உள்ளடக்கத்துக்குச் செல்

சாமுவேல் பிஸ்க் கிறீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்
Dr Samuel Fisk Green
"தமிழருக்கான மருத்துவ ஊழியர்" மருத்துவர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்
பிறப்புஅக்டோபர் 10, 1822
கிறீன் ஹில், வூஸ்டர், மசாசுசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
இறப்புமே 28, 1884(1884-05-28) (அகவை 61)
பணிமருத்துவர், சமய ஊழியர்
பெற்றோர்வில்லியம் ஈ. கிறீன், ஜூலியா பிளிம்ப்டன்

சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr Samuel Fisk Green, ச. வி. கிறீன், அக்டோபர் 10, 1822 – மே 28, 1884) என்பவர் அமெரிக்க மருத்துவரும், கிறித்தவ சமய ஊழியருமாவார். இவர் 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, மேனாட்டு மருத்துவக்கலை அமெரிக்க மிசன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே தமிழிலே வளர்க்கப்படுவதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர். மருத்துவக் கல்வி, தமிழியற் கல்வி, நூலாக்கம், கலைச் சொல்லாக்கம் எனப் பல்வேறு முயற்சிகளில் இவர் வெற்றி கண்டார். அறிவியல் தமிழிற்கு இவரின் முன்னோடிச் செயற்பாடுகளுக்காக அறிவியல் தமிழின் தந்தையாக அறிஞர்களால் கணிக்கப்படுகிறார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தின் வூஸ்டர் (Worcester) நகரில் வில்லியம் கிறீன், ஜூலியா பிளிம்ப்டன் இணையினரின் பதினொரு பிள்ளைகளில் எட்டாவதாகப் பிறந்தவர் சாமுவேல். பதினொரு வயதிலேயே தாயை இழந்து, தந்தையாலும் தமக்கையாலும் வளர்க்கப்பட்டார். இவரது உடன் பிறந்தவர்களில் ஒருவரான ஆண்ட்ரூ ஹாஸ்வெல் கிறீன் (1820–1903) நியூயோர்க் நகர வடிவமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார்.[2]

18 வயதில் கிறித்துவின் சேவையில் தம்மை இணைத்துக் கொண்டார். 1841 இல் நியூயோர்க் மருத்துவக் கல்லூரியில் (The College of Physicians and Surgeons of New York) இணைந்து 1845 இல் மருத்துவராக வெளியேறினார்.

யாழ்ப்பாணத்தில் சேவை

[தொகு]

யாழ்ப்பாணத்திலே தமது மிசனரிச் சேவையை நிலைப்படுத்திய அமெரிக்க மிசன், மருத்துவ சேவையையும் துவங்குவதென 1819 இல் தீர்மானித்தது. அதன்படி 1820 இல் பண்டத்தரிப்பில் முதலாவது மருத்துவ நிலையம் மருத்துவர் ஸ்டேர் தலைமையில் நிறுவப்பட்டது. அவரைத் தொடர்ந்து மருத்துவர் நேதன் உவாட் பணியாற்றினார். உவாட்டின் சேவைக் காலம் முடிவடைய வந்து பணியை ஏற்றவர் தான் மருத்துவர் சாமுவேல் கிறீன். சமயப் பணிக்காகவும் கிறிஸ்தவ சமய போதனைக்குமென வந்த மிசனரிமார் சமூக சேவையும் மனிதாபமான வழிகளையும் தொடர்ந்தார்கள்.

நீராவிக் கப்பல் மூலம் வந்த கிறீன், சென்னையில் தங்கி, பின்பு 1847 ஒக்டோபர் ஆறாம் திகதி பருத்தித்துறையை வந்தடைந்தார். வட்டுக்கோட்டையிலே தமது பணியைத் தொடங்கி, பின்னர் 1848 இலே மானிப்பாய்க்கு மாற்றம் பெற்றார். மானிப்பாயில் மருத்துவ நிலையம் ஒன்றைத் தொடங்கி பணி புரியத் துவங்கினார். அங்கு தான் கிறீனின் சாதனைகள் யாவும் இடம்பெற்றன. அம்மருத்துவமனை இன்று மானிப்பாய் கிறீன் நினைவு மருத்துவமனை என அழைக்கப்படுகின்றது.

