இலாகூரின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலாகூரின் வரலாறு (History of Lahore) இலாகூரின் பதிவு செய்யப்பட்ட வரலாறு என்பது பாக்கித்தானின் இரண்டாவது பெரிய நகர மாவட்டமான அதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளை உள்ளடக்கியது. இது பஞ்சாப் பிராந்தியத்தின் தலைநகரமாகவும், மிகப்பெரிய நகரமாகவும் இருக்கிறது. இதன் உருவாக்கம் சமணம், இந்து, பௌத்தம், கிரேக்கர், முஸ்லிம், முகலாயர், ஆப்கான், சீக்கியர் மற்றும் ஆங்கிலேயர்களிடமிருந்து மாறி, அதன் மூலம் கலாச்சார தலைநகராகவும் நவீன கால பாக்கித்தானின் இதயமாகவும் மாறியுள்ளது .

தோற்றம்[தொகு]

இலாகூரில் ஒரு பழைய தெருவின் காட்சி.

வாய்வழி மரபுகளின்படி, இந்த நகரத்தை நிறுவியதாகக் கூறப்படும் இந்து கடவுளான இராமரின் மகன் இலவனின் பெயரால் இலாகூர் பெயரிடப்பட்டது. இலவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் இலாகூர் கோட்டையில் உள்ளது. அதேபோல், வடக்கு இலாகூர் வழியாக ஓடும் ராவி ஆற்றுக்கு இந்து தெய்வமான துர்கையின் நினைவாக பெயரிடப்பட்டது.[1]

புகழ்பெற்ற வானியலாளரும் புவியியலாளருமான தொலெமி தனது புவியியல் நூலில் 'லாபோக்லா' என்று அழைக்கப்படும் ஒரு நகரத்தைக் குறிப்பிடுகிறார்.[2] சிந்து நதிக்கு இடையேயான பாதையில் அமைந்துள்ள ஒரு பிராந்தியத்தில் பிடாஸ்டேஸ் அல்லது விட்டாஸ்டா (ஜீலம்), சந்தாபல் அல்லது சந்திர பாகா (செனாப்), மற்றும் அட்ரிஸ் அல்லது ஐராவதி ( ராவி ஆறு ) போன்ற நதிகளுடன் குறிப்பிடுகிறார்.

இலாகூரைப் பற்றிய மிகப் பழமையான உண்மையான ஆவணம் 982 இல் யாராலோ எழுதப்பட்டுள்ளது. இது உதுத்-இ-ஆலம் என்று அழைக்கப்படுகிறது.[3] உருசியா வராற்றாசிரியர் விளாடிமிர் பெடோரோவிச் மைனர்ஸ்கி இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1927 இல் இலாகூரில் வெளியிட்டார். இந்த ஆவணத்தில், இலாகூர் ஒரு சிறிய நகரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் "ஈர்க்கக்கூடிய கோவில்கள், பெரிய சந்தைகள் மற்றும் பெரிய பழத்தோட்டங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இதில் "குடியிருப்புகள் இருக்கும் இரண்டு பெரிய சந்தைகளை" குறிக்கிறது. மேலும் இதில் "இந்த இரண்டு குடியிருப்புகளையும் ஒன்றாக இணைக்கும் மண் சுவர்களைக்" குறிக்கிறது. அசல் ஆவணம் தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது .[4]

சமணப் பாரம்பரியம்[தொகு]

சமண மதம் பஞ்சாபில் மிகவும் பழமையான மற்றும் அசல் மதமாக இருந்தது என்று புளூட்டாக் மற்றும் பல அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இலாகூர் சமண மதத்தின் கலாச்சார மையமாக இருந்தது. புளூடாக் எழுதிய எ லைப் ஆப் அலெக்சாண்டர் என்ற நூலில் பேரரசர் அலெக்சாந்தருக்கும், ஜிம்னோசோபிஸ்டுகள் என்று அழைக்கப்பட்ட சைன திகம்பரர்களுக்குமிடையே நடந்த மோதல்களை பற்றிக் குறிப்பிடுகிறார்.[5] பப்ரா அல்லது பாப்ரா என்பது பஞ்சாப் பகுதியைச் சேர்ந்த ஒரு பண்டைய வணிக சமூகமாகும். இது முக்கியமாக சமண மதத்தைப் பின்பற்றுகிறது. இது சமண மத கலாகாசார்யாவைச் சேர்ந்த பவதார் அல்லது பவாதா கச்சாவுடன் இணைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அவை பப்ரா நகரத்திலிருந்து தோன்றியிருக்கலாம்.[6] பவாதா கச்சா 17 ஆம் நூற்றாண்டு வரை உயிர் வாழ்த்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. தாரி பப்ரியன் மற்றும் கலி பப்ரிலும் சமண கோவில்கள் இருந்தன.

