தமிழ்நாட்டில் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளை காட்டும் வரைபடம்

தமிழ்நாட்டில் மிகவும் வளர்ச்சி பெற்ற, அடர்த்தியான, நவீன போக்குவரத்துக் கட்டமைப்பு அமைந்துள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார்துறை போக்குவரத்து அமைப்புகள் இந்த மாநிலத்தின் தேவைகளை நிறைவு செய்கின்றன. தலைநகரமான சென்னை வான்வழிச் சேவைகள் மூலமாக உள்நாட்டு, வெளிநாட்டு சேரிடங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் நாட்டின் மிகவும் மும்முரமான வானூர்தி நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் தவிர மாவட்ட, உள்ளூராட்சி சாலைகள் தரமாக இடப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகின்றன.

சாலைப் போக்குவரத்து[தொகு]

தஞ்சாவூரில் தேசிய நெடுஞ்சாலை 67

தமிழ்நாட்டில் மிகவும் முழுமையான சாலை பிணையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் 100 கிமீ2 பரப்பிற்கு 153 கிமீக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன; இது தேசிய சராசரியான 100 கிமீ2 பரப்பிற்கு 103 கிமீ சாலையடர்த்தியை விட கூடுதலாகும். ஏப்ரல் 1946ஆம் ஆண்டில் மாநில அரசில் தனியாக நெடுஞ்சாலைகள் துறை நிறுவப்பட்டது; இது அக்டோபர் 30, 2008 முதல் நெடுஞ்சாலைகள் & சிறு துறைமுகங்கள் துறை என பெயரிடப்பட்டுள்ளது.[1] இத்துறை தமிழ்நாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மற்றும் பிற முதன்மை மாவட்டச் சாலைகளை கட்டமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் பொறுப்பேற்கிறது. இதற்காக இத்துறையில் ஏழு பிரிவுகள் இயங்குகின்றன:தேசிய நெடுஞ்சாலைகள் பிரிவு, கட்டமைப்பு & பராமரிப்பு பிரிவு, நாபார்டு மற்றும் ஊரகச் சாலைகள் பிரிவு, திட்டப்பணி பிரிவு, மெட்ரோ பிரிவு, தமிழ்நாடு சாலைத்துறை திட்டப்பணி பிரிவு, புலனாய்வு மற்றும் வடிவமைப்புப் பிரிவு என்பன ஆகும். இந்தப் பிரிவுகள் மாநிலத்தின் 31 மாவட்டங்களிலும் 120 கோட்டங்களுடனும் 450 உட்கோட்டங்களுடனும் பரவியுள்ளது.[2]

தேசிய நெடுஞ்சாலைகள்[தொகு]

கத்திப்பாரா மேம்பாலம் தெற்கு ஆசியாவில் உள்ள பெரும் குறுக்கிடா மாற்றுப்பாதை அமைப்புகளில் ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும், பராமரிக்கவும் புதுப்பிக்கவும் நெடுஞ்சாலைகள் & சிறு துறைமுகங்கள் துறையில் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு 1971ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[3] தமிழ்நாட்டிலுள்ள 25 தேசிய நெடுஞ்சாலைகளில், 12 நெடுஞ்சாலைகள் தமிழ்நாட்டிற்குள்ளேயே அமைந்துள்ளன. தே.நெ. 47, தே.நெ. 49, தே.நெ. 208, தே.நெ. 220 ஆகியன தமிழ்நாட்டையும் கேரளத்தையும் இணைக்கின்றன. [தே.நெ. 67, தே.நெ. 207, தே.நெ. 209 ஆகியன தமிழ்நாட்டையும் கருநாடகத்தையும் இணைக்கின்றன. தே.நெ. 205, தே.நெ. 219 மற்றும் தே.நெ. 234 தமிழ்நாட்டையும் ஆந்திரத்தையும் இணைக்கின்றன. தே.நெ. 4 தமிழ்நாட்டை மகாராட்டிரம், கர்நாடகம், மற்றும் ஆந்திராவுடன் இணைக்கிறது. தே.நெ. 5 தமிழ்நாட்டை ஆந்திரா வழியாக ஒடிசா வுடன் இணைக்கிறது. தே.நெ. 7 தமிழ்நாட்டை கர்நாடகம் மற்றும் ஆந்திரா வழியாக மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம் மற்றும் உ.பியுடன் இணைக்கிறது. தே.நெ. 66 தமிழ்நாட்டையும் கர்நாடகத்தையும் புதுச்சேரியுடன் இணைக்கிறது.[4]

மாநில நெடுஞ்சாலைகள்[தொகு]

பாம்பன் தீவை இந்திய நிலப்பகுதியுடன் இணைக்கும் பாம்பன் சாலை மேம்பாலமும் (இடது) தொடர்வண்டி பாலமும் (வலது). தொடர்வண்டிப் பாலம் 1914ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது; அக்காலத்தில் பொறியியல் அதிசயமாகக் கருதப்பட்டது.

