தமிழ் முஸ்லிம்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ் முஸ்லிம்கள்
மொத்த மக்கள்தொகை
6 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
இந்தியா4,200,000
மலேசியா500,000
சிங்கப்பூர்20,000
மொழி(கள்)
தமிழ்,‌‌ அரபுத் தமிழ்
சமயங்கள்
இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தமிழர்
தமிழர்
Tamil distribution.png
திருப்பனந்தாள் பள்ளிவாசல்

தமிழ் முஸ்லிம்கள் (Tamil Muslim) எனப்படுவோர் இஸ்லாமிய சமயத்தை சார்ந்த தமிழர்கள் ஆவர்.

பெயர் காரணம்

சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். இவர்கள் முஸ்லிம்கள் என்றும், சோனகர், உலகாவிய இஸ்லாமிய ஆட்சிதலைவர்களான கலிபாக்கள் துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்ததால் துருக்கர் (துலுக்கர்) என்றும் அழைக்கப்பட்டனர்.[1] மார்க்கப் என்பது கப்பலைக் குறிக்கும் அரபுச் சொல் ஆகும். கப்பல் அல்லது மரக்கலத்தில் வந்தவர்கள் மரக்கலராயர் என்றாகி, பின் மரைக்காயர் ஆனார்கள்.

இஸ்லாமிய பணியில் ஈடுபட்டோர் லப்பைக் என்ற அரபிச் சொல்லை பயன்படுத்திட, அதுவே லப்பை என்றானது.[2][3]

வரலாறு

பழங்காலத்திலிருந்தே தமிழகத்தின் பொருள் வளங்கள் தொலைதூர நாடுகளின் வணிகர்களின் கவனத்தை கவர்ந்து வந்தன. கி. பி. ஆறாவது நூற்றாண்டின் இறுதி வரை தென்னிந்தியாவின் மேற்குக்கரைக்கும், கிழக்குகரைக்கும் வியாபார நிமித்தம் பயணம் வந்த அரேபியர்களில் சிலை வணக்கக்காரர்கள் கிறிஸ்தவர்கள், யூதர்கள் போன்றோர்கள் இருந்தனர். ஆனால் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் மத்திக்குள்ளாக அரேபியர்கள் அனைவருமே இஸ்லாத்தில் தீவிர பங்கெடுத்துக்கொண்டிருந்தனர். முகம்மது நபியின் தோழர்கள் பலரும் சமயப்பிரச்சாரத்திற்காக உலகின் பல பாகங்களுக்கும் பயணித்தனர். ஏற்கனவே இந்தியாவோடு இருந்து வந்த வணிகத்தொடர்போடு புதிதாக மார்க்கத் தொடர்பும் சேர்ந்துக்கொன்டது. கி.பி. 629-ல் மலபார் கரையிலுள்ள முசிறி துறைமுகப்பட்டிணத்தில் (இன்றைய கொடுங்காளுர்) முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது.[4] அதைத்தொடர்ந்து தமிழகக்கரை நெடுகிலும் தொழுகைப் பள்ளிகள் கட்டப்பட்டன. மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். மதுரையில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான். இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினார். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினார். அந்தப் பள்ளிவாசல் இன்றும் இருக்கிறது. திருச்சி நகரில், கோட்டை இரயிலடியில் கி.பி. 734 இல் (ஹிஜ்ரி 116ல்) கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம் கல்லுப்பள்ளி என்றழைக்கப்படுகிறது. இதற்கான ஆதாரம் பள்ளிவாசல் கல்வெட்டில் காணலாம்.

நபிதோழர்களின் வருகை

கோவளத்தில் தமிமுல் அன்ஸாரி என்பவரது அடக்கஸ்தலமும் கடலூர் மாவட்டம், பரங்கிப் பேட்டையில் அபிவக்காஸ் என்பவரது அடக்கஸ்தலமும் இருக்கிறது. இவர்கள் முகம்மது நபியின் தோழர்கள் (ஸஹாபாக்கள்) என்ற தரத்தை பெற்றவர்கள்.

