கச்சத்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கச்சத்தீவு
தீவு
நாடு1974 வரை இந்தியா, பின்பு இலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
கோட்டப் பிரிவுகள்Delft

கச்சத்தீவு யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும். இது இந்திய தீபகற்பத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது. 1974ம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு கச்சத்தீவு ஒப்பந்தப்படி, தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. இத்தீவின் பரப்பளவு 285 ஏக்கர்(1.15 சதுர கிலோ மீட்டராகும்). இந்த தீவில் மனிதர்கள் யாரும் தற்போது வசிக்கவில்லை. புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் ஒன்று இங்கு உள்ளது.

Islands of Jaffna Peninsula.svg

கச்சத்தீவு வரலாறு[தொகு]

கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது.[சான்று தேவை] சேதுபதி அரசர் நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு [1], நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன. தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622–1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார்[சான்று தேவை] வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார். கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடணத்தில் கூறியிருந்ததை இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீஸ் என்பவர் (1936-40ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்துள்ளார்[சான்று தேவை].

கச்சதீவு இந்திய உரிமை என்பதற்கு சான்று[தொகு]

1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட் எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை[சான்று தேவை] அது குறிக்கிறது. இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவுக்கு உள்ள உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.

கச்சத்தீவு ஒப்பந்தம்[தொகு]

1974 மற்றும் 1976ம் ஆண்டில் காங்கிரஸ் பிரதமர் இந்திராகாந்தி இந்தியா அரசுக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்தது. இந்த ஒப்பந்தங்களில் ஒப்பந்த திகதியிலிருந்து 10 வருடங்களுக்கு இந்திய மீனவர்கள் தீவுப்பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், வழிபாடு நடத்த தீவுக்கு சென்று வருவதற்கும் அனுமதி இருக்கிறது. ஆயினும் 10 வருடங்களின் பின் இந்த அனுமதி இல்லாத நிலையில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்.. 1960ம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது என்று கூறி 2008ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். தமிழக சட்டசபையில் ஜூன் 9, 2011 அன்று நடந்த சட்டப் பேரவை தீர்மானத்தில் தமிழக வருவாய் துறையையும் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.[2]

அந்தோணியார் ஆலயம்[தொகு]

கச்சத்தீவில் மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட புகழ்பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் ஒன்று உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், தொண்டி அருகே உள்ள நம்புதாளை என்ற ஊரை சேர்ந்த சீனிகுப்பன் என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். இலங்கையில் இனக் கலவரம் தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அந்தோனியார் ஆலய விழா நடைபெற்று வந்தது. இதற்கு தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து அதிகளவில் பக்தர்கள் சென்று வந்தனர். இரு நாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதி தீவாக விளங்கிய கச்சத்தீவு 1975 ஒப்பந்தத்திற்கு பின் இலங்கைக்கு சொந்தமானது. ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் தங்கி திரும்பவும், கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய விழாவில் எப்போதும் போல் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.மீன் பிடிக்க அனுமதி இல்லை கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதற்கு பின் கச்சத்தீவு விழாவிற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்தது. ஆயினும் திருப்பலி சடங்குகளை தங்கச்சிமடம் ரோமன் கத்தோலிக்க பங்கு தந்தையர்களே செய்து வந்தனர். இந்நிலையில் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2002 இல் மீண்டும் கச்சத்தீவு விழா யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்கு தந்தையர்களால் நடத்தப்பட்டது. 20 வருடங்கள் கழித்து நடந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு திரும்பினர். தொடர்ந்து கடந்த ஆண்டு வரை கச்சத்தீவு விழாவிற்கு ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் இருந்து அதிகளவில் பக்தர்களும், பத்திரிகையாளர்களும் சென்று திரும்பினர். 2011ஆம் ஆண்டு ஆலயவிழா, மார்ச் 20 அன்று இரு நாட்டு பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனையுடன் சிறப்பாக நடந்தேறியது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thedipaar.com/listings/kachatheevu-ramanathapuram-island/[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/66516-2013-05-08-14-59-51.html
  3. தினமலர் செய்தி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சத்தீவு&oldid=3291506" இருந்து மீள்விக்கப்பட்டது