பன்னாட்டு முதனி வர்த்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னாட்டு முதனி வர்த்தகத்தில் (ஆங்கிலம்: International primate trade) காடுகளில் காணப்படும் 32,000 மனிதரல்லா முதனிகள் (non-human primates [NHPs]) பிடிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் விற்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பான்மையானவை விலங்குப் பரிசோதனைகளுக்காக விற்கப்படுகின்றன என்றாலும் உணவுக்காகவும்; உயிரியல் பூங்காக்கள், வட்டரங்குகள் ஆகியவற்றில் கண்காட்சிக்காகவும்; தனிப்பட்ட செல்லப்பிராணி சந்தைகளிலும் விற்கப்படுகின்றன.

தொடர்புடைய நாடுகள்[தொகு]

சர்வதேச அளவில் விற்கப்படும் அனைத்து மனிதரல்லா முதனிகளில் மூன்றில் ஒரு பகுதியை ஐக்கிய அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இதற்கு அடுத்தார்போல் ஐக்கிய இராச்சியம் இரண்டாவது அதிக எண்ணிக்கையில் முதனிகளை இறக்குமதி செய்கிறது. ஜப்பான், ரஷ்யா, நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் தைவான் ஆகியவையும் அதிக இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

மனிதரல்லா முதனிகள் இயல்பாகவே காணப்படும் இந்தோனேசியா, மலேசியா, கென்யா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மொரிஷியஸ், தென் அமெரிக்காவின் அமேசானிய பகுதிகள் முழுவதும் மற்றும் சீனா ஆகிய பகுதிகளிலிருந்து அவை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பிடித்தலும் இடமாற்றம் செய்தலும்[தொகு]

முதனிகள் பெரும்பாலும் உள்ளூர் கிராமவாசிகளாலும் விவசாயிகளாலும் பிடிக்கப்படுகின்றன. பொதுவாக அவை தூண்டிலிடப்பட்ட வலைகள் கொண்டும் தூண்டிலிடப்பட்ட பொறிகளை அமைத்தும் பிடிக்கப்படுகின்றன. பலசமயங்களில் முதனிகள் தங்களது முழுக் குடும்பத்துடன் இவ்வலைகளில் சிக்கக்கூடும். இவற்றில் ஏற்றுமதிக்குத் தேவையில்லாத விலங்குகள் கொல்லப்பட்டு உணவுக்காக விற்கப்படுகின்றன.

பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதில் எஞ்சிய முதனிகள் உணவு, தண்ணீர் ஆகியவை இல்லாமல் சேமிப்பு மையங்களுக்கு பெட்டிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. அம்மையங்களில் கூட்டமாகவும் அசுத்தமான நிலைகளிலும் முதனிகள் இருத்தப்படுகின்றன. இப்பெட்டிகளில் நிற்க முடியாமல் பல முதனிகள் இறந்துவிடுகின்றன. மீதமுள்ளவற்றில் நோய்வாய்ப்பட்டவை, மிகவும் மெலிந்தவை, மிகவும் வயதானவை போன்றவை களையெடுக்கப்பட்டு எஞ்சியுள்ளவை ஏற்றுமதிக்கு அனுப்பப்படுகின்றன. இவற்றில் பெண் விலங்குகள், குட்டிகள் ஆகியவை சந்தைகளில் மிகவும் விரும்பி வாங்கப்படுபவையாக விளங்குகின்றன.[1]

1992-ம் ஆண்டு உடற்கூறாய்வு ஒழிப்பிற்கான பிரித்தானிய ஒன்றியம் (British Union for the Abolition of Vivisection) நடத்திய விசாரணையின்படி, 75% முதனிகள் சேமிப்புக் கிடங்குகளில் கொல்லப்படுகின்றன என்று தெரியவந்துள்ளது.[2]

விலங்குப் பரிசோதனை[தொகு]