இந்து பாரம்பரியம்[தொகு]

இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் என்ற செய்தி நிறுவனம் 1876 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு இதழில் ராஜபுத்திரர்கள் ஒரு பணியில் ஈடுபட்டிருக்கும் படம்,

இலாகூர் நகரம் குர்ஜ்ஜாரா வம்சாவளியைக் கொண்டுள்ளது. ஆரம்பகால இளவரசர்கள் பாரம்பரிய குர்ஜார் என்று அழைக்கப்பட்டனர். கி.பி 630 இல் பஞ்சாபிற்கு வருகை தந்த சீனப் பயணி சுவான்சாங், ஒரு பெரிய நகரத்தைப் பற்றி பேசுகிறார். இதில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருந்தன. இது சேகா இராச்சியத்தின் கிழக்கு எல்லையில் அமைந்திருந்தது. இது சிந்து ஆறு முதல் பியாஸ் ஆறு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது பியாஸ் ஆறு வரை அதன் எல்லையைக் கொண்டிருந்தது

கி.மு 580 ஆம் ஆண்டில், பிம்பிசாரன் தெற்காசியாவை ஆண்டபோது, சமூகம் அவர்களின் ஆக்கிரமிப்பின் அடிப்படையில் வெவ்வேறு சமூகங்களாகப் பிரிக்கப்பட்டது. அவர்களின் சமூகங்களில் ஒன்று சத்திரியர்கள் என்றும், இலூவின் மன்னரின் சந்ததியினர் அவர்களுடன் வகைப்படுத்தப்பட்டு, இலூவனம் என்றும் அறியப்பட்டது. இது இலுவானா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.[7]

கி.பி 337 மற்றும் 472 க்கு இடையில் தெற்கு ஆசியாவிற்கு வருகை தந்த சீனப் பயணி பாசியான், இலூவனத்தை தெற்காசியாவின் வடமேற்குப் பகுதியை ஆளும் ஒரு துணிச்சலான சமூகம் என்று தனது நாட்குறிப்பில் கூறுகிறார். கி.பி பதினொன்றாம் நூற்றாண்டில் வந்த மற்றொரு சீனப் பயணியான குர்மாங் ஒரு இலோக்ரானா என்ற ஒரு இராச்சியத்தை வலிமைமிக்க சக்தியாகப் பேசுகிறார். வரலாற்றாசிரியர் பர்டன் இலோகனாஸ் இவர்களை துணிச்சலான மக்கள் என்று எழுதுகிறார், அவர்கள் இன்றைய பலுசிஸ்தான் (பாகிஸ்தான்), ஆப்கானித்தான் மற்றும் மத்திய ஆசியாவின் கிழக்கு எல்லைகளில் பரவியிருந்ததாகக் கூறுகிறார்.

பழைய இந்து நகரம்[தொகு]

முதல் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஒரு காலத்தில் பண்டைய இந்துக் காலனியாக இலாகூர் நிறுவப்பட்டது என்று பல வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அநேகமாக இரண்டாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே; அது விரைவில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும், பிற காலனிகளை உருவாக்கியதாகவும் , இறுதியில் ஒரு சக்திவாய்ந்த தலைவனின் தலைநகராகவும் உயர்ந்தது. அதற்கு அது அதன் பெயரைக் கொடுத்தது. பழைய இந்து நகரமான இலாகூர் நவீன நகரத்தின் இடத்தை சரியாக ஆக்கிரமிக்கவில்லை என்பதற்கு சில காரணங்கள் உள்ளன. பாரம்பரியம் பழைய இலாகூரின் இடத்தை இக்ராவின் அருகே சுட்டிக்காட்டுகிறது - இது இப்போது இலாகூர் நகரத்தின் ஒரு பகுதியாகும் - ஆனால் பின்னர் மேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ள ஒரு கிராமமாக இருந்தது.

இந்த கிராமத்தின் பெயர் முன்பு இக்ரா இலாகூர். மேலும், மிகப் பழமையான மற்றும் புனிதமான சில இந்து ஆலயங்கள் இந்த வட்டாரத்தில் காணப்படுகின்றன. தற்போதைய நகரத்தின் நுழைவாயில், இலகோரி அல்லது இலோகரி வாயில் என்று அழைக்கப்படுகிறது. இது காஷ்மீர் வாயில்ட் காஷ்மீரை நோக்கியது போலவே பழைய இலாகூரின் திசையில் பார்க்கும் நுழைவாயில் என்றும், பண்டைய நகரத்திற்கு நவீன தில்லியின் தில்லி வாயில் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆரம்பகால முஸ்லிம் வம்சங்கள்[தொகு]

முதல் முஸ்லிம் வெற்றி காலத்தில், இலாகூர் அஜ்மீர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ராஜபுதன மன்னர் பிருத்விராஜ் சௌகான் வசம் இருந்தது. வம்சத்தை மாற்றியதன் காரணமாகவோ, அல்லது ஆப்கானித்தானில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் சாலையில் இலாகூரின் பாதுகாப்பில்லாமல் இருந்த காரணத்தாலோ அது பின்னர் வெறிச்சோடி, அரசாங்கத்தின் இருக்கை சியால்கோட் அல்லது அதன் அருகிலேயே கொண்டு செல்லப்பட்டது. பின்னர், பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கசினியின் மகுமூது இந்தப் பகுதியை கைப்பற்றும் காலம் வரை அங்கேயே இருந்தது. வெற்றியாளர் வெறிச்சோடிய நகரத்தை மீண்டும் ஆக்கிரமித்து, ஒரு கோட்டையை நிறுவினார். இது தில்லியில் உள்ள பழைய கோட்டை போல, பழைய ராஜ்புத் கோட்டையின் அழிவின் பேரில் கட்டப்பட்டது.

