தமிழ்நாட்டில் கிறித்தவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவிதாங்கோடு அரைப்பள்ளி, கன்னியாகுமரி மாவட்டம். இது இயேசுவின் சீடரான புனித தோமா என்பவரால் பொ.ஊ. முதல் நூற்றாண்டில் உதயஞ்சேரலாதன் மன்னன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் கிறித்தவம் என்பது கிறித்தவ சமயம் தொடங்கிய காலத்திலிருந்து அது தமிழகத்தில் காலூன்றி வளர்ந்த வரலாற்றையும், இன்று அதன் நிலையையும் குறிக்கிறது.

தமிழகத்தில் கிறித்தவ சமயத்தின் தொடக்கம்[தொகு]

கிறித்தவம் தமிழ் மண்ணில் வேரூன்றக் காரணமாக அமைந்தவர் இயேசு கிறித்துவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமா என்று பெரும்பான்மையான வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.[1] அவர்கள் ஆதாரமாகக் காட்டுவன இவை: இன்றைய கேரள மாநிலத்தில் வந்திறங்கிய புனித தோமா, பொ.ஊ. 52-72 ஆண்டுகளில் கிறித்தவ சமயத்தை அறிவித்து, மயிலாப்பூரில் உயிர்நீத்தார் என்னும் வாய்மொழி மரபு கேரள கிறித்தவர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது[2]; பொ.ஊ. முதல் நூற்றாண்டுகளிலிருந்தே கிறித்தவ எழுத்தாளர்கள் புனித தோமா இந்தியாவுக்குக் கிறித்தவத்தைக் கொணர்ந்தார் எனக் குறிப்பிட்டுள்ளனர்[3].சென்னை சாந்தோம் தேவாலயம் புனித தோமாவின் கல்லறை இருந்ததாகக் கருதப்படும் இடத்தின்மேல் கட்டப்பட்டது.

பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த மார்க்கோ போலோ போன்ற கிறித்தவப் பயணியர் மயிலாப்பூரில் புனித தோமாவின் கல்லறையைச் சந்தித்த குறிப்புகளை விட்டுச்சென்றுள்ளனர்[4].

குடியேற்ற காலத்தில் தமிழகக் கிறித்தவம்: கத்தோலிக்கம்[தொகு]

பொ.ஊ. 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போர்த்துகீசியரின் ஆதரவின் கீழ் பல கிறித்தவ மறைபரப்பாளர்கள் தமிழகம் வந்து கிறித்தவ மறையைப் பரப்பினார்கள். இவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறித்தவ சபையைச் சார்ந்தவர்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கோர் சிலர்:

தமிழகத்தில் புரோட்டஸ்தாந்து கிறித்தவம்[தொகு]

பொ.ஊ. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து புரோட்டஸ்தாந்த சபைகளைச் சார்ந்த கிறித்தவ மறைபரப்பாளர்கள் தமிழகம் வந்தனர். அவர்கள் ஒல்லாந்து, செருமனி, இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வந்து, தமிழகத்தில் கிறித்தவ மறையைப் பரப்பினர்.

அவர்களுள் குறிப்பிடத்தக்கோர் சிலர்:

தமிழுக்கு மேனாட்டுக் கிறித்தவர் ஆற்றிய தொண்டு[தொகு]

மேலே குறிப்பிட்ட வெளிநாட்டு கிறித்தவ மறைப்பணியாளர்களும் வேறு பலரும் தமிழ் இலக்கணம், இலக்கியம், உரைநடை, அச்சுக்கலை வளர்ச்சிக்கு அரும் தொண்டு ஆற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழகத்தில் கிறித்தவர்களின் எண்ணிக்கை[தொகு]

தமிழகத்தின் மக்கள் தொகையில் 6 விழுக்காடு கிறித்தவர்கள் ஆவர்.[5] தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கிறித்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். 2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணிப்புப்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 44% பேர் கிறித்தவர்கள் ஆவர். தூத்துக்குடி மாவட்டத்தில் 17% மக்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 11% மக்களும் கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள்.

