உள்ளடக்கத்துக்குச் செல்

சுந்தரமூர்த்தி நாயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுந்தரமூர்த்தி சுவாமிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுந்தரமூர்த்தி நாயனார்
பெயர்:சுந்தரமூர்த்தி நாயனார்
குலம்:ஆதி சைவர்
பூசை நாள்:ஆடிச் சுவாதி
அவதாரத் தலம்:திருநாவலூர்
முக்தித் தலம்:திருவஞ்சைக்களம்
சுந்தரர்
சுந்தரர் (இடமிருந்து மூன்றாமவர்)
பிறப்புதிருநாவலூர்
இறப்புதிருவஞ்சைக்களம்
சமயம்சைவ சமயம்
தலைப்புகள்/விருதுகள்நாயன்மார், சமயக்குரவர்
தத்துவம்சைவ சமயம் பக்தி நெறி

சுந்தரமூர்த்தி நாயனார் அல்லது சுந்தரர் (Sundarar) என்பவர் சைவ சமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.[1] இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார் எனப்படுகிறது.[2] பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும். இதனைத் தடுத்தாட்கொள்ளுதல் எனச் சைவர்கள் கூறுகின்றனர். இவர், இறைவன் மீது, பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களைத் 'திருப்பாட்டு' என்று அழைக்கின்றனர்.[2] திருப்பாட்டினைச் 'சுந்தரர் தேவாரம்' என்றும் அழைப்பர்.[2] திருமணத்தினைத் தடுத்து, சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே, பரவையார், சங்கிலியார் என்ற பெண்களைத் திருமணம் செய்துவைத்தார்.[2]

இவர் வாழ்ந்தது பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டளவிலாகும்.[3] இவர் பாடிய தேவாரங்கள், 7-ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.[3] இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில், 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே, சேக்கிழார், பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றோரான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து, சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 எனக் கையாண்டார்.

இவரை திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்கமுனையர் என்ற மன்னனால் தத்து எடுத்து வளர்க்கப்பட்டவர். இவர் 38000 பதிகங்கள் பாடியதாகக் கூறப்படுகிறது. ஆனால் கிடைத்தவை 100 மட்டுமே. “வித்தகம் பேச வேண்டா விரைந்து பணி செய்ய வேண்டும்” என்று இறைவன் இவரிடம் கூறினார்.

சுந்தரர் தேவாரம்

[தொகு]

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களைச் 'சுந்தரர் தேவாரம்' என்று அழைக்கின்றனர். இப்பாடல்களைத் 'திருப்பாட்டு' என்றும் அழைப்பது வழக்கம்.[2] இப்பாடல்களைப் பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.

இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38,000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன.[2] அதனால், பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன.[2] தேவாரங்களில், 'செந்துருத்திப் பண்' கொண்டு பாடல் பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களைப் பாடவில்லை.[2]

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களைத் ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம்; அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.[4]

சுந்தரர் வரலாறு

[தொகு]

சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினைச் சேர்ந்தவர்.[2] இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும்.[2] நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்ததாகக் கூறப்பட்டதால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.[3]

சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.[3]

தடுத்தாட்கொள்ளல்

[தொகு]

மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று வந்த முதியவர் ஒருவர், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓர் ஓலையைக் காட்டி, சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதாக சுந்தரர் கருதினார், "பித்தா பிறை சூடி..." என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனைத் தம்முடைய நண்பராக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும் சென்று, தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தமது தோழனாகக் கருதித் தமக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்..." எனத் தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான்பெற்ற நெல்லைத் தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.