கி.பி 682 இல், பெரிஷ்தாவின் கூற்றுப்படி, பெசாவரின் ஆப்கானியர்கள், அந்த ஆரம்ப காலத்திலேயே இசுலாத்தை ஏற்றுக்கொண்டனர். இந்து இளவரசரிடமிருந்து சில உடைமைகளை பறித்தனர். ஒரு போர் தொடங்கியது. எழுபது போர்கள் பலவிதமான வெற்றிகளுடன் நடந்தன. ஆப்கானியர்கள், கக்கார்களுடன் ஒரு கூட்டணியை உருவாக்கிய வரை, பஞ்சாபின் உப்புத் தொடரில் வசிக்கும் ஒரு காட்டு பழங்குடி, ராஜாவை தனது பிரதேசத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுக்க கட்டாயப்படுத்தியது. இலாகூரைப் பற்றிய அடுத்த குறிப்பும் இராஜபுதன ஏடுகளில் உள்ளது. அங்கு ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முஸ்லிம் படைகளால் முற்றுகையிடப்பட்டபோது, இலாகூரின் ராஜபுத்திர பழங்குடியினரான புச்சாக்கள், சித்தோர்காரைப் பாதுகாக்க அணிவகுத்து வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபுக்கள் கூடியிருந்த தனது சபையில் சுல்தான் முகமது கசினியின் படம்.
பாக்கித்தானின் இலாகூரில் உள்ள அனார்கலியில் சுல்தான் குதுப் உத் தின் ஐபக்கின் கல்லறை.

கி.பி. 975 இல், குராசானின் ஆளுநரும் புகழ்பெற்ற சுல்தான் முகமது கசினியின் தந்தையும் சுல்தான் சபுக்திகின் சிந்துவுக்கு அப்பால் முன்னேறினார். அவரை இலாகூரின் அரசன் ஜெயபாலன் சந்தித்தார். அவரின் ஆதிக்கம் சிரிந்திலிருந்து லக்மான் வரையிலும், காஷ்மீரிலிருந்து முல்தான் வரையிலும் பரவியதாகக் கூறப்படுகிறது. பட்டி ராஜபுத்திர பழங்குடியினரின் ஆலோசனையால், ஜெயபாலன் ஆப்கானியர்களுடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார். மேலும் அவர்களின் உதவியுடன் முதல் படையெடுப்பைத் தடுக்க முடிந்தது. இருப்பினும், சபுக்திகின் பின்னர் காசுனியின் சிம்மாசனத்தில் அமர்ந்தார். லக்மானுக்கு அருகிலே நடந்த ஒரு போர் ஜெயபாலனின் தோல்வியுடன் முடிவடைந்து சமாதானம் செய்யப்பட்டது.[8]

சுல்தான் முகமது கசினி, வலப்பக்கத்தில் சேக் அயாசு வலதுபுறம் உள்ள உருவம் ஷா அப்பாஸ் I, அவர் சுமார் 600 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி செய்தார்.

பதினொன்றாம் நூற்றாண்டில் சுல்தான் முகமது கசினி கைப்பற்றப்படுவதற்கு முன்னர் இலாகூரைப் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. 1021 ஆம் ஆண்டில், முகமது மாலிக் அயாசு என்பவரை அரியணைக்கு நியமித்து, இலாகூரை காசினி பேரரசின் தலைநகராக மாற்றினார் .

சுல்தானின் இலாகூரை கைப்பற்றிய போது நகரம் தீக்கிரையாக்கப்பட்டது. இலாகூரின் முதல் முஸ்லிம் ஆட்சியாளரான, அயாசு நகரத்தை மீண்டும் கட்டியெழுப்பினார். தற்போதைய இலாகூர் கோட்டை அதே இடத்தில் உள்ளது. அவரது ஆட்சியின் கீழ், நகரம் ஒரு கலாச்சார மற்றும் கல்வி மையமாக மாறியது. இது கவிதைக்கு புகழ் பெற்றது. மாலிக் அயாசின் கல்லறையை நகரத்தின் ரங் மகால் வணிகப் பகுதியில் இன்னும் காணலாம்.

காசினி பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, இலாகூரை தில்லி சுல்தானகம் என்று அழைக்கப்படும் பல்வேறு முஸ்லிம் வம்சங்கள் ஆட்சி செய்தன. இதில் கில்ஜிகள், துக்ளக்குகள், சையிதுகள், லோதிகள் மற்றும் சூர்கள் உட்பட .[9] 1206 இல் சுல்தான் குத்புத்தீன் ஐபக் முடிசூட்டிக் கொண்டபோது, அவர் தெற்காசியாவின் முதல் முஸ்லிம் சுல்தானானார் .[10] 1524 வரை லாகூர் முகலாயப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.

மங்கோலிய படையெடுப்பும் அழிவும்[தொகு]

குவாரசமிய வம்சத்தை மங்கோலியர்கள் படையெடுத்து கைப்பற்றினர். மன்னர் சலாலத்தீன் மிங்புர்னு நவீன கைபர் பக்துன்வாவுக்கு பின்வாங்கினார். ஆனால் சிந்து ஆற்றுப் போரில் தோற்கடிக்கப்பட்டார்.[11]

மங்கோலிய இராணுவம் முன்னேறியது. 1241 இல், பண்டைய நகரமான இலாகூர் 30,000 பேர் கொண்ட குதிரைப்படைகளால் படையெடுக்கப்பட்டது. மங்கோலியர்கள் இலாகூர் ஆளுநர் மாலிக் இக்தியருதீன் கராகாசை தோற்கடித்து, ஒட்டுமொத்த மக்களையும் படுகொலை செய்தனர். மேலும் நகரம் தரைமட்டமாகியது.[12] மங்கோலியப் படையெடுப்பிற்குப் பின்னர் முந்திய இலாகூரின் கட்டிடங்கள் அல்லது நினைவுச்சின்னங்கள் எதுவும் மீதியில்லை.[13] 1266 ஆம் ஆண்டில், கியாசுத்தீன் பல்பான் மங்கோலியர்களிடமிருந்து இலாகூரை கைப்பற்றினார். ஆனால் 1296 முதல் 1305 வரையிலும் படையெடுத்து மங்கோலியர்கள் வடக்கு பஞ்சாப் வரை மீண்டும் கைப்பற்றினார்கள். 1298 ஆம் ஆண்டில், மங்கோலிய இராணுவம் பஞ்சாபைக் கைப்பற்றி, பின்னர் தில்லியை நோக்கிச் சென்றனர். ஆனால் தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளரான சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் கபூரால் தோற்கடிக்கப்பட்டனர்.

