உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பரமபதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பரமபதம் அல்லது வைகுண்டம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] வைணவ அடியவர்கள் கடைசி நிலையாகிய வீடுபேறு அல்லது மோட்சம் அல்லது முக்தி என்ற நிலை எய்தி செல்லும் இடமாகும். 8 ஆழ்வார்களால் 36 பாசுரங்களில் பாடல் பெற்ற தலமாகும். வைணவ அடியார்கட்கு, இறைவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில்லை என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே வைணவர்களின் கடைசி இலக்காகும். இதனை திருநாடு என ஆழ்வார் பாசுரங்களில் குறிக்கின்றனர். திருநாட்டைப் பற்றிப் புராணங்களாலும் ஆழ்வார் பாசுரங்களாலும் உணரலாம். இராமானுஜர் இயற்றிய வேதாந்த சங்கிரஹம் என்னும் நூல் திருநாட்டைப் பற்றித் தெளிவாகவும், நேரில் பார்ப்பது போலவும் விளக்கிப் பேசுகிறது. இராமானுஜர் இயற்றிய கத்யத்ரயத்தில் ஒன்றான வைகுண்டகத்யத்தில் பரமபத வர்ணனை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. இராமானுஜரின் வரலாற்றைப் பேசும் “ப்ரபந்நாம்ருத தர்ப்பணம்” என்னும் நூலில் பரமபதம் விளக்கப்பட்டுள்ளது.

இறைவன், இறைவி

[தொகு]

வீற்றிருந்த திருக்கோலத்தில் இறைவன் பரமபதநாதன், வைகுண்டபதி என்று அழைக்கப்படுகிறான். இறைவி பெரியபிராட்டியார். தீர்த்தம் விரஜா நதி, அயிரமத புஷ்கரிணி.

சிறப்புகள்

[தொகு]

வைணவ சித்தாந்தங்களின் படி இங்கு செல்லும் ஜீவாத்மாக்கள் நித்யசூரிகள் ஆகின்றன. அதாவது எப்போதும் அழிவற்ற சக்தியைப் பெறுகின்றன. இங்கு இறைவனைப் போலவே வடிவம் அவர்கட்கும் உண்டாகிறது. ஆயினும் இறைவனோடு இரண்டறக் கலக்காமல் உடனிருந்து தொண்டு செய்து கொண்டு எப்போதும் பல்லாண்டிசைத்துக் கொண்டிருப்பர். நித்ய சூரியாகி இங்கு சென்றுவிட்டால் படைப்புகளும், பிரபஞ்சங்களும் என்னவென்று தெளிவாகத் தெரிவதால் இதற்கு தெளிவிசும்புத் திருநாடு என்று பெயர்.இதற்குமேல் அறிவதற்கு ஒன்றுமில்லையாதலால் இதற்கு எல்லைநிலம் என்பது பொருள். இங்கு அடையும் இன்பத்திற்கும் நலத்திற்கும் முடிவே இல்லாததால் நலமந்தமில்லதோர் நாடு என்பதும் இதற்குப் பெயர். இங்கு கிடைக்கும் இன்பம் “அந்தமில் பேரின்பம்” என்று நம்மாழ்வார் பாடுகிறார். வாசுதேவன் வைகும்படியான (வாழும்படியான) இருப்பிடமாதலால் வைகுண்டம் என்றும் பெயருண்டு.[2]

மேற்கோள்

[தொகு]
  1. M. S., Ramesh (2000). 108 Vaishnavite Divya Desams: Divya desams in Malai Nadu and Vada Nadu. Tirumalai-Tirupati Devasthanam. p. 188.
  2. ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பரமபதம்&oldid=4181039" இலிருந்து மீள்விக்கப்பட்டது