மனிதரல்லா முதனிகள் ஐக்கிய அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு அங்கு "அறிவியல், கல்வி மற்றும் கண்காட்சி நோக்கங்களுக்காகவும்" இனப்பெருக்க மையங்களின் பயன்பாட்டுக்காகவும் விற்கப்படுகின்றன. AESOP திட்டத்தின் கூற்றுப்படி, பெரும்பாலான முதனிகள் ஆய்வகங்களில் பயன்படுத்துவதற்காக அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

2014-ம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்காவில் ஆய்வகங்களுக்காகவும் ஆய்வக வினியோகஸ்தர்களுக்காகவும் 23,465 மனிதரல்லா முதனிகள் இற்ககுமதி செய்யப்பட்டன. இவற்றில் மக்காக்குகள், கிரிவெட்டுகள், கபுச்சின்கள் உள்ளிட்ட இனங்கள் அடங்கும். இந்த விலங்குகளில் பெரும்பாலானவை முறையே சீனா, மொரிஷியஸ், கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டவை. கோவன்ஸ், சார்லஸ் ரிவர் லேபாரேட்டரீஸ், மற்றும் எஸ்.என்.பி.எல் யு.எஸ்.ஏ (SNBL USA) ஆகியவை ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும் குரங்குகளின் மிகப்பெரிய அமெரிக்க இறக்குமதியாளர்கள் ஆவர்.[3] 1995-க்கும் 1999-க்கும் இடையில், 1,580 காட்டு பாபூன்கள் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டன.[4]

குரங்குகள் மற்றும் பிற விலங்குகளை ஆய்வகங்களுக்கு கொண்டு செல்வதை நிறுத்த வேண்டி பீட்டா மற்றும் இதர விலங்குரிமைக் குழுக்கள் விமான நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.[5] பல விலங்குகள் நலக் குழுக்களின் பிரச்சாரங்களின் விளைவாக உலகெங்கும் 110க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் குரங்குகளை ஆய்வகங்களுக்கு கொண்டு செல்ல மறுக்கின்றன என்று பீட்டா தெரிவிக்கிறது.[6]

2015-ம் ஆண்டு நிலவரப்படி, மனிதரல்லா முதனிகளை ஆய்வகங்களுக்கு ஏற்றிச் செல்லும் கடைசி பெரிய விமான நிறுவனமாக ஏர் பிரான்ஸ் உள்ளது. அறிவியல் ஆராய்ச்சிகளில் குரங்குகளைப் பயன்படுத்துவது அவசியம் என்று கூறி ஏர் பிரான்ஸ் இந்த நடைமுறையை ஆதரிப்பதை பீட்டா, ஜேன் குடால், ஜேம்ஸ் குரோம்வெல், பீட்டர் கேப்ரியல் உள்ளிட்ட பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.[7]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள் தரவுகள்[தொகு]

  1. Howard, Linda & Jones, Dena. "Trafficking in Misery: The Primate Trade", Animal Issues, Volume 31, Number 3, Fall 2000.
  2. "Next of kin" பரணிடப்பட்டது 2007-04-06 at the வந்தவழி இயந்திரம், British Union for the Abolition of Vivisection.
  3. "U.S. primate import statistics for 2014". International Primate Protection League. 26 January 2015. Archived from the original on 12 July 2015. பார்க்கப்பட்ட நாள் 14 July 2015.
  4. Figures from the U.S. Fish and Wildlife Service, LEMIS (Law Enforcement Management Information Service), cited in Howard, Linda & Jones, Dena. "Trafficking in Misery: The Primate Trade", Animal Issues, Volume 31, Number 3, Fall 2000.
  5. Wadman, Meredith (20 March 2012). "Activists ground primate flights". Nature. http://www.nature.com/news/activists-ground-primate-flights-1.10255. 
  6. "Airlines That DO and That DO NOT Ship Primates to Labs". PETA.org. PETA. பார்க்கப்பட்ட நாள் 14 July 2015.
  7. Meikle, James (20 May 2014). "Jane Goodall and Peter Gabriel urge Air France to stop ferrying lab monkeys". The Guardian. https://www.theguardian.com/science/2014/may/20/jane-goodall-peter-gabriel-air-france-stop-monkeys-transport.