குதிரை வணிகர்கள்

திருநெல்வேலி மாவட்டம், திருப்புடையார் கோவில் கோபுரத்தில் வரையப்பட்டுள்ள ஓவியம் ஒன்றில் குதிரைகளை ஏற்றி வந்த மரக்கலமும் அதில் குதிரைகளோடு அரபு வணிகர்கள் நிற்கும் காட்சியும் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.[5] இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகள் சரியான பராமரிப்பு இல்லாமல் இறந்த காரணத்தினாலும், குதிரைகளை போர்ப்பயிற்சிக்கு பழக்குவதற்கு சரியான ஆட்கள் இல்லாத காரணத்தினால், வாணிபத்திற்காக வந்த முஸ்லிம்களை ஆட்சியாளர்கள் நியமித்தனர். முஸ்லிம் வீரர்களின் திறமையையும், வீரத்தையும் கண்ட மன்னர்கள் அவர்களை குதிரைப்படைத் தலைவர்களாகவும் நியமித்தனர்.

முஸ்லிம் குதிரை வீரர்கள் தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள்தான் முதலில் 'பாளையம்' என்று அழைக்கப்பட்டது.[6] திருப்பெருந்துறை சிவன் கோவிலில் உள்ள மண்டபத்தில் ஒரு தூணில் குதிரை வீரர் சிலை உள்ளது. அச்சிலைக்கு குதிரை இராவுத்தர் என்றும் அம்மண்டபத்திற்கு குதிரை இராவுத்தர் மண்டபம் என்றும் பெயர்.[5]

கள்ளக்குறிச்சியில் உள்ள திரெளபதியம்மன் கோயிலின் வாசலில் தலைப்பாகை தாடியுடன் கூடிய ஒரு காவல் வீரனின் சிலை உள்ளது அதன் பெயர் முத்தியாலு ராவுத்தர். சரக்குகளோடும் குதிரைகளோடும் வாணிபத்திற்காக வந்தவர்களும், அவர்களுக்கு ஏவல் புரிய வந்தவர்களும் இங்கேயே தங்கினர்.[7] திருமண உறவுகளை கொண்டனர். இஸ்லாமிய நெறிமுறைகளை ஏற்றுக்கொண்ட அவர்களது வாழ்வு தமிழகத்தில் தொடர்ந்தது.

இந்து முஸ்லிம்களின் பரஸ்பர தானங்கள்

தமிழக மன்னர்கள் இஸ்லாமியரின் தொழுகைக்காகப் பள்ளிவாசல்கள் கட்டிக்கொள்ள நிலத்தை தானம் செய்ததற்கும் வரி விலக்கம் அளித்ததற்கும் சான்றுகள் உள்ளன. இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் வழியில் உள்ள திருப்புல்லாணியில் வைணவக் கோயிலான ஜெகநாதர் சுவாமி கோயில் உள்ளது. இந்த ஆலயத்தில் 'கீழச் செம்பி நாட்டுப் பவுத்திர மாணிக்கப் பட்டணத்து கீழ்பால் சோனகச் சாமந்த பள்ளிக்கு இறையிலிவரி விலக்குடன் மானியம் ஆகக் கொடுத்த நிலங்கள்' பற்றிய மாறவர்மன் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1239–1251) கல்வெட்டினைக் காணலாம். ஆற்காடு நவாப்புகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளை 16 நூற்றாண்டில் இருந்து 19 நூற்றாண்டு தொடக்கம் வரை ஆட்சி செய்தனர். சென்னையில் மயிலாப்பூரில் உள்ள கபாலிசுவரர் கோவில் திருக்குளம் இருக்குமிடத்தை அவர்களே கொடுத்துள்ளார்கள். ஆண்டுதோறும் நடைபெறும் கோவில் விழாவில் ஆற்காடு நவாபுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் கோவிலுக்கு தெப்பக் குளம் கட்ட இடம் இல்லாமல் இருந்தது. உடனே ஆற்காடு நவாபுதான் தங்களுக்கு சொந்தமான தெப்பக்குளத்தை கோவிலுக்கு கொடுத்து உதவினார். ஆண்டுக்கு 3 நாள் மட்டும் முஹர்ரம் விழாவுக்காக முஸ்லிம்கள் இதனைப் பயன்படுத்துவார்கள். மற்ற நாட்களில் கோவில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று வரை ஆற்காடு நவாப் குடும்பத்தினருக்கு கோவில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.[8]

திருவல்லிக்கேணி திரு வெற்றீசுவரன் கோவில் கட்ட ஆற்காடு நவாப்தான் இடம் கொடுத்துள்ளார். கோவிலின் பராமரிப்புக்காக பல்வேறு மானியங்களும் கொடுத்துள்ளார்கள்.

