விலங்குப் பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாத்திலிருந்து தயாரிக்கப்படும் "டக் டக் டக்" என்ற உணவு
ஆட்டு பாலாடைக்கட்டியின் பல வகைகள்

விலங்குப் பொருள் (animal product) என்பது ஒரு விலங்கின் உடலில் இருந்து பெறப்படும் எந்தவொரு பொருளையும் குறிக்கும்.[1] எடுத்துக்காட்டுகளாவன கொழுப்பு, சதை, இரத்தம், பால், முட்டை போன்றவை. இவை மட்டுமல்லாது ஐசிங்கிளாஸ் (isinglass), ரெனெட் (rennet) போன்ற அதிகம் அறியப்படாத பொருட்களும் விலங்குப் பொருட்கள் என்ற பட்டியலில் அடங்கும்.[2]

விலங்குத் துணைப் பொருட்கள் (animal by-products அல்லது ABPs) என்பது, அமெரிக்காவின் யு.எஸ்.டி.ஏ. (USDA) ஆல் வரையறுக்கப்பட்ட வகையில், தசை இறைச்சியைத் தவிர்த்து கால்நடைகளில் இருந்து அறுவடையோ உற்பத்தியோ செய்யப்படும் பொருட்கள் ஆகும்.[3] ஐரோப்பிய ஒன்றியத்தில் விலங்குத் துணைப் பொருட்கள் என்பது விலங்குகளிலிருந்து வரும் மக்கள் உட்கொள்ளாத பொருட்கள் என ஓரளவு பரந்த அளவில் வரையறுக்கப்படுகிறது.[4] இவ்வகையில், மனித நுகர்வுக்கான கோழி முட்டைகள் அமெரிக்காவில் துணைப் பொருட்களாகக் கருதப்படுகையில் பிரான்சில் அவை அவ்வாறு வகைப்படுத்தப்படுவதில்லை; அதேசமயம் விலங்குகளின் தீவனத்திற்காகப் பயன்படுத்தப்படும் முட்டைகள் இவ்விரு நாடுகளிலும் விலங்குத் துணைப் பொருட்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வகையான வேறுபட்ட வகைபாடுகள் அப்பொருட்களின் உற்பத்தியின் நிலை, பாதுகாப்பு, ஆரோக்கியத் தன்மை போன்றவற்றை பிரதிபலிப்பதில்லை.

விலங்குத் துணைப் பொருட்கள் என்பவை வதைகூடங்கள், விலங்குக் காப்பகங்கள், உயிரியல் பூங்காக்கள், கால்நடை மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களிலிருந்து பெறப்படும் சடலங்களையும் சடலங்களின் பாகங்களையும், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட மனிதரால் உண்ணத்தகாத விலங்குப் பொருட்களைக் குறிக்கும். இந்த தயாரிப்புகள் "ரெண்டரிங்" என்னும் செயல்முறை மூலம் மாற்றப்பட்டு மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உணவுப் பொருட்களாகவும், கொழுப்புகளாகவும், அழகுசாதனப் பொருட்கள், வண்ணப்பூச்சுகள், கழுவுப் பொருட்கள், மெருகுப் பொருட்கள், பசை, வழலை (soap), மை போன்ற வணிகப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்களாகவும் விற்கப்படுகின்றன. இவ்வாறு விலங்குத் துணைப் பொருட்களின் விற்பனையின் வாயிலாக இறைச்சித் தொழிற்துறை காய்கறி புரதத்தின் மூலங்களை விற்கும் தாவரத் தொழிற்துறையோடு பொருளாதார ரீதியாக போட்டியிடும் தன்மை கொண்டதாக உருமாறுகிறது.[5]

விலங்குகள் என்ற சொல் பூச்சிகள், இறால், சிப்பிகள் எனத் தொடங்கி "அனிமலியா" என்றழைக்கப்படும் விலங்குத் திணையைச் சேர்ந்த அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கியது. பொதுவாக, பண்டைய விலங்குகளின் புதைபடிவ அல்லது சிதைந்த எச்சங்களிலிருந்து உருவாகும் பொருட்களான பெட்ரோலியம் போன்ற பொருட்கள் விலங்குப் பொருட்களாகக் கருதப்படுவதில்லை. அதுபோலவே, விலங்குகளின் எச்சங்களால் உரமிடப்பட்ட மண்ணில் வளர்க்கப்படும் பயிர்கள் விலங்குப் பொருட்களாக வகைப்படுத்தப்படுவதில்லை.