தமது பத்தாண்டுச் சேவை முடிந்த பின் அமெரிக்கா திரும்பி ஓய்வு பெற்ற கிறீன், திருமணம் செய்து கொண்டு, ஐந்து ஆண்டுகளின் பின் மீண்டும் யாழ் திரும்பி, தமிழில் மருத்துவம் கற்பித்தல், நூல்கள் எழுதுதல் ஆகிய பணிகளைத் தொடர்ந்தார்.

தமிழில் மருத்துவக் கல்வி

[தொகு]
மருத்துவர் கிறீனின் மருத்துவ மாணவர்களின் முதல் தொகுதி (1848–1853)

மருத்துவக்கல்வியை மானிப்பாயிலே தமது கல்லூரியில் தமிழில் கற்பிப்பதென்று 1855 ஆம் ஆண்டிலேயே முடிவு செய்தார். அப்போது மாணவர் சிலர் அம்மாற்றத்தை விரும்பவில்லை என உணர்ந்தார். அவ்வேளையிலே தமது கருத்தை வெளிப்படையாகக் கூறினார்.

"எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கட் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள், வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். ஈழத்தில் தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்".

இவ்வண்ணம் உறுதியாகக் கூறிய கிறீன், தமிழில் மேனாட்டு மருத்துவத்தைத் துவங்கிய முன்னோடியாவார். தமிழ்மொழி மூலம் 33 வைத்தியரைக் கற்பித்த பின்பே, அவர் அமெரிக்கா திரும்பினார். எனினும், அங்கிருந்தும் தமிழ் நூல்களை வெளியிடும் பணியைத் தொடர்ந்தார்.

தமிழருக்கான மருத்துவ ஊழியர்

[தொகு]

தாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் "தமிழருக்கான மருத்துவ ஊழியர்" (Medical Evangelist to the Tamils) என அதில் பொறிக்குமாறு வேண்டிக் கொண்டார். 1884இல் மருத்துவர் கிறீன் இறந்தபோது அவ்வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. வூஸ்டர் கிராம அடக்கசாலையில் அந்நினைவுக்கல் கிறீனை நினைவுபடுத்தி இன்றும் நிமிர்ந்து நிற்கின்றது.

வெளியிட்ட நூல்கள்

[தொகு]

மருத்துவர் கிறீன் மொத்தம் 24 நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டார். அவற்றில் சில:

  • கட்டரின் அங்காதிபாதம், சுகரணவாதம், உற்பாலனம் – Cutter's Anatomy, Physiology and Hygiene, (இரண்டாம் பதிப்பு: மதராஸ், 1857, பக். 204)
  • மோன்செல்ஸ் மாதர் மருத்துவம் – Maunsell's Obstetrics, 258ப., 1857
  • பிள்ளைப் பேறு தொடர்பான மருத்துவ வைத்தியம் (Midwifery) (1857) [1]
  • துருவிதரின் இரணவைத்தியம் – Druitt's Surgery, 504ப., 1867
  • கிறேயின் அங்காதிபாரதம் – Gray's Anatomy, 838ப., 1872
  • மனுசகரணம் – Dalton's Physiology, 590ப., 1883
  • வைத்தியாகரம் – (1872)
  • கெமிஸ்தம் – Well's Chemistry, 516ப.,1875
  • வைத்தியம் (1875)
  • கலைச் சொற்கள் (1875)
  • இந்து பதார்த்த சாரம் – Pharmacopoeia of India, 1884 (மொழிபெயர்ப்பு உதவி)
  • வைத்தியம் – Practice of Medicine, 1884 (மொழிபெயர்ப்பு உதவி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. இராம. சுந்தரம். (2009). தமிழ் வளர்க்கும் அறிவியல். சென்னை: நியூ செஞ்சரி புக் கவுசு.
  2. New York Preservation Archive Project

உசாத்துணைகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமுவேல்_பிஸ்க்_கிறீன்&oldid=3941781" இலிருந்து மீள்விக்கப்பட்டது