அரபு வணிகர்களது குடியிருப்புகள்

இத்தகைய இஸ்லாமியரின் அரபு வணிகர்களது குடியிருப்புகள் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பல பகுதிகளில் எழுந்தன. அவை, அஞ்சுவண்ணம் என மக்களால் அழைக்கப்பட்டன. இந்த அஞ்சுவண்ணம் ஒன்று நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருந்ததை தனிப் பாடல் ஒன்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது. பாண்டிய நாட்டின் தென்பகுதியான நாஞ்சில் நாட்டில் திருவிதாங்கோடு அருகில் அஞ்சுவண்ணம் என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த அராபிய இஸ்லாமியர், நாளடைவில் வணிகத்துடன் மட்டுமல்லாமல் சமுதாய நிலைகளிலும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொண்டு கலந்து தமிழ் முஸ்லிம்கள் என்ற புதிய பெயரினைப் பெற்றனர்.[9]

வாணிபத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வாய்மொழியான தமிழ், இப்போது அவர்தம் வழித்தோன்றல்களின் தாய் மொழியாக மாறியது. அதுவரை சோழ - பாண்டிய மன்னர்களால் மெய்க்கீர்த்திகளிலும், கல்வெட்டுகளிலும், சோனகர் - துலுக்கர் எனக் குறிப்பிடப்பட்ட இந்த மேலைநாட்டு முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்கள் என்ற தகுதியையும், அரசியல் முதன்மையையும் எய்தினர். இந்தப் புதிய தமிழ்ச் சமுதாயத்தினரது அணிகலன்களும், ஆடைகளும், உணவு முறைகளும் தமிழ் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாளடைவில் இந்தக் குடியிருப்புகளிலும், வணக்கத் தலங்களிலும் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள், குறிப்பாக மேற்கூரைகள், கும்ப அமைப்பில் அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள், சாளரங்கள், முகப்பில் பயன்படுத்தப்பட்ட வில் வடிவ குதிரைக் குளம்பு அமைப்பு வளைவுகள் ஆகியவை திராவிட - இஸ்லாமிய கட்டுமானங்கள் என்ற புதிய பாணியை ஏற்படுத்தின.

கடலூர் மாவட்டத்திலுள்ள, லால்பேட்டையும் பரங்கிப்பேட்டையும் முற்காலத்தில் அரபு மற்றும் துருக்கியர்கள் வணிகத்தில் ஈடுபட்ட இடமாக திகழ்ந்து.இஸ்லாத்தை பரப்புவதற்கும் சாதகமான ஊராகவும் இவ்விரு ஊர்களும் திகழ்ந்து. லால்பேட்டையிலும், பரங்கிப்பேட்டையிலும் இன்றளவும் அவர்களினது தாய்மொழியான தமிழ் மொழியிலேயே மட்டும் தான் பேசுவார்கள். சோழ மன்னரின் ஆட்சி காலத்தில் இருந்த கடற்கறை ஊர்களில் பரங்கிப்பேட்டையும் ஓர் பெரும் ஊர்,மட்டுமின்றி ஓர் மிகப்பெரிய வணிகஸ்தலமாகவும் திகழ்ந்தது. ஆதலால் அங்கு வந்த அரபு வணிகர்களுக்கு வணிகம் செய்வதற்கும், இஸ்லாத்தை பரப்புவதற்கும் தகுந்த இடமாக திகழ்ந்ததால், அரபியர்கள் அங்கேயே குடியேற்றம் அடைந்துவிட்டனர்.[சான்று தேவை]

இஸ்லாமிய ஞானிகளின் செயல்பாடுகள்

தமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்துதமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.

தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார். கி.பி. 10-ஆம் நூற்றாண்டில்சிரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த நத்ஹர், காலமெல்லாம் திருச்சிப் பகுதி மக்களது ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து, திருச்சியிலேயே இயற்கை எய்தினார். இவரை அடுத்து தென்பாண்டிய நாட்டிற்கு வந்த செய்யிது இபுறாஹீம், மொரோக்கோவில் பிறந்து இஸ்லாத்தை பரப்புவதற்காக (கி.பி. 1142–1207) இந்தியா வந்தார். பாண்டிய மன்னர் குலசேகரன் சார்பாக மற்றுமொரு பாண்டிய மன்னர் விக்கிரமனுடன் போரில் ஈடுபட்டார். இப்போரின் விளைவாக அரசாட்சி சையித் இப்ராஹிம் கையில் வந்தது. தமிழ் நாட்டின் ஒரு பகுதியை அரசாண்ட முதல் முஸ்லிம் மன்னர் (கி.பி. 1195–1207) ஆவார்.

கி.பி. 1207-ல் வீரபாண்டியனுடன் நடந்த மற்றுமொரு போரில் காலமானார். இராமனாதபுரம் ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார். மதினா நகரின் ஒரு பகுதியான யர்புத என்ற இடத்திலிருந்து இவர் புறப்பட்டு வந்ததால் இவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கும் யர்புத் என்றே பெயர் சூட்டப்பட்டது. இச்சொல் நாளடைவில் ஏர்வாடி என்று மருவி விட்டது. முகம்மது நபியின் வம்சாவழியைச் சார்ந்த சுல்தான் ஜமாலுத்தீன் என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டிய தேவன் ஆட்சி காலமான கி.பி.1284 (ஹிஜ்ரி737)ல் காயலில் வந்து குடியேறினார். இவர் ஜும்ஆ பெரிய பள்ளியை பிரமாண்டமாக விரிவுபடுத்தி கட்டினார். சுல்தான் ஜமாலுத்தீன் பரம்பரையினர் பிரபுக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்[10]..

சுந்தர பாண்டிய தேவன் கி.பி. 1293ல் காலமான பின் செல்வாக்குடன் திகழ்ந்த சுல்தான் செய்யிது ஜமாலுத்தீன் பாண்டிய நாட்டின் மன்னரானார். இச் சமயத்தில் காயல்பட்டிணம் அதன் தலைநகரமாக விளங்கியது. இவர் கி.பி.1306 (ஹிஜ்ரி706)ல் காலமானார். கலிபா உமர் காலத்தில் கி.பி. 642-ல் மாலிக் இப்னு தீனார் தலைமையில் இஸ்லாத்தை பரப்ப ஒரு குழு கடல் மார்க்கமாக கேரளா வந்து சேர்ந்தது. அதில் ஒரு பகுதியினர் காயல்பட்டிணம் வந்து குடியேறி கடற்கரையோரமாக ஒரு பள்ளியைக் கட்டினர். தற்போது இப்பள்ளி கோசுமறை அருகே புதையுண்டுள்ளது. இதன் இமாம் செய்யிது அஹமது ஷஹிது இப்னு முஹம்மது கரீம் மதனி ஆவார். இக் குழுவினர் அப்பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தனர். பின்னர் கடலேறி இப்பகுதி புதையுண்டுவிட்டது.

கி.பி. 842ல் எகிப்து தலைநகர் கெய்ரோவில் கலீபா அல்வாதிக் ஆட்சி காலத்தில் கலிபா அபூபக்கர் வம்சாவழியைச் சார்ந்த முஹம்மது கல்ஜி தலைமையில் ஒரு குழுவினர் எகிப்தில் மன்னரின் புதிய கொள்கையை ஏற்க மறுத்து கடல் மார்க்கமாக ஜயவீர ராஜகாரு வேந்தர் காலத்தில் காயல்பட்டிணம் வந்து சேர்ந்தனர். இவர்கள் இந்நகரில் கி.பி.843ல் ஜும்ஆ பெரிய பள்ளியை கட்டினர். கி.பி. ஏழாவது நூற்றாண்டிற்குப் பிறகு தென்னிந்திய மக்கள் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலமாக என்னென்ன நன்மைகளையும் லாபங்களையும் பெற்றார்களோ அவை அனைத்தும் அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூலமாகவே வந்தடைந்தன என்று கொள்ளலாம் என டாக்டர் தாராசந்த் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

ஆட்சி பொறுப்பில் இருந்த முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக எதுவும் செய்ததாக எந்தவிதமான தடயங்களையும் யாரும் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. இந்த சுல்தான்கள் ஆட்சிக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மதுரையிலும் தமிழ் நாட்டின்இதர பகுதிகளிலும் முஸ்லிம் பொது மக்கள் வாழ்ந்துவந்துள்ளனர்.

