உள்ளடக்கத்துக்குச் செல்

பதிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது பதிகம். நூலில் பாயும் பொருளைக் கூறுவது பாயிரம். இரண்டும் பழமையான குறியீடுகள். இரண்டும் ஒரே பொருளை உணர்த்துவன. 10 பாடல்கள் அடங்கிய தொகுப்பை ஐங்குறுநூறு பத்து என்று குறிப்பிடுகிறது. [1] இந்தப் பத்தின் அடுக்கினை ஆழ்வார் பாடல்களின் தொகுப்பு, பத்து என்றே குறிப்பிடுகிறது. [2] தேவாரத்தில் வரும் 10 பாடல்களின் தொகுப்பினைப் பதிகம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர். [3] பிற்காலத்தில் பதிகம் என்னும் பெயரில் பல நூல்கள் தோன்றின. [4] பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் நூல் வகைகளில் ஒன்று பதிகம். [5]

பாயிரம் என்னும் சொல் மொழி-வழக்கிற்கு வந்த காலம்[தொகு]

பாயிரம் என்னும் சொல் தொல்காப்பியத்தில் இல்லை. சங்க நூல்களிலும் இல்லை. சங்கம் மருவிய காலத்து நூலான 'பழமொழி'யில்தான் பயிலப்பட்டுள்ளது.நல்லாட்சி புரியும் அரசன் ஒருவனை எதிர்க்க வரும் பகைவர்கள் பலராக ஒன்று திரண்டு 'பாயிரம்' கூறிக்கொண்டு வந்தாலும் ஆயிரம் காக்கைக்கு ஒரு கல் போல நல்லரசன் ஒருவன் தாக்கும்போது ஓடிவிடுவர் என்கிறது, பழமொழி பாடல். [6] அடுத்து, 'பெருங்கதை' நூலில் வருகிறது. இராசனை என்பவள் பந்தாடத் தொடங்கும்போது இப்படியெல்லாம் ஆடப்போகிறேன், கண் இமைக்காமல் எண்ணிக்கொள்ளுங்கள் என்று 'பாயிரம்' கூறிவிட்டுப் பந்தாடத் தொடங்கினாள் என்று வருகிறது. மானனீகை என்பவளும் இப்படிச் சொல்லிவிட்டுப் பந்தாடத் தொடங்கியிருக்கிறாள்,

தொல்காப்பியப் பாயிரம்[தொகு]

தொல்காப்பியத்தில் பாய்ந்துவரும் செய்திகளையும், நூல் அரங்கேற்றம் முதலான தொடர்புடைய செய்திகளையும் கோத்துத் தொல்காப்பியருடன் பயின்ற ஒருசாலை மாணாக்கர் பனம்பாரனார் பாடியுள்ளார். அது தொல்காப்பிய நூலுக்குப் பாயிரமாக அமைந்துள்ளது.

சங்க நூல்களில் பதிகநெறி[தொகு]

பதிற்றுப்பத்து - பதிகங்கள்[தொகு]

பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார். 10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும், அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை இந்த நூலிலும், ஐங்குறுநூறு நூலிலும் காணப்படுகிறது. கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது போன்றவற்றிலும் காணப்படுகின்றன. அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம். பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு, ஐங்குறுநூறு நூலிலும், திருக்குறள் நூலிலும் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது.

ஐங்குறுநூறு - பதிகநெறி[தொகு]

ஐங்குறு நூலில் 500 படல்கள் உள்ளன. ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல் மேனி 5 திணைக்கும் 500 பாடல். அவற்றில் ஒவ்வொரு 100 பாடலும் 10, 10 ... பாடல்களாகப் பகுப்புநிலை கொண்டுள்ளன. ஒவ்வொரு பத்துக்கும் தனித்தனித் தலைப்புகள் உள்ளன. இந்தப் பாங்கு திருக்குறளிலும் காணப்படுகிறது. ஐங்குறுநூறு அகத்திணை நூல்.

காப்பியங்களில் பதிகம்[தொகு]

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களில் உள்ள பதிகங்கள் பதிற்றுப்பத்து நூலிலுள்ள பதிகங்களைப் போலவே நூலின் உள்ளடக்கத்தையும், அதனோடு தொடர்புடைய செய்திகளையும் பதித்துக் காட்டும் பதிகங்களாக உள்ளன. இந்தப் பதிகங்கள் நூலாசிரியரால் பாடப்பட்டவை அல்ல.
 • சங்கரவிலாசம் என்னும் நூலில் உள்ள பதிகம் நூலாசிரியரே தொகுத்துக் காட்டியது.

