நா. கதிரைவேற்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நா. கதிரைவேற்பிள்ளை
பிறப்பு(1871-12-21)21 திசம்பர் 1871
புலோலி, யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புமார்ச்சு 26, 1907(1907-03-26) (அகவை 35)
குன்னூர், நீலகிரி, தமிழ்நாடு
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து தமிழறிஞர்
பெற்றோர்நாகப்பபிள்ளை,
சிவகாமி அம்மையார்
வாழ்க்கைத்
துணை
வடிவாம்பிகை (கோவிந்தபிள்ளையின் மகள்)
பிள்ளைகள்சிவஞானாம்பிகை

நா. கதிரைவேற்பிள்ளை (திசம்பர் 21, 1871[1][fn 1] – 26 மார்ச் 1907)[3] இலங்கைத் தமிழறிஞர். தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் தந்தவர். 'தமிழ்த் தென்றல்' திரு. வி. க. வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர். சதாவதானி எனப் போற்றப் பெற்றவர்.

பிறப்பு[தொகு]

கதிரைவேற்பிள்ளை பருத்தித்துறை, மேலைப்புலோலியில் வாழ்ந்த நாகப்பபிள்ளை என்பவருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் 1871-ஆம் ஆண்டு பிறந்தார். (திரு. வி. க தனது நூலில் நா. கதிரைவேற்பிள்ளை 1860 நவம்பரில் பிறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.[2]) அயலில் இருந்த சைவப் பிரகாச வித்தியாசாலையில் தொடக்கக் கல்வி பெற்றார். குடும்பத்தின் வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர இயலவில்லை. ஆறுமுக நாவலரின் மாணாக்கராகிய மகாவித்துவான் தியாகராசப்பிள்ளை என்பாரிடம் முறையாகக் கல்வி கற்றார். பதினெட்டு வயதிற்குள் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் சங்கநூல்களையும், தருக்க சாத்திரங்களையும் கற்றார்.[4]

தமிழகம் பயணம்[தொகு]

தமிழின் மீதான ஆர்வத்தினால் சென்னைக்குப் பயணமானார். சென்னையில், தமிழ் கற்க விரும்பியவருக்குத் தி. த. கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் உதவினார். புலமையும், கருணையும் கொண்டிருந்த தி. த. கனகசுந்தரம்பிள்ளை, கதிரவேற்பிள்ளையை மாணவராக ஏற்றுக் கொண்டார். தமிழின் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்ததோடு, சைவ சித்தாந்த சாத்திரங்களையும் பயின்று புலமை பெற்றார் கதிரவேற்பிள்ளை. வடமொழியிலும் தேர்ச்சி பெற்ற கதரவேற்பிள்ளை, சென்னை ரிப்பன் அச்சகத்தின் அதிபர் சிவசங்கரன் செட்டியாரின் பழக்கத்தால், தாள் திருத்தும் பணியை ஏற்று, படிக்கின்ற காலத்திலேயே, சென்னையில் செலவுக்கு வேண்டியதை ஈடு செய்து கொண்டார்.

நூல்கள் இயற்றல்[தொகு]

தமிழ்நாட்டிற்கு வந்து பல சைவ நூல்களையும், நைடதத்திற்கு உரையையும் இயற்றினார். இலங்கையில் கதிர்காமம் என்ற தலத்துக்கு ஒரு கலம்பக நூல் இயற்றினார். பழனித் தலப் புராணம், திருவருணைக் கலம்பகம், சிவராத்திரிப் புராணம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதிய கதிரவேற்பிள்ளை, அதிவீரராம பாண்டியர் இயற்றிய தமிழ்க் கூர்ம புராணத்திற்கு விளக்கவுரை கண்டார். சிவஷேத்திராலய மகோற்சவ விளக்கம், திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் சரிதவசனச் சுருக்கம், ஏகாதசிப் புராணத்திற்கு அரும்பதவுரை ஆகிய நூல்களையும் எழுதினார்.[4]

வெளியிடப்பட்ட நூல்கள்[தொகு]