தமிழகத்தில் பரவியுள்ள கிறித்தவப் பிரிவுகள்[தொகு]

தமிழகத்தில் பரவியிருக்கின்ற கிறித்தவப் பிரிவுகள் மூன்று பெரும் அமைப்புகளுக்குள் அடங்கும் அவை: 1) கத்தோலிக்க திருச்சபை; 2) புரோட்டஸ்தாந்து சபைகள்; 3) மரபுவழி (ஆர்த்தடாக்சு) சபைகள்.

கத்தோலிக்க திருச்சபை மிகப் பெரும்பான்மையாக இலத்தீன் வழிபாட்டு முறையைச் சார்ந்தது. ஆங்காங்கே மலபார் மற்றும் மலங்கரை கத்தோலிக்கர் உள்ளனர்.

புரோட்டஸ்தாந்து சபைகளுள் பெரும்பான்மை உறுப்பினரைக் கொண்ட சபை தென்னிந்தியத் திருச்சபை ஆகும். மேலும், லூத்தரன் சபை, பிரதரன் சபை, பெந்தகோஸ்து சபை போன்ற பிற புரோட்டஸ்தாந்து சபைகளும் தமிழகத்தில் உள்ளன.

மரபுவழி (ஆர்த்தடாக்சு) சபைகள் கன்னியாகுமரி மாவட்டம், சென்னை போன்ற பகுதிகளில் உள்ளன.

தமிழகத்தில் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டங்கள்[தொகு]

தமிழகத்தில் கத்தோலிக்க திருச்சபை 18 மறைமாவட்டங்களாக அமைந்து இயங்கிவருகிறது. ஒவ்வொரு மறைமாவட்டமும் ஓர் ஆயர் (bishop) அல்லது பேராயர் (archbishop) தலைமையில், குருக்களின் நேரடி ஒத்துழைப்போடு நடத்தப்படுகிறது. குருக்களுள் பெரும்பான்மையோர் மறைமாவட்டக் குருக்கள் என்னும் வகையினர். இவர்கள் பெரும்பாலும் பங்குத்தந்தையராகப் பணிபுரிகின்றார்கள். மேலும், இயேசு சபை,கப்புச்சின் சபை,சலேசிய சபை போன்ற துறவறசபைக்குருக்கள் மறைப்பணி,கல்விப்பணி,சமூகப்பணி போன்ற பணிகளை மிகசிறப்பாக தமிழகமெங்கும் சிறப்பாக ஆற்றிவருகின்றனர்.

ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் பெண்துறவியர் பலர் பல துறவற சபைகளில் உள்ளனர். இவர்கள் அருட்சகோதரிகள் என்று அழைக்கப்படுகின்றனர். கல்விக்கூடங்களை நடத்துவதோடு, மருத்துவ மனைகள், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் போன்ற பிறரன்புப்பணி நிறுவனங்களையும் இவர்கள் நடத்தி, சாதி மத வேறுபாடின்றி பணியாற்றுகின்றனர்.

மேற்கூறிய 18 இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க மறைமாவட்டங்கள் தவிர, கீழ்வரும் கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க மறைமாவட்டங்களும் தமிழகத்தில் செயல்படுகின்றன. அவை:

 • சீரோ-மலபார் தக்கலை மறைமாவட்டம்
 • சீரோ-மலபார் இராமநாதபுரம் மறைமாவட்டம்
 • சீரோ-மலங்கரை மார்த்தாண்டம் மறைமாவட்டம்

தமிழகத்தில் உள்ள தென்னிந்தியத் திருச்சபையின் பேராயங்கள்[தொகு]

தென்னிந்தியத் திருச்சபை தமிழகத்தில் 8 பேராயங்களாக (dioceses) அமைந்து இயங்கிவருகிறது. ஒவ்வொரு பேராயமும் ஒரு பேராயரின் (bishop) தலைமையின் கீழ் உள்ளது. பேராயங்கள் கீழ்வருவன:

 • கன்னியாகுமரி பேராயம்
 • திருநெல்வேலி பேராயம்
 • மதுரை-இராமநாதபுரம் பேராயம்
 • தூத்துக்குடி-நாசரேத்து பேராயம்
 • திருச்சி-தஞ்சாவூர் பேராயம்
 • வேலூர் பேராயம்
 • கோயம்புத்தூர் பேராயம்
 • சென்னை பேராயம்

தென்னிந்தியத் திருச்சபையும் பல கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், சேவை நிறுவனங்கள் போன்றவற்றை நடத்தி, மக்களுக்குப் பணிசெய்துவருகிறது.

