பருத்தித்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பருத்தித்துறை

Point Pedro
පේදුරු තුඩුව
நகரம்
நாடுஇலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுவடமராட்சி வடக்கு
பரப்பளவு
 • மொத்தம்11.65 km2 (4.50 sq mi)
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்20,543
 • அடர்த்தி1,763/km2 (4,565/sq mi)
நேர வலயம்இலங்கைச் சீர் நேரம் (ஒசநே+5:30)

பருத்தித்துறை (Point Pedro) இலங்கையின் வடபகுதி அந்தலையில் உள்ள ஒரு நகரமாகும். இது யாழ்ப்பாணத்தின் வடமராட்சி வலயத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டு மையமாகும். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தையும் இது கொண்டுள்ளது. 1995 இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இந்த நகரம் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. பருத்தித்துறை தமிழர்கள் வாழும் நகரமாகும். ஈழப்போர்க் காலத்தில் உயர் பாதுகாப்பு வலயத்துள் அமைந்திருந்த நகரின் பெரும்பகுதிகள் 2009 இல் போர் நிறைவடைந்ததை அடுத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. 2004 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் இந்த நகரமும் பாதிக்கப்பட்டது. இலங்கையில் புகழ் பெற்ற ஹாட்லிக் கல்லூரி இங்கு அமைந்துள்ளது நகரின் சிறப்புக்குச் சான்று.பருத்தித்துறையானது அதிகளவு பாடசாலைகளையும் கோவில்களையும் நீதிமன்றத்தையும் மின்சாரசபையும் அரச தனியார் போக்குவரத்து சபையையும் ஆதார வைத்தியசாலையையும் ,நகரசபையையும் பிரதேச செயலகத்தையும் பிரதேச சபையையும் வலயக்கல்வி அலுவலகத்தையும் சுற்றுலா மற்றும் மீன்பிடி கடற்கரையையும் வெளிச்சவீட்டையும்,உள்ளூர்,வெளிமாவட்ட போக்குவரத்து வசதியையும் வங்கிகளையும் சினிமா தியேட்டரையும் கொண்டதோடு ஐந்து பிரதான நகரங்களுக்கு செல்லும் வீதிகள் (காங்கேசன்துறை,யாழ்ப்பாணம்,கொடிகாமம்,சாவகச்சேரி,மருதங்கேணி) சந்திக்கும் இடமாகவும் விளங்குகிறது.

வரலாறு[தொகு]

ஆரம்ப காலங்களில் பருத்தி ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக தொழிற்பட்டது. இதனால் பருத்தித்துறை என பெயர் பெற்றது. இதே வேளை ஒல்லாந்த மாலுமியான பெட்ரே இலங்கையின் கரையோரப் பிரதேசம் ஊடாகப் பயணிக்கும் போது இலங்கையின் வட முனையாக இந்த நகரம் இருப்பதைப் புரிந்துகொண்டார். இதன் பின்னர் இந்த நகரத்துக்கு பொயின்ட் பெட்ரோ (Point Pedro) எனப் பெயரிட்டார். இந்தப் பெயரே இன்று ஆங்கிலத்தில் புழங்கி வருகின்றது.

காலம் காலமாக இவ்வூரில் உள்ள பிரபலமான பாடசாலையான ஹாட்லிக் கல்லூரி பல மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வருகின்றது. ஆரம்ப காலங்களில் தென் இலங்கையில் இருந்து சிங்கள மாணவர்கள் இந்தக் கல்லூரியில் படிப்பதற்காக இந்த நகரிற்கு வந்தனர். ஆயினும் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்தப் பாடசாலை தனது செல்வாக்கை இழந்தது. ஆயினும் தொடர்ந்தும் இந்த பாடசாலையின் மாணவர்கள் கணித துறையில் அகில இலங்கை ரீதியில் சாதனை புரிந்து வருகின்றனர்.

துறைமுகம்[தொகு]

ஆதி காலத்தில் தென்னிந்திய நகரங்களுக்கு பருத்தி ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக விளங்கிய பருத்தித்துறை துறைமுகம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் யாழ் குடாநாடு இருந்த போது யாழ் குடாநாட்டிற்கான கடல்வழி போக்குவரத்து இந்த துறைமுகம் ஊடாக நடந்தது. திருகோணமலையில் இருந்து பருத்தித்துறைக்கு பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 1995இல் இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து பருத்தித்துறை நகரைக் கைப்பற்றியபோது இந்த துறைமுகமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் பொது மக்களை, இந்த துறைமுகத்தைப் பாவிக்க இராணுவம் அனுமதித்து வருகின்றது.

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்த துறைமுகம் பரபரப்பான ஒரு துறைமுகமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கலைப் பங்களிப்பு[தொகு]

பருத்தித்துறையில் உள்ள மாதனைப்பகுதியில் பிரசித்திபெற்ற கொட்டகைக்கூத்து, இசைநாடகக் கலைஞர்கள் இருந்தார்கள். காத்தவராயர் என்னும் கூத்து தற்போதும் நடைபெற்று வருகின்றது.

ஆலயங்கள்[தொகு]

பாடசாலைகள்[தொகு]

சுவையான தகவல்கள்[தொகு]

  • பருத்தித்துறை நகர் தட்டை வடையைச் செய்வதில் சிறப்புப் பெற்றதால் இந்த வடைக்கு "பருத்தித்துறை வடை" என்று ஒரு காரணப் பெயர் உண்டு.
  • குத்து விளக்கு என்ற ஈழத்துத் திரைப்படத்தின் படப்படிப்பு இங்குதான் பெரும்பகுதி நடைபெற்றது.
  • எஸ். பொன்னுத்துரையின் "சடங்கு" நாவலின் கதைக்களமும் பருத்தித்துறைதான்.

இங்கு பிறந்த புகழ் பூத்தவர்கள்[தொகு]

பருத்தித்துறை படிமக் காட்சி[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பருத்தித்துறை&oldid=3589580" இருந்து மீள்விக்கப்பட்டது