 • சிவக்ஷேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம், 1896, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை
 • சைவ பூஷண சந்திரிகை, (இரண்டாம் பதிப்பு: 1902, சென்னை சி.நா.அச்சியந்திரசாலை)
 • புத்தமத கண்டனம், 1903
 • சுப்பிரமணிய பராக்கிரமம், 1906, சென்னை: வித்யாரத்நாகர அச்சுக்கூடம்
 • அதிவீரராமபாண்டியனார் இயற்றிய நைடதமூலமும் விருத்திஉரையும், 1912, சென்னை: வித்யாரத்நாகர அச்சுக்கூடம்
 • தாயுமான சுவாமிகள் அருளிச்செய்த திருப்பாடற்றிரட்டு, 1939, சென்னை: வித்யாரத்நாகர அச்சுக்கூடம்
 • தாயுமானவர் பாடல், 1930

அகராதி தொகுத்தல்[தொகு]

சென்னை வாழ் தமிழறிஞர் பலருடைய வேண்டுகோளுக்கிணங்கத் தமிழ்ப்பேரகராதி எழுதி வெளியிட்டார். இவ்வகராதியின் பெருமையைப்,

என்று தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் புகழ்ந்திருக்கிறார்[4].

ஆசிரியப் பணி[தொகு]

கதிரைவேற்பிள்ளை, தமது 1897 ஆம் ஆண்டில், சென்னையில் இருந்த உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணி ஏற்றார். அப்போதுதான், திரு. வி. கல்யாணசுந்தரனார், பிள்ளையவர்களின் மாணாக்கராகும் பேறு பெற்றார். கதிரவேற்பிள்ளையின் பேச்சுத் திறன், சென்னையில் மட்டும் அல்லாது, தமிழகமெங்கும் புகழ் பெற்றது. தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று, தமிழ் மொழியின் செழுமைக்கும், சைவ நெறியின் வளர்ச்சிக்கும் உரையாற்றிப் புகழ் பெற்றார்.

மருட்பா மறுப்பு[தொகு]

சைவத் தமிழ் உலகம் போற்றி வந்த திருமறைகளே 'அருட்பா' என்றும் வள்ளல் பெருமான் இராமலிங்கர் பாடியுள்ளவை 'மருட்பா' என்றும் சைவநெறிப் பற்றால் கூறத் துணிந்தார் கதிரவேற்பிள்ளை. இந்த 'அருட்பாப் பூசல்', பெருமான் ஆறுமுக நாவலர் காலத்தில் தொடங்கியது, மீண்டும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் நடைபெறலாயிற்று. பேசியதோடு, இராமலிங்க சுவாமியின் பாடல்கள் மருட்பாவேயன்றி, அருட்பா அல்ல எனக் கதிரவேற்பிள்ளை 'மருட்பா மறுப்பு' எழுதியதை ஆதாரமாக வைத்து, சென்னை நீதிமன்றத்தில் வள்ளல் பெருமான் அன்பர்களால் பிள்ளையவர்களின் மீது மானநஷ்ட வழக்குத் தொடரப் பெற்றது. இந்த வழக்கில், தமது ஆசிரியர் கதிரைவேற்பிள்ளைக்கு ஆதரவாக திரு. வி. க. சாட்சியமளித்தார். இறுதியில், நீதிபதியால் வழக்கு தள்ளுபடி செய்யப் பெற்றது.

விருதுகள்[தொகு]

தமிழ்நாட்டுச் சைவ மடங்களாலும், குறுநில மன்னர்களாலும், புரவலர்களாலும் வழங்கப் பெற்ற நாவலர், சைவசித்தாந்த மகாசரபம், அத்துவித சித்தாந்த மகோத்தாரணர், மகாவித்துவான், பெருஞ்சொற்கொண்டல் முதலிய பட்டங்களைப் பெற்றார். சென்னை இலக்குமி விலாச மண்டபத்தில் கவிராயர்கள், பண்டிதர்கள், புரவலர்கள் முன்னிலையில் கதிரவேற்பிள்ளை சதாவதானம் செய்து சதாவதானி என்னும் பட்டத்தையும் பெற்றார்.

