கர்ட் ஆல்டெர்
கர்ட் ஆல்டர் | |
---|---|
பிறப்பு | கோனிக்சட்டே (சோர்சோவ்), செருமானியப் பேரரசு | 10 சூலை 1902
இறப்பு | 20 சூன் 1958 கோல்ன், மேற்கு செருமனி | (அகவை 55)
தேசியம் | செருமானியர் |
துறை | கரிம வேதியியல் |
பணியிடங்கள் | ஐஜி ஃபார்பென் இண்டஸ்ட்ரி, கோலோன் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பெர்லின் பல்கலைக்கழகம் கீல்ஸ் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | டையீல்ஸ்-ஆல்டர் வினை ஆல்டர்-ஈன் வினை |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (1950) |
கர்ட் ஆல்டர் (Kurt Alder) (டாய்ச்சு ஒலிப்பு: [ˈkʊʁt ˈaldɐ] ( கேட்க) ; (10 சூலை 1902 – 20 சூன் 1958) ஒரு ஜெர்மன் வேதியியலாளர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]ஆல்டர் சிலேசியாவின் கோனிக்ஷூட்டே (இன்றைய சோர்சோவ், மேல் சிலேசியா, போலந்து ) தொழில்துறை பகுதியில் பிறந்தார், அங்கு இவர் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பைப் பெற்றார். 1922 ஆம் ஆண்டில் கோனிக்ஷூட்டே போலந்தின் ஒரு பகுதியாக மாறியபோது ஆல்டர் அப்பகுதியை விட்டு வெளியேறினார். இவர் 1922 ஆம் ஆண்டு முதல் பெர்லின் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பயின்றார் , பின்னர் கீல் பல்கலைக்கழகத்தில் ஓட்டோ பால் ஹெர்மன் டீல்ஸ் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்பணிக்காக 1926 ஆம் ஆண்டில் இவரது முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
1930 ஆம் ஆண்டில் ஆல்டர் கீல் பல்கலைக்கழகத்தில் வேதியியலுக்கான வாசகராக நியமிக்கப்பட்டார், மேலும் 1934 ஆம் ஆண்டில் விரிவுரையாளராக பதவி உயர்வு பெற்றார். 1936 இல் அவர் கீலை விட்டு வெளியேறி லீவர்குசனில் உள்ள ஐஜி ஃபார்பென் இண்டஸ்ட்ரியில் சேர, அங்கு இவர் செயற்கை இரப்பர் தொடர்பாகப் பணியாற்றினார். பின்னர் 1940 ஆம் ஆண்டில் கோலோன் பல்கலைக்கழகத்தில் பரிசோதனை வேதியியல் மற்றும் வேதியியல் தொழில்நுட்பப் பேராசிரியராகவும், அங்குள்ள வேதியியல் நிறுவனத்தின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். இந்த நேரம் முழுவதும் மற்றும் ஐரோப்பாவில் அடிப்படை ஆராய்ச்சிக்கு பல தடைகள் இருந்தபோதிலும், இவர் கரிமச் சேர்மங்களின் தொகுப்பில் தனது குறிப்பிட்ட ஆர்வங்கள் பற்றிய ஆய்வுகளின் ஒரு முறையான திட்டத்தை தொடர்ந்தார். மொத்தத்தில் இவர் இந்தத் துறையில் 151 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டார்.
1945 ஆம் ஆண்டில் இவர் எத்திலீன்டையமீன்டெ்டராஅசிட்டிக் அமிலத்தின் கண்டுபிடிப்பாளரான ஃபெர்டினாண்ட் மன்சுடன் நெருக்கமாக பணியாற்றினார். [1] 1949 ஆம் ஆண்டில், அவர்கள் இணைந்து டையீன் தொகுப்பு மற்றும் சேர்க்கை வினைகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.[2]
ஆல்டர் மிகவும் பிரபலமான மற்றும் பல கெளரவப் பட்டங்களையும் மற்றும் இதர விருதுகளையும் பெற்றார். வேதியியலுக்கான 1950 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசினைத் தனது ஆசிரியர் டீல்ஸ் உடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் இணைந்து கண்டறிந்த வினையானது டையீல்ஸ்-ஆல்டர் வினை என்றழைக்கப்படுகிறது. இவரது நினைவாக நிலவில் உள்ள பள்ளம் லூனார் கிரேடர் ஆல்டர் என்று பெயரிடப்பட்டது. டைல்ஸ்-ஆல்டர் வினையின் மூலம் உருவாக்கப்பட்ட பூச்சிக்கொல்லியும் அறிவியலாளரின் பெயரால் ஆல்ட்ரின் என்றழைக்கப்பட்டது.
ஆல்டர் 1958 ஆம் ஆண்டில் சூன் மாதத்தில் 55 வயதில் இறந்தார். இவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. [3] இருப்பினும் அவரது உடல் ஜெர்மனியின் கோல்னில் உள்ள அவரது குடியிருப்பில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. சடலத்தை கண்டெடுத்த அவரது மருமகள், அழுகிப்போன சதையின் துர்நாற்றம் தெருவில் இருந்து உணரும் அளவிற்கு வீசியதாகத் தெரிவித்தார். கெர்ட்ரூட் ஆல்டர் தனது கணவரைக் கடைசியாகப் பார்த்தபோது நம்பமுடியாத அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தனது ஆராய்ச்சிக் குறிப்புகளை எழுதும் போது "லெஸ் ஜார்டின்ஸ் டு சோவனிர் " (தி மெமரி கார்டன்) என்ற சொற்றொடரை அடிக்கடி முணுமுணுத்ததாகவும் தெரிவித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Paolieri, Matteo (December 2017). "Ferdinand Münz: EDTA and 40 years of inventions". Bull. Hist. Chem. (ACS) 42 (2): 133–140. https://www.researchgate.net/publication/321552574.
- ↑ Münz, Ferdinand; Alder, Kurt (1949). "Diensynthese und substituierende Addition beim Divinyl-methan-typus Addition von Maleinsäure-anhydrid an Pentadien-1,4 und an 1,4-Dihydro-benzol". Justus Liebigs Ann. Chem. 565: 126–135. doi:10.1002/jlac.19495650113..
- ↑ "NNDB".
வெளி இணைப்புகள்
[தொகு]- கர்ட் ஆல்டெர் on Nobelprize.org including the Nobel Lecture on December 12, 1950 Diene Synthesis and Related Reaction Types
- [1] பரணிடப்பட்டது 2020-10-18 at the வந்தவழி இயந்திரம் English Translation of Diels and Alder's seminal 1928 German article that won them the Nobel prize. English title: 'Syntheses of the hydroaromatic series'; German title "Synthesen in der hydroaromatischen Reihe".