மேலை நாட்டுக் கிறித்தவ தமிழ்த் தொண்டர் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறித்தவ சமயத்தை இந்திய நாட்டில் பரப்புவதற்காகவும், வணிக உறவு ஏற்படுத்தி, பொருளீட்டவும் 16ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியா வந்த மேலை நாட்டவர் பலர் தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதில் சிறப்பான பணி ஆற்றியுள்ளார்கள். "வடமொழி பெற்றெடுத்த சேய் தமிழ் மொழி" என்று பன்னெடுங்காலமாக எழுதியும் பேசியும் வந்தவர்களுடைய கருத்தை அவர்கள் மறுத்ததோடு கூட, தமிழ் மொழியின் தனித்தியங்கும் தன்மையை உலகுக்கு அறிவித்தனர்.

அகராதி, மொழிபெயர்ப்பு, திறனாய்வு, நாட்டுப்புறவியல், பழமொழிகள் தொகுப்பு, படைப்பிலக்கியம், ஒப்பிலக்கணம் போன்ற பல துறைகளில் முன்னோடிகளாகத் திகழ்ந்த தமிழ் அறிஞர்கள் அவர்களிடையே உண்டு. இந்தியத் துணைக்கண்டத்தில் இந்திய மொழிகளில் முதன்முதலில் தமிழ் மொழியை அச்சேற்றிய பெருமையும் மேலை நாட்டுக் கிறித்தவத் தொண்டர்களையே சாரும். தமிழ் மொழி வளர்ச்சியில் ஒரு புது விடியலைக் கொணர்ந்த அவர்கள் போர்த்துக்கல், இத்தாலியா, பிரான்சு, செருமனி, ஓலாந்து, இங்கிலாந்து, எசுக்காத்துலாந்து, டென்மார்க்கு, வட அமெரிக்கா முதலிய நாடுகளிலிருந்து குடியேற்ற ஆதிக்க காலத்தில் இந்தியா வந்தவர்கள். வணிகத்திற்கென்று வந்தவர்கள் ஆட்சியாளராகவும் மாறினாலும், அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.

இவ்வாறு தமிழுக்கு தொண்டாற்றிய மேலை நாட்டு அறிஞர்களின் பட்டியல் கீழே தரப்படுகிறது. அவர்களின் பெயர்கள் மேலை நாட்டு வடிவிலும் தமிழ் வடிவிலும் உள்ளன. அவர்கள் பிறந்த ஆண்டும் இடமும், சிறப்புப் பங்களித்த துறையும், இறந்த இடமும் ஆண்டும் தரப்படுகின்றன [1][2][3].

சீரிய தமிழ்ப் பணி ஆற்றிய மேலை நாட்டுக் கிறித்தவர்கள் பட்டியல்[தொகு]

அறிஞர் பெயர் பிறந்த ஆண்டு, இடம் இந்தியாவில்/தமிழகத்தில் பணிக்காலம்/பணியிடங்கள் தமிழுக்கு ஆற்றிய பணி இறந்த ஆண்டு, இடம்
1. என்றிக்கே என்றீக்கசு

Henrique Henriques

1520

வீலா விசோசா,
போர்த்துக்கல்

1556-1600: தூத்துக்குடி, வேம்பாறு, கன்னியாகுமரி,

கடியபட்டணம், மணக்குடி, மன்னார், புன்னைக்காயல்

முதல் தமிழ் நூல் (தம்பிரான் வணக்கம்) அச்சேற்றியது (1578).

அடியார் வரலாறு (Flos Sanctorum) ஆக்கினார்.

1600

புன்னைக்காயல், சோழமண்டலக் கடற்கரை

2. தத்துவ போதகர் என்ற

இராபர்ட் தெ நோபிலி
Roberto de Nobili

1577

உரோமை நகர்,
இத்தாலியா

1605-1656: கோவா, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம்,

இலங்கை, மயிலாப்பூர்

கிறித்தவ இறையியலைத் தமிழில் ஆக்கிய முன்னோடி;

ஞானோபதேசம், கடவுள் நிர்ணயம் போன்ற நூல்கள்.

