ஜதிந்திர மோகன் சென்குப்தா
ஜதிந்திர மோகன் சென்குப்தா | |
---|---|
சிட்டகொங்கில் சென்குப்தாவின் மார்பளவு சிற்பம் | |
பிறப்பு | சிட்டகொங், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 22 பெப்ரவரி 1885
இறப்பு | 23 சூலை 1933 ராஞ்சி, இந்தியா | (அகவை 48)
தேசியம் | பிரிதானிய இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | டவுனிங் கல்லூரி, கேம்பிரிட்ச் |
பணி | வழக்கறிஞர் |
பெற்றோர் | ஜத்ரா மோகன் சென்குப்தா (தந்தை) |
வாழ்க்கைத் துணை | எடித் எலன் கிரே (பின்னர் நெல்லி சென்குப்தா என அறியப்பட்டார்) |
ஜதிந்திர மோகன் சென்குப்தா (Jatindra Mohan Sengupta) (22 பிப்ரவரி 1885 - 23 சூலை 1933) [1] பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக போராசிய ஓர் இந்தியப் புரட்சியாளர் ஆவார். இவரை பிரித்தானிய காவலர்கள் பலமுறை கைது செய்துள்ளனர். 1933 ஆம் ஆண்டில், இந்தியாவின் ராஞ்சியில் அமைந்துள்ள சிறையில் இறந்தார்.
ஒரு மாணவராக, இவர் இங்கிலாந்து சென்றார். அங்கு கேம்பிரிட்ச் டவுனிங் கல்லூரியில் சட்டம் பயின்றார்.[2] இவர் அங்கு தங்கியிருந்தபோது, இவர் நெல்லி சென்குப்தா என்று அழைக்கப்பட்ட எடித் எலன் கிரேவை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். இந்தியா திரும்பிய பிறகு, இவர் ஒரு சட்ட பயிற்சியைத் தொடங்கினார். இந்திய அரசியலிலும் சேர்ந்தார், இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். மேலும் ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றார். இறுதியில், இவர் தனது அரசியல் உறுதிப்பாட்டிற்கு ஆதரவாக தனது சட்ட நடைமுறையை கைவிட்டார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]
இவர் பிப்ரவரி 22, 1885 அன்று பிரித்தானிய இந்தியாவின் சிட்டகாங் மாவட்டத்தில் (இப்போது வங்காளதேசத்தின் சிட்டகொங்) மியான்மரில் ஒரு முக்கிய நில உரிமையாளர் (ஜமீந்தார் ) குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜத்ரா மோகன் சென்குப்தா ஒரு வழக்கறிஞராகவும் வங்காள சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
இவர் கொல்கத்தாவில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகக் கல்லூரியில் படித்தார். பல்கலைக்கழகப் படிப்பை முடித்த பின்னர், 1904 இல் இங்கிலாந்து சென்று சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[3]
தொழில்
[தொகு]சட்டப் பட்டம் பெற்ற பின்னர், இவர் இங்கிலாந்தில் உள்ள பட்டியில் அழைக்கப்பட்டார். பின்னர் தனது மனைவியுடன் இந்தியாவுக்குத் திரும்பினார். அங்கு இவர் ஒரு வழக்கறிஞராக சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். 1911 இல், பரித்பூரில் நடந்த வங்காள மாகாண மாநாட்டில் சிட்டகொங்கை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[3] இது இவரது அரசியல் வாழ்க்கையின் தொடக்கமாகும். பின்னர், இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். மேலும், பர்மா எண்ணெய் நிறுவனத்தின் ஊழியர்களை ஒன்றினைத்து ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்க ஏற்பாடு செய்தார்.[4]
1921 ஆம் ஆண்டில், இவர் இந்திய தேசிய காங்கிரசின் வங்காள வரவேற்புக் குழுக்களின் தலைவரானார். அதே ஆண்டு, பர்மா எண்ணெய் நிறுவனத்தில் வேலைநிறுத்தத்தின் போது, இவர் பணியாளர் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.[4] அரசியல் பணிகளில் இவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு காரணமாக இவர் தனது சட்ட நடைமுறையை கைவிட்டார். குறிப்பாக மகாத்மா காந்தியின் தலைமையிலான ஒத்துழையாமை இயக்கம் தொடர்பானது. 1923 இல், இவர் வங்காள சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
1925 ஆம் ஆண்டில், சித்தரஞ்சன் தாசின் மரணத்திற்குப் பிறகு, வங்காள சுயாட்சிக் கட்சியின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், வங்காள மாகாண காங்கிரசு குழுவின் தலைவரானார். இவர் ஏப்ரல் 10, 1929 முதல் 29 ஏப்ரல் 1930 வரை கொல்கத்தா மேயராக இருந்தார்.[6] மார்ச் 1930 இல், யங்கோனில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், அரசாங்கத்திற்கு எதிராக மக்களைத் தூண்டியதற்கும், இந்தியா-மியான்மர் பிரிவினையை எதிர்த்த குற்றச்சாட்டிலும் இவர் கைது செய்யப்பட்டார்.
