வீடு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீடு
இயக்கம்பாலு மகேந்திரா
தயாரிப்புகலா தாஸ்
திரைக்கதைபாலு மகேந்திரா
இசைஇளையராஜா
நடிப்புஅர்ச்சனா
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
படத்தொகுப்புபாலு மகேந்திரா
கலையகம்ஸ்ரீ கலா இண்டர்நேஷனல்
வெளியீடுசூலை 1, 1988 (1988-07-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வீடு 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தின் கதை, இயக்கம், ஒளிப்பதிவு, தொகுப்பு ஆகிய நான்கு பொறுப்புகளையும் பாலுமகேந்திரா ஒருவரே ஏற்றுக்கொண்டு திறம்பட செயலாற்றியுள்ளார்[1]. இப்படத்தில் சொந்தமாக ஒரு வீடு கட்ட முயற்சிக்கும் நடுத்தர வகைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நடிகை அர்ச்சனா நடித்திருக்கிறார். இதற்கு இசை அமைத்திருப்பவர் இளையராஜா. இது பாலுமகேந்திராவின் சிறந்த படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது[1][2][3]. இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது இத்திரைப்படம்[4].

கதைச் சுருக்கம்[தொகு]

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 22 வயதேயான சுதா (அர்ச்சனா) என்னும் இளம்பெண். அவள் வேலை பார்த்துத்தான் வீட்டின் பாடு கழிகிறது. அவளுடன் அவளுடைய தங்கையும் தாத்தாவும் (சொக்கலிங்க பாகவதர்) இருக்கிறார்கள். சுதாவுக்கு ஒரு காதலன் (பானுசந்தர்). அவன் ஒரு நடுத்தர வர்கத்தைச் சேர்ந்தவன், அவனுக்கு திருமண வயதில் இரண்டு தங்கைகள். இந்த நிலையில் அவள் வசிக்கும் வாடகை வீட்டைக் காலி செய்ய வேண்டிய சூழல் வருகிறது. வீடு தேடி அலைகிறாள். சுதா வீடு தேடி அலைந்து சோர்ந்திருக்கும் வேளையில் சொந்த வீடு கட்டினால் என்ன என்று நண்பர் ஒருவர் யோசனை தருகிறார். அவளுக்கும் சரியென்று படுகிறது. வீடு கட்டத் தேவையான நிலம் (2 கிரவுண்ட்) ஏற்கெனவே அவளிடம் இருக்கிறது. தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வீடு கட்டக் கடன் பெறுகிறாள். எஞ்சிய பணத்துக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை விற்கிறார்கள். பல சிக்கல்களுக்கு இடையில் செயலில் இறங்கி, வீடு கட்டத் தொடங்கிய அன்றே மழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து ஒப்பந்தக்காரரின் திருட்டுத் தனம் தெரியவருகிறது. சிமெண்டையும் ஜல்லியையும் திருடி விற்கிறார்கள். அதைத் தட்டிக்கேட்கும்போது வேலையை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுகிறார் அவர். அந்த நேரத்தில் நிலைமையைச் சமாளிக்க உதவுகிறார்கள் சித்தாள் வேலை பார்க்கும் மங்காவும் (பசி சத்யா) மேஸ்திரியும். இடையில் பணப் பிரச்சினை, மனப் பிரச்சினை என்று பலதும் வருகின்றன. அத்தனையையும் சமாளித்து வீட்டை கட்டி முடித்த சமயத்தில் அந்த வீடு கட்டிய நிலம் மாநகர நீர் திட்டத்துக்கானது என்று அரசு சொல்கிறது. தனது வீட்டைக் காப்பாற்ற நீதிமன்றத்தின் படியேறிப் போராடுகிறாள் அவள்.

நடிகர்கள்[தொகு]

பாலுமகேந்திராவின் கூற்று[தொகு]

தனது தாய்க்கு அளிக்கும் அஞ்சலியாக வீடு திரைப்படத்தை பாலு மகேந்திரா கருதுகிறார்.[5] தனக்கு எட்டு வயதாக இருக்கும் போது தனது தாய் ஒரு வீடு கட்டுவதில் பட்ட கஷ்டங்களையும் அதனால் அவளது குணமே சற்று மாறுபட்டதையும் குறித்து பாலு மகேந்திரா கூறுவது: "அதற்குப் பின் அவள் அவளாக இல்லை. அடிக்கடி பொறுமையிழந்து கோபப்பட்டாள். எங்களுக்குப் பாடம் சொல்லித்தரவோ எங்களுடன் விளையாடவோ அவளுக்கு நேரமிருக்கவில்லை. அவளது இந்த மாற்றங்கள் என்னைக் குழப்பமடையச் செய்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் வீடு படம் இந்த மாற்றங்களை உயிர்ப்பித்திருக்கிறது."[5] பாலு மகேந்திரா, வீடு மற்றும் சந்தியா ராகம் ஆகிய இரு படங்களையும் தனது படங்களிலேயே தனக்குத் திருப்தி அளித்த படங்கள் எனக் கூறுகிறார்.[5]

திரையிசை[தொகு]

இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. இப்படத்தில் பாடல்களே கிடையாது[6]. இதன் திரையிசை முழுவதும் இளையராஜாவின் ஹவ் டு நேம் இட் (How To Name It?) ஆல்பத்திலிருந்து அமைந்துள்ளது.[7][8]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-11-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-21 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://webcache.googleusercontent.com/search?q=cache:7waehzUwdxIJ:imsports.rediff.com/millenni/theod.htm+veedu+balu+mahendra&cd=87&hl=de&ct=clnk&gl=de&client=opera&source=www.google.de
  3. http://www.epinions.com/content_5006401668
  4. "35th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. January 9, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 5.2 http://www.rediff.com/movies/2002/jan/07balu.htm
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2003-06-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-21 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  7. http://www.imdb.com/title/tt0235858/reviews
  8. http://www.s-anand.net/blog/classical-ilayaraja-9/

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீடு_(திரைப்படம்)&oldid=3715666" இருந்து மீள்விக்கப்பட்டது