தமிழகத்தில் கிறித்தவத் திருத்தலங்கள்[தொகு]

சென்னை சாந்தோம் பெருங்கோவில். இயேசுவின் சீடரான புனித தோமாவின் கல்லறைமீது கட்டப்பட்ட கோவில்.
புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு, கன்னியாகுமரி மாவட்டம்

தமிழ்நாட்டில் சிறப்புவாய்ந்த கிறித்தவத் திருத்தலங்கள் கீழ்வருவன:


வேளாங்கண்ணி மாதா கோவில். ஆரோக்கிய அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலம்.
சென்னை சாந்தோம் பெருங்கோவில். மாலை வேளையில்.

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களித்த சில கிறித்தவர்கள்[தொகு]

தம்பிரான் வணக்கம் – 1578இல் அச்சிடப்பட்ட நூல். தம்பிரான் வணக்கம் – 1578இல் அச்சிடப்பட்ட நூல்.
தம்பிரான் வணக்கம் – 1578இல் அச்சிடப்பட்ட நூல்.
தமிழில் அச்சிடப்பட்ட புதிய ஏற்பாடு (1713)

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களித்த சில தமிழகக் கிறித்தவர்களின் பட்டியல்:

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணைபுரிந்த மேலைநாட்டுக் கிறித்தவர்கள் சிலர்:

தமிழகத்தில் கிறித்தவ மக்கள் தொகை[தொகு]

தமிழ்நாட்டில் கிறித்தவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கின்ற மாவட்டங்கள் (2001 இந்திய மக்கள் தொகை கணிப்புப்படி)
மாவட்டம் கிறித்தவர்கள் (விழுக்காடு - %) கிறித்தவர்கள் (எண்ணிக்கை)
தமிழ்நாடு 6.02 3,785,060
கன்னியாகுமரி 44.74 745,406
தூத்துக்குடி 16.70 262,718
நீலகிரி 11.45 87,272
திருநெல்வேலி 10.88 296,578
திருச்சிராப்பள்ளி 9.01 218,033
சென்னை 7.62 331,261
திண்டுக்கல் 7.55 145,265
இராமநாதபுரம் 7.08 84,092
காஞ்சிபுரம் 5.92 170,416
சிவகங்கை 5.86 67,739
தஞ்சாவூர் 5.63 124,945
அரியலூர் 5.21 36,261
புதுக்கோட்டை 4.55 66,432
கோயம்புத்தூர் 4.34 185,737
விழுப்புரம் 3.90 115,745
விருதுநகர் 3.89 68,295
மதுரை 3.34 86,352
கடலூர் 3.22 73,611
தேனி 3.09 33,830
நாகப்பட்டினம் 3.07 45,780
வேலூர் 2.94 102,477
திருவாரூர் 2.70 31,621
திருவண்ணாமலை 2.52 55,180
ஈரோடு 2.14 55,414
பெரம்பலூர் 1.70 8,412
சேலம் 1.67 50,450
கரூர் 1.48 13,863
தர்மபுரி 1.36 39,019
நாமக்கல் 0.80 13,137

மேலும் அறிய[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. இந்தியாவில் புனித தோமா
 2. இந்தியாவில் தோமா
 3. புனித தோமாவின் இந்திய வருகை குறித்து பண்டைய கிறித்தவ எழுத்தாளர்கள்
 4. தோமா கல்லறை பற்றி மார்க்கோ போலோ
 5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-04-29.