எப்ரேம் தெ நேவேர்
எப்ரேம் தெ நெவேர் | |
---|---|
சென்னையின் முதல் கிறித்தவ மறைபணியாளர் | |
பிறப்பு | 1603 ஒக்ஸர் , பிரான்சு |
இறப்பு | அக்டோபர் 13,1695 புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை |
எப்ரேம் தெ நெவேர் (Ephrem de Nevers, 1603 - 13 அக்டோபர் 1695) ஒரு கத்தோலிக்க கிறித்தவ அருட்பணியாளர் மற்றும் சென்னையின் முதல் கிறித்தவ மறைபணியாளர் ஆவார்.
சென்னையின் முதல் கிறித்தவ போதகர்
[தொகு]இவர் 1603 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் பூர்கோஞியு மாகாணத்தில் நெவேர் என்ற ஊரிணை பூர்விகமாக கொண்ட செல்வச் செழிப்புடன் வாழ்ந்த லுகிளெர்க் என்ற பிரபுக்களின் குடும்பத்தில் ஒக்ஸர் என்ற நகரில் பிறந்தவர். புனித அசிசி பிரான்சிசு வழியில் ஏழை இயேசுவைப் பின்பற்றிய பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபைத் துறவிகளின் எளிய வாழ்வும் ஏழைகளுக்கான வாழ்வும் இவரை ஈர்க்கவே தானும் ஒரு கப்புச்சின் துறவியானார்.[1] குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டபின் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க மறைப்பணியாளராக முதலில் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அனுப்பட்டார். 1636 முதல் 1640 வரை நான்கு ஆண்டுகள் லிபியா, சிரியா, துருக்கி, பெர்சியா (இன்றைய ஈரான் மற்றும் ஈராக்) நாடுகளில் பல்வேறு மறைபணித்தலங்களில் பணியாற்றினார், அரபு மற்றும் பெர்சியன் மொழிகளில் இவர் கொண்ட புலமையால், புதிய மறைபணித்தலங்களை நிறுவும் பொறுப்பினை இவரது தலைவர்களால் அடிக்கடி வழங்கப்பட்டது. மியன்மாரின் பெகு நகரில் புதிய மறைபணித்தலம் நிறுவும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு இந்தியாவில் உள்ள சூரத் நகரை 1640 இல் வந்தடைந்தார். 1639 ஆம் ஆண்டு சூரத் நகரில் இந்தியாவின் முதல் கப்புச்சின் மறைபணித்தலத்தை நிறுவிய மற்றொரு பிரெஞ்சு கப்புச்சின் குரு ஜெனோ தெ பியாஜேவுடன் சில மாதங்கள் தங்கி ஆன்மீகப்பணியாற்றினார்..[2]
கடல் வழியாக பெகுவிற்கு செல்ல எப்ரேம் தெ நெவேர் சென்னை வந்தபோது கிழக்கிந்திய ஆங்கிலேய வாணிபக் கழகத்தில் பணியாற்றிய போர்த்துகீசியக் கத்தோலிக்கர்களுக்கு ஆன்மீகப் பணியாற்ற சென்னையிலே தங்குமாறு கிறித்தவர்களாலும் வாணிபக் கழகத்தின் தலைவர்களாலும் மிகவும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்ளப்பட்டார். எனவே மக்களின் ஆன்மீக தாகத்தையும், தேவையும் உணர்ந்து இறைதிட்டதை அறிந்து 1642 சூலை 8 ஆம் நாள் தமிழ் மண்ணில் சென்னை மாநகரில் முதல் கிறித்தவ மறைப்பணிதலத்திற்கு அடித்தளமிட்டார். இதன் மூலம் சென்னையின் முதல் கிறித்தவ போதகர் என்ற பெருமையையும் பெற்றார். இந்த முடிவை பிரான்சிலுள்ள தனது சபையின் தலைவருக்கும், உரோமையிலுள்ள மறைபரப்பு பேராய தலைமைக்கும் அனுப்பி ஒப்புதல் பெற்றார். இந்த கப்புச்சின் சென்னை மறைபணிதலத்தை திருத்தந்தை எட்டாம் அர்பன் மயிலை பத்ரவதோ மறைமாவட்டத்திலிருந்து விடுவித்து மறைபரப்பு பேராயத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி கொண்ட மறைபணிதலமாக உயர்த்தி புனித ஜார்ஜ் கோட்டையின் அப்போஸ்தலிக்க மறைவட்டமாக உருவாக்கப்பட்டு அதன் முதல் திருபீட கண்காணிப்பாளராக அருட்தந்தை எப்ரேம் தெ நெவேரை 1642 இல் நியமித்தார்.[3] இந்த கப்புச்சின் மறைபணிதலமே 1886 இல் சென்னை உயர்மறைமவட்டமாக உயர்த்தப்பட்டு பின் 1954 இல் மயிலை மறைமாவட்டதோடு இணைக்கப்பட்டு சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் என உருவானது.[4]
சென்னையில் முத்திரை பதித்த தந்தை எப்ரேமின் முதல் பணிகள்
[தொகு]- தமிழ் நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் முதல் கிறிஸ்தவ மறைபணியாளர்.[5]