1656

மயிலாப்பூர், சென்னை

3. மனுவேல் மார்த்தின்சு

Manuel Martins

1595?


போர்த்துக்கல்

1625-1656: மதுரை, மாரமங்கலம், திருச்சிராப்பள்ளி தமிழில் கிறித்தவ இறைவேண்டல் நூல்கள் 1656

திருச்சிராப்பள்ளி, தமிழ் நாடு

4. அந்தோம் தெ ப்ரொவேன்சா

Antão de Proença

1625

ரமேல்லா,
போர்த்துக்கல்

1647- மறவநாடு தமிழில் அச்சான முதல் அகராதி: தமிழ்-போர்த்துகீசியம் (அம்பலக்காடு, 1679) 1666

மறவநாடு

5. பிலிப்பு பல்தேயுசு

Philippus Baldaeus

1632

டெல்ஃப்ட்,
ஓலாந்து

1657-1667: காலி, யாழ்ப்பாணம்; தமிழ் நாடு இலங்கை, தமிழகம் பற்றிய தகவல்கள்; யாழ்ப்பாண வரலாறு; கிறித்தவ இறைவேண்டல்களின் தமிழ்ப் பெயர்ப்பு (ரோட்டர்டாம், 1671); மத்தேயு நற்செய்தியின் தமிழ்ப் பெயர்ப்பை ஆக்கினார். 1671

கெர்ஃப்லீட், ஓலாந்து

6. யாக்கோபு கொன்சால்வசு

Jacome Gonsalves

1676

திவார்,
கோவா

1705- :யாழ்ப்பாணம்; இலங்கை தமிழிலும் சிங்களத்திலும் கிறித்தவ இலக்கியங்கள் 1742

கோவா

7. வீரமாமுனிவர் என்ற கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி

Costanzo Giuseppe Beschi (Constantius Joseph Beschi)

1680

காஸ்திலியோனே தெல்லெ ஸ்டிவியரே,
இத்தாலியா

1710-1747: மதுரை, மறவ நாடு, காமநாயக்கன்பட்டி, கயத்தாறு,

ஆவூர், அய்யம்பேட்டை, ஏலாக்குறிச்சி,
திருச்சிராப்பள்ளி, அம்பலக்காடு

செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், சதுரகராதி, தேம்பாவணி,

பரமார்த்த குருவின் கதை முதலியன ஆக்கினார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார்.

1747

அம்பலக்காடு (அம்பழக்காடு), கேரளம்

8. பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க்

Bartholomaeus Ziegenbalg

1683

புல்ஸ்நிட்ஸ்,
செருமனி

1706-1719: தரங்கம்பாடி புதிய ஏற்பாட்டை முதல் முறையாகத் தமிழில் அச்சிட்டார் (தரங்கம்பாடி, 1715); தமிழ் நூற்பட்டியல் தொகுத்தார்;

இந்திய சமய நம்பிக்கைகள் பற்றி ஆய்வுகள் வெளியிட்டார்.

1719

தரங்கம்பாடி, நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டம்

9. யோஹான் எர்ன்ஸ்ட் க்ருண்ட்லர்

Johann Ernst Gruendler

1677

ஷில்ட்பர்க் (ப்ராண்டன்பர்க் அருகே)
புருஸ்ஸியா

1709-1719: தரங்கம்பாடி தமிழக மருந்துமுறைகள் பற்றிய ஆய்வு நிகழ்த்தினார். 1720

செருமனி

10. பெஞ்சமின் ஷூல்ஸ்

Benjamin Schultze

1689

சோன்னன்புர்க் (முன்னாளைய ப்ராண்டன்புர்க்),
செருமனி

1719-1743: தரங்கம்பாடி, கடலூர், தேவிப்பட்டினம்,

பரங்கிப்பேட்டை, சென்னை

சீகன்பால்க் தொடங்கிய விவிலிய தமிழ்ப் பெயர்ப்பை நிறைவுசெய்து அச்சேற்றினார் (1725); கிறித்தவ தமிழ்ப் பாடல்கள் தொகுத்தார். 1760

