உள்ளடக்கத்துக்குச் செல்

சில்வர் ஸ்பிரிங் குரங்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சில்வர் ஸ்பிரிங் குரங்குகள்
சில்வர் ஸ்பிரிங் குரங்குகளில் ஒன்றான டாமிஷியன் (நாளிதழ்களுக்கு பீட்டா வெளியிட்ட படங்களில் ஒன்று).[1]
நாள்மே 1981; 43 ஆண்டுகளுக்கு முன்னர் (1981-05)
நிகழிடம்நடத்தை ஆராய்ச்சி மையம், சில்வர் ஸ்பிரிங், மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா
முதல் தகவல்தி வாஷிங்டன் போஸ்ட்
Participantsஎட்வார்டு டாப், அலெக்ஸ் பச்சேகோ, இங்க்ரிட் நியூகர்க், பீட்டா
Outcomeநியூரோபிளாஸ்டிசிட்டி மற்றும் வலிப்பு நோய்க்கான மருந்து குறித்த ஆய்வுகளில் முன்னேற்றம்; ஐக்கிய அமெரிக்க ஆய்வகம் ஒன்றில் நடந்த முதல் காவல்துறை கண்காணிப்பு திடீர் சோதனை; அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் மீது போடப்பட்ட முதல் விலங்கு வன்கொடுமை வழக்கு (ரத்து செய்யப்பட்டது); 1985 விலங்கு நலச் சட்டத்தின் அறிமுகம்; விலங்கு விடுதலை முன்னணியின் முதல் வட அமெரிக்கக் குழுவின் உருவாக்கம்
குற்றங்கள்எட்வார்டு டாப் விலங்கு வன்கொடுமை குற்றத்திற்காக 17 முறையும் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காத குற்றத்திற்காக 6 முறையும் குற்றம் சாட்டப்பட்டார்.
தண்டனை(கள்)6 குற்றங்களுக்காக தண்டனைக்குட்பட்ட டாப், பின்னர் மேல்முறையீட்டின் விளைவால் விடுவிக்கப்பட்டார்.

சில்வர் ஸ்பிரிங் குரங்குகள் (The Silver Spring monkeys) என்பன பிலிப்பைன்ஸ் காடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு ஐக்கிய அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தின் சில்வர் ஸ்பிரிங் நகரில் உள்ள நடத்தை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுக்காக வைக்கப்பட்ட 17 மக்காக் வகை குரங்குகள் ஆகும்.[2] இக்குரங்குகளை ஆராய்ச்சியில் பயன்படுத்துவதா அல்லது சரணாலயத்திற்கு விடுவிப்பதா என்று விலங்கு ஆராய்ச்சியாளர்கள், விலங்குரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள் ஆகியோருக்கு இடையே 1981 முதல் 1991 வரை நடந்த நீண்ட விவாதத்தின் விளைவாக இக்குரங்குகள் வரலாற்றின் மிகவும் பிரபலமான ஆய்வக விலங்குகள் என்று அழைக்கப்படலாயின. அறிவியல் சமூக வட்டத்திற்குள் இக்குரங்குகள் நரம்பணு நெகிழித்தன்மையின் அல்லது நியூரோபிளாஸ்டிசிட்டி (neuroplasticity)—அதாவது வளர்ச்சியடைந்த ஒரு முதனி மூளையின் தன்னைத் தானே மறுசீரமைக்கும் திறன்—குறித்த சோதனைகளில் பயன்படுத்தப்படுவதற்கு நன்கறியப்பட்டன.[3]