- 1639 இல் ஆங்கிலேயரால் நிறுவப்பட்ட சென்னையில் முதல் கிறிஸ்தவ மறைபணிதலம் நிறுவியவர்.[6]
- புனித ஜார்ஜ் கோட்டைக்குள் சென்னையின் முதல் கிறிஸ்தவ ஆலயத்தை புனித அந்திரேயாவுக்கு 1642 இல் அமைத்தவர்.[7][8].[9][10][11]
- ஆங்கிலேயரின் குழந்தைகள் வளர்சிக்காக இந்தியாவின் முதல் ஆங்கில பள்ளியை 1642 இல் நிறுவியவர்.[12][13]
- சென்னை மறைபணிதலத்தின் முதல் கண்காணிப்பாளர்.[14]
- சென்னை மாநகரில் புதிய கிறிஸ்தவர்களை உருவாக்கி தமிழ் மக்களுக்காக ஆர்மேனியின் தெருவில் 1658 இல் புனித மரியன்னையின் பெயரால் (இன்று புனித பதுவை அந்தோனியார் திருத்தலம்) ஆலயம் அமைத்தவர்.[15]
- இன்று புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள புனித மேரி ஆங்கலிக்கன் ஆலயம் 1680 இல் அமைக்கப்படும் வரை, ஆங்கலிக்கன் மற்றும், ஆர்மீனியன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் தங்கள் வழிபாடுகளை நடத்த அதே கோட்டைக்குள் அமைந்த புனித அந்திரேயா கத்தோலிக்க ஆலயத்தை தந்தை எப்ரேம் தெ நேவேர் வழங்கி சென்னையில் கிறிஸ்தவ ஒன்றிப்பின் தந்தையாக திகழ்ந்தார்.[16][17]
- கிறிஸ்மஸ் மற்றும் ஈஸ்டர் பெருவிழா நேரங்களில் இந்துக்களும்,முகமதியரும் பெரும் எண்ணிகையில் கத்தோலிக்க ஆலயத்தை நாடினர் அவர்களோடு எப்போதும் எப்ரேம் இணக்கமான நல்லுறவை வளர்த்தார்.[18][19]
- சென்னையில் மறைபணி ஆற்றகூடாது என இரண்டு ஆண்டுகள் போர்த்துகீசியர்களால் கோவா தனிமை சிறையில் அடைத்து கொடுமைபடுத்தி அச்சுறுத்தபட்டார்.கோல்கொண்டா முகமதிய அரசன் உதவியால் மீண்டு சென்னையில் மீண்டும் தன் இறுதி மூச்சுவரை அவர் ஆற்றிய இறைபணியால் அனைத்துதரப்பட்ட மக்களால் மிகவும் அன்பு செயப்பட்டார்.[20][21]
- 1632 இல் கப்புச்சின் சபையினர் இந்தியாவில் முதலில் கால்பதித்து மறைபணி ஆற்றிய இடம் புதுச்சேரி(பாண்டிச்சேரி) ஆனால் சில காரணங்களால் அப்பணி தடைபட்டது.1673 இல் பிரெஞ்ச்காரகள் அழைப்பை ஏற்று எப்ரேம் சில கப்புச்சின் மறைபோதகர்களை அனுப்பி 1674 இல் புதுச்சேரியில் ஒரு நிலையான முதல் கிறிஸ்தவ மறைபணிதலத்தை நிறுவிட பெரிதும் உதவினார்.[22][23]
சென்னை கிறித்தவத்தின் தந்தை
[தொகு]சென்னையின் புனிதர் என்று மக்களால் பெரிதும் போற்றப்பட்டு தனது மறைபணி வாழ்வால் சிறந்தவர். 53 ஆண்டுகள் இடைவிடா இறைபணி ஆற்றிய நிறைவில்,சென்னை மாநகரில் கிறித்துவின் நற்செய்தியை முதலில் விதைத்த மகிழ்வில் புனித தந்தை எப்ரேம் தெ நெவேர் தனது 93 வயதில் 1695 அக்டோபர் 13 ஆம் நாள் மறைந்தார்.[24] அவருடைய புனித உடல் புனித ஜார்ஜ் கோட்டைக்குள் அந்திரேயா ஆலய பீடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஆங்கிலேயர்கள் இவ்வாலயத்தை 1752 இல் இடித்து தரைமட்டமாக்கியபோது இக்கல்லறையும் மறைந்தது.[25] தந்தை எப்ரேம் அவர்களால் நிறுவப்பட்ட சென்னை மறைபணிதலம் பிரான்ஸ் நாட்டிலுள்ள டூர்ஸ் என்ற கப்புச்சின் மறைமாநிலத்தின் கீழ் இயங்கியது. 1642 முதல் 1834 வரை 198 ஆண்டுகள் பிரெஞ்சு கப்புச்சின் துறவிகள் இம்மறைபணிதலத்தில் பணியாற்றி புதிய கிறித்தவர்களை உருவாக்கினர். அர்மேனியன் தெரு, இராயபுரம், இராயபேட்டை, சிந்தாதரிப்பேட்டை, வேப்பேரி, புதுப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், பெரியபாளையம், வாலாஜாபாத், கூவம் ஆற்றின் மேற்கரையில் பல புதிய ஆலயங்களை அமைத்தனர். பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கத்தால் மறைபணியாளர்கள் குறையவே ஐரிஷ் அகுஸ்தினார் மறைபணியாளர்களிடம் சென்னை கப்புச்சின் மறைபணிதலம் 1834 இல் ஒப்படைக்கப்பட்டது.[26]
சான்றுகள்
[தொகு]- ↑ C.S. Srinivasachari, History of the city of Madras, Madras: 18.
