சிந்துவெளி முத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள சில சிந்துவெளி முத்திரைகளும், அவற்றில் அச்சுப் படிகளும்
காண்டாமிருகம், எருது, யானை ஆகிய விலங்கு உருவங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள்

சிந்துவெளி முத்திரை எனப்படுவது, சிந்துவெளி நாகரிகத்துக்கு உட்பட்ட இடங்களில் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒருவகை முத்திரை ஆகும். ஏறத்தாழ 2000 முத்திரைகள் அகழ்வாய்வுகளின்போது எடுக்கப்பட்டன. இம் முத்திரைகள் பொதுவாக சதுரம் அல்லது நீள்சதுர வடிவம் கொண்டவை. முத்திரை அச்சுக்கள் மென்மையான ஒருவகை மாவுக்கல்லைச் செதுக்கிச் செய்யப்பட்டவை. இவற்றைப் பயன்படுத்தி, களிமண், "பையான்சு" ஆகியவற்றாலான சிறு வில்லைகளில் அச்சிட்டனர். இவற்றைப் பின்னர் சூளையில் சுட்டு முத்திரைகள் செய்யப்பட்டன. இவற்றின் முன்பக்கத்தில் மனிதர், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் உருவங்களும், ஒருவகைப் படவெழுத்துக்களும் காணப்படுகின்றன. சில முத்திரைகளில் பின்புறத்தில் ஒரு புடைப்பும், அதற்றுக் குறுக்காக ஒரு துளையும் காணப்படுவது வழக்கம்.[1] இத்துளையினூடாக நூலைக் கோர்த்துக் கட்டுவதற்கு அமைவாக இது உள்ளது.

பயன்பாடு[தொகு]

இம்முத்திரைகள் எதற்குப் பயன்பட்டன என்பது குறித்துத் தெளிவு இல்லை. எனினும், இவை வணிகப் பொருட்களுக்கு முத்திரை இடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்பதே பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்து. மெசொப்பொத்தேமியா போன்ற தொலைதூர இடங்களிலும் இவ்வகை முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது இக்கருத்துக்கு வலுவூட்டுகின்றது. கொள்கலன்கள், கதவுகள், களஞ்சியங்கள் போன்றவற்றை மூடி முத்திரையிடவும், ஆவணங்களைச் சரிபார்த்ததற்குச் சான்றாகவும் இம் முத்திரைகள் பயன்பட்டிருக்கலாம் என்பது சில ஆய்வாளர்கள் கருத்து.[2] இவற்றை நூலில் கோர்த்துக் கழுத்தில் அல்லது கையில் கட்டியிருக்கக்கூடும் என்ற கருத்தும் உள்ளது. இவற்றுட் சில சடங்கு சார்ந்த தேவைகளுக்கும் பயன்பட்டிருக்கலாம்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காட்சிகளைக் கொண்டனவான விளக்கக் காட்சிகளுடன் கூடிய முத்திரை அச்சுக்களும் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டன. இவை "பையான்சு" அல்லது களிமண் வில்லை முத்திரைகளை உருவாக்கப் பயன்பட்டன. இவை பொருளாதார அல்லது சடங்குசார் தேவைகளுக்குப் பயன்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[3] இவ்வாறான விளக்கக்காட்சி முத்திரைகளில் இடம்பெறும் கருத்தியல்கள் உயர்குடியினரதும், இம்முத்திரைகளை ஒரு கட்டுப்படுத்தும் பொறிமுறையாகப் பயன்படுத்திய பிறரதும் தகுதியை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அவசியமாக இருந்ததாகவும் கருதப்படுகிறது.[4] இது தவிர, இத்தகைய முத்திரைகள் பிந்திய நகரக் காலத்தில் கூடுதலாகப் பயன்பட்டதானது, நகரத்தின் பல்வேறு சமுதாயங்களை ஒருங்கிணைப்பதற்குச் சடங்குகளையும், தொடர்பான கருத்தியல்களையும் ஊக்கப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதையும் அதற்கு இம் முத்திரைகள் பயன்பட்டதையும் காட்டுகிறது.[5]

உருச் செதுக்கல்கள்[தொகு]

சிந்து வெளி எழுத்துக்களுடன், விலங்குகள் சூழ அமர்ந்த நிலையில் ஒரு யோகின் உருவம் பொறித்த முத்திரை
இரண்டு புலிகளுடன் போரிடும் வீரன், சிந்துவெளி முத்திரை

முத்திரைகளின் முன்புறத்தில் இருக்கும் மனித, விலங்கு, தாவர உருவங்கள் தனித்தனியாகவும், சேர்ந்தும் காணப்படுவதுடன், சிக்கலானவையாகவும், குறியீட்டுத் தன்மையுடன் கூடியனவாகவும் உள்ளன. மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இவ்வுருவங்களிற் பல கலப்புப் பிராணிகளாக உள்ளன. சில விலங்கு இயல்புகளைக் கொண்ட மனித உருவங்களாகவும், மனித முகம் கொண்ட விலங்கு உருவங்களாகவும் இருக்கின்றன. முத்திரைகளில் காணப்படும் விலங்குகளுள், ஒற்றைக்கொம்பன் உருவமே மிகவும் அதிகமாகக் காணப்படுவது. செபு எருது, எருது, புலி, யானை, காண்டாமிருகம், காட்டுச் செம்மறி போன்ற விலங்கு உருவங்களும் உள்ளன.