இலக்கியங்களில்

இராவுத்தர் என்ற சொல் மரியாதைக்குறியதாக மதிப்புடையாதாக தமிழ் மக்களால் பாவிக்கப்பட்டது. தங்களது கடவுள்களுடைய கோலத்தையே ராவுத்தர் கோலத்தில் கற்பனை செய்து மகிழ்ந்திருக்கிறார்கள் தமிழர்கள். முருகக் கடவுளையே சூர்க் கொன்ற ராவுத்தனே மாமயிலேறும் ராவுத்தனே என அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அலங்காரமும் கந்தர் கவிவெண்பாவும் வருணிக்கின்றன.

12-ம், நூற்றாண்டு வைணவ இலக்கியத்தில், “ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன் காணலுமாகான்” எனக் குறிப்பிடப்பட்டதாக கா.சு. பிள்ளை தமிழ்ச்சமயம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். சைவ மத கடவுளாகக் கருதப்படும் சிவபெருமானுக்கு “அல்லாமாத்தேவர்” எனப் பெயருண்டு என பேராசிரியர் பி.கே. வேலாயுதம் கருத்துத் தெரிவிக்கிறார். அதனால்தான் இறைவனை, ஆணல்ல, பெண்ணல்ல, அலியுமல்ல என்று தேவாரம் குறிக்கிறது என்கின்றனர். வீர சைவர்கள் தங்களின் கடவுளை “அல்லாமா” என்னும் இறைவனுக்கு உருவமில்லை என தெலுங்கு ஆங்கில அகராதி குறிப்பிடுகின்றது; என தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள இஸ்லாமும்-தமிழகமும் எனும் நூலில் காணப்படுகிறது.

அமைச்சரவையில்

அப்துல் ரகுமான் என்ற அரபியர் பாண்டிய மன்னனின் அரண்மனையில் பெரியதோர் அதிகாரம் வகித்திருந்ததாகவும், காயல் துறைமுகத்தில் சுங்கம் வசூலித்தாகவும், ஞா. துறைசாமிப்பிள்ளை அவர்கள் பாண்டியர் காலம் என்ற சொற்பொழிவுல் குறிப்பிட்டுள்ளார்கள். கி.பி 1276-ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன்அரபு நாட்டின் கைஸ் மன்னரான மலிகுல் இஸ்லாம் ஜலாலுத்தீன் அவாகளோடு நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார் என வரலாற்று ஆசிரியர் வஸ்ஸாப் கூறுகிறார்.

தமிழ் முஸ்லிம்கள் சிலர் அரசியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் ராஜராஜ சோழனது அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் தஞ்சைக் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு இராசேந்திர சோழன் வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

காயல்பட்டிணம் காட்டு மொகுதூம் வலி என்பவர் அரபுநாட்டிலிருந்து இஸ்லாத்தைப் போதிக்க காயல்பட்டிணம் வந்தார். இவர்களுக்கு அக்கால பாண்டிய மன்னன் அவர்களை கண்ணியப்படுத்தி நிலங்களை வழங்கியுள்ளார். ஹிஜ்ரி 571 ல் ஏர்வாடியில் அடங்கப்பட்டிருக்கும் இப்ராஹிம் என்பவருடன் கீழ நெய்னார் தெருவில் அடங்கப்பட்டிருக்கும் கலீபா என்பவரும், ஈக்கி அப்பா கலீபா என்பவரும் அரபு நாட்டிலிருந்து காயல்பட்டிணம் வந்தனர். மன்னர் அதிவீரராம பாண்டியன் மகன் குலசேகரப் பாண்டியன் ஈக்கி அப்பா கலீபாவை திருநெல்வேலிக்குப் படைத் தளபதியாகவும், கலீபாவை நீதிபதியாகவும் நியமித்து,ஏர்வாடி இப்ராஹிமை தம்முடன் மதுரைக்கு அழைத்துச் சென்றான்.