செருமனி

11. கிறிஸ்டோஃப் தியடோசியசு வால்ட்டர்

Christoph Theodosius Walther

1699

ஷில்ட்பர்க் (ப்ராண்டன்பர்க் அருகே)
புருஸ்ஸியா

1725-1739: தரங்கம்பாடி, சென்னை ஷூல்ஸ் மொழிபெயர்த்த பழைய ஏற்பாட்டைத் திருத்தினார்; திருச்சபை வரலாறு வெளியிட்டார். 1741

செருமனி

12. சின்ன சவேரியார் என்ற

ஜாக்கமோ தொம்மாசோ தெ ரோஸ்ஸி
Giuseppe Tomaso de Rossi

1701


இத்தாலியா

1736-1774: சருகணி, மறவ நாடு கிறித்தவ பக்தி நூல்கள், புனிதர் வரலாறு உருவாக்கினார். 1774

மறவ நாடு

13. யொஃகான் ஃபிலிப்பு ஃபெப்ரீசியசு

Johann Phillip Fabricius

1711

ஃபிராங்க்ஃபுர்ட், செருமனி

1740-1791: தரங்கம்பாடி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,

திருநெல்வேலி

தமிழ் விவிலியம்; ஆங்கிலம்-தமிழ் அகராதி;

தமிழ் கிறித்தவப் பாடல் தொகுப்பு.

1791

சென்னை

14. கிறிஸ்டியான் பிரடரிக் சுவார்ட்சு

Christian Friderich Schwartz (Schwarz)

1726

சோன்னன்புர்க் (முன்னாளைய ப்ராண்டன்புர்க்)
செருமனி

1750-1798: தரங்கம்பாடி, திருச்சிராப்பள்ளி,

தஞ்சாவூர்

தமிழில் கிறித்தவ சமய நூல்கள் 1798

தஞ்சாவூர்

15. யோஹான் கிறிஸ்டியான் ப்ரைட்ஹாப்ட்

Johann Christian Breithaupt

1720?

ட்ரான்ஸ்ஃபெல்ட், ஹானோவர்
செருமனி

1749-1782: தரங்கம்பாடி, கடலூர்,

சென்னை

ஃபெப்ரீசியசோடு இணைந்து "மலபார் (தமிழ்)- ஆங்கில அகராதி" 1776இல் வெளியிட்டார் 1782

சென்னை

16. ஜான் பீட்டர் ராட்லர்

John Peter Rottler

1749

ஸ்ட்ராஸ்பர்க்
பிரான்சு

1776-1836: தரங்கம்பாடி, சென்னை,

பழவேற்காடு, இலங்கை, திருநெல்வேலி

இந்திய தாவரங்கள் பற்றிய ஆய்வு; கிறித்தவ நூல்கள் வெளியிட்டார்; இவர் உருவாக்கிய 1425 பக்கங்கள் (நான்கு பகுதிகள்) கொண்ட தமிழ்-ஆங்கில பேரகராதி 1834-1841இல் வெளியானது 1836

சென்னை

17. காலின் மெக்கென்சி

Colin Mackenzie

1754

ஸ்டோர்னோவே
எசுக்காத்துலாந்து

1783-1821: சென்னை, கோயம்பத்தூர், திண்டுக்கல், கொல்கத்தா

குண்டூர், மைசூர் முதலிய இடங்கள்

தமிழ் உட்பட, பல மொழிகளில் உள்ள கையெழுத்துப் படிகளைச் சேகரித்தார். நாணயங்கள், கல்வெட்டுகள் தொகுப்பு; ஒரு பகுதி சென்னையில் உள்ளது. 1821

கொல்கத்தா

18. எல்லீசன் என்ற

ஃபிரான்சிசு உவைட் எல்லிசு
Francis Whyte Ellis

1777

இங்கிலாந்து

1796-1819: பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் நிர்வாகப் பொறுப்பு சென்னைக் கல்விச் சங்கம் நிறுவினார்; தென்னிந்திய மொழிகள் திராவிடக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று மொழி ஆய்வு வழி நிலைநாட்டினார்; திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களை ஆங்கிலத்தில் பெயர்த்து விளக்கவுரை எழுதினார்; தமிழில் இலக்கிய இலக்கண நூல்கள் அச்சிட வழிவகுத்தார்; ஓலைச் சுவடிகளைச் சேகரித்தார். 1819