உளவியலாளரான எட்வர்ட் டாப் என்பவர் இந்தக் குரங்குகளை ஆராய்ச்சிப் பயன்படுத்தினார். இவர் இக்குரங்குகளின் கைகளிலிருந்து மூளைக்கு உணர்வை அளிக்கும் உட்செல் நரம்புத்திரளின் (afferent ganglia) நரம்புப் பகுதியை வெட்டினார். இதன் பின்னர் இக்குரங்குகளின் செயற்படும் கையிலோ அல்லது உணர்வு வெட்டப்பட்ட கையிலோ இவற்றைக் கட்டுப்படுத்த கை கவண்களைப் (arm slings) பயன்படுத்தினார். இவ்வகையில் இவை தனது உணர்ச்சி துண்டிக்கப்பட்ட கைகளைப் பயன்படுத்த பயிற்சி கொடுத்தார்.[4] மே 1981-ல், பீப்பிள் பார் தி எத்திகல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்சு (பீட்டா) என்ற விலங்குரிமைக் குழுவைச் சேர்ந்த அலெக்ஸ் பச்சேகோ இந்தக் குரங்குகள் இருந்த ஆய்வகத்தில் தனது இரகசிய கண்காணிப்பு வேலையைத் தொடங்கினார். இதன் முடிவில் வாழமுடியாத ஒரு வாழ்க்கைச் சூழலில் இக்குரங்குகள் உழல்வதைப் காவல்துறைக்குத் தெரியப்படுத்தினார்.[5] விலங்கு ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு எதிராக அமெரிக்காவில் நடந்த முதல் காவல்துறைச் சோதனையான இதில் காவல்துறையினர் இந்த ஆய்வுமையத்திற்குள் நுழைந்து குரங்குகளை மீட்டனர். டாப் மீது விலங்கு வன்கொடுமை, குரங்குகளுக்குப் போதுமான மருத்துவ நல வசதியினை வழங்கத் தவறியது உள்ளிட்ட பிரிவுகளில் 17 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ஆறு வழக்குகளில் இவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவற்றில் ஐந்து வழக்குகள் இரண்டாவது கட்ட விசாரணையில் நீக்கப்பட்டன. மேலும் 1983-ம் ஆண்டு மேல்முறையீட்டில் மீதமிருந்த ஒரு வழக்கும் ரத்து செய்யப்பட்டது. மேரிலாந்தின் விலங்குக் கொடுமைச் சட்டம் கூட்டாட்சி நிதியுதவி பெற்ற ஆய்வகங்களுக்குப் இச்சட்டன் பொருந்தாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[2]

குரங்குகளின் பாதுகாப்பு தொடர்பான தேசிய அளவிலான விவாதத்தில் பிரபலங்களும் அரசியல்வாதிகளும் குரங்குகளின் விடுதலைக்காக பிரச்சாரம் செய்தனர். இதன் விளைவாக 1985 விலங்குகள் நலச் சட்டத்தில் திருத்தம் ஏற்பட்டது,[6] நண்பர்கள் சிலரால் இணைந்து நடத்தப்பட்டு வந்த குழுவான பீட்டா ஒரு தேசிய இயக்கமாக உருமாறியது, வட அமெரிக்காவின் முதல் விலங்கு விடுதலை முன்னணிக் குழு உருவாக்கம், ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முதன் முதலில் விலங்கு ஆராய்ச்சி வழக்கு ஒன்று விசாரிக்கப்பட்டது உள்ளிட்டவை நிகழ்ந்தேறின.[7] ஜூலை 1991-ல், குரங்குகளைத் தங்கள் கண்காணிப்பில் வைத்துக்கொள்ள உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, எஞ்சியிருந்த கடைசி இரண்டு குரங்குகள் மிகுதியான துன்பத்தால் வாடிக்கொண்டிருந்த காரணத்தால் அவை கருணைக்கொலை செய்யப்பட வேண்டும் என்று கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைத்ததன் பேரில் அவை கொல்லப்பட்டன.[8]