நன்கறியப்பட்ட பல உணவுமுறைகள் சில வகை விலங்குப் பொருட்களைத் தடைசெய்வதோடல்லாமல் இன்ன பிற விலங்குப் பொருட்களை எப்போது ஏற்கலாம் என்பது போன்ற நிபந்தனைகளையும் விதிக்கின்றன. இதில் சைவம், மீன் உணவு, கற்கால உணவு போன்ற மதம்சாரா உணவுமுறைகளும் கோசர், ஹலால், மகாயானம், மேக்ரோபயாடிக், சாத்விக உணவுமுறை போன்ற மதம்சார் உணவுமுறைகளும் அடங்கும். சுத்த சைவ, தாவர, மற்றும் நனிசைவ உணவுமுறைகள் விலங்கிலிருந்து வரும் எந்தவொரு பொருளையும் ஏற்காது அவற்றை விலக்குகின்றன.[6] கல்வித்துறையில் விலங்கு மூல உணவுகள் (animal source foods அல்லது ASFs) என்ற சொல் விலங்குப் பொருட்களையும் விலங்குத் துணைப் பொருட்களையும் கூட்டாகக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[7]

சர்வதேச வர்த்தகச் சட்டத்தில், விலங்குகளிலிருந்து பெறப்பட்ட அல்லது விலங்குகளோடு நெருங்கிய தொடர்புள்ள உணவுகளையும் சரக்குகளையும் குறிப்பிடுவதற்கு "விலங்கிலிருந்து தோன்றும் பொருட்கள்" (products of animal origin அல்லது POAO) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.[8]

வதைகூடக் கழிவுகள்[தொகு]

வதைகூடக் கழிவுகள்

வதைகூடத்தில் வெட்டப்பட்ட விலங்குகளின் சடலங்களிலிருந்து மனித உணவாகக் கருதப்படும் பகுதிகளைப் பிரித்தெடுத்த பின்னர் எஞ்சியிருக்கும் பாகங்கள் வதைகூடக் கழிவுகள் எனப்படுகின்றன. இந்தக் கழிவுகள் வதைகூடங்கள் மட்டுமின்றி உணவகங்கள், கடைகள், பண்ணைகள் எனப் பலதரப்பட்ட மூலங்களிலிருந்தும் வரலாம். இங்கிலாந்தில், வதைகூடக் கழிவுகள் விலங்குகளின் துணை தயாரிப்புகள் ஒழுங்குமுறைகளின் கீழ் 3-ம் வகை ஆபத்துக் கழிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. தடைசெய்யப்பட்ட இறைச்சியின் துணை தயாரிப்புகள் 2-ம் வகை ஆபத்துக் கழிவுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கழிவுகளிலிருந்து செல்லப்பிராணிகளின் உணவுப் பொருட்கள் தயாரிப்பு[தொகு]

விலங்குகளின் உடல்களிலிருந்து இறைச்சியை பிரித்தெடுத்த பின்னர் உள்ள வதைகூடக் கழிவுகள் பல்வேறு வகைகளில் மேலும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்று அக்கழிவுப் பகுதிகளை செல்லப்பிராணிகளின் உணவாகத் தயாரித்தல் ஆகும்.[9] நன்கு அறியப்பட்ட பல பெரிய செல்லப்பிராணி உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் புரத மூலங்களாக வதைகூடங்களிலிருந்து கிடைக்கும் விலங்குத் துணைதயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றன. இவற்றில் விலங்குகளின் கால்கள், கல்லீரல்கள், நுரையீரல்கள், தலைகள், மண்ணீரல்கள், இறைச்சியும் எலும்பும் சேர்ந்த கலவை வடிவ உணவு ஆகியவை அடங்கும். இந்த உறுப்புகள் பெரும்பாலும் கலாச்சாரக் காரணங்களால் மனிதர்களால் உண்ணப்படுவதில்லை. எனினும் இவற்றிலும் புரதம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இவை செல்லப்பிராணிகளுக்கு பாதுகாப்பான சத்துணவாக மாற்றப்படுகின்றன. காட்சிக்கு அறுவறுப்பான இறைச்சி பாகங்களும் இவ்வாறு துணைதயாரிப்புகளில் சேர்க்கப்பட்டு விடும். இவற்றிலிருக்கும் நோய்க்கிருமிகளைக் கொல்ல இத்தயாரிப்புகள் எப்போதும் கொதிக்க வைக்கப்பட்டே பயன்படுத்தப்படுகின்றன.[9] சில செல்லப்பிராணி உணவு தயாரிப்பாளர்கள் வாங்குபவர்களைக் கவரும் வகையில் இதுபோன்ற விலங்குத் துணைதயாரிப்புகள் ஏதும் இல்லாத தங்களது உணவுப் பொருட்களை பிரத்தியேகமாக விளம்பரப்படுத்துகிறார்கள். எனினும் இதுபோன்ற நடவடிக்கையானது உணவு வீணாக்கப்படுவதற்கும் நிலைத்தன்மையைக் குறைப்பதற்கும் காரணம் என்று சிலரால் விமர்சிக்கப்படுகிறது.[10]

சேர்பொருட்கள்[தொகு]