சில முத்திரைகளிற் காணப்படுகின்ற உருவங்கள் சமயம் சார்ந்த உட்பொருள் கொண்டவையாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. எடுத்துக்காட்டாகச் சில முத்திரைகளில் யோகியைப் போன்று அமர்ந்த நிலையிலான உருவங்கள் உள்ளன. கொம்புடன் கூடிய இந்த உருவங்கள் அக்காலத்தில் மக்கள் வழிபட்ட கடவுளைக் குறிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. ஒரு முத்திரையில், நிற்கும் நிலையில் கொம்புடன் கூடிய யோகநிலை உருவமும், அதற்கு முன் ஒரு மனிதன் முழங்காலில் இருந்து பணிவது போலவும் உள்ளது. கீழே வரிசையாக மனித உருவங்கள் காணப்படுகின்றன. இன்னொரு முத்திரையில், இவ்வாறான யோகநிலை உருவமும் அதைச் சூழ அவ்வுருவத்தை நோக்கியவாறு நான்கு விலங்குகளின் உருவங்களும் உள்ளன. இது "பசுபதி" என அழைக்கப்படும் இந்துக் கடவுளான சிவனின் தொடக்கக் கருத்துருவாக இருக்கக்கூடும் என்பது பல ஆய்வாளர்களின் கருத்து.

கிமு 2600-2450 காலப்பகுதியைச் சேர்ந்த முத்திரைகளில் படவெழுத்துக்களுடன் தனி விலங்கு உருவங்களே காணப்படுகின்றன. கிமு 2450-2200 ஆண்டுக் காலப்பகுதியில் விளக்கக் காட்சிகளைக் கொண்ட முத்திரைகளைக் காண முடிகிறது. கிமு 2200க்கும் 1900க்கும் இடைப்பட்ட காலத்தில் மேலும் விரிவான விளக்கப்படங்கள் முத்திரைகளில் இடம்பெறுகின்றன. [6]

படவெழுத்துக்கள்[தொகு]

முத்திரைகளின் முன்புறத்தில் காணப்படும் செதுக்கல்களுள் முக்கியமான ஒன்று படவெழுத்து வரி ஆகும். இவை பெரும்பாலும் குறைந்த நீளம் கொண்டவை. ஒன்று அல்லது இரண்டு வரிகளாக அமைந்தவை. இது இந்த முத்திரைக்கு உரியவரின் பெயராக இருக்கலாம் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. ஏறத்தாழ 400 வகையான வெவ்வேறு படவெழுத்துக் குறிகள் இனங்காணப்பட்டு உள்ளன.[7] இவ்வெழுத்துக்கள் அக்காலத்தில் பேசப்பட்ட மொழியை அல்லது மொழிகளை எழுதுவதற்குப் பயன்பட்டவை என்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனினும், இவற்றைக் கண்டுபிடித்து 130 ஆண்டுகளுக்கு மேலாகியும் அம்மொழி அல்லது மொழிகள் எவை என்று கண்டறிய முடியவில்லை என்பதுடன், அக் குறியீடுகளையும் வாசித்து அறிந்துகொள்ள முடியவில்லை. அண்மையில் இது குறித்து ஆய்வு செய்த சில ஆய்வாளர்கள் இவை எந்த மொழியையும் எழுதுவதற்கான எழுத்துக்கள் அல்ல என்னும் கருத்தை முன்வைத்துள்ளனர். இவர்களுடைய கருத்துப்படி இவை சமய, அரசியல், சமூகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட மொழி சார்பற்ற குறியீடுகளே. பல மொழிகளைப் பேசும் மக்களை இலகுவாகக் கட்டுப்படுத்துவதற்காகச் சிந்துவெளியில் இக்குறியீட்டு முறையைக் கையாண்டிருக்கலாம் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.[8]

சிறப்பு[தொகு]

இதில் காணப்படும் எழுத்துக்களை இன்னும் வாசித்து அறிய முடியாவிட்டாலும், அக்காலத்துப் பொருளாதாரம், கலை, சமயம் போன்றவை தொடர்பான தகவல்கள் பலவற்றை ஓரளவு அறிந்து கொள்வதற்கு இம் முத்திரைகள் முக்கியமானவையாக இருக்கின்றன. குறிப்பாக, அக்கால மக்களின் ஆடைகள், அணிகள், தலை அலங்காரம் என்பவை தொடர்பிலும், அக்காலத்துச் சிற்பிகளின் திறமை குறித்தும், வெளிநாடுகளுடனான வணிகத் தொடர்புகள் பற்றியும், சமய நம்பிக்கைகள், எழுத்துமுறை என்பன குறித்தும் ஓரளவு தகவல்களை இம்முத்திரைகளில் காணப்படும் உருவங்கள், விளக்கக் காட்சிகள் என்பன மூலமும், அம் முத்திரைகளின் பரம்பல் மூலமும் அறிய முடிகின்றது..[9]

குறிப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்துவெளி_முத்திரை&oldid=3288957" இருந்து மீள்விக்கப்பட்டது