சுல்தானகத்தின் வீழ்ச்சி[தொகு]

கடைசி லோதி ஆட்சியாளரான இப்ராகிம் லோடி தனது அரசவையாலும், குடிமக்களால் பெரிதும் விரும்பப்படவில்லை. அவரது தந்தை சுல்தான் சிக்கந்தர் லோதியின் மரணத்தின் பின்னர், இவரது தம்பி சலால் கான் சுல்தானாக இருக்க வேண்டும் என்று விரும்பிய சில பிரபுக்கள் தலைமையில் ஒரு குறுகிய கிளர்ச்சியை இவர் அடக்கினார். சலால் கான் கொலை செய்யப்பட்டு அரியணை ஏறிய பின்னர், அவர் ஒருபோதும் தனது பிரபுக்களை சமாதானப்படுத்துவதில் வெற்றிபெறவில்லை. அதைத் தொடர்ந்து, பஞ்சாபின் ஆளுநரான தௌலத் கான் மற்றும் அவரது மாமா ஆலம் கான் ஆகியோர் தில்லி மீது படையெடுக்க காபூலின் ஆட்சியாளரான பாபருக்கு அழைப்பு அனுப்பினர்.

பாபருக்கும் ,தில்லி சுல்தான் இப்ராகிம் லோதியின் படைகளுக்குமிடையே பானிபட் என்ற இடத்தில் (ஏப்ரல் 1526) ஏற்பட்டது. போர்க்களத்தில் லோதிடி கொல்லப்பட்டார். உயர்ந்த தலைமைத்தன்மை, போரில் பரந்த அனுபவம், பயனுள்ள மூலோபாயம் மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்தியதன் மூலம், பாபர் முதலாம் பானிபட் போரில் வெற்றி பெற்றார். பின்னர் ஆக்ராவையும்தில்லியையும் ஆக்கிரமித்தார்.

முகலாய பேரரசு[தொகு]

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் கட்டிய பாத்சாகி மசூதி
ஔரங்கசீப்பின் காலத்தில் கட்டப்பட்ட இலாகூர் கோட்டையின் பிரதான நுழைவாயில் ஆலம்கீர் வாயில்.

முகலாயர்களின் ஆட்சியின் போது இலாகூர் கட்டடக்கலை பெருமையின் உச்சத்தை எட்டியது. அதன் கட்டிடங்களும் தோட்டங்களும் காலத்தின் ஆபத்துகளிலிருந்து தப்பித்தன. அழகுக்கான இலாகூரின் நற்பெயர் ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டனைக் கவர்ந்து, 1670 இல் "ஆக்ரா மற்றும் இலாகூர், முகலாயப் பேரரசின் இருக்கை" என்று எழுதினார்.[14]

1524 முதல் 1752 வரை, இலாகூர் முகலாயப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. 1524 முதல் 1752 வரை முகலாய ஆட்சியின் போது இலாகூர் அதன் மகிமையின் உச்சத்தைத் தொட்டது. அடுக்கு மாடி குடியிருப்பாளர்களாக புகழ்பெற்ற முகலாயர்கள், இலாகூருக்கு அதன் மிகச்சிறந்த கட்டடக்கலை நினைவுச்சின்னங்களை வழங்கினர். அவற்றில் பல இன்றும் உள்ளன.

பேரரசர் ஔரங்கசீப்தர்பாரில் பருந்து வைத்திருக்கும் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

இலாகூர் பேரரசர் பாபரின் கீழ் வளர்ந்தது. 1584 முதல் 1598 வரை, பேரரசர்களான அக்பர் மற்றும் ஜஹாங்கீர் ஆகியோரின் கீழ், இந்த நகரம் பேரரசின் தலைநகராக செயல்பட்டது.[14] இந்த கால கட்டத்தில், மிகப்பெரிய இலாகூர் கோட்டை கட்டப்பட்டது. கோட்டைக்குள் ஒரு சில கட்டிடங்கள் அக்பரின் மகன் முகலாய பேரரசர் ஜஹாங்கீரால் சேர்க்கப்பட்டன. அவர் நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜஹாங்கிரின் மகன் ஷாஜகான் இந்நகரத்தில் பிறந்தார். அவர், தனது தந்தையைப் போலவே, இலாகூர் கோட்டையை விரிவுபடுத்தி, நகரத்தில் சாலிமார் தோட்டங்கள் உட்பட பல கட்டுமானங்களைக் கட்டினார். 1658 ல் 1707 வரை ஆண்ட கடைசி முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், நகரின் மிகப் பிரபலமான நினைவுச்சின்னங்களான பாத்சாகி மசூதியையும் இலாகூர் கோட்டைக்கு அடுத்துள்ள ஆலம்கீர் நுழைவு வாயிலையும் கட்டினார்.