சதாவதானி[தொகு]

ஒருவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைச் செய்தால் சதாவதானி என்பர். கதிரைவேற்பிள்ளை செய்த சதாவதானம் பலர் முன்னிலையில் நடந்து வெள்ளைக்கார துரைகளால் பாராட்டப்பட்டது. கதிரைவேற்பிள்ளை முதலில் யாழ்ப்பாணம் மேலைப்புலோலி கந்தசுவாமி கோவிலில் நன்னூல் காண்டிகையுரை ஆசிரியர் வித்துவான் அ. குமாரசாமிப் புலவர் தலைமையில் 18 அவதானங்களை செய்து முடித்தார். பின்னர் சென்னையில் லெட்சுமிவிலாச நாடகசாலையில் பாலசரசுவதி ஞானானந்த சுவாமிகள் தலைமையில்,

 • வேலும் மயிலும் துணையென நவிலல்
 • இலாட சங்கிலி கழற்றல்
 • சிலேடைக் கட்டளைக் கலித்துறை, சிலேடை வெண்பா, நீரோட்டகம் முதலியன
 • 6 இலக்கண விடை உபந்நியாசம்
 • இரண்டறக் கலத்தல் உபந்நியாசம்
 • பாரதச் செய்யுளுரை
 • இங்கிலீஷ் கண்டப் பத்திரிக்கை வருடந்தேதி, பிறந்த நாள், இலக்கினம், பிறந்த நட்சத்திரம் முதலியவை
 • எண் கணக்கில் கூட்டல் 1, கழித்தல் 1, பெருக்கல் முதலியவை

இவற்றை செய்து முடித்து சதாவதானியென்ற பட்டத்தைப் பெற்றார்.[3]

இறுதி நாட்கள்[தொகு]

மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவராகத் திகழ்ந்த கதிரைவேற்பிள்ளை, தமிழ்ப் பணிக்காக, அடிக்கடி சென்னையிலிருந்து நீலகிரி சென்று வந்தார். 1907 ஆம் ஆண்டில் ஒருமுறை நீலகிரி சென்றபோது, குன்னூரில் கடுஞ்சுரத்தால் உடல் நலிவுற்று பராபவ ஆண்டு பங்குனி 13 செவ்வாய்க்கிழமை (1907 மார்ச் 26) அன்று இறந்தார்.[3]

பிறர் எழுதிய வாழ்க்கை வரலாறு நூல்கள்[தொகு]

 • திரு. வி. க., தமது ஆசிரியரின் நினைவைப் போற்றும் வகையில், யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம் சதாவதானி நா கதிரைவேற்பிள்ளை சரிதம் என்ற அரியதொரு நூலாக[2] எழுதி 1908 இல் வெளியிட்டார்.
 • கதிரைவேற்பிள்ளையின் மாணாக்கரும், புரசை முனிசாமி நாயகர் குமாரருமாகிய பாலசுந்தர நாயகர் என்பவர் 1908 ஆம் ஆண்டில் ஸ்ரீமான் நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் சரித்திரமும் அவரது பிரிவாற்றாமையினால் பல புலவ சிகாமணிகளார் கூறிய பாக்களும் என்ற நூலை எழுதி வெளியிட்டார்.[3]

குறிப்புகள்[தொகு]

 1. திரு. வி. க தனது நூலில் நா. கதிரைவேற்பிள்ளை 1860 நவம்பரில் பிறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

தளத்தில்
நா. கதிரைவேற்பிள்ளை எழுதிய
நூல்கள் உள்ளன.
 1. க. சி. குலரத்தினம் (1969). "செந்தமிழ்ச் செம்மல் நா. கதிரைவேற்பிள்ளை". பார்க்கப்பட்ட நாள் 2 திசம்பர் 2018.
 2. 2.0 2.1 2.2 யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம் சதாவதானி நா கதிரவேற்பிள்ளை சரிதம் இயற்றியது திரு.வி.க.
 3. 3.0 3.1 3.2 3.3 ஸ்ரீமான் நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் சரித்திரமும் அவரது பிரிவாற்றாமையினால் பல புலவ சிகாமணிகளார் கூறிய பாக்களும், பாலசுந்தர நாயகர், 1908
 4. 4.0 4.1 4.2 சபாபதிப்பிள்ளை, ஆ. நாவலர் வழிக்கோர் காவலர், நூலகம் திட்டம், 1971
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._கதிரைவேற்பிள்ளை&oldid=3766239" இலிருந்து மீள்விக்கப்பட்டது