திருமணங்கள்

[தொகு]

திருவாரூரில் பரவையார் என்றொரு அழகிய பெண் இருந்தார். அவர் பதியிலார் குலத்தினைச் சேர்ந்தவர். சுந்தரர் அப்பெண்ணைக் கண்டு, காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு, 'ஞாயிறு' என்ற ஊரில் வேளாளர் ஒருவரின் மகளான 'சங்கிலியார்' எனும் அழகிய பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். உன்னை விட்டுப் பிரியமாட்டேன் திருவெற்றியூரிலேயே உன்னுடன் வாழ்வேன் என்று சுந்தரர் சங்லியாருக்கு சிவபெருமான் அறிய வாக்களித்து அவரை மணக்கிறார். சில காலத்துக்குப் பிறகு திருவாரூரில் பரவையாரின் நினைவு வந்து வாட்ட அவரைக் காணவேண்டி தான் கொடுத்த வாக்கை மறந்து திருவொற்றியூரிலிருந்து புறப்படுகிறார். அப்போது சுந்தரருக்கு இரு கண்களிலும் பார்வை அற்றுப் போகிறது. கொடுத்த வாக்கை மீறியதால் தனக்கு இவ்வாறு நேர்ந்ததாக சுந்தரர் உணந்தார். பின்னர் ஆரூர் இறைவனைப் பாடி பார்வையைப் பெறுவேன் என்று பாடி தன் பயணத்தைத் தொடர்ந்தார். காஞ்சிபுரத்தை அடைந்தபோது இவருக்கு இடது கண் பார்வை வந்தது. தன் பயணத்தில் வழியெல்லாம் பாடியபடி திருவாரூர் அடைந்த பிறகு சுந்தரருக்கு இன்னொரு கண் பார்வை கிடைத்தது. இது இறையருளாளே நடந்ததாக நம்பப்படுகிறது. இந்த தற்காலிகப் பார்வை இழப்புக்குக் காரணம் அமோரோசிஸ் பியுகாஸ் என்ற மருத்துவ சிக்கலே ஆகும், அதாவது விழித்திரையின் குருதி ஓட்டத்தில் திடீரென்று ஏற்படும் குறைவினால் ஏற்படும் தற்காலிக பாதிப்பாக இருக்கலாம் என்கிறார் வரலாற்று ஆய்வாளரும் கண் மருத்துவருமான இரா. கலைக்கோவன்.[5]

சிவபெருமான் செயல்

[தொகு]

அரசரான சேரமான் பெருமாள், இவருக்கு நண்பராயிருந்தார்.

இறைவனும், இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை எனப்படுகிறது. சேரமான் பெருமானை இவர் சந்தித்துத் திரும்பும் போது, அம்மன்னர் பொன், பொருள், மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார் எனப்படுகிறது. சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’ எனத் தொடங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றதாக நம்பப்படுகிறது. திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான், சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை, இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

முக்தி

[தொகு]

சுந்தரர் தனது 18-ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட, பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையைச் சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார் என்று நம்பப் படகிறது.

அற்புதங்கள்

[தொகு]
முதலையுண்ட பாலகனைச் சுந்தரர் பதிகம் பாடி மீட்டல். கோவை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மரச் சிற்பம்

சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானின் தோழனாக விளங்கி, தமது வாழ்நாளில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். பெரியபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள அவரது முக்கிய அற்புதங்கள் பின்வருமாறு:

  • முதலை விழுங்கிய பிள்ளையை மீட்டது (திருப்புக்கொளியூர் அவிநாசி):
    • முதலையால் விழுங்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்த ஒரு சிறுவனை, "எற்றான் மறக்கேன்" என்ற தேவாரப் பதிகம் பாடி, முதலை வாயிலிருந்து அவனது வளர்ந்த வடிவோடு உயிருடன் மீட்டெடுத்தார். [2]
  • நெல் மலையைத் திருவாரூருக்கு அனுப்பியது (திருக்குண்டையூர்):
    • குண்டையூர் கிழார் அடியார்களுக்கு வழங்கச் சேர்த்த நெல் மலை போன்ற குவியலைத் திருவாரூருக்குக் கொண்டு சேர்க்க, சுந்தரர் சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் பூதகணங்களை அனுப்பி அந்த நெல் குவியல்களை ஒரே இரவில் திருவாரூரில் சேர்த்தார்.
  • செங்கற்களைப் பொன்னாக மாற்றியது (திருப்புகலூர்):
    • திருவாரூர் பங்குனி உத்திரத் திருவிழாவிற்குப் பொன் தேவைப்பட்டபோது, சுந்தரர் திருப்புகலூர் கோயிலில் தங்கி வழிப்பட்டார். அப்போது அவர் தலையணையாக வைத்திருந்த சுட்ட செங்கற்கள் யாவும் சிவபெருமானின் அருளால் பசும்பொன்னாக மாறின.
  • மணிமுத்தா நதிப் பொன்னைத் திருவாரூர் குளத்தில் பெற்றது (திருமுதுகுன்றம்):
    • விருத்தாசலத்தில் சிவபெருமான் தந்த பன்னீராயிரம் பொன்னை, இறைவனின் ஆணைப்படி அங்கிருந்த மணிமுத்தா நதியில் போட்டார். பின்னர் திருவாரூர் பரவையார் கோயில் கமல ஆலயக் குளத்தில் பதிகம் பாடி, போட்ட பொன்னை அப்படியே திரும்பப் பெற்றார்.
  • காவிரி ஆறு பிரிந்து வழிவிட்டது (திருவையாறு):
    • காவிரி ஆற்றில் வெள்ளம் பெருகி ஓடியதால், ஆற்றின் அக்கரையிலிருந்த ஐயாறப்பரைத் தரிசிக்க முடியாமல் தவித்தார். சுந்தரர் "பரவும் பரிசொன்று" எனப் பதிகம் பாடியவுடன், காவிரி ஆறு இருகூறாகப் பிரிந்து இவருக்கு வழிவிட்டது.
  • பரவையாரிடம் இறைவனைத் தூதாக அனுப்பியது (திருவாரூர்):
    • சுந்தரரின் ஊடலால் கோபமுற்றிருந்த அவரது மனைவி பரவையாரின் பிணக்கைத் தீர்க்க, சுந்தரருக்காகச் சிவபெருமானே இரண்டு முறை நள்ளிரவில் வீதிகளில் நடந்து தூது சென்று இருவரையும் சேர்த்து வைத்தார்.
  • வெள்ளை யானையில் கயிலாயம் சென்றது (திருவஞ்சைக்களம்):
    • தனது வாழ்நாளின் இறுதியில், தனது தோழரான சேரமான் பெருமாள் நாயனாருடன் சேர்ந்து, சிவபெருமான் அனுப்பிய வெள்ளை யானையின் மீது ஏறி உடலோடு திருக்கைலாய மலையை அடைந்தார். [2]

சுந்தரமூர்த்தி நாயனார் நிகழ்த்திய அற்புதங்கள்

[தொகு]

சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானின் தோழனாக விளங்கி, தமது வாழ்நாளில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். பெரியபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள அவரது முக்கிய அற்புதங்கள் பின்வருமாறு:

