சிந்துவெளி வரிவடிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிந்துவெளி/ஹரப்பா வரிவடிவம் என்பது, சிந்துவெளி நாகரிக அழிபாடுகளிடையே கிடைத்த ஆயிரக்கணக்கான முத்திரை குத்துவதற்கான அச்சுக்களிலும், அவற்றின்மூலம் முத்திரை குத்தப்பட்ட பல களிமண் வில்லைகளிலும் காணப்படுகின்ற வரிவடிவங்கள் ஆகும். இவை அக்காலத்தில் சிந்துவெளி மக்களால் பேசப்பட்ட மொழிக்கான வரிவடிவங்களாகக் கருதப்படுகின்றன. கிடைத்த சான்றுகளின்படி இவ்வரிவடிவங்கள் கி.மு 2,500 அளவில் பயன்பாட்டில் இருந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. சுமார் 450 வெவ்வேறான குறியீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ் வரிவடிவங்கள் இன்னும் வாசித்துப் புரிந்துகொள்ளப்படவில்லை. 1920ல் இவ் வரிவடிவங்கள் வெளிக்கொணரப்பட்ட பின்னர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள அறிஞர்கள் பலர் இவ்வரிவடிவங்களை வாசித்தறிய முயன்றுவருகின்றார்கள். எனினும் 1960 களுக்கு முன்னர் இவ்வாராய்ச்சி முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது.

எழுத்துக்களைப் புரிந்துகொள்வதிலுள்ள சிரமங்கள்[தொகு]

இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குச் சவாலாக அமைந்துள்ள விடயங்களுள் பின்வருவனவும் அடங்கும்.

  • இவ் வரிவடிவங்களைப் பயன்படுத்திய மொழியைப்பற்றி எதுவும் தெரியாது.
  • கிடைத்த முத்திரைகளில் எழுதப்பட்டிருப்பவை பெரும்பாலும் 5 அல்லது 6 குறியீடுகளைக் கொண்டவையாகவே உள்ளன. நீளமான விவரணங்கள் எதுவும் இல்லை.
  • அறியப்பட்ட வேறு வரிவடிவங்களைக் கொண்ட இருமொழிக் குறிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சிந்துவெளி வரிவடிவத்தின் தன்மை[தொகு]

கிடைக்ககூடிய சான்றுகளின்படி இவ்வரிவடிவத்தின் சில தன்மைகள் குறித்துச் சில தகவல்கள் தெரியவந்துள்ளன.

  • இது வலமிருந்து இடமாக எழுதப்பட்டது.
  • இது logo-syllabic வகையைச் சார்ந்தது.

சிந்துவெளியில் பேசப்பட்ட மொழி[தொகு]

இந்த வரிவடிவம் தொடர்பான சர்ச்சையில் முக்கிய இடம்பெறுவது, இது எத்தகைய மொழிக்காகப் பயன்பட்டது என்பது தொடர்பிலேயாகும். பொதுவாக இரண்டு கொள்கைகள் ஆய்வாளர்களிடையே நிலவின. இது முதல்நிலைச் சமஸ்கிருத மொழிக்கானது என்பது ஒரு கொள்கை. இல்லை இது திராவிட மொழிக்கான(தமிழ்) எழுத்து வடிவமேயென்பது இரண்டாவது கொள்கை.

ஆஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற ஆராய்ச்சி யாளர்கள் சமஸ்கிருதம், கி.மு 1500 க்குப் பின்னர் இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்களுடனேயே கொண்டுவரப்பட்டதென்றும், கி.மு 2500 க்கு முற்பட்ட சிந்துவெளி வரிவடிவங்களோடு அதற்குத் தொடர்பு இருக்கமுடியாது என்றும் வாதிக்கிறார்கள். அதற்கான தொல்லியல் சான்றுகளையும் நிறுவி உள்ளனர். அத்துடன் ஆரியப் பண்பாட்டை விளக்குவதாகக் கருதப்படும் மிகப் பழைய நூலான ரிக் வேதம் நூறுவீதக் கிராமப் பண்பாட்டுக்குரியது என்றும் சிந்துவெளிப் பண்பாடு போன்ற நகரப் பண்பாடு ரிக் வேதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் எடுத்துக்காட்டுகிறார்கள். ஆரியப் பண்பாட்டின் இன்னொரு அம்சமான குதிரை, சிந்துவெளி முத்திரைகளிற் சித்தரிக்கப்படாமையும் அவர்களுடைய சான்றுகளில் ஒன்றாகும்.

சமஸ்கிருதக் கொள்கையின் ஆதரவாளர்கள், சமஸ்கிருதம் இந்தியாவிலேயே தோன்றி வளர்ந்ததென்று காட்டமுற்படுகிறார்கள். ஆனால் மிக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துச் சான்றுகளின்படி சிந்துவெளி வரிவடிவங்களில் தமிழ் பிராமி வரிவடிவங்களை நோக்கிய வளர்ச்சி காணப்படுவதாகவும் இவர்கள் கூறுகிறார்கள். இக் கடைசிக் கூற்றுச் சரியாயின், தமிழ் பிராமி எழுத்துக்களே முதல்நிலைத் திராவிட மொழியொன்றுக்காகத் தோன்றியிருக்கக் கூடும் என்று சந்தேகிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல சான்று. இன்றைய அளவில் அது நிருபணம் செய்யப்பட்டும் விட்டது.

ஆய்வுகளின் நிலை[தொகு]

காலத்துக்குக் காலம் தாங்கள் சிந்துவெளி எழுத்துக்களை வாசித்துவிட்டதாகக் கூறுபவர்களும் இருக்கிறார்கள் எனினும், இவையெதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

சிந்துவெளி வரிவடிவ ஆய்வாளர்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்துவெளி_வரிவடிவம்&oldid=1826670" இருந்து மீள்விக்கப்பட்டது