உணவுப் பொருட்களிலும் மற்ற மனிதப் பயன்பாட்டுப் பொருட்களிலும் பலவகையான சேர்பொருட்கள் (additives) விலங்குத் துணைதயாரிப்புகளிலிருந்து பெறப்படுகின்றன. அவற்றில் சில:

 • கார்மைன் (Carmine): இது நொறுக்கப்பட்ட காச்சினியல் வகை வண்டுகளில் இருந்து பெறப்படுகிறது. இது உணவுப் பொருட்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சிவப்பு அல்லது ஊதா நிறப் பொருளாகும்.[11] சாறு, மிட்டாய், தயிர் போன்ற உணவுப் பொருட்களில் இது பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.[12][13] இந்தத் தயாரிப்புகளில் கார்மைன் இருப்பது சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.[14][15] ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் ஃப்ராப்புசினோஸில் கார்மைனைப் பயன்படுத்துவது இச்சர்ச்சைக்கு ஒரு முக்கிய காரணமாகும்.[16][17] அமெரிக்க அரசு நிறுவனமான எஃப்.டி.ஏ. (FDA [Food and Drug Administration]) கூற்றின் படி கார்மைன் ஒரு ஒவ்வாமைக் காரணி ஆகும்.[18] ஒரு பவுண்டு கார்மைன் சாயத்தை உற்பத்தி செய்ய சுமார் 70,000 பெண் பூச்சிகள் கொல்லப்படுகின்றன.[19]
 • எல்-சிஸ்டீன் (L-cysteine): மனித முடியிலிருந்தும் பன்றியின் முட்களிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. பிஸ்கேட், ரொட்டி, கூடுதல் உணவுப் பொருட்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
 • ரென்னெட் (Rennet): பொதுவாக பாலாடைக்கட்டி தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
 • ஷெல்லாக் (Shellac): பொதுவாக உணவுச் சாயம், உணவு மெருகூட்டுப் பொருள், மருந்து மெருகூட்டுப் பொருள் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படுகிறது.
 • ஸ்விஃப்ட்லெட் பறவையின் கூடு (Swiftlet's nest): உமிழ்நீரால் ஆனது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Gilman, Daniel Coit; Peck, Harry Thurston; Colby, Frank Moore (1907). The New International Encyclopædia (in ஆங்கிலம்). Dodd, Mead & Co. p. 474.
 2. Unklesbay, Nan. World Food and You. Routledge, 1992, p. 179ff.
 3. "Archived copy". Archived from the original on 2017-02-02. பார்க்கப்பட்ட நாள் 2017-01-20.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 4. "Animal by-products".
 5. Ockerman, Herbert and Hansen, Conly L. Animal by-product processing & utilization. Technomic Publishing Company Inc., 2000, p. 1.
 6. Stepaniak, Joanne. Being Vegan: Living with Conscience, Conviction, and Compassion. McGraw-Hill Professional, 2000, p. 7.
 7. Adesogan, Adegbola (14 October 2019). "Animal source foods: Sustainability problem or malnutrition and sustainability solution? Perspective matters". Global Food Security 25: 100325. doi:10.1016/j.gfs.2019.100325. 
 8. Animals and animal products: international trade regulations
 9. 9.0 9.1 "Byproducts". talkspetfood.aafco.org.
 10. "A big pawprint: The environmental impact of pet food". Clinical Nutrition Service at Cummings School. 8 February 2018.
 11. Jones, Nathaniel Lee, Benji. "Yoplait strawberry yogurt is one of many foods colored with carmine, a dye made from crushed cochineal bugs". Business Insider. பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
 12. Pearson, Gwen (2015-09-10). "You Know What Makes Great Food Coloring? Bugs". Wired. பன்னாட்டுத் தர தொடர் எண் 1059-1028. பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.
 13. Smale, Helen Soteriou and Will (2018-04-28). "Why you may have been eating insects your whole life" (in en-GB). BBC News. https://www.bbc.com/news/business-43786055. 
 14. "Berries Over Bugs! | Center for Science in the Public Interest". cspinet.org. July 24, 2013. பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.
 15. "Conference proceedings literature added to ISI's chemistry citation index". Applied Catalysis A: General 107 (1): N4–N5. December 1993. doi:10.1016/0926-860x(93)85126-a. பன்னாட்டுத் தர தொடர் எண்:0926-860X. 
 16. "Cochineal and Starbucks: Actually, this dye is everywhere". Los Angeles Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2012-04-20. பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.
 17. Cruz, Kim Bhasin, Noelia de la. "Here's what you need to know about the ground-up insects that Starbucks puts in your Frappuccino". Business Insider. பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
 18. "Why You Should Never, Ever Give Red Candies To Your Valentine". HuffPost (in ஆங்கிலம்). 2014-02-13. பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.
 19. "Is it true that some candies are coloured with insect extract?". Office for Science and Society (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்குப்_பொருள்&oldid=3722243" இலிருந்து மீள்விக்கப்பட்டது