அறநூல்களில் பதிகம்[தொகு]

திருக்குறள் - பாயிரம்[தொகு]

திருக்குறளில் பாயிரம் என்பது எது என்பதில் பல்வேறு கருத்துகள் நம் முன்னோரிடையேயும் நிலவி வந்துள்ளன. திருக்குறளில் உள்ள முதல் நான்கு அதிகாரங்களைப் பாயிரம் என்பாரும், திருவள்ளுவ மாலை தொகுப்பில் உள்ள பாடல்களைப் பாயிரம் என்பாரும் உள்ளனர். இவற்றைத் திருக்குறளில் பாயிரம் என்னும் தலைப்பிலும், திருவள்ளுவ மாலை என்னும் தலைப்பிலும் தனித்தனியே பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

திருக்குறள் - பதிகநெறி[தொகு]

திருக்குறளில் உள்ள 1330 பாடல்களும் 133 அதிகாரத் தொகுப்புகளாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு அதுகாரத்துக்கும் 10 பாடல். பதிற்றுப்பத்து, ஐங்குறு நூறு - ஆகிய நூல்களில் காணப்படும் இந்த முறையானது, பதிற்றுப்பத்து நூலில் 'பதிகம்' என்னும் பெயராலும், ஐங்குறுநூறு நூலில் 'பத்து' பத்து என்னும் பெயராலும், திருக்குறளில் 'அதிகாரம்' என்னும் பெயராலும் தொகுக்கப்பட்டிருப்பதை நினைவில் கொள்ளவேண்டும். நன்னூல் பதிகம் என்னும் சொல்லைப் பதிவுப்பொருள் எண்ணும் கண்ணோட்டத்தில் பார்ப்பது காலத்தின் கோலம். சமய நூல்களிலும் 10 என்னும் எண்ணிக்கைத் தொகுப்பையே காணமுடிகிறது.

முதுமொழிக் காஞ்சி - பதிகநெறி[தொகு]

திருக்குறளில் ஈரடிப் பாடல் 10 கொண்ட அதிகாரத்தைப் பார்க்கிறோம். முதுமொழிக்காஞ்சி நூலில் ஓரடிப் பாடல் 10 தொகுக்கப்பட்டுள்ள பதிகநெறியைக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டுக்கு ஒரு பாடல் இங்குத் தரப்படுகிறது.

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

 1. பேரிற் பிறந்தமை ஈரத்தின் அறிப
 2. ஈரம் உடைமை ஈகையின் அறிப
 3. சோரா நன்னட்பு உதவியின் அறிப
 4. கற்றது உடைமை காட்சியின் அறிப
 5. ஏற்றம் உடைமை எதிர்கோளின் அறிப
 6. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப
 7. சூத்திரம் செய்தலில் களவனாதல் அறிப
 8. சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப
 9. அறிவுசோர்வு உடைமையின் பிறிது சோர்பு அறிப
 10. சீருடை ஆண்மை செய்கையின் அறிப

சமய நூல்களில் பதிகநெறி[தொகு]

சைவத் திருமுறைகள்[தொகு]

அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய சமய குரவர் நால்வரின் பாடல்களும், ஒனபதாம் திருமுறைத் தொகுப்பில் உள்ள காரைக்கால் அம்மையார் பொன்றோரின் பாடல்களும் பதிக முறையிலேயே அமைந்துள்ளன.
 • திருக்கடைக் காப்பு - சம்பந்தர், சுந்தரர் பாடல்களில் பதிகத்தின் இறுதியில் பதினோராம் பாடல் ஒன்று வரும். இது பதிகத்தின் கடைசியில் பதிகத்துக்கும், பதிகம் பாடுவோருக்கும் காப்பாக அமையும் பாடல்.

ஆழ்வார் பாடல்கள்[தொகு]

திருவாய்மொழி தொகுப்பில் உள்ள நம்மாழ்வார் பாடல்கள் பா வடிவ அளவினைப் பொருத்த பாடல்களாகவும், பொருள்நோக்குத் தொகுப்புப் பாடல்களாகவும் உள்ளன. பெரியாழ்வார் பாடல்கள் பொருள் நோக்கிலும், ஊர்நோக்கிலும் அமைந்துள்ளன. இவை 10. 10, ... பாடல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
 • பல சுருதி - பெரியாழ்வார் பாடல்களில் 10 பாடல் (சில பத்தில் 9 பாடல்) முடிந்த பின்னர், 11-ஆவது (சிலவற்றில் 10-ஆவது) பாடல் ஒன்று வரும். இதனைப் பல சுருதி என்பர். இது பதிகத்தைப் பாடுவோர் அடையும் பயனைக் கூறும். பயனைக் குறிக்கும் வடசொல் பலன் என்பர். சுருதி என்பது வேதம். பயனைச் சொல்லும் வேதம் என்பது இதன் பொருள்.