18 ஆம் நூற்றாண்டில், முகலாயர்களின் சக்தி குறைந்துவிட்டதால், இலாகூர் பெரும்பாலும் பிற சக்திகளால் படையெடுக்கப்பட்டது. திறமையான அரசாங்கம் இல்லை. அகமது ஷா துரானி முகலாய இராச்சியங்களின் மிச்சங்களை கைப்பற்றினார். 1761 வாக்கில் பஞ்சாப் மற்றும் காஷ்மீர் பிராந்தியங்களின் மீது கட்டுப்பாட்டை பலப்படுத்தினார்.

தில்லி சுல்தானும் பின்னர் முகலாயப் பேரரசும் இப்பகுதியை ஆண்டன. இலாகூர் பகுதி பெரும்பாலும் முஸ்லிம்களாக மாறியது. சூபி மதகுருமார்கள் காரணமாக, பஞ்சாப் பிராந்தியத்தின் நிலப்பரப்பைக் குறிக்கும் தர்காக்கள், முகலாய பேரரசர்களின் முயற்சிகள், அவற்றின் கொள்கைகள் மற்றும் கட்டாய மத மாற்றங்கள் போன்றவற்றால் மற்ற மதங்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தின.[15]

மராட்டிய பேரரசு[தொகு]

தில்லி போரில் ஆப்கானியர்களை தோற்கடித்த சிறிது காலத்தில், மராட்டியர்கள் 1758 இல் இலாகூருக்குள் நுழைந்தனர். மார்ச் 1758 இல், மராட்டிய பேரரசின் சுமார் 50,000 வீரர்கள் சிர்கிந்தை முற்றுகையிட்டனர். ஆப்கானித்தான் தளபதி சகான் கான், அப்தாலியின் மகன் தைமூர் ஷா ஆகியோரிடம் 25,000 துருப்புக்கள் இருந்தனர். ஏப்ரல் 20, 1758 இல், மராட்டியர்கள் இலாகூருக்குள் நுழைந்தனர்.

1758 இல் இலாகூரை கைப்பற்றிய மராட்டிய பேஷ்வா இரகுநாதராவ்

1759 இல், மராட்டியரும் அதன் கூட்டணிப் படைகளும் இலாகூர் போரில் துரானிப் பேரரசை தோற்கடித்தன.[16][17] தில்லி, பஞ்சாப், காஷ்மீர், முல்தான், பெசாவர் மற்றும் அட்டாக் ஆகியவற்றைக் கைப்பற்றி மராட்டிய பேரரசு பெரிய வெற்றிகளைப் பெற்றது.

சீக்கிய சிற்றரசுகள்[தொகு]

அதன்பிறகு, கி.பி 1761 இல், பானிபட்டில் நடந்த ஒரு போரில் மராட்டியர்கள் தோற்கடிக்கப்பட்டதும், அகமது ஷா மீண்டும் ஆப்கானித்தானுக்குச் சென்றதும் ஒரு குழப்பம் ஏற்பட்டது. உள்ளூர் அரசாங்கத்தில் பற்றாக்குறையாளும், பஞ்சாபில் எந்த தலைவரும் ஆட்சியாளாராக இல்லாத காரணத்தாலும், சீக்கிய சிற்றரசுகளுக்கும் அந்தந்த பகுதிகளின் திறமையான கட்டுப்பாட்டைப் பெற அனுமதித்தது. 1764 முதல் 1799 வரை, இவர்கள் இலாகூர் மாகாணத்தைக் கட்டுப்படுத்தினர். சீக்கிய சிற்றரசர்களின் ஆட்சியின் பிற்பகுதி மிகவும் அடக்குமுறை மற்றும் அநியாயமாக கருதப்படுகிறது.

சீக்கியப் பேரரசு[தொகு]

18 ஆம் நூற்றாண்டில், முகலாய சக்தி குறைந்து வந்ததால், இலாகூர் பெரும்பாலும் ஆப்கானியப் படையினரால் படையெடுக்கப்பட்டு ஆப்கானிய பேரரசின் ஒரு மாகாணமாக மாறியது. மாகாண ஆட்சியாளர்களால் தங்கள் சொந்த அரசவையுடன் நிர்வகிக்கப்பட்டது.

பஞ்சாபில் முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் சீக்கியர்கள் போரிடும் குழுக்கள் படையெடுத்து, தன்னாட்சி சீக்கிய சிற்றரசுகளின் தொகுப்பை உருவாக்கியது.[18] முக்கியமாக பஞ்சாப் பிராந்தியத்தில் அவை சிற்றரசர்களால் நிர்வகிக்கப்பட்டன .

முகலாய இராச்சியத்திற்கு எதிரான கிளர்ச்சி[தொகு]

ஔரங்கசீப்பின் ஆட்சியின் ஆரம்பத்தில், சீக்கியர்களின் பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் முகலாயத் துருப்புக்களை பெருகிய முறையில் போர்களில் ஈடுபடுத்தின. 1670 ஆம் ஆண்டில், ஒன்பதாவது சீக்கிய குரு, குரு தேக் பகதூர் தில்லியில் முகாமிட்டு, ஏராளமானவர்களை தன்னுடன் இணித்துக் கொண்டார். இதனால் பேரரசர் ஔரங்கசீப்பின் கோபத்திற்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.[19] முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சீக்கியர்கள் இலாகூர் மாவட்டத்தை ஆக்கிரமித்து ஆக்கிரமித்தனர்.

குரு தேக் பகதூரின் மரணதண்டனை சீக்கியர்களை கோபப்படுத்தியது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, அவரது மகனும் வாரிசுமான சீக்கிய மதத்தின் பத்தாவது குரு கோவிந்த் சிங் தன்னைப் பின்பற்றுபவர்களை மேலும் இராணுவமயமாக்கினார்.