- ↑ Daniel D’Souza, Capuchin Missions in India, Capuchin Publications,Brahmavar, 1984, 23.
- ↑ Norbert Wolf, O.F.M Cap., “Capuchin Missions in South India 17th and the 18th”, Round Table of Franciscan Research, vol 26, no.1 January, 1961, 13.
- ↑ Muthiah, S, Madras Rediscovered, Chennai: East West Books (Madras) Private, Ltd, 2004.
- ↑ Love, H.D, Vestiges of Old Madras 1600-1800, vol:i, Asian Educational Services, New Delhi, 1996, 47-48p.
- ↑ Ibid, 47-50p, Clemens a Terzorio P, Mauale Historicum Missionum Ordinis Minorum Capuccinorum, ISOLA DEL LIRI, Soc.Tip. A. Macioce, 1926, 145-146p.
- ↑ Manual of the Administration of the Madras Presidency in Illustrated of the Records of Government & The Yearly Administration Reports, vol:i, chap: 1-9, Printed by E. Keys at the Government Press, Madras, 1885, 625p.
- ↑ http://www.hindu.com/mp/2006/01/09/stories/2006010900500501.htm[தொடர்பிழந்த இணைப்பு] Madraspatnam's first church The Hindu
- ↑ http://www.hindu.com/mp/2006/04/03/stories/2006040300330502.htm பரணிடப்பட்டது 2013-10-16 at the வந்தவழி இயந்திரம் The early Capuchins The Hindu
- ↑ http://hindu.com/2001/01/22/stories/13221285.htm[தொடர்பிழந்த இணைப்பு] The forgotten benefactor The Hindu
- ↑ http://www.hindu.com/mp/2010/07/12/stories/2010071250980301.htm[தொடர்பிழந்த இணைப்பு] The Capuchins of the Coromandel The Hindu
- ↑ Glyn, Barlow, The Story of Madras, Humphrey Milford Oxford University Press, London, 1925.
- ↑ Srinivasachari, History of the city of Madras, Madras: P Varndacary & Co, 1939, 22f
- ↑ Arullappa, An Outline of the History of the Archdiocese of Madras and Mylapore,Madras, 1986,18p.
- ↑ Ibid, 19p.
- ↑ Manual of the Administration of the Madras Presidency 625p.
- ↑ http://www.hindu.com/mp/2006/06/05/stories/2006060500440500.htm[தொடர்பிழந்த இணைப்பு] Madras' Tamil tombstone - The Hindu
- ↑ Celestine Peter, Early Capuchin Missions in India, Sahibabad, Capuchin Publications, 1982.
- ↑ ஆ. தைனிஸ், வேர்களின் வியர்வைத் துளிகள் ( புதுச்சேரி - சென்னையில் கப்புச்சின் துறவிகளால் வேரூன்றிய கிறிஸ்தவ வரலாறு 1632-1834), தமிழக கப்புச்சின் சபை, 2010, 125-126 பக்.
- ↑ Manual of the Administration of the Madras Presidency, 625p.
- ↑ Niccolao Manucci Venetian, Mogul India 1653-1708 OR Storia Do Mogor, vol:iii, Low Price Publications,Delhi, 408ff.
- ↑ Lexicon Cappuccinum, Promptuarium Historico Bibliographicum, Ordins Fratrum Minorum Cappuccinorum, Sicilia:Biblootheca Collegii Internationalis S. Laurentii Brundusini, Roma, 1951.
- ↑ ஆ. தைனிஸ்,138-139 பக்.
- ↑ J. Talboys Wheeler, Madras in the Olden Time, Madras: Asian Educational Services, 1993, 151p.
- ↑ Peter Celestine,124p.
- ↑ Arulappa, 18-21 & 44-51pp.