இராமநாதபுரம்

19. ழான்-அந்துவான் துபுவா

Jean-Antoine Dubois

1766

ரமேஸ்,
பிரான்சு

1792-1823: கொர்தேல் (மங்களூரு), மைசூர் இந்தியரின் பழக்கவழக்கங்கள் பற்றி ஆய்வுகள் வெளியிட்டார். 1848

பாரிசு, பிரான்சு

20. மிரோன் வின்சுலோ

Miron Winslow

1789

வில்லிஸ்டன், வெர்மான்ட் மாநிலம், அமெரிக்கா

1819-1836 உடுவில், இலங்கை;

1836-1864 சென்னையில் சமயப் பணி; சென்னைக் கல்லூரித் தலைவர்; கல்விப் பணியும் தமிழ்ப்பணியும்.

கிறித்தவ சமயப் பரப்புதல் பற்றிய நூல்கள் தவிர, செந்தமிழும் கொடுந்தமிழும் உள்ளடங்கிய முழுமையான தமிழ்-ஆங்கில அகராதி[1] உருவாக்கி வெளியிட்டார் (1862). இவ்வகராதியில் 68000 தலைச் சொற்கள் அடங்கியுள்ளன. அகராதியின் சொல்வளம் வீரமாமுனிவரின் சதுரகராதியிலிருந்தும் ஜோசப் நைட், லேவி ஸ்பால்டிங் என்பவர்களின் தொகுதிகளிலிருந்தும் பெறப்பட்டு, இராமானுசக் கவிராயர் போன்ற தமிழ் அறிஞர்களின் ஒத்துழைப்புடன் உருவானது. 1864

இங்கிலாந்து திரும்பும் வழியில், நன்னம்பிக்கை முனையில் இறந்தார்[2][தொடர்பிழந்த இணைப்பு].

21. இராபர்ட் கால்ட்வெல்

Robert Caldwell

1814

கிளாடி, வடக்கு அயர்லாந்து

1838-1891: திருநெல்வேலிப் பகுதியில் சமயப்பணியும் தமிழ் மொழி வளர்ச்சிப் பணியும் ஆற்றினார்.

இடையன்குடி, சாயர்புரம்

தென்னிந்திய மொழிகள் திராவிடக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று மொழி ஆய்வு வழியாக, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூல் வெளியிட்டு உறுதியாக நிலைநாட்டினார். திராவிட தேச உணர்வு எழுச்சியுற வழிகோலினார். திருநெல்வேலி சாணார் இனத்தவரின் சமய நம்பிக்கையும் பண்புகளும் (அச்சு: இலண்டன், 1850) மற்றும், திருநெல்வேலி மாவட்ட வரலாறு, (அச்சு: சென்னை, 1881) என்னும்

ஆய்வுநூல்களை வெளியிட்டார்.

1891

இடையன்குடி, திருநெல்வேலி

22. வில்லியம் ஹோய்ல்ஸ் ட்ரூ

William Hoyles Drew

1805

ப்ளிமத் (Plymouth), அமெரிக்கா.


இளமைப் பருவத்தில் இங்கிலாந்து சென்றார்; அங்கிருந்து இந்தியா வந்தார்.

