு பியூட்டைல் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டு நான்முக வடிவில் உருவாகியுள்ளன. ( கார்பன் கருப்பு நிறம், ஐதரசன் வெண்மை நிறம்)

கரிம உலோக வேதியியல் (Organometallic chemistry) என்பது கரிமச் சேர்மங்களுடன் உலோகங்கள் சேர்ந்து உருவாக்கும் சேர்மங்களைக் குறித்து ஆய்வு செய்கின்ற அறிவியல் துறையாகும். கரிமச் சேர்மத்தில் உள்ள கார்பன் அணுவுக்கும் ஒரு உலோகத்திற்கும் இடையில் குறைந்தது ஒரு வேதியியல் பிணைப்பையாவது இப்பிரிவில் அடங்கியுள்ள சேர்மங்கள் பெற்றிருக்கும்[1][2] கனிம வேதியியல் மற்றும் கரிம வேதியியல் ஆகிய இரு பிரிவுகளின் அம்சங்களையும் உள்ளடக்கியது கரிம உலோக வேதியியல் பிரிவாகும். இந்த அறிவியல் பிரிவைச் சேர்ந்த சேர்ந்த சேர்மங்கள் பரவலாக ஒரு படித்தான வினையூக்கிகளாகப் பயன்படுகின்றன[3]

கரிம உலோகச் சேர்மங்கள்[தொகு]

”கரிம” என்ற முன்னொட்டைச் சேர்ப்பதால் கரிம உலோகச் சேர்மங்கள் வேறுபடுத்தி அறியப்படுகின்றன. உதாரணம், கரிம பலேடியம் சேர்மங்கள். இத்தகைய உதாரணங்களில் இலித்தியம் மற்றும் தாமிரம் உலோகங்களை உள்ளடக்கிய அனைத்து வகை கில்மான் கரணிகள் அல்லது கில்மான் செயலிகளும் அடங்கும். நாற்கார்பனைல்நிக்கல் மற்றும் பெர்ரோசீன் ஆகியன தாண்டல் உலோகங்களைக் கொண்டிருக்கும் கரிம உலோகச் சேர்மங்களாகும். இவை தவிர கரிம மக்னீசியம் சேர்மங்களான அயோடோ(மெத்தில்)மக்னீசியம் (MeMgI) ஈரெத்தில்மக்னீசியம் (Et2Mg) மற்றும் அனைத்து கிரின்யார்டு கரணிகள்; n- பியூட்டைல் இலித்தியம் போன்ற கரிம இலித்தியம் சேர்மங்கள், ஈரெத்தில் துத்தநாகம் (Et2Zn) மற்றும் குளோரோ(ஈத்தாக்சிகார்பனைல்மெத்தில்)துத்தநாகம் போன்ற கரிமத் துத்தநாகச் சேர்மங்கள் மற்றும் இலித்தியம் இருமெத்தில்கியுப்ரேட்டு போன்ற கரிமத் தாமிரச் சேர்மங்கள் ஆகிய அனைத்து வகைச் சேர்மங்களும் கரிம உலோகச் சேர்மங்களேயாகும்.

உலோகங்களுக்கும் கார்பனுக்கும் நேரடிப் பிணைப்பு ஏதுமில்லாமல் ஆனால், கரிம ஈனிகள் மூலம் பிணைக்கப்பட்டிருக்கும் சேர்மங்கள் பொதுவாக உலோகக்கரிமங்கள் என்ற பெயரால் அடையாளப் படுத்தப்படுகின்றன. உலோக பீட்டா- இருகீட்டோனேட்டுகள், ஆல்காக்சைடுகள் மற்றும் ஈரால்க்கைலமைடுகள் முதலியன இவ்வகையில் சேர்க்கப்படுகின்றன.

மரபார்ந்த உலோகங்களுடன் லாந்தனைடுகள், ஆக்டினைடுகள் மற்றும் அரையுலோகத் தனிமங்களான போரான், சிலிக்கன். ஆர்சனிக் மற்றும் செலினியம் போன்ற உலோகங்களும் கரிம உலோகச் சேர்மங்களாக உருவாகும் தன்மையைக் கொண்டுள்ளன. உதாரணம், மூவெத்தில் போரேன் (Et3B) என்ற கரிமப் போரான் சேர்மம்.

கரிம ஈனிகளுடன் அணைவுச் சேர்மங்கள்[தொகு]

பல்வேறு கூட்டுச் சேர்மங்களிலும் உலோகம் மற்றும் கரிம ஈனிகளுக்கு இடையே ஈதல்பிணைப்பு காணப்படுகிறது. கரிம ஈனிகள் பெரும்பாலும் பல்லணு வகைத் தனிமங்களான ஆக்சிசன் அல்லது நைட்ரசன் அணுக்கள் மூலமாக உலோகங்களுடன் பிணைந்துள்ளன. இவ்வகைப் பிணைப்புடன் காணப்படும் சேர்மங்கள் அணைவுச் சேர்மங்கள் எனப்படுகின்றன. ஆனாலும் , ஒருவேளை ஈனிகள் உலோகங்களுடன் நேரடியாக உலோகம்-கார்பன் பிணைக்கப்ட்டிருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தால் அவை கரிம உலோகச் சேர்மங்கள் என்ற வகையிலேயே சேர்க்கப்படுகின்றன. உதாரணம் [(C6H6)Ru(H2O)3]2+. அசிட்டைலசிட்டோனேட்டுகள் மற்றும் ஆல்க்காக்சைடுகள் போன்ற கொழுப்பு விரும்பிகள் உலோகக் கரிமங்கள் என்றே அழைக்கப்படுகின்றன.


மேற்கோள்கள்[தொகு]

  1. Robert H. Crabtree (2005). The Organometallic Chemistry of the Transition Metals. Wiley. பக். 560. ISBN 978-0-471-66256-3. http://www.wiley.com/WileyCDA/WileyTitle/productCd-0471662569.html. 
  2. Toreki, R. (2003-11-20). "Organometallics Defined". Interactive Learning Paradigms Incorporated.
  3. Gupta, B. D., Elias, Anil J. (2013). Basic Organometallic Chemistry: Concepts, Syntheses and Applications. Universities Press, CRC Press. ISBN 978-81-7371-8748. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிம_உலோக_வேதியியல்&oldid=1942868" இருந்து மீள்விக்கப்பட்டது