ரஞ்சித் சிங்கின் சீக்கியப் பேரரசு[தொகு]

சீக்கிய ஆட்சியின் போது சேதமடைந்த மினாரெட்டுகளுடன் பாத்சாகி மசூதி
இலாகூரின் சாக்தாராவில் முகலாயப் பேரரசர் ஜஹாங்கிரின் கல்லறை

ரஞ்சித் சிங் தலைமையில் ஒரு புதிய அரசையும், இறையாண்மை கொண்ட சீக்கிய அரசையும் உருவாக்க பன்னிரண்டு சீக்கிய சிற்றரசுகள் ஒன்று சேர்ந்தன.[20] ரஞ்சித் சிங் 1801 ஏப்ரல் 12 அன்று இலாகூரில் முடிசூட்டப்பட்டார்.

பாக்கித்தானின் இலாகூரில் பேரரசர் ரஞ்சித் சிங்கின் சமாதி.

சீக்கிய சிற்றரசர்களின் அழிவு மற்றும் கொள்ளை காரணமாக லாகூரின் முகலாய காலத்தின் பெரும்பகுதி பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இடிந்து கிடந்தது. [சான்று தேவை] . 1839 ஆம் ஆண்டு சூன் 27 ஆம் தேதி ரஞ்சித் சிங்கின் மரணம் அவரது ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. அதே நேரத்தில் 1849 இல் ஆங்கிலேயர்கள் பேரரசின் கட்டுப்பாட்டைப் பெறும் வரை சீக்கிய ஆட்சி தொடர்ந்தது.

சூலை 7, 1799 இல், சீக்கிய போராளிகள் சுகர்சகியா என்பவர் தலைமையில் இலாகூரை ஆக்கிரமித்தனர்.[21] ரஞ்சித் சிங் மசூதிக்கு அடுத்ததாக மூடப்பட்ட தோட்டமான அசூரி தோட்டத்தை தனது அதிகாரப்பூர்வ அரசவையாக பயன்படுத்தினார்.

பிரித்தானியப் பேரரசு[தொகு]

ரஞ்சித் சிங் இலாகூரை தனது தலைநகராக மாற்றினார். மேலும் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தையும் உள்ளடக்கி கைபர் கணவாய் வரை தனது இராச்சியத்தை விரிவுபடுத்த முடிந்தது. அதே சமயம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்கள் சத்லஜ் ஆற்றுக்கு மேலே முன்னேறுவதைத் தடுத்தார். 1839 ஆம் ஆண்டில் அவர் இறந்த பின்னர், சீக்கியர்களுக்கிடையேயான உள்நாட்டு சண்டையாலும், அவரது மகன்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும், டோக்ராக்களின் சூழ்ச்சிகளாலும், இரண்டு ஆங்கிலேய-சீக்கியப் போர்கள் போன்ற காரணத்தாலும், இறுதியில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இலாகூர் பிரித்தானியர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.

ஆங்கிலேயர்களைப் பொறுத்தவரை, பஞ்சாப் ஒரு எல்லைப்புற மாகாணமாக இருந்தது. ஏனெனில் இலாகூர் ஆப்கானித்தானுடன் எல்லைகளைக் கொண்டிருந்தது. எனவே, பஞ்சாபியர்கள், வங்காளிகள் மற்றும் சிந்திகளைப் போலல்லாமல், தங்கள் தாய்மொழியை உத்தியோகபூர்வ மொழியாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. பஞ்சாபி தேசியவாதத்தின் பயம் காரணமாக லாகூர் உட்பட பஞ்சாபில் ஆங்கிலேயர்கள் முதலில் உருது மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக அறிமுகப்படுத்தினர்.[22][23] பிரிட்டிசு காலனித்துவ அரசாங்கத்தின் ஆட்சியின் போது, பஞ்சாபி முஸ்லிம்கள் பஞ்சாப் பிராந்தியத்தில் சீக்கியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட, சேதமடைந்த மற்றும் அழிக்கப்பட்ட முஸ்லிம் நினைவுச்சின்னங்களை மீட்டெடுக்கவும் புனரமைக்கவும் தொடங்கினர்.

பிரிட்டிசு ஆட்சியின் கீழ் (1849-1947), இலாகூரில் காலனித்துவ கட்டிடக்கலை முகலாய, கோதிக் மற்றும் விக்டோரியன் பாணிகளை இணைத்தது. இலாகூரில் உள்ள பொது அஞ்சல் அலுவலகம் மற்றும் ஒய்.எம்.சி.ஏ கட்டிடங்கள் விக்டோரியா மகாராணியின் பொன்விழாவை நினைவுகூருகின்றன. இது இந்தியா முழுவதும் கடிகார கோபுரங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதன் மூலம் குறிக்கப்பட்டது. பிற முக்கிய பிரிட்டிசு கட்டிடங்களில் உயர் நீதிமன்றம், அரசுக் கல்லூரி பல்கலைக்கழகம், அருங்காட்சியகங்கள், தேசியக் கலைக் கல்லூரி, மாண்ட்கோமெரி அரங்கம், தோலிண்டன் சந்தை, பஞ்சாப் பல்கலைக்கழகம் (பழைய வளாகம்) மற்றும் மாகாண சபை ஆகியவை அடங்கும்.[24] பிரிட்டிசு ஆட்சியின் கீழ், சர் கங்கா ராம் (சில சமயங்களில் நவீன இலாகூரின் தந்தை என்று குறிப்பிடப்படுகிறார்) பொது தபால் அலுவலகம், லாகூர் அருங்காட்சியகம், அட்ச்சன் கல்லூரி, மயோ கலைகளுக்கானப் பள்ளி, கங்கா ராம் மருத்துவமனை, லேடி மெக்லகன் பெண்கள் உயர் பள்ளி, அரசுக் கல்லூரி பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை, மாயோ மருத்துவமனையின் ஆல்பர்ட் விக்டர் பிரிவு, சர் கங்கா ராம் உயர்நிலைப்பள்ளி (இப்போது பெண்களுக்கான இலாகூர் கல்லூரி) எய்லி வணிகக் கல்லூரி, ஊனமுற்றோருக்கான ரவி சாலை வீடு, கங்கா ராம் அறக்கட்டளை கட்டிடம் சாக்ரா-இ-காயித்-இ-ஆசாம், மற்றும் லேடி மேனார்ட் தொழில்துறைப் பள்ளி போன்றவற்றி வடிவமைத்து கட்டினார்.[25] இலாகூரின் வளர்ந்து வரும் சமூக பொருளாதார உயரடுக்கின் கலாச்சார மையமாக சமீபத்தில் வளர்ந்த ஒரு புறநகர்ப் பகுதியான மாதிர் நகரத்தையும் அவர் கட்டினார்.