1832-1840; 1846-1856: சென்னை; பெங்களூரு; புதுச்சேரி. திருக்குறளின் முதல் 63 அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, இராமானுசக் கவிராயரின் துணையோடு தமிழில் விளக்கவுரை வழங்கினார்; ஜி. யு. போப் வெளியிட்ட திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பில் ட்ரூவின் பெயர்ப்பையும் தருகிறார். 1856,

பவழக்காடு

23. சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்

Dr. Samuel Fisk Green

1822

கிறீன் ஹில்ஸ், வூஸ்டர் (Worcester),
மசாசுசெட்ஸ் மாநிலம், அமெரிக்கா

1847-1857; 1862-1873: பருத்தித்துறை; வட்டுக்கோட்டை; மானிப்பாய் இலங்கையில் முதல் மருத்துவ மனையை மானிப்பாய் நகரில் 1848ஆம் ஆண்டு நிறுவினார்; தமிழில் மருத்துவம் கற்பித்தார்; புதிய கலைச்சொற்களை உருவாக்கி, தமிழில் மேனாட்டு மருத்துவ நூல்களை மொழிபெயர்த்து, மருத்துவர்களை உருவாக்கினார். வெளியிட்ட சில நூல்கள்:

கட்டரின் அங்காதிபாதம், சுகரணம் (Cutter's Anatomy, Physiology and Hygiene), 1857; மோன்செல்ஸ் மாதர் மருத்துவம் (Maunsell's Obstetrics), 1857; துருவிதரின் இரணவைத்தியம் (Druitt's Surgery), 1867 கிறேயின் அங்காதிபாதம் (Gray's Anatomy), 1872 - முதலியன.

1884

அமெரிக்கா

24. ஜார்ஜ் உக்ளோ போப்

George Uglow Pope

1820

ப்ரின்ஸ் எட்வர்ட் தீவு, நோவா ஸ்கோஷியா; சிறுவயதில் இங்கிலாந்து வந்தார்

1839-1881: சாயர்புரம், திருநெல்வேலி; 1885: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ், தெலுங்கு பேராசிரியராக நியமனம். தமிழ்-ஆங்கில அகராதி; தமிழ் மொழி பயில ஆங்கிலக் கையேடு (1859: இரண்டாம் பதிப்பு, சென்னை); திருக்குறள் (1886), நாலடியார் (1893), திருவாசகம் (1900), ஆகிய நூல்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் உரைவிளக்கங்கள் படைத்தார். தமிழ் நூல்கள் பட்டியல் தொகுத்தார் (வெளியீடு: இலண்டன், 1909). 1908

இங்கிலாந்து

25. இரேனியுசையர் என்ற

சார்லஸ் தியோஃபிலஸ் ஏவால்ட் இரேனியுசு
Chrles Theophilus Ewald Rhenius

1790

மேற்கு புருஸ்ஸியா

1814-1838: தரங்கம்பாடி, சென்னை, அன்றைய திருநெல்வேலி மாவட்டப் பகுதிகள் (இன்றைய தூத்துக்குடி மாவட்டம், மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் சில ஊர்கள்). விரிவான தமிழ் இலக்கண நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார் (சென்னை, 1836); ஃபெப்ரீசியசு உருவாக்கிய விவிலியத் தமிழ்ப் பெயர்ப்பைத் திருத்தியமைத்தார். அவர் திருத்திய புதிய ஏற்பாடும், ஃபெப்ரீசியசுவின் பழைய ஏற்பாட்டுப் பெயர்ப்பும் 1840இல் சென்னையில் வெளிவந்தன. 1838

அடைக்கலாபுரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி

26. இராபர்ட் ஆண்டர்சன்

Robert Anderson

இங்கிலாந்து

-1819: பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் நிர்வாகப் பொறுப்பு கொடுந்தமிழ் இணைந்த தொடக்க நிலைத் தமிழ் இலக்கணமும், செந்தமிழுக்கு முன்னுரையும் என்னும் நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார் (இலண்டன், 1821). இந்நூலுக்கு முன்னோடி வீரமாமுனிவரின் இலக்கண நூல்கள் ஆகும்.
27. பீட்டர் பெர்சிவல்

Peter Percival

1803

அமெரிக்கா

1826: இலங்கையில் மறைப்பணியாற்ற வந்தார். 1834: யாழ்ப்பாண மத்திய கல்லூரி தொடங்கினார்.

1857-1869: புதிதாகத் தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலைக் கழகத்தில் வடமொழி மற்றும் தமிழ் இலக்கியம் பயிற்றுவித்தார்.
1867-1875: தினவர்த்தமானி என்னும் வாரப்பத்திரிகை வெளியிட்டார்.