நன்னூல் தரும் விளக்கம்[தொகு]

நன்னூல் பாயிரத்தைப் பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம் என இரண்டு வகைப்படுத்துகிறது.

பொதுப் பாயிரம்[தொகு]

 1. நூல் - நூலின் பெயர்
 2. நுவல்வோன் - நூல் உரைக்கும் ஆசிரியன் பெயர்
 3. நுவலும் திறன் - நூல் சொல்லிச் செல்லும் பாங்கு
 4. கொள்வோன் - நூல் பயில்வோன் எப்படி இருக்கவேண்டும்
 5. கோடல் - பயிலவேண்டிய முறைமை

இந்த ஐந்து பாங்கினையும் கூறுவது பொதுப் பாயிரம்.

சிறப்புப் பாயிரம்[தொகு]

 1. நூலாசிரியனின் பெயர்
 2. நூல் தோன்றிய மரபுவழி
 3. நூல் சொல்லும் பொருளுக்கு எல்லை
 4. நூலின் பெயர்
 5. நூல் சொல்லும் பொருள்
 6. யாப்பு - நூலின் சொற்பொருள் கட்டுக்கோப்பாக யாக்கப்பட்டுள்ள முறைமை
 7. நூல் சொல்லும் பொருள்
 8. நூலைக் கேட்போர் எய்தும் பயன்

ஆகிய எட்டுப் பாங்குகளைக் கூறுவது சிறப்புப் பாயிரம்.

சொல்லமைதி விளக்கம்[தொகு]

பதிகம், பாயிரம் என்னும் பழஞ்சொற்களை இக்காலத்தில் மேலும் பல சொற்களால் குறிப்பிட்டுப் பயன்படுத்திவருகிறோம். இதன் பொருளமைதி நுட்பமானது.
அணிந்துரை நூலுக்கு அணிகலன் போன்று அமையும் உரை நன்னூல்
தந்துரை நூலிலுள்ள கருத்துக்களைத் தன் கருத்துக்களோடு ஒப்பிட்டுச் சீர்தூக்கிச் சொல்லும் உரை. Literary criticism நன்னூல்
நூன்முகம் உடம்புக்கு முகம் போன்று நூலுக்கு அமைக்கப்படும் பகுதி. இதனை நூலின் முக ஒப்பனை எனலாம் நன்னூல்
பதிகம் பத்து எண்ணிக்கை கொண்ட பாடல்களின் தொகுப்பு திருமுறைகள்
பாயிரம் நூலில் பாவியுள்ள கருத்துக்களைப் பற்றிச் சொல்வது நன்னூல்
புறவுரை நூலோடு தொடர்புடைய பிற செய்திகளைக் கூறும் பகுதி நன்னூல்
புனைந்துரை நூலைப் பெருமைப்படுத்திப் பேசும் உரை நன்னுல்
மதிப்புரை நூலை மதிப்பீடு செய்யும் திறனாய்வாளரின் செய்தி இதில் இடம்பெறும் இக்காலம்
முகவுரை முகமன் கூறி நூலாசிரியரை அறிமுகப்படுத்தும் உரை நன்னூல்
முன்னுரை நூலாசிரியர் தன் நூலைப்பற்றிக் கூறும் உரையும், கற்போரை ஆற்றுப்படுத்தும் உரையும் இதில் இடம்பெறுவது வழக்கம் இக்காலம்

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

 1. வேட்கைப் பத்து, வேழப் பத்து, களவன் பத்து, தோழிக்குரைத்த பத்து, புலவிப் பத்து, தோழி கூற்றுப் பத்து, கிழத்தி கூற்றுப் பத்து, புனலாட்டுப் பத்து, புலவி விராய பத்து, எருமைப் பத்து என்பன ஐங்குறுநூறு மருதத்திணையில் வரும் 100 பாடல்களின் பத்துப் பிரிவுகளுக்குத் தரப்பட்டுள்ள பெயர்கள்.
 2. 10 பாடல் கொண்டது ஒரு திருமொழி. 10 திருமொழி கொண்டது ஒரு பத்து. இப்படிப் பெரியாழ்வார் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
 3. கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம், திருநள்ளாறு பதிகம்.
 4. பாய்ச்சலூர்ப் பதிகம், மயிலாப்பூர் பத்தும் பதிகம்,
 5. பன்னிரு பாட்டியல் நூற்பா 312.
 6. பழமொழி பாடல் எண் 249 கழகப்பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிகம்&oldid=3857222" இலிருந்து மீள்விக்கப்பட்டது