பரோர்
பரோர் (ஆங்கிலம்: Baror, இந்தி மற்றும் ராசத்தானி: बरोर, பஞ்சாபி: ਬਰੋਰ) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சிறீ கங்காநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பண்டைய சிந்துவெளி நாகரீகத்தின் தொல்லியல் களமாகும். அரப்பா மற்றும் அரப்பாவுக்கு முந்தைய காலத்து மட்பாண்டங்கள் அகழ்வாராய்ச்சிக்குப் பின் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன [1].
அமைவிடம்
[தொகு]இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில், இந்திய-பாகிஸ்தான் பன்னாட்டு எல்லைப்புறத்தில் உள்ள சிறீ கங்காநகர் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் அனுப்கார்-இராம்சிங்பூர் சாலையில் பரோர் தொல்லியல் தளம் அமைந்துள்ளது.
கண்டுபிடிப்பு
[தொகு]வரலாற்றுக்கு முந்தையத் தளமான பரோர் 1916-17 காலகட்டத்தில் லூய்கி பியோ டெசிடிட்டோரி (1887-1919) இத்தாலிய இந்தியவியல் அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அம்லானந்து கோசு (இந்தியாவின் தொல்பொருள் ஆய்வுக் கழகம், அல்லது ஏ.எசு.ஐ.யின் முன்னாள் இயக்குநர்) என்பவரால் இந்த தளத்தில் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டன. 2003-04 ஆம் ஆண்டில் இந்திய தொல்பொருள் ஆய்வக அகழ்வாய்வு கிளை -3, பாட்னா சரசுவதி மரபுரிமை திட்டத்தின் கீழ் அகழ்வாய்வைத் தொடங்கியது. 400 × 300 சதுர பரப்பளவுள்ள பகுதி அகழ்வாராய்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. 2006 – 2007 ஆண்டு காலத்தில் பளிங்குக்கல் வீடுகள், சாலைகள், தெருக்கள் முதலியன கண்டறியப்பட்டன.
அகழ்வாய்வுகள்
[தொகு]அரப்பா மற்றும் அராப்பாவுக்கு முந்தைய கால மட்பாண்டங்கள் தொல்பொருள் அறிஞர்களால் இங்கு கண்டறியப்பட்டன. வட்ட மற்றும் முக்கோண சுடுமண் சிலைகள், துளையிட்ட அலங்கார வட்ட மணிகள் மற்றும் இடைவெளி நிரப்பிகள் பீங்கான் அலங்காரப் பொருட்கள் போன்றவை சில உதாரணங்களாகும்.
- 1. அலங்கார நகைகளுடன் இருந்த ஒரு மனித எலும்புக்கூடு இங்கு கிடைத்தது.
- 2. இரண்டு கற்கள் உராய்வின் பின்னர் சிவப்பு நிற நீர்மம் உருவாவதாகக் கண்டறியப்பட்டது.
- 3. 5 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு களிமண் அடுப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
- 4. 8000 முத்துகளால் நிரப்பப்பட்ட ஒரு குடம் இங்கு காணப்பட்டது.[2]