ஜத்தீந்திர நாத் தாஸ்
ஜத்தீந்திர நாத் தாஸ் যতীন দাস | |
---|---|
பிறப்பு | கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா | 27 அக்டோபர் 1904
இறப்பு | 13 செப்டம்பர் 1929 லாகூர், பிரித்தானிய இந்தியா | (அகவை 24)
இறப்பிற்கான காரணம் | உண்ணாவிரதம் |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | ஜத்தின்; ஜத்தின் தாஸ் |
பணி | விடுதலைப் போராட்ட வீரர் |
அறியப்படுவது | சிறையில் 63 நாள் உண்ணாவிரதப் போராட்டம்; இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு உறுப்பினர் |
ஜத்தின் தாஸ் (Jatin Das) என்று அறியப்படும் ஜதீந்திர நாத் தாஸ் (Jatindra Nath Das) (27 அக்டோபர் 1904 - 13 செப்டம்பர் 1929) என்பவர் ஒரு புரட்சிகர இந்திய விடுதலை வீரர் ஆவார். இலாகூர் சிறையில் இவர் 63 நாட்கள் உண்ணா நோன்பிருந்து இறந்தது இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.[1] இந்திய விடுதலைக்கு முன்னர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டவர் ஜட்டின் தாஸ் ஒருவரே.[2]
கொல்கத்தாவில் பிறந்த ஜத்தின் தாஸ் அனுசீலன் சமிதி எனும் புரட்சிகர அமைப்பில் இணைந்தார். 1921 ஆம் ஆண்டு அண்ணல் காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.
1925 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் கொல்கத்தா வித்யாசாகர் கல்லூரியில் இவர் இளங்கலைப் பட்டப்படிப்பு பயின்று கொண்டிருந்த வேளையில் அரசியல் நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டு மைமன்சிங் நடுவண் சிறையில் அடைக்கப்பட்டார். கைதிகளை மோசமான நிலையில் நடத்துவதை எதிர்த்து இவர் உண்ணாவிரதம் இருந்தார். இருபது நாட்களுக்குப் பின் சிறைக் கண்காணிப்பாளர் மன்னிப்புக் கேட்டதும் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
1929 சூன் 14 ஆம் நாள் தனது புரட்சிகர நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்ட இவர் இலாகூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சாகும் வரை உண்ணாவிரதம்
[தொகு]இலாகூர் சிறையில் ஆங்கிலேயக் கைதிகளுக்கு அனைத்து வசதியும் செய்து தரப்பட்டது. இந்தியக் கைதிகளோ இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர். கந்தல் உடையும் கழிவு உணவும் அவர்களுக்குத் தரப்பட்டது. சமையல் அறையோ கரப்பான் பூச்சிகளும் எலிகளும் நிறைந்த இடமாயிருந்தது. இந்நிலைக்கு எதிராக ஜத்தின் தாஸ் இன்னும் சில போராளிகளுடன் இணைந்து 1929 ஆம் ஆண்டு சூலை 13 ஆம் நாள் சாகும் வரை உண்ணா நோன்பைத் துவக்கினார்.[3] சிறைக் கண்காணிப்பாளர் இவர்களை அடித்து, உதைத்து தண்ணீர் தர மறுத்து துன்புறுத்தினார். வலுக்கட்டாயமாக வாயில் உணவைத் திணித்தார். ஆனால் தாஸ் உண்ண மறுத்து விட்டார். 63 நாட்கள் தொடர்ந்த இந்தப் போராட்டம் ஜத்தின் தாசின் மரணத்தால் முடிவுற்றது. செப்டம்பர் 13 ஆம் நாள் ஜத்தின் தாஸ் உயிர் நீத்தார். இலாகூரிலிருந்து கொல்கத்தாவிற்கு ஜத்தின் தாசின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டங் கூட்டமாய்க் கூடி வந்து இவருக்கு மரியாதை செலுத்தனர். கொல்கத்தாவில் சுடுகாட்டை நோக்கி இரண்டு மைல் நீளத்திற்கு ஊர்வலமாய் மக்கள் திரண்டனர்.[4]
அஞ்சல்தலை
[தொகு]இவரின் ஐம்பதாம் ஆண்டு நினைவு நாளான 1979 செப்டம்பர் 13 ஆம் நாளிலில் இந்திய அரசு இவரது உருவம் பொறித்த அஞ்சல் தலையொன்றை வெளியிட்டது.
மேற்கோள்கள்கள்
[தொகு]- ↑ Heroes of Anti Imperialist (British) Movement
- ↑ "Fast & Win". டைம் (இதழ்). 1952-12-29 இம் மூலத்தில் இருந்து 2009-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090203163221/http://www.time.com/time/magazine/article/0%2C9171%2C822565-1%2C00.html. பார்த்த நாள்: 2008-08-09.
- ↑ Dr. Premdatta Verma, Punjab University Weekly Bulletin, 19 September 1964
- ↑ Gateway for India article
வெளியிணைப்புகள்
[தொகு]- இந்திய அஞ்சல் கட்டுரை பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- T டெய்லிபயோனீர் இதழ் கட்டுரை