வேட்டையாடுதலுக்கான எதிர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூயார்க்கு நகரத்தில் நடைபெற்ற வேட்டையாடுதலுக்கு எதிரான அணிவகுப்புப் போராட்டம்

வேட்டையாடுதலுக்கான எதிர்ப்பு (Opposition to hunting) என்பது வேட்டையாடும் செயலை எதிர்க்கும் நபர்களாலும் குழுக்களாலும் பெரும்பாலும் வேட்டை எதிர்ப்புப் சட்டங்கள் மூலமும் சில நேரங்களில் வேட்டைத் தடுப்புச் செயற்பாடுகள் உள்ளிட்ட ஒத்துழையாமைச் செயல்களை மேற்கொள்வதன் மூலமாகவும் முன்னெடுக்கப்படுகிறது. ஒரு சட்டமானது வேட்டையாடும் செயலின் கொடூரத் தன்மையைக் கருத்தில் கொண்டு அச்செயலைத் தடுத்து நிறுத்தவோ குறைக்கவோ செய்கிறதா அல்லது வனவிலங்குகளைப் பாதுகாப்பதைக் கருத்தில் கொண்டு வேட்டையாடும் செயலை ஒழுங்குபடுத்த முற்படுகிறதா என்ற வகையில் "ஆங்கில வேட்டைச் சட்டம் 2004" (English Hunting Act 2004) போன்ற வேட்டை எதிர்ப்புச் சட்டங்கள் "அமெரிக்க கடல் பாலூட்டி பாதுகாப்புச் சட்டம்" (American Marine Mammal Protection Act) போன்ற பாதுகாப்புச் சட்டங்களில் இருந்து பொதுவாக வேறுபடுகின்றன. எனினும் அருகிவரும் விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் சில குறிப்பிட்ட சட்டங்களில் இந்த வேறுபாடு மங்கலாகிவிடுகிறது.

பொழுதுபோக்கிற்காக வேட்டையாடுவது என்பது கொடூரமானது என்றும் தேவையற்றது என்றும் அறமற்றது என்றும் விலங்குரிமை ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.[1][2] வேட்டையாடுவதால் வேட்டையாடப்படும் விலங்குகளுக்கு ஏற்படும் வலி, துன்பம், கொடுமை ஆகியவற்றை தங்கள் எதிர்ப்புக்கான அடிப்படைக் காரணிகளாக அவர்கள் சுட்டுகின்றனர்.[1][2] வேட்டையாடுதலுக்கான எதிர்ப்பு (anti-hunting) என்ற சொல் வேட்டையாடுவதை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களையும் அவர்களது செயற்பாட்டையும் விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவான சொல்தான் என்றாலும் வேட்டையாடுவதை ஆதரிப்போரால் தங்களை எதிர்ப்பவர்களை நோக்கிப் பயன்படுத்தப்படும் இழிவுச் சொல்லாக இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

புவியியல் வேறுபாடுகள்[தொகு]

பல்வேறு நாடுகளிலும் காணப்படும் வேட்டையாடுதலுக்கான எதிர்ப்பு உணர்வின் தன்மையையும் வலிமையையும் ஒப்பிடுவது சற்று கடினமே. இதற்குக் காரணம் "வேட்டையாடுதல்" என்ற சொல் பல்வேறு நாடுகளிலும் பலவாறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்பது தான் (எ.கா., இச்சொல் இங்கிலாந்தில் ஒரு விதமாகவும் ஐக்கிய அமெரிக்காவில் வேறுவொரு விதமாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது). இது இவ்வாறு இருக்கையில், வெவ்வேறு நாடுகளில் உள்ள வேட்டை எதிர்ப்பு இயக்கத்தின் வலிமையை ஒப்பிடுவது என்பதோ ஒப்பீட்டளவில் கூடுதல் சாத்தியமாகவே உள்ளது. இங்கிலாந்து போன்ற நாடுகளில் இவ்வியக்கம் வலுவாகவும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் முற்றிலுமாக இல்லாமலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நாட்டிற்குள் நடத்தப்படும் பல்வேறு கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் கூட பரவலாக மாறுபடுகின்றன. இதன் காரணமாகவே கருத்துக் கணிப்புகளையும் ஆராய்ச்சிகளையும் நடத்துவதற்கு, பொதுவாகச் சந்தை ஆராய்ச்சிகள் அனைத்திலும் செய்யப்படுவதைப் போல், செய்தியாக்கப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொள்வதும் கருத்துக்கணிப்புக் கேள்விகளின் சொல்லாடல்களை கவனமாக இயற்றுவதும் மிக முக்கியம். இவை இரண்டுமே கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை கணிசமாக பாதிக்க வல்லவை.[3]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள் தரவுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]