சார்லசு எம். ரைசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்லசு எம். ரைசு
பிறப்புஆகத்து 25, 1952 (1952-08-25) (அகவை 71)
சேக்ரமெண்டோ[1]
பணியிடங்கள்
 • வாசிங்டன் பல்கலைக்கழக மருத்துவ பள்ளி
 • இராக்கபெல்லர் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம், டேவிசு (BS)
கலிபோரினியா தொழில்நுட்பக் கழகம் (முனைவர் பட்டம்)
விருதுகள்
 • பியூ அறக்கட்டளை உதவித்தொகை, 1986
 • மெகாவாட் பீஜெரிங்க் வைராலஜி பரிசு, 2007
 • இராபர்ட் கோச் விருது, 2015
 • இலசுகர்-டே-பேக்கி மருத்துவ ஆராய்ச்சி விருது, 2016
 • மருத்துவத்திற்கான நோபல் பரிசு, 2020

சார்லசு எம். ரைசு (Charles M. Rice பிறப்பு: ஆகத்து 25, 1952) என்பவர் அமெரிக்காவினைச் சார்ந்த தீநுண்மி அறிஞர். இவர் 2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்கள் மூவரில் ஒருவர். இவரின் முக்கிய ஆராய்ச்சி கல்லீரல் அழற்சி தீநுண்மி சி குறித்ததாகும் . இவர் இராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் தீநுண்மத் துறையின் பேராசிரியராக உள்ளார்.

ரைசு அமெரிக்காவின் அறிவியல் மேம்பாட்டிற்கான அமைப்பின் உறுப்பினராகவும், தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் உள்ளார். இவர் அமெரிக்காவின் தீநுண்ம சங்கத்தின் தலைவராக 2002 முதல் 2003 வரை செயலாற்றியுள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு இலாசுக்கர்-டீபேக்கி மருத்துவ மருத்துவ ஆராய்ச்சி விருதினை இரால்வு எஃப்.டபிள்யூ பார்டென்ச்லேகர் மற்றும் மைக்கேல் ஜே. சோபியா ஆகியோருடன் இணைந்து பெற்றார்.[2] [3] தற்பொழுது ரைசிற்கு, மைக்கேல் ஆட்டன் மற்றும் ஆர்வி ஆலதருடன் 2020ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு, கல்லீரல் தீநுண்மி கண்டுபிடிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.[4]

கல்வி மற்றும் தொழில்[தொகு]

ரைசு 1974 இல் தேவிசின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பி.எஸ் பட்டம் பெற்றார். 1981 ஆம் ஆண்டில், கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியிலிருந்து உயிர் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். அங்கு இவர் ஜேம்ஸ் ஸ்ட்ராசின் ஆய்வகத்தில் ஆர்.என்.ஏ தீநுண்மிகள் குறித்துப் படித்தார். முனைவர் பட்டமேல் ஆராய்ச்சிக்காக அவர் நான்கு ஆண்டுகள் கால்டெக்கில் இருந்தார்.[5] [6] முனைவர் பட்ட மேல் ஆய்விற்குப்பின் 1986ல் ரைசு வாசிங்டன் பல்கலைக்கழக மருத்துவ பள்ளியில் உதவி பேராசிரியராக பணியாற்றினார். இங்கு 2001 வரை உதவிப் பேராசிரியராக பணியாற்றி, பின்னர் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.[சான்று தேவை]

ரைசு 2001 முதல் இராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் மாரிசு ஆர். மற்றும் கொரின் பி. கிரீன்பெர்கு பேராசிரியராக இருந்து வருகிறார். மேலும் வாசிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி மற்றும் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும் உள்ளார். இவர் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், தேசிய சுகாதார நிறுவனங்கள், உலக சுகாதார அமைப்புகளின் குழுக்களில் பணியாற்றியுள்ளார்.[5]

2003 முதல் 2007 வரை சோதனை மருத்துவ ஆய்வு இதழின் தொகுப்பாசிரியராகவும், 2003 முதல் 2008 வரை தீநுண்மி ஆய்வு இதழ், 2005 முதல் தற்போது வரை பி.எல்.ஓ.எஸ் நோய் நுண்ணுயிரி இதழின் ஆசிரியராகவும் உள்ளார். 400க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை பிற ஆய்வாளர்களுடன் சேர்ந்து வெளியிட்டுள்ளார்.[5]

ஆராய்ச்சி[தொகு]

கால்டெக்கில் பணியாற்றியபோது ரைசு, சிண்ட்பிசு தீநுண்மத்தின் மரபணுத் தொகுதி குறித்து ஆய்வில் ஈடுபட்டிருந்தார். பிளாவி தீநுண்ம தீநுண்மிகளிலும் ஆய்வு செய்தார். இந்த பணிக்காக இவர் ஆய்வு மாதிரியாகப் பயன்படுத்திய மஞ்சள் காமாலை தீநுண்மி ஆய்வில் ஏற்பட்ட முன்னேற்றம் மஞ்சள் காமாலைக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்க வழிவகுத்தது. கல்லீரல் அழற்சி சி வைரசு குறித்த ஆய்வுகள் இவருக்கு பல விருதுகளை பெற வழிவகுத்தன.

விருதுகள்[தொகு]

 • 1986 பியூ அறக்கட்டளை உதவித்தொகை
 • 2004 அமெரிக்கவின் அறிவியல் மேம்பாட்டிற்கான அமைப்பின் உறுப்பினர்
 • 2005 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், தேசிய அறிவியல் அகாடமி
 • 2005 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், அமெரிக்க அகாடமி ஆஃப் மைக்ரோபயாலஜி
 • 2007 மெகாவாட் பீஜெரிங்க் வைராலஜி பரிசு
 • 2015 இராபேர்ட்டு கோச்சு பரிசு
 • 2016 ஆர்ட்டோயிஸ்-பெய்லெட் லாட்டூர் சுகாதார பரிசு [7]
 • 2016 இலாசுக்கர் விருது
 • 2020 மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு [4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லசு_எம்._ரைசு&oldid=3717483" இருந்து மீள்விக்கப்பட்டது