மன்னர் அரபி முஸ்லிம்கள் பால் மிகவும் அன்புடையவராக இருந்தார். வியாபாரத்தில் பல சௌகரியங்கள் செய்து கொடுத்ததுடன் நாட்டின் நிர்வாகத்திலும் பங்களித்தான். கி.பி. 1286ஆம் ஆண்டில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். தளபதியாகவும் 'கறுப்பாறு காவலன்' எனும் கடலாதிக்க அதிபராகவும் இருந்து, ஈழ நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்று வந்ததனை ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் தமது 'புராதன தக்காணம்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவருக்குப்பின் இவரது மகன் ஸிராஜுத்தீனுக்கும், பின் அவரது பேரன் நிஜாமுத்தீனும் பதவியில் இருந்ததை கிருனசாமி அய்யங்கார் தெரிவிக்கிறார்..இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறதுசெய்யிது ஜமாலுத்தீன் அவர்களின் சகோதரர் தகியுத்தீன் பாண்டிய மன்னரின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பாண்டிய மன்னர்களின் ஆலோசர்களாக அமைச்சர்களாக கடற்படைத் தளபதிகளாக முஸ்லிம்கள் பொறுப்பு வகித்திறுக்கிறார்கள். இந்நாட்டு மன்னர்களின் தூதுவர்களாக பல வெளிநாடுகளுக்கும் சிலர் சென்று வந்துள்ளனர். அரசாங்க வருவாயை பெருக்கும் வணிகர்களாகவும் போர் வீரர்களாகவும் செயலாற்றி வந்தார்கள்.

இதுபோலவே 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.

பாண்டிய மன்னனின் படையில் முஸ்லிம்கள்

மாலிக்காபூர் மதுரை மீது படையெடுத்து வந்த போது பாண்டிய மன்னனின் படையில் இருபதினாயிரம் முஸ்லிம்கள் சேவையாற்றி வந்தனர் என இப்னு பதூதா என்ற யாத்ரிகரின் குறிப்பிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

இஸ்லாமும் தமிழர்களும்

இந்தியாவின் மாபெரும் ஆன்மிக அறிஞர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "முஹம்மதியர்களின் வருகை ஒடுக்கப்பட்டோர் முதல் ஏழைகள் வரை ஈடேற்றம் தருவதாக அமைந்தது. இதனால்தான் நமது மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் முஸ்லிமாக ஆகியுள்ளார்கள். வாளால் இந்த வேலை நடைபெறவில்லை. வாளும், நெருப்பும் இந்த வேலையைச் செய்தது என்று சொல்வது பேதமையின் உச்சமாகத் தான் இருக்கும். உயர்சாதி மனிதர் நடமாடும் அதே வீதியில் செல்வதற்குத் தாழ்த்தப்பட்டவருக்கு அனுமதி கொடுக்கப்படாததை நான் பார்த்தேன். ஆனால் அவன் தனது பெயரை முஹம்மதியப் பெயராக மாற்றிக் கொண்டால் இந்தச் சிக்கல் இருப்பதில்லை [11]

தமிழர்கள் இஸ்லாத்தை தழுவுவது ஏழாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதுகுறித்து விரிவாக, கூட்டாக ஆய்வு செய்துள்ள அலிகர் மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் இணைவேந்தரும் வரலாற்றாசிரியருமான பேராசிரியர் கே.எம். பஹாவுத்தீன் மற்றும் கொல்லம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியரான முனைவர் எம்.எஸ். ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தமிழகத்தில் மூன்று அல்லது நான்கு கட்டங்களாக இஸ்லாம் பரவியது என்று குறிப்பிடுகிறார்கள்.

இஸ்லாம், தமிழகத்தில் முதன் முதலாகப் பரவிய காலத்தில் (கி.பி. 650-750) சமண மதம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருந்தது; தமிழகத்தில் இஸ்லாம் பரவுவதற்கு எவ்வித முட்டுக்கட்டைகளும் இருக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இஸ்லாம் மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிக்காததால் சமணர்களும் பௌத்தர்களும் அந்த மார்க்கம் பரவுவதை எதிர்க்கவில்லை என்றும் கேரளாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள அவர்கள் இருவரும் குறிப்பிடுகிறார்கள்.