1931 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசின் நிலைப்பாட்டை ஆதரித்து, வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள இவர் இங்கிலாந்து சென்றார்.[7] சிட்டகாங் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஆங்கிலேயர்கள் செய்த காவல் அட்டூழியங்களின் படங்களை இவர் சமர்ப்பித்தார். இது பிரித்தானிய அரசாங்கத்தை உலுக்கியது.[8]
இறப்பு
[தொகு]இவரது அரசியல் நடவடிக்கைகள் காரணமாக பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். சனவரி 1932 இல், இவர் கைது செய்யப்பட்டு புனேவிலும் பின்னர் டார்ஜிலிங்கிலும் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர், இவர் ராஞ்சியில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு, இவரது உடல்நிலை மோசமானது. இவர் 23 சூலை 1933 இல் இறந்தார்.[9]
செல்வாக்கு
[தொகு]இந்திய சுதந்திர இயக்கத்திற்கு இவர் அளித்த பங்களிப்பு காரணமாக, வங்காள மக்களால் "நாட்டின் பிரியமானவர்" என்று பொருள்படும் மரியாதைக்குரிய தேஷ்பிரியா அல்லது தேசபிரியா என்ற பெயரில் அன்பாக நினைவுகூரப்படுகிறார். பல குற்றவியல் வழக்குகளில் இவர் தேசியவாத புரட்சியாளர்களை நீதிமன்றத்தில் பாதுகாத்து தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றினார். இவர் பஹர்தலி விசாரணையில் சூரியா சென், அனந்த சிங், அம்பிகா சக்ரவர்த்தி ஆகியோருக்காக வாதாடினார். மேலும் காவல் ஆய்வாளர் பிரபுல்லா சக்ரவர்த்தியின் கொலை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளம் புரட்சியாளரான பிரேமானந்தா தத்தாவையும் காப்பாற்றினார். 1985 ஆம் ஆண்டில், இவரும், இவரது மனைவி நெல்லி ஆகியோரின் நினைவாக இந்திய அரசாங்கத்தால் ஒரு அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rivista degli studi orientali. Istituti editoriali e poligrafici internazionali. 2001. Retrieved 18 December 2012.
- ↑ "How a small society of Indian Cambridge students helped destroy the British Raj". Varsity Online (in ஆங்கிலம்). Retrieved 2019-10-09.
- ↑ 3.0 3.1 3.2 "Postal Stamp Image". Indian Post. Retrieved 20 December 2012.
- ↑ 4.0 4.1 Srilata Chatterjee (2002). Congress Politics in Bengal: 1919–1939. Anthem Press. pp. 82–. ISBN 978-1-84331-063-1.
- ↑ Sayed Jafar Mahmud (1994). Pillars of Modern India 1757–1947. APH Publishing. pp. 47–. ISBN 978-81-7024-586-5.
- ↑ "Mayor of Kolkata". Kolkata Municipal Corporation. Retrieved 21 December 2012.
- ↑ Sayed Jafar Mahmud (1994). Pillars of Modern India 1757–1947. APH Publishing. pp. 47–. ISBN 978-81-7024-586-5.
- ↑ Prasad Das Mukhopadhyaya (1995). Surya Sen o swadhinata sangram (Bengali). Suryasena Prakashani. pp. 74, 75.
- ↑ Sayed Jafar Mahmud (1994). Pillars of Modern India 1757–1947. APH Publishing. pp. 47–. ISBN 978-81-7024-586-5.
மேலும் படிக்க
[தொகு]- Jatindra Mohan Sen Gupta (1933). Deshapriya Jatindra Mohan Sen-Gupta: his life and work. Modern Book Agency.