  • முதலை விழுங்கிய பிள்ளையை மீட்டது (திருப்புக்கொளியூர் அவிநாசி):
    • முதலையால் விழுங்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்த ஒரு சிறுவனை, "எற்றான் மறக்கேன்" என்ற தேவாரப் பதிகம் பாடி, முதலை வாயிலிருந்து அவனது வளர்ந்த வடிவோடு உயிருடன் மீட்டெடுத்தார். [2]
  • நெல் மலையைத் திருவாரூருக்கு அனுப்பியது (திருக்குண்டையூர்):
    • குண்டையூர் கிழார் அடியார்களுக்கு வழங்கச் சேர்த்த நெல் மலை போன்ற குவியலைத் திருவாரூருக்குக் கொண்டு சேர்க்க, சுந்தரர் சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் பூதகணங்களை அனுப்பி அந்த நெல் குவியல்களை ஒரே இரவில் திருவாரூரில் சேர்த்தார்.
  • செங்கற்களைப் பொன்னாக மாற்றியது (திருப்புகலூர்):
    • திருவாரூர் பங்குனி உத்திரத் திருவிழாவிற்குப் பொன் தேவைப்பட்டபோது, சுந்தரர் திருப்புகலூர் கோயிலில் தங்கி வழிப்பட்டார். அப்போது அவர் தலையணையாக வைத்திருந்த சுட்ட செங்கற்கள் யாவும் சிவபெருமானின் அருளால் பசும்பொன்னாக மாறின.
  • மணிமுத்தா நதிப் பொன்னைத் திருவாரூர் குளத்தில் பெற்றது (திருமுதுகுன்றம்):
    • விருத்தாசலத்தில் சிவபெருமான் தந்த பன்னீராயிரம் பொன்னை, இறைவனின் ஆணைப்படி அங்கிருந்த மணிமுத்தா நதியில் போட்டார். பின்னர் திருவாரூர் பரவையார் கோயில் கமல ஆலயக் குளத்தில் பதிகம் பாடி, போட்ட பொன்னை அப்படியே திரும்பப் பெற்றார்.
  • காவிரி ஆறு பிரிந்து வழிவிட்டது (திருவையாறு):
    • காவிரி ஆற்றில் வெள்ளம் பெருகி ஓடியதால், ஆற்றின் அக்கரையிலிருந்த ஐயாறப்பரைத் தரிசிக்க முடியாமல் தவித்தார். சுந்தரர் "பரவும் பரிசொன்று" எனப் பதிகம் பாடியவுடன், காவிரி ஆறு இருகூறாகப் பிரிந்து இவருக்கு வழிவிட்டது.
  • பரவையாரிடம் இறைவனைத் தூதாக அனுப்பியது (திருவாரூர்):
    • சுந்தரரின் ஊடலால் கோபமுற்றிருந்த அவரது மனைவி பரவையாரின் பிணக்கைத் தீர்க்க, சுந்தரருக்காகச் சிவபெருமானே இரண்டு முறை நள்ளிரவில் வீதிகளில் நடந்து தூது சென்று இருவரையும் சேர்த்து வைத்தார்.
  • வெள்ளை யானையில் கயிலாயம் சென்றது (திருவஞ்சைக்களம்):
    • தனது வாழ்நாளின் இறுதியில், தனது தோழரான சேரமான் பெருமாள் நாயனாருடன் சேர்ந்து, சிவபெருமான் அனுப்பிய வெள்ளை யானையின் மீது ஏறி உடலோடு திருக்கைலாய மலையை அடைந்தார். [2]

சுந்தரமூர்த்தி நாயனாரின் வேறு பெயர்களும் அவற்றின் காரணங்களும்

[தொகு]
சுந்தரமூர்த்தி நாயனாரின் வேறு பெயர்களும் அவற்றின் காரணங்களும்
எண்பெயர்பெயர்க்காரணம் / விளக்கம்
1ஆரூரன்திருவாரூரில் குடிமகாணாக வாழ்ந்ததாலும், பெற்றோர் இவருக்கு இட்ட இயற்பெயர் என்பதாலும் இப்பெயர் பெற்றது.
2நம்பியாரூரர்ஆன்மீகப் பெருமையும் தகுதியும் உடையவர் என்ற பொருளில் 'நம்பி' என்ற அடைமொழியுடன் 'நம்பியாரூரர்' என்று அழைக்கப்பட்டார்.
3சுந்தரர்கயிலாய மலையில் சிவபெருமானுக்குத் தொண்டு செய்தபோது, இவரது பேரழகைக் கண்டு சிவபெருமான் இவருக்கு இட்ட பெயர்.
4தம்பிரான் தோழன்சிவபெருமானை (தம்பிரான்) தனது நெருங்கிய தோழனாகப் பாவித்து, அவரிடம் உரிமை பாராட்டி பக்தி செய்ததால் இப்பெயர் பெற்றார்.
5வன்தொண்டர்திருமணத் தடுப்பின்போது சிவபெருமானை எதிர்த்து வன்மையாக வாதாடியதாலும், இறைவனிடம் பிடிவாதமாகப் பதிகங்கள் பாடி காரியம் சாதித்ததாலும் இப்பெயர் பெற்றார்.
6ஆலால சுந்தரர்கயிலாய மலையில் பாற்கடலில் தோன்றிய ஆலால நஞ்சை (விஷத்தை) சிவபெருமான் உண்ணும் பொருட்டு எடுத்துத் தந்ததால் இப்பெயர் பெற்றது (முற்பிறவிப் பெயர்).
7திருமுனைப்பாடி நாயனார்திருமுனைப்பாடி நாட்டின் மன்னரான நரசிங்க முனையரையரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டதால் இப்பெயராலும் குறிக்கப்பெறுவார்.