மக்கள் தொகை

தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் எண்ணிக்கை சுமார் 4,229,479 இருப்பதாக அரசு புள்ளி விவரம்(2011) குறிப்பிடுகிறது.[12] அதில் தமிழ் முஸ்லிம்கள் எண்ணிக்கை 75 சதவிகிதம் ஆகும். இலங்கையில் 2 மில்லியன் முஸ்லீம்கள் தமிழை தமது தாய் மொழியாகக் கொண்டு உள்ளார்கள். தமிழ் முஸ்லிம்கள் மலேசியா,சிங்கப்பூர், பேங்காக் ஆகிய நாடுகளிலும் வசித்து வருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளிலும் பணிபுரியும் நோக்கிலும், வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் இலக்கியப் பங்களிப்பு

தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புறக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.

தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், கி.பி 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது.[13] இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன.குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும்,இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும். இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.

இவற்றையும்பார்க்க

மேற்கோள்கள்

 1. http://www.tamilvu.org/slet/l3750/l3750pag.jsp?x=143[தொடர்பிழந்த இணைப்பு] கம்பராமாயணம்
 2. மு. அப்துல் கறீம், தொகுப்பாசிரியர் (1982). இஸ்லாமும் தமிழும். திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பக். 71. https://books.google.co.in/books?id=O94HAQAAIAAJ&dq=%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%27+. "பாண்டிய நாட்டுக் கரைக்கு வந்த மற்ருெரு கப்பலில் வந்தவர்கள் லெப்பைகள் என அழைக்கப்பட்டனர். லப்பைக்' என்ற அரபிச் சொல்லுக்கு "இதோ அடிபணிந்தேன்' என்று பொருள். குழுத் குழுத் தலைவரின் ஆணைக்கு உடன் பணிந் தேன் எனக் கூறுதற்கு 'லப்பைக்' எனக் குழுவினர் உரைப் பார்கள்.இது கொண்டு அவ்வரபியர்கள் லப்பைகள் என அழைக்கப்பட்டார்கள். லப்பை என்பது லெப்பை, லெவை ஆகத் திரிந்தது. பாண்டியர் கரையில் வந்திறங்கிய அரபிகளின் வழியினர் இன்றுவரை லெப்பைகள் ( தமிழ் முஸ்லிம்கள்) என அழைக்கப்படுகின்றனர்." 
 3. எஸ் முத்துமீரான், தொகுப்பாசிரியர் (2005). இலங்கை கிராமத்து முஸ்லிம் பழமொழிகள். நேஷனல் பப்ளிஷர்ஸ். பக். 57. https://books.google.co.in/books?id=P7kLAQAAMAAJ&dq=%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+. "இங்கு லெப்பை என்னும் சொல் பற்றிப் பல கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் உள்ளன. லெப்பைக்' என்ற அரபிச் சொல்லுக்கு, "இதோ அடிபணிந்தேன்' என்பது பொருளாகும். ஒரு குழுவின் தலைவரின் ஆணைக்கு அடிபணிதல் என்று பொருள்படும் வகையில் லெப்பைக் எனக் குழுவினர் உரைப்பார்கள்" 
 4. http://www.amust.com.au/2017/01/first-muslim-and-first-mosque-in-india/
 5. 5.0 5.1 "அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில்". பார்த்த நாள் 19 ஏப்ரல் 2015.
 6. "ஒன்ஸ்மோர்". பார்த்த நாள் 19 ஏப்ரல் 2015.
 7. http://www.tamilvu.org/slet/l3710/l3710pag.jsp?x=631[தொடர்பிழந்த இணைப்பு] கம்பராமாயணம்
 8. 27-2-2010 முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைமையகத்தில் நடை பெற்ற மீலாதுந்நபி தொடர் சொற்பொழிவு நிறைவு விழாவில் தொழில் அதிபர் பத்மஸ்ரீ நல்லிகுப்பு சாமி பேசும்போது குறிப்பிட்டது-
 9. பொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) என்பவர் எழுதிய அரபி நூலான “துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்” என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயம்
 10. திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் எழுதிய“கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்” என்ற நூல்
 11. The Future of India The Complete Work of Swami Vivekananda. Advaitha Ashram, Calcutta 14
 12. "Muslim Religion Census 2011". பார்த்த நாள் 29 திசம்பர் 2015.
 13. எஸ்.எம்.கமால். இலக்கிய அரங்கில். இலக்கிய சோலை சென்னை. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_முஸ்லிம்கள்&oldid=3376526" இருந்து மீள்விக்கப்பட்டது