கால்வாய் கரையில் அமைதியான சூழலில் நகரம் ஒரு புதிய வளாகத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் பழைய பல்கலைக்கழக கட்டிடங்கள் இன்னும் செயல்பட்டு வருகின்றன. பொழுதுபோக்குக்காக, ஆங்கிலேயர்கள் குதிரை பந்தயத்தை இலாகூருக்கு அறிமுகப்படுத்தினர். 1924 இல் நிறுவப்பட்ட முதல் பந்தயச் சங்கம் லாகூர் குதிரைப்பந்தயச் சங்கம் என்று அழைக்கப்படுகிறது .

சுதந்திரத்தில் பங்கு[தொகு]

இலாகூர் தீர்மானத்திற்கு சௌத்ரி கலிக்சமான் முகம்மது அலி ஜின்னாவுடன் லாகூர் அமர்வுக்கு தலைமை தாங்கினார்.
பாக்கித்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மினார்-இ-பாக்கித்தான் .

பாக்கித்தான் இயக்கம் மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தின் வரலாற்றில் இலாகூர் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது. 1929 காங்கிரசு கூட்டத்தொடர் லாகூரில் நடைபெற்றது. இந்த காங்கிரசில், "முழுமையான சுதந்திரம்" என்ற தீர்மானத்தை நேரு முன்வைத்து, 1929 திசம்பர் 31 அன்று நள்ளிரவில் ஒருமனதாக நிறைவேற்றினார்.[26] இந்த சந்தர்ப்பத்தில், இந்தியாவின் தற்கால தேசியக் கொடி (அதன் மையத்தில் ஒரு சக்கரத்துடன்) ஒரு தேசியக் கொடியாக ஏற்றப்பட்டது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் அதை வணங்கினர்.

இலாகூர் சிறை புரட்சிகர சுதந்திர போராளிகளை தடுத்து வைக்கும் இடமாக இருந்தது. அரசியல் கைதிகளுக்கு பிரிட்டிசர் சிகிச்சை அளித்ததை எதிர்த்து பிரபல சுதந்திர போராட்ட வீரர் ஜத்தீந்திர நாத் தாஸ் 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இலாகூர் சிறையில் இறந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தியாகிகளில் ஒருவரான பகத் சிங் இலாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.[27]

இந்திய சுதந்திரத்துக்காகவும் பாக்கித்தானை உருவாக்குவதற்காகவும் போராடும் முதன்மைக் கட்சிகளான அகில இந்திய முஸ்லிம் லீக், பாக்கித்தான் முஸ்லிம் லீக் போன்றவற்றின் பல முக்கியமான அமர்வுகள் 1940 இல் லாகூரில் நடைபெற்றது.[28] பாக்கித்தான் தீர்மானம் அல்லது இலாகூர் தீர்மானம் எனப்படும் ஆவணத்தில் காயிதே-அசாமின் தலைமையில் முஸ்லிம்கள் இந்திய முஸ்லிம்களுக்கு தனி தாயகத்தை கோரினர். இந்த அமர்வின் போது, லீக்கின் தலைவரான முகம்மது அலி ஜின்னா, முதல் முறையாக இரு தேசக் கோட்பாட்டை பகிரங்கமாக முன்மொழிந்தார்.

பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் முஸ்லிம் லீக் மற்றும் பாகிஸ்தான் இயக்கத்தை ஆதரித்தனர். 1947 ல் பாக்கித்தான் சுதந்திரம் அடைந்த பின்னர், சிறுபான்மை இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர். அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து முஸ்லிம் அகதிகள் இலாகூர் மாவட்டத்தில் குடியேறினர்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் வரை[தொகு]

இலாகூர் பாக்கித்தானின் இதயமாகக் கருதப்படுகிறது. இப்போது பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகராக உள்ளது. சுதந்திரம் அடைந்த உடனேயே, முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் இந்துக்களிடையே பெரிய அளவிலான கலவரம் வெடித்தது. இதனால் பல மரணங்கள் ஏற்பட்டன, மேலும் இலாகூர் கோட்டை, பாத்சாகி மசூதி மற்றும் பிற காலனித்துவ கட்டிடங்கள் உட்பட பல வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு சேதம் ஏற்பட்டது.[29] ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன், இலாகூரை மீண்டும் கட்டியெழுப்ப பாக்கித்தான் அரசு அரசாங்கத்தால் முடிந்தது. மேலும் சுதந்திரத்தின் இனவாத வன்முறையின் பெரும்பாலான வடுக்கள் அழிக்கப்பட்டன. எவ்வாறாயினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இலாகூர் மீண்டும் 1965 போரில் ஒரு போர்க்களமாக மாறியது. வாகா எல்லைப் பகுதிக்கு அருகில் இன்றும் போர்க்களம் மற்றும் அகழிகளைக் காணலாம்.