பெர்சிவல் திருட்டாந்த சங்கிரகம் என்னும் பெயரில் தமிழ்ப் பழமொழித் தொகுப்பை ஆங்கில மொழிபெயர்ப்போடு வெளியிட்டார் (யாழ்ப்பாணம், 1842);


விவிலியத்தைப் புதிதாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார் (யாழ்ப்பாணம், 1850); ஆறுமுக நாவலர், எலியா ஹூல் என்னும் இரு தமிழறிஞர்கள் அப்பதிப்பின் தமிழ்நடைக்கு மெருகூட்டினார்கள்.
ஆங்கில-தமிழ் அகராதி வெளியிட்டார் (யாழ்ப்பாணம், 1860).

1882

ஏற்காடு, சேலம்

28. ழுலியேன் வேன்சான்

Julien Vinson

1843

பிரான்சு நாட்டவர், புதுச்சேரியில் பிறந்தார்

இளமைப் பருவம் - புதுச்சேரி ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளின் ஒரு பகுதியை பிரான்சிய மொழியில் வெளியிட்டார். தமிழ் மொழிக் கையேடு உருவாக்கினார் (1891). சீவகசிந்தாமணியின் சுருக்கத்தைப் பிரான்சிய மொழியில் வெளியிட்டார் (1878). பிரான்சியத்தில் ஆக்கிய பிற சில நூல்கள்: சமணர்கள் மற்றும் பௌத்தர்களின் கதைகள் (சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்) (1900). திராவிட மொழிகளில் வினைச்சொற் பயன்பாடு (1878). கட்டுரை: தமிழ்ப் புலமை பெற்ற முன்னாளைய இயேசு சபையினர் (1902). 1926

பிரான்சு

29. யோஹான்னெஸ் சாந்தகிரென்

Johannes Sandegren

1883

சுவீடன் நாட்டுப் பின்னணியினர். மதுரையில் பிறந்தார்

உப்சலா (சுவீடன்) நகரில் மேற்படிப்பு; 1907: சமயப் பணிக்காக மதுரை வருகை; மதுரையில் யூனியன் கிறித்தவப் பள்ளி உருவாக்கினார். சுவீடன் அரசர் மதுரையில் விழாவில் கலந்ததால் "அரசரடி" என்னும் பெயர் தோன்றியது. 1934: தரங்கம்பாடி ஆயராக நியமனம். திருமுருகாற்றுப்படை ஆய்வு, தரங்கை அலைகளின் இன்னிசை முதலிய படைப்புகள் 1962

மதுரை

30. ழான்-பப்தீஸ்த் திரிங்கால்

Jean-Baptiste Trincal

1815

சோக், பிரான்சு

1844: புதுச்சேரி; 30 ஆண்டுகள் திருச்சியில் மறைப்பணி. அதே சமயம் 1847-1855: தஞ்சாவூர் பகுதியில் மறைப்பணி; 1855-1892: மதுரையில் மறைப்பணி மதுரையில் புனித மேரி பள்ளியை 1863இல் நிறுவினார்; திரிங்கால் செய்த புதிய ஏற்பாட்டுத் தமிழ்ப் பெயர்ப்பு கத்தோலிக்க சபையின் முதல் பெயர்ப்பாக 1891இல் புதுவையிலிருந்து அச்சாகி வெளியானது. சத்தியவேத சரித்திரத்தின் சுருக்கம், நற்செய்திகளின் ஒருமைப்பாடு போன்ற நூல்களையும் திரிங்கால் இயற்றினார். 1892

மதுரை

31. லேவி ஸ்பால்டிங்க்

Levi Spaulding

1791

நியூ ஹாம்ஃப்ஷையர், அமெரிக்கா

1820: இலங்கை; 54 ஆண்டுகள் மறைப்பணியும் தமிழ்ப் பணியும் ஆற்றினார். யாழ்ப்பாணத்தில் உடுவில் பெண்கள் விடுதி பொறுப்பாளராக இருந்தார்; ஜோசஃப் நைட் என்பவர் உருவாக்கியிருந்த ஆங்கில-தமிழ் அகராதியை நிறைவுக்குக் கொணர்ந்து வெளியிட்டார் (விரிவாக்கிய இரண்டாம் பதிப்பு: 1852). Pilgrim's Progress என்னும் ஆங்கில இலக்கியத்தைத் தமிழில் மோட்சப் பிரயாணம் என்ற தலைப்பில் வெளியிட்டார். தமிழ்க் கிறித்தவப் பாடல்கள் உருவாக்கினார். 1873

