இறைச்சித் தொழிற்றுறை
இறைச்சித் தொழிற்துறை (ஆங்கிலம்: meat industry) என்பது நவீன தொழில்மயமாக்கப்பட்ட கால்நடை விவசாயத்தைக் கொண்டு இறைச்சியை உற்பத்தி செய்தல், பொட்டலம் கட்டுதல், பாதுகாத்தல், சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள மக்களையும் நிறுவனங்களையும் கொண்ட தொகுப்பாகும். பால் பொருட்கள், கம்பளி உற்பத்தி போன்ற இறைச்சியை விடுத்த இன்ன பிற விலங்குப் பொருட்களின் உற்பத்தி இத்தொழிற்துறையில் அடங்காது. பொருளாதாரச் சிந்தனையில், இறைச்சித் தொழிற்துறை என்பது முதன்மை நிலை (விவசாயம்) மற்றும் இரண்டாம் நிலை (தொழிற்துறை) செயல்பாட்டின் இணைவு ஆகும். இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் கொண்டு இறைச்சித் தொழிற்துறையினை வரையறை செய்வது சற்றே கடினம். இறைச்சித் தொழிலின் பெரும்பகுதி இறைச்சிப் பொட்டலத் தொழிற்துறையால் ஆனதாகும். இறைச்சிப் பொட்டலத் தொழிற்துறை என்பது கோழி, கால்நடை, பன்றி, செம்மறியாடு உள்ளிட்ட பண்ணை விலங்குகளை கொன்று, பதப்படுத்தி, பொட்டலம் கட்டி, விநியோகம் செய்யும் ஒட்டுமொத்த செயற்பாடுகளைக் கையாளும் பிரிவினை உள்ளடக்கியதாகும்.
உணவுத் தொழிலில் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் கிளையான[1] இறைச்சித் தயாரிப்பின் பெரும்பகுதி தொழிற்துறை கால்நடை உற்பத்தியை உள்ளடக்கியது. தீவிர விலங்கு வளர்ப்பு என்றும் அழைக்கப்படும் தொழிற்துறை கால்நடை உற்பத்தியில் கால்நடைகள் முழுக்க முழுக்க மூடிய அறைகளுக்குள் வைக்கப்பட்டோ[2] அல்லது வேலியிட்ட திறந்த வெளிக் கூடு உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட வெளிப்புற அமைப்புகளிலோ வைக்கப்பட்டோ வளர்க்கப்படுகின்றன. இறைச்சிக்கான விலங்கு வளர்ப்பில் பல அம்சங்கள் இன்று தொழிற்மயமாகிவிட்டன. இதில் பல நடைமுறைகள் சிறிய அளவிலான குடும்பப் பண்ணைகளுடன் தொடர்புடையவை (எ.கா. ஃபோய் கிரா எனப்படும் வாத்துக் கல்லீரல் இறைச்சி உள்ளிட்ட சுவைசார் உணவுகள்[3][4]). நவீன யுகத்தில் கால்நடைகளின் உற்பத்தி என்பது செங்குத்தாக ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாகும், அஃதாவது இதில் பெரும்பாலான விநியோகச் சங்கிலி நிலைகள் ஒருங்கிணைக்கப்பட்டும் ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்குச் சொந்தமானவையாகவும் உள்ளன.
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Global Meat Production and Consumption Continue to Rise". Worldwatch Institute. 24 January 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 June 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Paul Ebner. "Modern Livestock Facilities". Purdue University. 22 May 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 March 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Foie Gras: Cruelty to Ducks and Geese | Ducks and Geese Used for Food | Factory Farming: Misery for Animals | The Issues". PETA. 21 June 2010. 2017-01-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "An Animal Equality investigation". Foie Gras farms. 2017-01-16 அன்று பார்க்கப்பட்டது.