சுந்தரமூர்த்தி நாயனார் காலம்

[தொகு]

சுந்தரமூர்த்தி நாயனாரின் காலம் குறித்து வரலாற்று ஆய்வாளர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தார் என்பதே பொதுவான கருத்து.

வரலாற்றுச் சான்றுகள்

[தொகு]
  • சேரமான் பெருமாள் நாயனார் நட்பு:
    • சுந்தரரின் நெருங்கிய தோழரான சேரமான் பெருமாள் நாயனார், கேரளாவை ஆண்ட சேர மன்னர் ஆவார். இவரது காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் (ஏறத்தாழ கி.பி. 800–844) என வரலாற்று ஆசிரியர்களால் நிறுவப்பட்டுள்ளது.
  • பல்லவ மன்னன் காலச்சான்று:
    • சுந்தரர் தனது தேவாரப் பதிகத்தில், காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னனான "கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன்" எனக் குறிப்பிடுகிறார். வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த கழற்சிங்கன் மூன்றாம் நந்திவர்மன் அல்லது இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தவன் என்று கருதப்படுகிறது.

சுருக்கம்

[தொகு]

மேற்கண்ட வரலாற்று மற்றும் இலக்கியச் சான்றுகளின்படி, சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலம்:

  • நூற்றாண்டு: கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்.
  • ஆண்டுகள் (ஏறத்தாழ): கி.பி. 780 முதல் கி.பி. 825 வரை என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குருபூஜை

[தொகு]

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், குருபூசை சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது.[6] சுந்தரமூர்த்தி நாயனார் முக்தியடைந்த நாளே சைவ சமயத்தினரால் அவரது குருபூஜை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

காலம் மற்றும் நட்சத்திரம்

[தொகு]
  • தமிழ் மாதம்: ஆடி மாதம்
  • நட்சத்திரம்: சுவாதி நட்சத்திரம் (ஆடிச் சுவாதி)

குருபூஜை வரலாறு

[தொகு]

தனது வாழ்நாளின் இறுதியில், சுந்தரர் சேர நாட்டின் (தற்போதைய கேரளா) திருவஞ்சைக்களம் என்ற தலத்தில் இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான் அவருக்கு முக்தி அளிக்க எண்ணி, இந்திரன் மூலம் ஒரு வெள்ளை யானையை அனுப்பினார். சுந்தரர் அந்த வெள்ளை யானை மீது ஏறி கைலாயத்திற்குப் புறப்பட்டார்.

இதையறிந்த அவரது தோழரான சேர மன்னர் சேரமான் பெருமாள் நாயனார், தனது குதிரையின் காதில் 'நமசிவாய' மந்திரத்தைக் கூறி, குதிரை மூலம் சுந்தரரின் யானைக்கு முன்பாக கைலாயத்தை அடைந்தார். இருவரும் ஆடிச் சுவாதி நட்சத்திரத்தன்று உடலோடு திருக்கைலாய மலையை அடைந்து சிவலோகப் பதவியைப் பெற்றனர்.

வழிபாட்டுச் சிறப்புகள்

[தொகு]
  • திருவஞ்சைக்களம்: சுந்தரர் கைலாயம் புறப்பட்ட தலம் என்பதால், இங்கு ஆடிச் சுவாதி விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
  • திருவாரூர்: சுந்தரரின் முதன்மைத் தலமான திருவாரூர் தியாகராஜர் கோயிலில் குருபூஜையன்று சுந்தரருக்கும் சேரமான் பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வெள்ளை யானை வாகன ஊர்வலமும் நடைபெறும்.
  • திருநாவலூர்: சுந்தரர் அவதரித்த திருநாவலூர் கோயிலிலும் இந்த நாளில் தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டு குருபூஜை நடத்தப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சுந்தரர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

உசாத்துணைகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 "தமிழாய்வு தளம்".
  2. 1 2 3 4 http://temple.dinamalar.com/news_detail.php?id=5683
  3. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்; சைவ நூல் அறக்கட்டளை,சென்னை
  4. "பார்வையிழப்பின் மூவருலா". 2024-05-05. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  5. http://temple.dinamalar.com/news_detail.php?id=1363

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தரமூர்த்தி_நாயனார்&oldid=4617165" இலிருந்து மீள்விக்கப்பட்டது