இலங்கை

32. கார்ல் க்ரவுல்

Karl Graul

1814

வேர்லிட்ஸ் (Woerlitz), செருமனி

1849-1853 தமிழகத்தில் மறைப்பணியும் தமிழ்ப் பணியும் ஆற்றினார். 1853: செருமனி திரும்பி, லைப்சிக் நகரில் தமிழ்ப் பேராசியராகப் பணியாற்றினார். திருக்குறளை முதன்முறையாக முழுதுமாக இலத்தீன், செருமானியம், நடைமுறைத் தமிழ் ஆகியவற்றில் பெயர்த்தார். அவர் இறந்த மறு ஆண்டில் (1865) வில்லியம் கெர்மான் என்பவர் அதை அச்சேற்றினார். நான்கு தொகுதிகளாய் அமைந்த "தமிழ் நூலகம்" (Bibliotheca Tamulica sive Opera Praecipua Tamuliensium) (1854-1857) என்னும் தொகுப்பில் திருக்குறள் பெயர்ப்புகளும், குறிப்புகளும் உள்ளடங்கும். தமிழ் இலக்கணம் செருமானியத்தில் எழுதினார் (1855). தமிழகத்தில் பரவலாக உள்ள மரங்களாகிய வாழை, தென்னை, பனை, கமுகு, ஆல் ஆகிய ஐந்து பற்றியும் செருமானியத்தில் கவிதை எழுதினார் (அச்சு: 1865). 1864

எர்லாங்கென், செருமனி

33. லூயி சவேனியான் துப்புயி

Louis Savenian Dupuis

1806

சான்ஸ் (Sanz), பிரான்சு

1832-1874 பாரிசு வெளிநாட்டு மறைப்பணி நிறுவனம்(Paris Foreign Missionary Society = Missions Etrangères de Paris) என்னும் அமைப்பின் கீழ் பணிபுரிய புதுச்சேரி வந்து, நாற்பத்திரண்டு ஆண்டுகள் பல ஊர்களில் தொண்டாற்றினார். "தமிழ்-பிராஞ்சு அகராதி" (Dictionnaire Tamoul-Français) மற்றும் "பிராஞ்சு-தமிழ் அகராதி" (Dictionnaire Français-Tamoul)உருவாக்கினார் (1850). இவற்றின் இரண்டாம் பதிப்பு முறையே 1895, 1911இல் வெளியாயின. லூயி மூஸ்ஸே (Louis Mousset) என்னும் மற்றொரு மறைப்பணியாளரோடு இணைந்து புதுவையில் மிஷன் அச்சகம் 1844இல் தொடங்கி, தேம்பாவணி மற்றும் தமிழ் அகராதிகள் போன்ற நூல்களை அச்சேற்றி வெளியிட்டார். பெண்மக்கள் கல்வியை வளர்த்து மேம்படுத்த ஒரு தனித் துறவற சபை உருவாக்கினார். "பூமிசாஸ்திர சங்க்ஷேபம்" போன்ற கல்விநூல்கள் வெளியிட்டார். 1874

புதுச்சேரி

ஆதாரங்கள்[தொகு]

  1. பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம், ஐரோப்பியர் தமிழ்ப்பணி, சென்னைப் பல்கலைக்கழகம், 2003.
  2. மேலைநாட்டுத் தமிழறிஞர்
  3. மயிலை.சீனி.வேங்கடசாமி, கிறித்துவமும் தமிழும், நாம் தமிழர் பதிப்பகம், சென்னை, 2004 (முந்திய பதிப்புகள்: 1936, 1938, 1948, 1955)