இதனைத் தொடர்ந்து நடந்த குரங்குகளின் உடற்கூறாய்வில், குரங்குகளின் மூளையில் ​​குறிப்பிடத்தக்க கார்டிகல் மறு இணைப்புகள் (cortical remapping) நிகழ்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது புலன் உள்ளீடு ஏதும் இல்லாத சூழலில் குரங்குகள் ஆழ்த்தப்பட்டிருந்ததையும் அதனால் அவற்றின் கைகால்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டு அதுவே அவற்றின் மூளையின் அமைப்பில் மாற்றங்களைத் தூண்டியதையும் குறிப்பதாக இருந்தது.[9] மூளையின் நெகிழித்தன்மைக்கான (plasticity) இந்த ஆதாரமானது வயது ஏறஏற சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தன்னை மறுசீரமைத்துக் கொள்ளும் மூளையின் தன்மை குறைந்து கொண்டே வரும் என்று அதுவரை கருதப்பட்டு வந்த பரவலான பார்வையை பொய்யாக்கியது.[10] சுமார் ஐந்து ஆண்டுகளாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டும் கல்வித்துறையில் தனது ஆராய்ச்சிகளைத் தொடர முடியாமலும் போனதால், டாபுக்கு அலபாமா பல்கலைக்கழகம் மானியம் வழங்கியது. அங்கு அவர் நரம்பணு நெகிழித்தன்மையின் (neuroplasticity) அடிப்படையில் மூளை பாதிப்பு ஏற்பட்ட மனிதர்களுக்கு ஒரு புதிய வகை சிகிச்சையை உருவாக்கினார். ஒடுக்கப்பட்ட அசைவுச் சிகிச்சை (constraint-induced movement therapy) என்று என அறியப்படும் இந்த முறை பக்கவாதத்தால் பல ஆண்டுகளாக கைகால்கள் முடங்கிப்போயிருந்தவர்களுக்கு மீண்டும் தங்களது அவயங்களைப் பயன்படுத்த உதவியது, அமெரிக்க பக்கவாத சங்கம் இதனை ஒரு புரட்சியின் முன்னணி என்று பாராட்டியது.[11]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள் தரவுகள்[தொகு]

 1. Carbone, Larry. What Animals Want: Expertise and Advocacy in Laboratory Animal Welfare Policy. Oxford University Press, 2004, pp. 75–76, see figure 4.2.
 2. 2.0 2.1 Carlson, Peter. "The Strange Case of the Silver Spring Monkeys," The Washington Post magazine, February 24, 1991.
 3. Doidge, Norman. The Brain That Changes Itself. Viking Penguin, 2007, p. 136: Doidge calls them the most famous lab animals in history.
  • Blum, Deborah. The Monkey Wars. Oxford University Press, 1995, p. 106.
 4. Doidge 2007, p. 141-2.
 5. Pacheco, Alex and Francione, Anna. "The Silver Spring Monkeys" in Singer, Peter. In Defense of Animals. Basil Blackwell, 1985, pp. 135–147.
 6. "Food Security Act of 1985. Part 2 Public Laws". Animal Welfare Act History Digital Collection. Archived from the original on நவம்பர் 26, 2020. பார்க்கப்பட்ட நாள் December 9, 2020.
 7. Carlson 1991. Schwartz, Jeffrey and Begley, Sharon. The Mind and the Brain: Neuroplasticity and the Power of Mental Force. HarperCollins, 2002, p. 161.
  • Newkirk, Ingrid. Free the Animals. Lantern Books, 2000, p. xv, says the case triggered the formation of the first North American ALF cell.
 8. "2 Lab Monkeys Killed After Top Court Acts". New York Times. Associated Press. 14 April 1991. https://www.nytimes.com/1991/04/14/us/2-lab-monkeys-killed-after-top-court-acts.html?sq=Silver+Spring+monkeys&scp=5&st=nyt. 
 9. Leary, Warren E. "Renewal of Brain Is Found In Disputed Monkey Tests", The New York Times, June 28, 1991.
 10. Schwartz and Begley 2002, pp. 160, 162.
 11. Schwartz and Begley 2002, p. 160.