மாவட்டத் தலைநகர்களையும் முக்கிய நகரங்களையும் இணைக்க கட்டமைக்கப்படும் சாலைகளும் மாநிலத்தினுள்ளும் அண்டை மாநிலங்களிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கும் சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகள் என அறியப்படுகின்றன. கட்டமைப்பு & பராமரிப்பு பிரிவு இவற்றின் கட்டமைப்பு, பராமரிப்புப் பணிகளுக்கு பொறுப்பேற்கிறது. தவிர இப்பிரிவு முதன்மை மாவட்டச் சாலைகளுக்கும் (MDR) பிற மாவட்டச் சாலைகளுக்கும் (ODR) பொறுப்பேற்கிறது. இப்பிரிவு சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திருவண்ணாமலை வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[5]

பிற சாலைகள்[தொகு]

இந்த வகைப்பாட்டில் முதன்மை மாவட்டச் சாலைகள், பிற மாவட்டச் சாலைகள் (ODR), ஊரக & கரும்புச்சாலைகள் மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலை, இராசீவ் காந்தி சாலை / தகவல் தொழிற்நுட்ப விரைவுச்சாலை, எண்ணூர்-மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம் (EMRIP), சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை மற்றும் வெளி வட்டச் சாலைத் திட்டம் போன்ற சிறப்புச் சாலைகள் உள்ளடங்கும். இந்தச் சாலைகள் ஒரு மாவட்டத்தினுள் தயாரிப்பு மற்றும் சந்தைகளுக்கிடையே தொடர்பேற்படுத்துகின்றன. மேலும் மாவட்டத் தலைநகரையும் வட்டத் தலைநகரங்களையும் இணைக்கின்றன. கிழக்குக் கடற்கரைச் சாலை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தால் (TNRDC) கட்டப்பட்ட முதல் சாலையாகும்; இது 2002இல் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.

தமிழ்நாடு சாலைப் பிணையம்
வகை நீளம் (கிமீ)
தேசிய நெடுஞ்சாலைகள்/விரைவுச் சாலைகள் 4,873
மாநில நெடுஞ்சாலைகள் 9,384
முதன்மை மாவட்டச் சாலைகள் 11,288
பிற மாவட்டச் சாலைகள் & கரும்புச் சாலைகள் 36,096
பஞ்சாயத்துச் சாலைகளும் மற்ற துறைகளின் சாலைகளும் 1,37,399
மொத்தம் (ஏறத்தாழ) 1,99,040

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்[தொகு]

தமிழ்நாடு அரசு சார் நிறுவனமாகிய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு முழுவதும் சாலைப்போக்குவரத்து மூலம் தமிழகத்தின் போக்குவரத்து தேவையை பெருமளவு நிறைவு செய்கிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

  • மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னை
  • அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம்
  • அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை
  • அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி
  • அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்
  • அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம்
  • அரசுப் போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர்
  • அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்

தொடருந்துப் போக்குவரத்து[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள தொடர்வண்டி நிலையங்கள்

வான்வழிப் போக்குவரத்து[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள விமான நிலையங்கள் [6]

நீர்வழிப் போக்குவரத்து[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள துறைமுகங்கள்[தொகு]

குளச்சல் துறைமுகம்[தொகு]

இது ஒரு இயற்கை துறைமுகமாகும். தமிழ்நாடு மாநில அரசின் கட்டுபாட்டில் இருந்த இத்துறைமுகத்தை மத்திய அரசு ஏற்று ரூ21000 கோடி செலவில் நாட்டின் மிகப்பெரிய துறைமுகமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.[7] மிக நீள கப்பல்கள்(mother vessels) ஒரு துறைமுகத்திற்கு வந்து செல்ல 18 அடி ஆழம் தேவை. குளச்சல் துறைமுகம் இயற்கையாகவே 20 அடி ஆழம் கொண்டது.[8]


சான்றுகோள்கள்[தொகு]

  1. Government of Tamil Nadu. "Highways Department renamed as Highways and Minor Ports Department". http://www.tn.gov.in/gorders/par/par_e_202_2008.pdf. பார்த்த நாள்: 15 July 2010. 
  2. Highways Department, Government of Tamil Nadu. "Wings of Highways Department". http://www.tnhighways.org/org.htm. பார்த்த நாள்: 15 July 2010. 
  3. Tamil Nadu Highways Department. "National Highways wing". http://www.tnhighways.org/nh.htm. பார்த்த நாள்: 15 July 2010. 
  4. "National Highways in Tamil Nadu". Ministry of Road Transport and Highways, Government of India. http://morth.nic.in/index3.asp?langid=2&sublink2id=359. பார்த்த நாள்: 15 July 2010. 
  5. Highways Department, Government of Tamil Nadu. "Highways Circle of Highways Department, Tamil Nadu". http://www.tnhighways.org/cir.htm. பார்த்த நாள்: 15 July 2010. 
  6. http://www.tamilnadu-tourism.com/tamilnadu-travel/tamilnadu-airports.html
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=165063. 
  8. http://www.newindianexpress.com/states/tamil_nadu/Colachel-All-Set-to-Become-Major-Port/2015/09/04/article3009640.ece