சுதந்திரத்திற்குப் பிறகு, இலாகூர் கராச்சியால் மறைக்கப்பட்டது. கராச்சி விரைவில் மிகப்பெரிய மற்றும் தொழில்மயமான நகரமாக மாறியது. பின்னர், மியான் சகோதரர்களின் நிர்வாகம் மற்றும் 1990 களில் கராச்சியில் நடந்த கலவரங்கள், அரசாங்க சீர்திருத்தங்கள் போன்ற கரணங்களால் இலாகூர் மீண்டும் ஒரு பொருளாதார மற்றும் கலாச்சார அதிகார மையமாக அதன் முக்கியத்துவத்தைப் பெற்றது. இரண்டாவது இசுலாமிய உச்சி மாநாடு இந்நகரில் நடைபெற்றது.[30] 1996 இல், சர்வதேச துடுப்பாட்ட அவையின் துடுப்பாட்ட உலகக் கோப்பை இறுதிப் போட்டி இலாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்றது.

லாகூரின் சுவர்கள் சூழ்ந்த நகரம் லாகூரின் பழமையான மற்றும் வரலாற்று பகுதியாகும். இத்திட்டத்தின் நிலையான வளர்ச்சியின் கீழ் உலக வங்கியின் உதவியுடன் ஒரு பெரிய திட்டத்தை 2009 இல் பஞ்சாப் அரசு மேற்கொண்டது.

குறிப்புகள்[தொகு]

  1. Mohamed Aminoop; Willets, Duncan; Farrow, Brendan (1988). Lahore. Lahore, Punjab, Pakistan: Ferozsons, Ltd.. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:969-0-00694-0. 
  2. Imperial Gazetteer of India, v. 16, p. 106
  3. HUDUD AL-'ALAM 'The Regions of the World' A Persian Geography பரணிடப்பட்டது அக்டோபர் 24, 2006 at the வந்தவழி இயந்திரம்
  4. Dawn Pakistan – The 'shroud' over Lahore's antiquity
  5. https://www.dawn.com/news/1221387
  6. Sarupa-Bharati: Or the Homage of Indology, Being the Dr. Lakshman Sarup ...by Vishveshvaranand Vedic Research Institute - Indic studies - 1953 - Page 247
  7. "Archived copy". Archived from the original on 2011-06-15. பார்க்கப்பட்ட நாள் 2011-09-11.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  8. "Muslim Rajputs". Archived from the original on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2011-07-03.
  9. "Lahore Profile: History". City Government Lahore. City District Government Lahore. Archived from the original on 29 December 2008. பார்க்கப்பட்ட நாள் 18 August 2013.
  10. India The early Turkish sultans
  11. Why ‘scourge of god’ ransacked Lahore every six years
  12. Indo-Persian Historiography Up to the Thirteenth Century
  13. The Dancing Girl: A History of Early India
  14. 14.0 14.1 "GC University Lahore". Archived from the original on 2018-10-28. பார்க்கப்பட்ட நாள் 2020-08-04.
  15. Tamara, Sonn (2011). Islam: A Brief History. John Wiley & Sons. https://books.google.com/books?id=cSK6g_9jclQC. 
  16. Jacques, Tony. Dictionary of Battles and Sieges பரணிடப்பட்டது 2015-06-26 at the வந்தவழி இயந்திரம். Greenwood Press. p. 562. ISBN 978-0-313-33536-5.
  17. Marathas and the English Company 1707–1818 by Sanderson Beck". san.beck.org. Retrieved 2015-04-10.
  18. Encyclopædia Britannica Eleventh Edition, (Edition: Volume V22, Date: 1910–1911), Page 892.
  19. The Ninth Master Guru Tegh Bahadur (1621–1675)
  20. Encyclopædia Britannica article on Lahore
  21. "Archived copy". Archived from the original on 2013-12-30. பார்க்கப்பட்ட நாள் 2011-07-04.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  22. Maybin, Janet. Language and literacy in social practice. Open University. p. 102.
  23. Coulmas, Florian. Writing systems. p. 232.
  24. Famous Architecture பரணிடப்பட்டது 2009-01-18 at the வந்தவழி இயந்திரம் at lahoredishaan.com
  25. Gill, Anjum. "Father of modern Lahore remembered on anniversary." Daily Times (Pakistan). July 12, 2004.
  26. Tribune India – Republic Day
  27. Daily Times Pakistan – Memorial will be built to Bhagat Singh, says governor
  28. Story of Pakistan – Lahore Resolution 1940, Jin Technologies. Retrieved on September 19, 2007.
  29. Dalrymple, William. Lahore: Blood on the Tracks. பரணிடப்பட்டது 2007-09-08 at the வந்தவழி இயந்திரம்
  30. Second Islamic Summit Conference பரணிடப்பட்டது 2006-10-14 at the வந்தவழி இயந்திரம்

நூலியல்[தொகு]

Famous city of Pakistan

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாகூரின்_வரலாறு&oldid=3704440" இலிருந்து மீள்விக்கப்பட்டது