பலோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பலோடி என்பது இந்திய மாநிலமான ராஜஸ்தானில் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது பலோடி வட்டத்தின் தலைமையகம். ரினின் உப்புத் தொழில் காரணமாக பாலோடி "உப்பு நகரம்" என்றும் அழைக்கப்படுகிறது. பலோடி தார்ப் பாலைவனத்தின் இடையக மண்டலத்தில் உள்ளது. இங்கு பெரும்பாலும் வறண்ட காலநிலை காரணமாக அதிக வெப்பநிலைக்கு உட்பட்டது. 19 மே 2016 அன்று இங்கு இந்தியாவில் அதிகபட்சமாக வெப்பநிலை 51 °C (124 °F) பதிவானது.[1] இதனருகே உலகின் பெரிய நாள் ஒன்றுக்கு 2,245 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் பட்லா சூரிய மின் ஆற்றல் பூங்கா அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

பலோடி ஆரம்பத்தில் பல்வர்திகா என்று அழைக்கப்பட்டது. விக்ரம் நாட்காட்டி (விக்கிரமாதித்தன் நிறுவிய நாட்காட்டி) 1515 இல், ஸ்ரீ சித்தூஜி கல்லாவால் பலோடியை நிறுவப்பட்டது. ஸ்ரீ மா லதியால் பின்னர் பல்வரிதிகா என்று பெயரிடப்பட்டது. பின்னர் பலோடி கோட்டையைக் கட்ட பொருளுதவி செய்த ஸ்ரீ சித்து கல்லாவின் விதவை மகள் பாலாவின் வேண்டுகோளின் பேரில் "பலோடி" என்று பெயர் மாற்றப்பட்டது.

பலோடி, ஜோத்பூர்-ஜெய்சல்மேர் இரயில் பாதை பகுதியில் அமைந்துள்ளது. இது மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும், துணைப்பிரிவு தலைமையகமாகவும் விளங்குகிறது. இந்த நகரம் ஜோத்பூரிலிருந்து 142 கிலோமீட்டர்கள் (90 mi) தொலைவில் அமைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகரத்தின் தற்போதைய மக்கள் தொகை 44,756 ஆகும். பலோடி பிகானேர், நாகவுர் மற்றும் ஜெய்சல்மேர் மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது. இது சாலை மற்றும் இரயில் போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தின் இரயில் நிலையம் 1914 இல் நிறுவப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை எண் 15 (பதான்கோட்-காண்ட்லா) மற்றும் மாநில நெடுஞ்சாலை எண் 2 (ஜோத்பூர்- ஜெய்சல்மேர்) ஆகியவை இந்நகரம் வழியாக செல்கின்றன.

15 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பலோடி நிறுவப்பட்டது. 1488 ஆம் ஆண்டில், ராவ் சுஜாவின் பேரன் அமீர் சிங் என்பவரால் ஒரு கோட்டை கட்டப்பட்டது. அவர் தனது காலத்தில் பல வளர்ச்சி பணிகளை செய்தார். பலோடியில் 1230 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற கல்யாண் ராவ்ஜி கோயில், லதியால் தேவி மற்றும் சாந்திநாத் தேவியின் கோயில் ஆகிய பழமையான கோயில்கள் உள்ளன. மேலும் எந்தவிதமான கயிறுகளும் அல்லது கட்டுமானங்களும் (சிமென்ட் பூச்சு) இல்லாமல் கல்லினால் மட்டுமே கட்டப்பட்ட பார்சுவநாதர் சமண கோயில் 1847 ஆம் ஆண்டில் ஓஸ்வால் சமண சமூகத்தால் நிறுவப்பட்டது. இது பழைய பெல்ஜியம் கண்ணாடியால் ஆனது. இந்த சமண கோயில் கட்டிடக்கலையில் ஒரு அற்புதமாக கருதப்படுகிறது (மொத்தம் பத்து சமண கோவில்கள் மற்றும் ஆறு தாதாபாதிகள் சன்னதி).

1547 இல், ராவ் மால்டியோ பலோடியின் ஆட்சியாளராக இருந்தார். 1578 ஆம் ஆண்டில் இது பிகானேர் மன்னர் ராய் சிங்கிடம் பேரரசர் அக்பரால் ஒப்படைக்கப்பட்டது. 1615 ஆம் ஆண்டில், இது ஜோத்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராவ் சூர் சிங்கின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது, அதன் பின்னர் ஜோத்பூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

பலோடி நகரத்தின் இருப்பை கல்யாஞ்சி-கா-மந்திர் கோயிலில் உள்ள விஜய் நகர் படான் என்று அழைக்கப்படும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் லதியால் தேவி கோவிலில் ஒரு பெரிய புனரமைப்பு செய்யப்பட்டது. லதியால் தேவிக்கு வெள்ளி சிம்மாசனம் (சிங்காசன்) செய்யப்பட்டது.

பலோடியில் ஏராளமான சமூகங்களும் வாழ்கின்றன. பாலோடி கிராமப்புறங்களில் பெரும்பான்மையானவர்கள் சிந்தி முஸ்லிம் சமூகத்தினரும், நகரத்தில் புஷ்கர்ணா பிரம்ம சமூகத்தினரும் வாழ்ந்தனர். பலோடியில் சிறு தொழில்கள் செழித்து வளர்கின்றன. சோடியம் உப்பு மற்றும் பாரிசு பூச்சு உற்பத்திக்காக இந்த நகரம் அறியப்பட்டது. இந்தியாவில் மிகப்பெரிய உப்பு வழங்குநர்களில் பலோடியும் ஒன்றாகும்.

இதனையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "India sets new heat record as temperatures soar". Channel NewsAsia. Archived from the original on 2016-05-21. பார்க்கப்பட்ட நாள் 2016-05-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலோடி&oldid=3576105" இலிருந்து மீள்விக்கப்பட்டது