மொகெஞ்சதாரோ
மொகெஞ்சதாரோவில் தொல்லியல் அழிபாடுகள் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | ii, iii |
உசாத்துணை | 138 |
UNESCO region | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1980 (4வது தொடர்) |

மொகெஞ்சதாரோ (Mohenjo-daro) என்பது சிந்துவெளிப் பண்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த முக்கிய நகரங்களுள் ஒன்று. ஏறத்தாழ கிமு 26 ஆம் நூற்றாண்டளவில் உருவாகியிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்ற இது இன்றைய பாகிஸ்தானின் சிந்துப் பகுதியில் உள்ள சுக்கூர் என்ற ஊருக்கு தென்மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிந்துவெளியில் அமைந்திருந்த நகரங்களில் மிகவும் பெரியது எனப்படும் இந்நகரம், அக்காலத்தில் தெற்காசியாவின் முக்கியமான நகரமாகவும் விளங்கியது.
கிமு 2500 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது, பண்டைய சிந்துவெளி நாகரிகத்தின் மிகப்பெரிய குடியிருப்புகளில் ஒன்றாகும். மேலும் உலகின் ஆரம்பகால முக்கிய நகரங்களில் ஒன்றான இது பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியா, மினோவன் நாகரிகம் மற்றும் நோர்டே சிகோ நாகரிகங்களுடன் சமகாலத்ததாகும்.[1][2]
குறைந்தது 40,000 மக்கள் தொகையுடன், மொகெஞ்சதாரோ பல நூற்றாண்டுகளாக செழிப்பாக இருந்துள்ள. ஆனால் கிமு 1700 வாக்கில் சிந்து சமவெளி நாகரிகத்தின் பிற பெரிய நகரங்களுடன் கைவிடப்பட்டுள்ளது.[3] இந்த இடம் 1920களில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், 1980 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலக பாரம்பரியக் களமாக நியமிக்கப்பட்ட நகரத்தின் இடத்தில் குறிப்பிடத்தக்க அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது தெற்கு ஆசியாவில் முதன்முதலில் இவ்வாறு நியமிக்கப்பட்ட இடம் இதுவே ஆகும்.[4] இந்த இடம் தற்போது அரிப்பு மற்றும் முறையற்ற மறுசீரமைப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[5]
இது சிந்துவெளியின் இன்னொரு முக்கிய நகரமான ஹரப்பாவை விட நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இது ஹரப்பாவில் இருந்து 400 மைல் தொலைவில் உள்ள இந்நகரம் கி.மு. 1700-இல் சிந்து ஆற்றின் தடம் மாறியதால் அழிந்திருக்கலாம் எனச் சிலர் நம்புகிறார்கள். மொகெஞ்சதாரோவின் அழிபாடுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் முதன் முதலில் 1920களில் கண்டறியப்பட்டது. எனினும் ஆழமான ஆய்வு முயற்சிகள் 1960 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே நடைபெற்றது.

இது யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம்பெற்று வருகின்ற அண்மைக் காலத்திய விரிவான நடவடிக்கைகள், பாகிஸ்தானின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் திணைக்களத்தினதும், பிற ஆலோசகர்களினதும் உதவியுடன் யுனெஸ்கோ மேற்கொண்டுவரும் காப்பாண்மை நடவடிக்கைகளை மையப்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் ஏறத்தாழ 500 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த காப்பு வேலைகள், நிதிப் பற்றாக்குறையினால், 1997 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. எனினும் ஏப்ரல் 1997 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவின் ஆதரவில், மொகஞ்சதாரோ அழிபாடுகளை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதற்கான திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. இரண்டு பத்தாண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் இந்தத் திட்டத்திற்காக யுனெஸ்கோ நிறுவனம் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.
வரலாறு
[தொகு]மொகெஞ்சதாரோ கி.மு 2600 அளவில் உருவாகி கி.மு. 1700 அளவில் அழிந்துபோனதாகச் சொல்லப்படுகின்றது. சர் ஜான் மார்ஷல் என்பவர் தலைமையிலான தொல்லியலாளர்கள் இதனை 1920 இல் கண்டுபிடித்தனர். இவர் நினைவாக இவர் பயன்படுத்திய மோட்டார் வண்டி இன்றும் மொகெஞ்சதாரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டில், அஹ்மத் ஹசன் தானி என்பவரும் மோர்ட்டிமர் வீலர் என்பவரும் மேலும் அகழ்வாவுகளை இப்பகுதியில் நடத்தினர்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mohenjo-Daro (archaeological site, Pakistan) on Encyclopedia Britannica website Retrieved 25 November 2019
- ↑ Gregory L. Possehl (11 November 2002). The Indus Civilization: A Contemporary Perspective. Rowman Altamira. p. 80. ISBN 978-0-7591-1642-9.
- ↑ Shea, Samantha (14 November 2022). "Pakistan's lost city of 40,000 people". www.bbc.com (in ஆங்கிலம்). Retrieved 2022-11-18.
- ↑ "Mohenjo-Daro: An Ancient Indus Valley Metropolis".
- ↑ "Mohenjo Daro: Could this ancient city be lost forever?". BBC. 27 June 2012. Retrieved 27 October 2012.